பெரியாராய் அண்ணாவாய்ப் பிறந்தாய், வாழி !
============================================
கலைஞர் 94ம் பிறந்தநாள் விழா – முரசொலி மலர்
03.06.2017
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
==========================
பள்ளத்தில் வீழ்ந்துவிட்ட சிங்கம் போன்று
பைந்தமிழர் பாழ்பட்டுக் கிடந்த போது
வெள்ளமெனத் தலைதூக்கி வெளியே வந்து
வீரநடை போட்டதெலாம் உன்னால் அன்றோ !
கள்ளமெலாம் குடியிருக்கும் சாதிக் காரிருளில்
கண்ணவிந்து கூன்பட்டுக் கிடந்த போது
துள்ளிவரும் போர்வாளாய்த் துடித்தெழுந்து
துயர்துடைத்த தோன்றல் நீரே அன்றோ !
பராசக்தி படைத்தளித்துத் தமிழனுக்குப்
பலசக்தி வரவழைத்த அணுவின் சக்தி
இராப்பகலாய்த் தமிழ்வாழ் தமிழர் வாழ
இமைமூடித் தூங்காத மின்னற் சக்தி தராசினது
கூர்முனைபோல் நேர்மை காத்து
தன்னினத்தைக் காக்கவந்த காந்த சக்தி !
வராத் தன்மானம் வாழும் தமிழர்க்கே
வரவழைத்த சக்தியெலாம் உன்றன் சக்தி
குப்பை மேட்டில் நாம் கிடந்தோம்
பெரியாரால் குருத்து விட்டோம்
அக்குருத்து பசுமைச் சோலைத்
தோப்பெனவே ஆனதெலாம் உன்னால் தானே !
உப்பில்லா இனிப்பில்லாப் பண்டமாக
உயர் தமிழர்கள் கிடந்தார்கள் பழமைப் போக்கால் !
இப்புவியில் தமிழினத்தைப் பாராய் என்றே !
இடிமுழக்கம் செய்த தெல்லாம் நீரே அன்றோ !
குளித்தலையில் கால் பதித்து வென்றாய் பின்பு
குளிர் தஞ்சை, தண்பொழிவில் வெற்றி பெற்றாய் !
விழித்திருக்கும் சைதையிலே நின்றாய் வென்றாய் !
மீண்டும் சீர் அண்ணா நகரில் நிமிர்ந்து நின்றாய்
துறைமுகத்தில் பழித்தோர்கள் வாயடைத்து வென்றாய் !
சென்னை நகர் சேப்பாக்கம் தன்னில் வென்றாய் !
திருமுகத்து திருவாரூர் சிறக்க வென்றாய் !
திசையெட்டும் புகழ்மணக்கத் திகழ்கின்றாயே !
பண்பாட்டு வழியெலாம் பத்துப் பாட்டு
பயன்பாட்டுத் தமிழனுக்கு எட்டுத் தொகைநீ !
கண்பட்ட பூம்புகார் வந்த பின்பே
கண்விழித்தாள் கண்ணகியும் தமிழர் நாட்டில் !
விண்தொட்ட நிலவுமொழி வரிகள் எல்லாம்
விசைபெற்றால் வெங்கதிரைச் சுட்டெரிக்கும்!
புண்பட்டார் பொய்யர்களால் தமிழர் நித்தம்
புதுப்பிறவி கண்டதெலாம் உன்னால் தானே !
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் தேனை அள்ளி
ஒழுகவிட்ட கவிதைநடை !
மீளாப் போரில் துயிலறியாத்
தொண்டாற்றும் கடமை வீரன் !
தோழமைக்குத் தோள்கொடுக்கும் உடைமை யாளன் !
அளப்பறியாக் கோபுரமே !
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே !
கலைஞர் கோவே !
களைப்பறியாப் பொதிகை மலைக் காற்றே !
காலமெல்லாம் உம்மை கை தொழுது வாழ்த்துவோமே!

Add a Comment