கலைஞர் 91ம் பிறந்தநாள் – 03.06.2014
=====================================
ஔவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••
தொண்ணூற்றைத் தாண்டும் தொகையும் பாட்டும்
=============================================
வீரம் திரண்ட திண்தோளை உயர்த்தி உயர்த்தி
வீணர் பகையை வீழ்த்தி வெல்லும் வீரப் புறநானூறே !
ஈரங் காயாத காதலை இளமைக்கு எழுத்தாலே உணர்வூட்டும் அகநானூறே !
கரும்பைப் பிழிந்து களிப்பினில் ஆழ்த்தும் கலித்தொகையே !
நலிவடையாப் பேற்றினை நாளும் பெறவைக்கும் நற்றிணையே !
வலிவுடைய மனவளத்திற்குக் கோலம் புனையும் குறுந்தொகையே!
வரி எல்லாம், வனப்பூட்டும் அழகிய ஐங்குறுநூறே !
தெறிக்கும் இசைப்பாட்டே! தேன் தமிழின் படிக்கட்டே!
விரிக்கும் வரி அழகே வீணைக்கு இசைந்த பரிபாடலே நீ !
பதித்துப் பதித்துப் பைந்தமிழை மகிழ்விக்கும்
பதிற்றுப் பத்தே ! பைந்தமிழர் பண்பாட்டின் வித்தே!
நீயே எட்டுத்தொகை! இனிய தமிழ்மக்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும்
நீயே எங்களுக்கு எட்டும் தொகை!
ஆற்றுப்படுத்தி ஆற்றுப்படுத்தி அல்லல் உற்றோர்
அகம் நிறைந்த ஆற்றுப்படையே நீ!
ஆற்றுப்படை வரிசையும் நீ!
அரிதாகப் பூத்து அகத்தில் மகிழ்ச்சியும் முகத்தில்
மலர்ச்சியும் கொண்டு குவிக்கும் குறிஞ்சிப்பாட்டே!
எல்லையில்லாத் தமிழ்ப்பணியால் எல்லாருக்கும்
முறுவல் மணக்கின்ற முல்லைப்பாட்டே!
பூம்புகார் படைத்துப் புதுமைத் தமிழகத்தைக்காட்டும் பட்டினப்பாலையே !
கெடு பகையைச் சாய்த்துக் கீழறுக்கும்
வெப்பத்தை தடுக்கும் நெடுநல்வாடையே!
சங்கம் கண்ட மதுரைக் காஞ்சியே ! பத்துப்பாட்டின் சொத்தே !
தீம் தீம் என மாதவிக்குச் சதங்கை கட்டிய கலைச்சிலம்பே !
வேல்கொண்ட விழியழகிட வீரத் துறவியாகி அறத்தின்
பால்கொண்ட பற்றினைப் பாரறியச் செய்த மணிமேகலையே !
காய்ந்து போகாத அறத்தின் ஆத்திச்சூடியே!
தேன் மதுரம் பாயத் தீட்டிவைத்த மூதுரையே !
மறங்குன்றிப் போகாதே தமிழா ! கேள் கேள் என
விளித்து அறத்துப்பால், பொருட்பால் அப்புறமாய்
மூன்றாம் பால் எனத் தொகுத்தளித்து வாழும் திருக்குறளே !
ஊழ்க்கணக்கை முறியடிக்கும் பதினெண் கீழ்க் கணக்கே !
மூவேந்தர் கருவூலத்தை விதைத்து முளைக்க
நீரூற்றி வளர்த்த முத்தொள்ளாயிரமே!
வேலேந்தும் புலி வீரக் கலிங்கத்துப் பரணியே!
நூலோர் போர்க் கொட்டம் நொறுங்கிப்பொடியாக
நுரைகடலாய் எழுந்த நூலுக்குள் நன்னூலே!
பண்டைநாள்கொண்ட பண்பாட்டை எழுத்தால் விதைக்கும்
எழிலார்ந்த தொல்காப்பியப் பூங்காவே!
எண்ணூறா ! எண்ணாயிரமா!
எது பெரிது – எனக் கேட்டால்
தொண்ணூறே பெரிதென்பேன் – என்றும்
புகழ் வானில் தோற்காத தொண்ணூறு நீ – துயருக்குத்
துவளாத தொண்ணூறு நீ – சாதி
பார்க்காத தொண்ணூறு நீ – அண்ணா
அடையாளம் காட்டிய தொண்ணூறு நீ – பெரியார்
பேசி மகிழ்ந்த தொண்ணூறு நீ! ஆம்
பெருமைச் சிறகடிக்கும் தொகைப்பாட்டுத் தொண்ணூற்றைத்
தாண்டி நிற்கும் தமிழ்வேந்தே!
தொகையும் நீ பாட்டும் நீயே!

Add a Comment