POST: 2018-08-11T12:46:39+05:30

நூற்றாண்டின் மேலும் கலைஞர்
=================================
கலைஞர் 95ம் பிறந்தநாள் விழா – முரசொலி மலர் 03.06.2018

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
==========================

என்றும் புலராது நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நம் இன முன்னேற்ற வரலாற்றில் விந்தைகள் நிகழ்த்திய வெற்றித் தலைவர் நம் கலைஞர் ஒரு நூற்றாண்டின் மேலும் வாழ்வார் என்பது விந்தையுமன்று .வியப்புமன்று.

பண்டைக் காலத்தில் ஒளவையாராகிய புலமைப் பெருமாட்டியார் அதியமான் நெடுமானஞ்சியிடம் அருநெல்லிக்கனி பெற்றார் .உண்ட பிறகே அந்நெல்லிக்கனி நூற்றாண்டின் மேலும் தம்மை வாழ வைப்பதனை உணர்ந்தார் ;நினைந்து நினைந்து மனம் நெகிழ்ந்தார் .

“நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுக பெரும நீயே !”

என வாழ்த்தினார் .இந்நாளில் நாம் நம் கண்ணாரக் காணும் பொலிவும் புகழும் பூண்ட அதியமான் நெடுமானஞ்சியாக தமிழர் நெஞ்சம் நெஞ்சம் கவர்ந்த கலைஞரை எப்படி வாழ்த்துவது ?

“எம் தலைவரே ! கலைஞரே !
எமக்கெல்லாம் தமிழ் தந்தவரே !
நெல்லிக்கனி தந்தவர் நீடு
வாழ்கவென வாழ்த்துப் பெற்றபோது
நிகரில்லாத தமிழ்க்கனி தந்த தலைவரே !
நீங்கள் நூற்றாண்டின் மேலும்
வாழ்வதற்குத் தடையேது ?
ஆலமுண்டவன் காலனைக் காய்ந்தானெனில்
அருந்தமிழ் அமுதுண்ட தலைவர்
என்றும் நிலைபெறுவதில் என்ன ஐயம் !

எங்கள் தொட்டிற் பருவத்திலிருந்து செவிகேட்கச் செழுந்தமிழை
திரைத்தமிழாக எழுதி வழங்கியவர் அல்லவா நீவிர் !
ஒரு நாவால் உரைசெய்ய ஓண்ணாத ஓங்குபுகழ்
படைத்த பெரும நூலுணர் புலவ !
பாரெங்கும் பரந்த மாத்தமிழர் மனமென்னும்
அரியணையில் தலைமைத்தாங்கும் தமிழவேளே !
தவம் கலைந்து நீங்கள் பேசும் நாள் விரைவில் வரும்.

“என் உயிரினும் மேலான” என்று பலகோடித் தொண்டர்களை அழைக்கும் குரல் –
துளிர்த்த நறுந்தேனென்று சொல்லும் சொல்லைத் தொடங்கு குரல்
முழங்கு கடலாக மீண்டும் ஒலிக்கும் .

உலகெங்கும் வாழும் தமிழரின் உடம்பெல்லாம் நிற்கும்
உம் உயிர் சிலிர்த்தெழுந்து சிறகசைக்கும்.
உம் எழுதுகோல் உடன்பிறப்பிற்கு மடலெழுத நிமிர்ந்தெழும்.
மேடையில் வீசும் மெல்லிய பூங்காற்றான உங்கள் தமிழ்த்தென்றல் தொண்டர்தம் விழியூடே களிப்பூட்டும் .
மீளவும் தமிழக வரலாற்றை மூவேந்தர் காலத்திருந்து ஆளவும் அமையும்
பெரும்பேற்றைத் தமிழகம் பெற்று மகிழும்.
அனைத்து அரசும் உம் சுட்டுவிரல் அசைவில் இயங்கும்.

இடைக்காலத்து இழந்த தமிழர் உரிமையெலாம் மீட்கப்பெறும்.
இவை கனவல்ல .
நிகழப்போகும் நினைவேயாகும் .

தலைவரே ! தாங்கள் உறங்காது இருந்த காலமுண்டு ,
ஆனால் உடன்பிறப்பிற்குக் கடிதம் எழுதாத காலமில்லை.

நீங்கள் உண்ணாதிருந்த பொழுதுண்டு,
ஆனால் பழந்தமிழ்ப் பனுவலை எண்ணாதிருந்த பொழுது ஏது ?

நீங்கள் நடை தளர்ந்தாலும் தடை பல வென்றவர்
களம் பல கண்டவர் கருதியதில் நிலையாய் ஒளிர்ந்தவர்

இடைவிடாது இயக்கத்தை எண்ணி எண்ணி
இறும்பூது எய்தாத கணமில்லை .

அலைமோதும் கூட்டம் ஆர்ப்பரித்து வாழ்த்திய அந்த நாளில் ,
தொண்டர் மனமெலாம் துடித்தெழுவதற்குப் போர் முழக்கமாக
உங்கள்
முரசொலிக் குரல்
ஒலித்ததுண்டு.

எது நிகழ்ந்தாலும் நிகழாவிடினும் சொல்லும் நா நற்றமிழே
என்பதன்றோ உங்கள் வாழ்க்கை வழக்கம் .

எனவே அமிழ்தான தமிழ் உங்கள் நாவசைக்கும்.
வெண்கல மணிக்குரல் தமிழகத்து வீதியெலாம் தோரணம் சமைக்கும்.

அதியமான் மட்டும் இல்லை அடலேறாகப் பொகுட்டெழினி
போர் வரிகளை உடன் எழுதுகிறார் .

காத்திருக்கிறது தலைவா
தமிழகம் உங்கள் கட்டளையை ஏற்க

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே !
– ( புறம் – 87 )

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *