POST: 2018-08-22T08:09:44+05:30

முரசொலி பவள விழா மலர்- 10.08.2017
=============================

முரசொலியும் முளைத்த கதிரொளியும் நீதான் !
=====================================
அறிஞர் ஒளவை நடராசன்

“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் ! பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கைப் பெண்ணே “ என்று புரட்சிப் பாவேந்தர் புகழ்ந்து தீட்டிய பாட்டு வரிகள் எழுத்துக்கு எழுத்து பொருத்தமாய் விளங்கி, நாளும் பொழுதும் முன்னேற்ற ஊர்வலம் நடத்தும் முரசொலி இதழுக்குப் பவள விழாக் காண்பது, கலைஞர் நம் தோளைக் கையால் தடவுவது போல் இனிப்பைத் தருகிறது.

கையகத்தாளில் கட்டுரைகளை எழுதி, கால் தேயத் தேய நடந்து, பின்னர் முயற்சியால் முழுத்தாளாகி முழத்தாள் ஆகி, இன்று நாட்டு வளர்ச்சிக்கும் அந்தத் தாள், தீட்டிய ஈட்டி முனை போல அரசியல் தீப்பொறிகளை அவ்வப்போது முரசொலி இதழாக நாளும் வளர்ந்து இன்று ஓங்கி ஒளிர்கிறது .

முரசொலி வெறும் தாளல்ல; இப்போது தளபதியின் கையில் தகத்தகாய ஒளிவீசும் வாள் ! கருத்துக் குருடர்களை வெட்டொன்று துண்டிரண்டாக கண் திறக்கச் செய்து விளக்கிக் காட்டும் வெற்றி வரலாற்றின் ஆவணம்.

நூறாண்டுகளைக் கண்டு நூற்றாண்டுகளைத் தாண்டிச் சென்று நம் சிந்தையனுள் ஒவ்வொன்றுக்கும் சிலிர்ப்பையும் பெருமிதத்தையும் சேர்க்கும் வெற்றி பெறுக! என்று போற்றிப் புகழ்வது தமிழ் மக்களின் தனிப்பெருங் கடமையாகும் .

நான் பச்சையப்பர் கல்லூரியில் மாணவனாகப் படித்த நாளில் சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்குக்கும் 500 அடி நடந்தால் தென்னகம்,திருவிளக்கு, தென்றல் என்று கவியரசர் கண்ணதாசன்,மதியழகன்,ராசாராம், ஏ.கே.வில்வம் பெயர் மறந்து போன அரசியல் வாணர்கள் அணிவகுத்துத் தத்தம் அரசியல் இதழ்களின் அலுவலகங்கள் நடத்தி வந்தனர். ஆனால் அவற்றில் ஒரே ஒரு தாள் தான் நின்றது வென்றது! எஞ்சிய தாள்கள் சருகுகளாக எங்கெங்கோ பறந்தன. நாள் தவறாமல் முத்தமிழ்க் கலைஞரும் முரசொலி மாறனும் கண்ணின் மணியாகக் காத்து வளர்த்த இதழ் முரசொலி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *