POST: 2018-08-18T17:45:40+05:30

கலைஞர் 90ம் பிறந்தநாள் – 03.06.2013
=====================================
ஔவை நடராசன்
மேனாள் துணை வேந்தர்
•••••••••••••••••••••••••••••••••••••••••••

உயவு நோய் தீர்க்கும் உரவோன் வாழிய!
==========================================

முட்டுவன் கொல் தாக்குவன் கொல்
எட்டுணையும் எழுச்சியின்றி நான் இருப்பதா?
கட்டுமரத்தைக் கைப்புணை யாக்கித்
தளர்ந்தபோதும் மெய் தளராமல்
அலைகள் ஆயிரம் நிலைகுலைத்தாலும்
நேரெதிர்நில்லாது நெளிந்து தாக்கும்
எதிர்ப்புகள் தம்மால் விதிர்ப்புறல் இன்றி

உடல் நிமிர்ந்து உலவா நிலையிலும்
இடையூறு இடர்களை மிதித்தபடியே
தொண்டில் கழிந்த தொண்டு நூறாண்டில்
உள்ளமே உரமாய்க் கொண்ட உறுதுணையாக!
வெள்ள மனைய வீரர் உடன் பிறப்பாகக்
கள்ளமில் அன்பொடு கனிவொடும் சூழும்

அவ்வப்போது தூண்டுகோலாய்த் துளங்கலின்றி
அருந்தமிழகத்தில் எழும்தலை முறையினர்க்கு
திருந்தி வாழ்நெறிகள் பொருந்த அமையாமல்
வாய்ப்பந்த லொன்றே வளர்ச்சி வழிநெறியென்று
வலைகள் விரிந்த நிலையில்
நடப்பது நடக்க! நாற்றிசை சூழத்

திரண்டெழு புயல் இருண்டுமேல் அடர்ப்பினும்
வெருளுதல் அயர்தல் இன்றி மரக்கலம்
கடவுமீகாமன் போல் தனது கடமையை
ஆற்றும் மூதாளன். போற்றுவார் போற்றுக!

தூற்றுவார் தூற்றுக! ஏற்றெழும் கொள்கை!
இமைப் பொழுதேனும் சலிப்பின்றி இயங்கியபடியே

தன்னைச் சுற்றிய தொண்டர் நலமே
மின்னும் செயலாய் மற்றிவன் புரியும்
செம்மையை, அறனும் ஆற்றலும், ஐயமின்றிக்
கண்ணியம் காக்கும் திண்ணியன் கலைஞன்
மூதறிவாளன் இவனே! தன்னை எண்ணாது
பிறர் நலம் பேணும் பெற்றியன் இவன்காண்

கவர்ச்சி தன்னில் கண்ணொளி இழந்து
விளக்கில் வீழும் விட்டில் போல
வாடி மடியும் உலகை எண்ணி
ஔவை தலைவி அந்நாள் அழுத
முட்டுவன் கொல் என்ற பாடல்
முகத்தின் எதிரில் பட்டது
உயவு நோய்ப் போக்கும் உரவோன் வாழிய!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *