POST: 2018-06-27T06:32:48+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-248
—————

12-11-77க்கும் 20-11-77க்கும் இடைப்பட்ட நாட்களில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங் களைப் பேரல்லல்களுக்கு உட்படுத்திய புயல், வெள்ளக் கொடுமைகள் பற்றிப் புலவர் பெருமக்கள் பலர் பாடிய செய்யுட்கள் உங்கள் பார்வைக்கு…. (பாடல்-9)

ஆடிய வன்புயல் !
——————————–
(பாவலரேறு பெருஞ்சித்திரனார்)
———————————————————–

வானங் கருத்தது; வையம் இருண்டது;
வாரி யெனுந் தட நீர் அலை கொண்டது!
தா ன் செருக்குடன் தண்கடல் சீய்த்தொரு
தாண்டவச் சூறைவான் தாவி யெழுந்தது!

கானம் படுவன் களிற்றினம் யாவுமே
காழ் நடை ஆர்ப்பொடு காய்ந்திவண் வந்ததாய்க்
கூனம் படுநெடுங் குன்றுங் குலுங்கிடக்
கொல்புயல் பேய்ப்படை கொண்டெதிர் ஆர்த்ததே !

ஆர்த்தது வான்புயல்! ஆர்த்தது நீள்கடல் !
ஆவெனும் ஓலத் தெழுந்தது பேரலை !
போர்த்தது நீர்த்திரை! பொங்கிச் சுழன்றது !
போய்வரு மீன்பிடி புன்மைப் படகுகள்!
நீர்த்துமி தாண்டவத் துட்பொடி யாயின!
நீண்ட நெடுங்கரை நின்ற மரக்கலஞ்
சூர்த்த பெரும்புயற் சூறைச் சுழியிடைச்
சுக்குநூ றாகிச் சுருண்டன நீருளே!

கண்ணை யளாவிப் பறித்தொளி மின்னிடக்
காதை யளாவிக் கிழித்திடி மேல்விழ
விண்ணை யளாவித் திமிர்ந்தெழு வான்புயல்
வேதம் அளாவிச் சுழன்றெதிர் வீசிட
எண்ணை யளாவிய தென்னை ,வா ழைக்குலம்
ஏந்துபூம் பிஞ்சுகா யோடெழு மாவினம்
மண்ணை யளாவிட மாமலை போலெழு
மந்திர ஆழிமுன் மக்களென் செய்வரோ ?

பாய்புனல் காய்கனி பூமரம் பாவிட
பாற்கதிர் சாய்வயல் பாறு மண் மேடிட
வேய்குடில் நூறுநூ றாயிரம் நூறிட
வீறிடும் செம்புனல் வீழ்கரை மீறிட
காய்வயி றேடுழல் ஏழையர் கையற
காலப் பெரும்புன லோடு கலந்துகால்
வாய்வழி யோடி வயல்வெளி பாறிய
வன்பிணக் காட்டிடை ஆடிய வன்புயல் !

ஆடிய வன்புயற் கந்தமிழ் நாடுமிங்
காந்திர முங்கள மாகி அதிர்ந்தன!
வாடிய மக்களுக் காறுதல் வாய்மொழி
வாழ்க்கை யுதவிகள் பற்பல வாய்க்கினும்
நாடிந ரம்புந டுக்கந் தவிர்க்குமோ?
நற்றுணை மாண்ட குழந்தையர் நங்கையர்
நீடிய வெந்துயர் நீங்கிடக் கூடுமோ ?
நீண்ட நெடுங்கட லே,விடை சொல்கவே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *