கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை – 03.06.2009
========================================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
எழுத்துலகத்தின் இமயமாகத் திகழ்ந்தபடி தமிழகத்தின் தன்னேரில்லாத முதல்வராகத் திகழும் அண்ணல் டாக்டர் கலைஞர் அவர்களே
மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களே
இலக்கிய உலகத்தில் என்றும் நந்தா விளக்குகள் என்று நாடு போற்றுகிற நண்பர் ஜெயகாந்தன் அவர்களே,
காவியக்கவியரசர் நண்பர் வாலி அவர்களே,
நேற்றுகூட ஒரு நண்பர் சொன்னார், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் போல ஒரு நல்லினம் தொடங்கியிருக்கிறது என்றால், அது நல்லியாகத்தான் இருக்க முடியும் என்று பாராட்டைப் பெற்றிருக்கிற நல்லி அவர்களே, எனக்கு வழங்கப்பட்டிருக்கிற இந்தச் சில மணித்துளிகளுக்குள் நான் சிலவற்றை நினைவு கூறலாம் என்றிருக்கிறேன்.
ஆசிரியர் திலகம்
——————————–
இங்கிலாந்து நாட்டு தலைமையமைச்சர் மேக்மில்லன் என்பவர், ஒரு புத்தகப் பதிப்பாளரின் மகன். அவர் இங்கிலாந்து நாட்டுக்கு தலையமைச்சராக வந்த பிறகு பதிப்பாசிரியர்களும், எழுத்தாள பெருமக்களும், இங்கிலாந்து நாட்டில் நோபல் பரிசு பெற்றவர்களும் அவருக்கு ஒரு வரவேற்பு தந்தார்கள். அப்போது மேக்மில்லன் ஒரு தொடர் சொன்னார், “நான் ஒரு பதிப்பாசிரியருக்கு மகனே தவிர, ஒரு படைப்பாசிரியராகத் திகழும் வாய்ப்பு இல்லையே என்று வருந்துவதாக” சொன்னார்.
தமிழகத்தில் பதிப்பாசிரியர், படைப்பாசிரியர், உரையாசிரியர், கதையாசிரியர், கட்டுரையாசிரியர், கருத்துக்களை வலியுறுத்திக் காட்டுகிற ஆசிரியர் என்று ஆசிரியர்களுக்குத் திலகமாகத் திகழ்கிற ஒரு பெருந்தகை இந்திய நாட்டிலேயே டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.
நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம், திருவள்ளுவர் ஒரு புதிய தொடர் அமைத்திருக்கிறார், “நூலாரும் நூல் வல்லார்” என்பது அந்தத் தொடர். நூலாசிரியர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரை நூலாசிரியர் என்று சுட்டிக் காட்டுவதை “நூலாரும் நூல் வல்லார்” என்று புகழாகச் சொல்வார்கள். நம்முடைய அருமைத் தலைவர் அவர்களைப் பலர் பாராட்டினாலும், அவர் எழுதி வைத்ததைப் படிக்கின்ற ஒரு மாணவன் என்ற வகையில்தான் நான் இருக்கிறேன்.
70 ஆண்டுகால பணி :
—————————————
கணக்கெடுத்துப்பார்த்தால் கலைஞர் அவர்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு முதல் பத்துப் பக்கங்கள் எழுதுவார். அவரால் எழுதாமல் இருக்கவே முடியாது. எழுதாமல் இருப்பது என்பது மட்டுமில்லை. முப்பது நாள் என்று கணக்கெடுத்தால், 300 பக்கங்கள். ஒரு ஆண்டுக்கு என்று கணக்கெடுத்தால், 3600 பக்கங்கள். இதைக் கணக்கெடுத்துப்பார்த்தால், 70 ஆண்டுகளாக இந்தக் கரம் எழுதிய தாள்கள் இரண்டரை இலட்சத்தைத் தாண்டுகிறது. இவ்வளவு பக்கங்கள் எழுதியவர் இந்தியாவில் எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த நாட்டிலும் இல்லை.
வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய தொகுதிகள் என்று கணக்கெடுத்துப்பார்த்தால், அவருக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்த தொகுதிகள் ஆறு தொகுதிகள். அவர் கதை எழுதியவர், கட்டுரை எழுதியவர். பக்கங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால், பதினைந்தாயிரம் பக்கங்கள்தான்.
அண்ணல் காந்தியடிகள் எழுதியது நூறு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. பண்டிதர் நேரு அவர்கள் எழுதிய தொகுதிகள் ஒரு பதினேழு தொகுதிகள் வந்துள்ளதைக் காணலாம். காந்தியடிகள் தன் வாழ்நாளில் கடைசிவரை எழுதினார். நெடிய கட்டுரைகளை எழுதுவதை நிறுத்திவிட்டு, கடிதங்களுக்கு மட்டும் இருபது முப்பது தொடர்கள் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
டாக்டர்.இராதாகிருஷ்ணன் வாய் திறந்தால், கடல் மடை போல் சொல்வதால், அவருடைய பேச்சுக்களே பின்னர் நான்கு தொகுதிகளாக வெளிவந்தன. அவர், கையால் எழுதுகிற பழக்கம் ஐம்பது வயதைத் தாண்டிய பிறகு நின்றுவிட்டது. அருமை நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னார்கள், நான் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று நூலை வாயால் சொல்லித்தான் மற்றவர்கள் எழுதினார்கள் என்று. காவியக் கவிஞர் சொன்னார், நானேதான் எழுதுவேன் என்று. நம் தமிழக முதல்வர் அவர்கள் தான் சொல்லி இன்னொருவரை எழுதவே சொல்ல மாட்டார்.
நான் டிக்டேட்டர் இல்லை :
————————————————
நாங்கள் பணியாற்றும்போது ஒருநாள் விடியற்காலையில், தஞ்சையில் இருந்து திரும்பி வந்தவுடன் காலை 7 மணிக்குச் சொன்னார், “நான் பத்து மணிக்கெல்லாம் பேச வேண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்காகப் பேசுகிற உரை என்று சொன்னார்”. “நீங்கள் சொல்லுங்கள் எழுதுகிறோம்” என்று நான்குபேர் சுற்றி நின்றோம். “என்னை டிக்டேட்டராக (Dictator) ஆக்காதீர்கள்” என்று சொன்னார். “நானே எழுதிவிடுகிறேன்” என்று சொன்னார். அவர் எழுதுகிற தாள் அதிக நீளம் இருக்காது. குறைவான நீளம்தான் இருக்கும். அவர் எழுதிய பிறகு அங்கே கீழே விழுந்த தாள்களை எண்ணினால் ஒரு எண்பது பக்கங்களுக்குமேல் சென்றன. அதை “இப்போது எப்படி அச்சிட்டுக் கொடுப்பது?” என்றோம். “வேண்டாம், இதை அப்படியே நகல் எடுத்துக் கொடுத்துவிடுங்கள்” என்றார். அப்படி எழுதுகிற இயல்பு அவருக்கு.
இரண்டரை இலட்சம் பக்கங்கள் எழுதுவது என்றால், இலக்கியங்களின் கலை வடிவங்கள் எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, நையாண்டிக் குறிப்புக்கள், நாடகங்கள், திரைப்படத்திற்கு எழுதிய உரையாடல், திரைப்படத்திற்கு எழுதுகிற உரையாடல்களைச் சொன்னால், அந்த நாளில் படத்துறையின் திலகங்கள் சொல்வார்கள், “ஐந்து பக்கங்கள் எழுதினால் போதும் என்று சொன்னால், ஐம்பது பக்கங்கள் எழுதித் தருபவர் கலைஞர் அவர்கள்தான்” என்று. இப்படி எழுதித் தந்தவை மட்டுமின்றி, பதிப்பகத்தாரால் 400 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
நள்ளிரவில் வந்த சந்தேகம் :
————————————————–
எப்போது தமிழக முதல்வருக்குக் கோபம் வரும் என்று கேட்டால், எனக்குத் தெரிந்தவரையில், தேடிய புத்தகம் கிடைக்கவில்லையென்றால் கோபம் வரும். ஒரு முறை சொன்ன தொடரைக் கேட்டுவிட்டு, நாங்கள் எல்லாம் மிரண்டுபோய் இருந்தபோது, இரவு 10 மணி இருக்கும்போது, நண்பர் சண்முகநாதன், “தலைவர் ஒரு தொடர் சொன்னாரே, அது என்ன புறநானூறா, கலிங்கத்துப் பரணியா” என்று கேட்டார். கேட்டால்தான் எனக்கு மறந்துபோகும். நான் சொன்னேன். “யார் பார்க்கப் போகிறார்கள், கார் நாற்பது என்று சொல்லிவிட்டால் என்ன?“ என்றேன். “நீங்கள் சொல்லிவிடுகிறீர்கள், யார் மறுநாள் அவரைப் போய்ப் பார்ப்பது” என்று கேட்டார் நண்பர் சண்முக நாதன்.
எனவே, அவருடைய வாழ்க்கையில் எழுத்தும், இலக்கியமும், பாட்டும், சிந்தனையும் ஒரு வடிவமாக அமைந்திருக்கிறது. 1974ல் தமிழுலகத்தில் 300 நூல்கள்தான் வெளிவந்தன அப்போது ஒருமுறை அலுவலக கோப்பு சென்றபோது, “300 நூல்கள் வந்திருக்கின்றன. எத்தனை நூல்களை வாங்குவது” என்றபோது, “300-ஐயும் வாங்கு” என்றார். ஆயிரம் நூல்களையும் வாங்குங்கள் என்று பதிப்பகத்து நண்பர்களைச் சொல்கிறேன். அந்த 1974-லேயே நூல்களை வாங்கி, எழுதுகிறவர்களை ஊக்குவித்தவர் நம்முடைய டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.
அலுவலக கோப்பில் இலக்கியம் :
————————————————————
கலைஞர் அவர்கள் எழுதுகிறபோதே, அலுவலகத்தின் குறிப்புகளை எழுதினாலும், அவர் கை எழுதிக் கொண்டிருக்கும், மனம் இலக்கியத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் என்பதற்கு ஒரு சான்று, செய்தித்துறையில் நான் இருந்தபோது ஒரு நூலைத் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்து வந்தது. அந்தக் கோப்பின் மீது, “இந்த நூலுள் ஒரு சிக்கல் இருக்கிறது. அதை விடுவிக்க முடியாததால்தான் அதைத் தடை செய்ய வேண்டும்” என்று எழுதிவிட்டேன். அடுத்தக் கணம், கோப்பு திரும்பி வந்தது. “நூலுள் சிக்கல் இருந்தால் பரவாயில்லை. நூலால் வந்த சிக்கலையே நான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதி அனுப்பினார். எதை எழுதிக் காட்டினாலும் அதில் ஒரு இலக்கியக் குறிப்பு வரும்.
ஒன்று சொல்கிறேன். திண்டுக்கல் அருகில் ஒரு ஊருக்குப் பெயர் குஜிலிப்பாளையம் என்பதாகும். அது என்ன குஜிலிப்பாளையம் என்று சொல்லி மக்களெல்லாம் அந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் தந்தார்கள். அந்தக் கோப்பு வந்தபோது, “குஜிலிபாளையம் என்றால், குஜராத்தியர்கள் கடை வைக்கச் சென்றபோது, இருந்த இடம் என்றும், அவர்கள் பழைய பொருட்களை விற்கும் கடை இன்றும் சென்னைக்கு அருகில் குஜிலி கடை என்று வழங்கப்படுகிறது என்று சொல்லி, இந்தக் குஜிலிப்பாளையம் என்ற பெயரை குறிஞ்சிப்பாறை என்று மாற்றத் தமிழக முதலமைச்சரின் ஆணை வேண்டி இந்தக் கோப்பு பணிந்து அனுப்பப்படுகிறது” என்று எழுதி அனுப்பினேன். மறுநாள் அந்தக் கோப்பு திரும்பி வருகிறது.
பொதுவாக இப்படிப்பட்ட கோப்புகள் போனால், வெறுங்கையெழுத்துடன்தான் திரும்பி வரும். வெறுங்கையெழுத்திடும் பழக்கம் தலைவருக்கு எந்நாளும் இருந்ததில்லை. “குஜிலிப்பாளையத்தைக் குறிஞ்சிப்பாளையம் என்று மலையோரத்தில் இருப்பதால் குறித்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது.
ஆனால், குஜிலிப்பாளையம் என்ற பெயரை மருவி சொன்னால், அது குயிலம் என்று ஆகும். ஒரு இலக்கண ஆசிரியர், ஜகரம் என்பது யகரம் என்றுதான் ஆகும். ஜமுனா என்பது தமிழில் வருகிறபோது யமுனா என்றுதான் ஆகும். எனவே, குயிலம்பாளையம் என்றுதான் வைக்க வேண்டும். சிலப்பதிகாரத்தைச் செயலாளர் சிந்திக்க வேண்டும்” என்று எழுதினார். அருமை ஜே.கே. அவர்களே, காவியக் கவிஞர் அவர்களே, கோப்புக்களில் இப்படி இலக்கியம் ததும்புவதை நாம் யாரிடத்தில் பார்க்க முடியும்.
எனக்கு நினைவிருக்கிறது, நான் பதினெட்டு வயது இளைஞனாக இருந்தபோது, எங்கள் மனத்தில் நின்ற பாடம் என்னவென்றால் “வீரம் விலை போகாது. விவேகம் துணைபோகாவிட்டால், வீரம் விலை போகாது.
ஆதலால் இளைஞர்களே, நான் உங்களுக்கு வழங்குவது இந்த அறிவாயுதம் என்று எழுதிய திரைத்தொடர் இன்னும் எங்கள் மனத்தைவிட்டு அகலவில்லை. அன்று முதல் அறிவாயுதத்தை ஏந்திக்கொண்டு நூல்களையும், நுண்ணியக் கருத்துக்களையும் பரப்பி வருகின்ற தலைவரின் பிறந்தநாளைப் புத்தகத்திற்கு ஒரு சிறந்த நாள் என்று சொல்வதைவிடப் பொருத்தம் என்னவாக இருக்க முடியும்.
நூல் என்றால் பலபேர், திரிக்கிற நூல் என்று நினைக்கிறார்கள். தமிழில் நூல் என்று சொன்னால் ஊர் மக்களால் படித்தபிறகு நுவலப்படுவதுதான் நூல் என்று பொருள். நுவல் என்பதுதான் பின்னர் நூல் என்று ஆயிற்று. துகள் என்பதுதான் தூள் என்று ஆயிற்று. பகல் என்பதுதான் பால் என்று மாறும். எனவே, நுவலப்படுகிற கருத்துக்கள் நாட்டு மக்களின் உள்ளத்தைத் தடவி, அவர்களின் மனத்தில் மாற்றம் தருமானால், அதுதான் நூல். அப்படிப்பட்ட நூல் பகுத்தறிவு உலகத்திற்கு வாள். இளைஞர்கள் தங்களுக்கு வரும் எதிர்ப்புகளைத் தாங்குவதற்கும், பிறரைத் தாக்குவதற்கும் வேள் என்று வீர வரிகளை எழுதி நூல் உலகத்திற்குத் தலைவராகத் திகழ்கிற டாக்டர் கலைஞர் அவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம்.
எங்கள் வாழ்த்துக்கள், தமிழுலகம் தன் உணர்வுகளால் சொல்கின்ற வாழ்த்துக்கள் என்று சொல்லி, பதிப்பாளர்கள் எல்லாம் எண்பத்தைந்து நூல்களை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். பிறந்தநாள் எண்ணிக்கை என்பதால் எண்பத்தைந்து என்று நினைக்கிறேன்.
அல்லையன்ஸ் சீனிவாசன் அவர்களும், காந்தி கண்ணதாசன் அவர்களும் 185 நூல்களை இன்று வெளியிட்டிருப்பார்களானால், இன்னும்கூடத் தலைவர் உள்ளம் மகிழ்ச்சியடையும் என்று சொல்லி
வாழ்க கலைஞர்,
வெல்க புத்தகத்தின் புத்தகம் என்னும் போர்கருவி
என்று சொல்லி விடை பெறுகிறேன்
வணக்கம்.

Add a Comment