கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 5)
—————-
கலைஞர் அவர்கள் எழுதுகிறபோதே, அலுவலகத்தின் குறிப்புகளை எழுதினாலும், அவர் கை எழுதிக் கொண்டிருக்கும், மனம் இலக்கியத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் என்பதற்கு ஒரு சான்று, செய்தித்துறையில் நான் இருந்தபோது ஒரு நூலைத் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து வந்தது. அந்தக் கோப்பின் மீது, “இந்த நூலுள் ஒரு சிக்கல் இருக்கிறது. அதை விடுவிக்க முடியாததால்தான் அதைத் தடை செய்ய வேண்டும்” என்று எழுதிவிட்டேன். அடுத்தக் கணம், கோப்பு திரும்பி வந்தது. “நூலுள் சிக்கல் இருந்தால் பரவாயில்லை. நூலால் வந்த சிக்கலையே நான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதி அனுப்பினார். எதை எழுதிக் காட்டினாலும் அதில் ஒரு இலக்கியக் குறிப்பு வரும்.
ஒன்று சொல்கிறேன். திண்டுக்கல் அருகில் ஒரு ஊருக்குப் பெயர் குஜிலிப்பாளையம் என்பதாகும். அது என்ன குஜிலிப்பாளையம் என்று சொல்லி மக்களெல்லாம் அந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் தந்தார்கள். அந்தக் கோப்பு வந்தபோது, “குஜிலிபாளையம் என்றால், குஜராத்தியர்கள் கடை வைக்கச் சென்றபோது, இருந்த இடம் என்றும், அவர்கள் பழைய பொருட்களை விற்கும் கடை இன்றும் சென்னைக்கு அருகில் குஜிலி கடை என்று வழங்கப்படுகிறது என்று சொல்லி, இந்தக் குஜிலிப்பாளையம் என்ற பெயரை குறிஞ்சிப்பாறை என்று மாற்றத் தமிழக முதலமைச்சரின் ஆணை வேண்டி இந்தக் கோப்பு பணிந்து அனுப்பப்படுகிறது” என்று எழுதி அனுப்பினேன்.

Add a Comment