POST: 2018-08-30T10:10:55+05:30

கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்

(பகுதி – 6)
—————-

மறுநாள் அந்தக் கோப்பு திரும்பி வருகிறது. பொதுவாக இப்படிப்பட்ட கோப்புகள் போனால், வெறுங்கையெழுத்துடன்தான் திரும்பி வரும். வெறுங்கையெழுத்திடும் பழக்கம் தலைவருக்கு எந்நாளும் இருந்ததில்லை. “குஜிலிப்பாளையத்தைக் குறிஞ்சிப்பாளையம் என்று மலையோரத்தில் இருப்பதால் குறித்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. ஆனால், குஜிலிப்பாளையம் என்ற பெயரை மருவி சொன்னால், அது குயிலம் என்று ஆகும். ஒரு இலக்கண ஆசிரியர், ஜகரம் என்பது யகரம் என்றுதான் ஆகும். ஜமுனா என்பது தமிழில் வருகிறபோது யமுனா என்றுதான் ஆகும். எனவே, குயிலம்பாளையம் என்றுதான் வைக்க வேண்டும். சிலப்பதிகாரத்தைச் செயலாளர் சிந்திக்க வேண்டும்” என்று எழுதினார். அருமை ஜே.கே. அவர்களே, காவியக் கவிஞர் அவர்களே, கோப்புக்களில் இப்படி இலக்கியம் ததும்புவதை நாம் யாரிடத்தில் பார்க்க முடியும்.

எனக்கு நினைவிருக்கிறது, நான் பதினெட்டு வயது இளைஞனாக இருந்தபோது, எங்கள் மனத்தில் நின்ற பாடம் என்னவென்றால் “வீரம் விலை போகாது. விவேகம் துணைபோகாவிட்டால், வீரம் விலை போகாது.

ஆதலால் இளைஞர்களே, நான் உங்களுக்கு வழங்குவது இந்த அறிவாயுதம் என்று எழுதிய திரைத்தொடர் இன்னும் எங்கள் மனத்தைவிட்டு அகலவில்லை. அன்று முதல் அறிவாயுதத்தை ஏந்திக்கொண்டு நூல்களையும், நுண்ணியக் கருத்துக்களையும் பரப்பி வருகின்ற தலைவரின் பிறந்தநாளைப் புத்தகத்திற்கு ஒரு சிறந்த நாள் என்று சொல்வதைவிடப் பொருத்தம் என்னவாக இருக்க முடியும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *