கவிப்பேரரசு வைரமுத்து நடத்திய ‘கலைஞர் புகழ் வணக்கம்’ நிகழ்ச்சி – மியூசிக் அகாடமி அரங்கம், சென்னை
////////////////////////////////////////////////////////////////////////////////////////
முனைவர் ஔவை நடராசன் உரை – 19.08.2018
============================================
இந்த நாள் நம்முடைய மனமெல்லாம் இறுக்கத்தில், துன்பத்தில், துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கிற நாளாக இருக்கிறது.
கலைஞரின் இலக்கியத் திறனுக்கு எண்ணற்ற சான்றுகள் :
——————————————————————–
ஆயிரம் நிகழ்ச்சிகளைத் தமிழ் மூதறிந்த தன்மையாளராகத் திகழ்ந்த அந்தத் தனிப்பெரும் தலைவரின் புகழை எந்த வகையிலும் எடுத்துச் சொல்லலாம்.
அவர் அறியாத தமிழ் இல்லை. அவருக்குத் தெரியாத சங்கப்பாடல்கள் இல்லை. அவர் எழுதாத உரை விளக்கம் இல்லை.
ஒன்று மட்டும் சொல்கிறேன்… கோப்பை பார்க்கிறபோதுகூட அவரின் இலக்கியத் திறன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு ஒரு சான்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
ஏதோ ஒரு கோப்பில், “விதி இதற்கு இடந்தரவில்லை” என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். மறுநாள் காலை, முதல்வர் எழுதுகிறார்… “விதியை மதியால் வெல்லத் தெரியாதா?”
இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற தொடர் இருக்க முடியுமா?
இன்னும் ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது…திண்டுக்கல் அருகே குஜிலிப்பாளையம் என்று ஒரு பகுதி இருக்கிறது. குஜிலிப் பாளையம் என்ற சொல்லை மாற்ற வேண்டும், அது என்ன பொருள் என்று விளங்கவில்லை என்று அந்தக் கோப்பு வந்தது.
கோப்பில் ஒரு முதலமைச்சர் எழுதுவது காணுங்கள்!
——————————————————————–
நானும் என்னால் முயன்றவரையிலும் பார்த்து, “குஜிலி என்று சொன்னால் குஜராத்தியர்கள் கடை வைத்திருந்த இடம் என்பதால், அந்தக் கடைகள் இருந்த பகுதிக்குக் குஜிலிப்பாளையம் என்ற பெயர் வந்திருக்கிறது, இதனை மாற்றுவது என்று சொன்னால், திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தது என்பதற்காகக் குறிஞ்சிப் பாளையம் என்று மாற்றலாம் என்று முதலமைச்சரிடம் இந்தக் கோப்பு பணிந்து அனுப்பப்படுகிறது” என்று எழுதி அனுப்பினேன்.
வின்ஸ்டன் சர்ச்சிலைச் சொல்வார்கள்…அவர் தலைமை அமைச்சராக இருந்தது மட்டுமல்ல பெரிது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள்தான் அவருக்கு ஆங்கில இலக்கியத்திலேயே நோபல் பரிசு பெற்றுக் கொடுத்தது. உலகத்தில் சர்ச்சிலுக்கு அடுத்து மா-சே-துங்கைச் சொல்வார்கள் அப்படிப்பட்ட இலக்கிய மனம் உடையவரென்று.
இந்த இரண்டு பேரிடம் காணாத ஒரு திறம், நம்முடைய கலைஞரிடம் உள்ள திறத்திற்கு ஒரு சான்று சொல்வதென்றால், அவருக்கு அரசியல் தெரியும், இலக்கியம் தெரியும், கலை தெரியும், சிந்தனை தெரியும், எண்ணுகின்ற எண்ணங்களையெல்லாம் எடுத்துக்காட்டவும் தெரியும். அவர் சிந்திய எழுத்துகளின் துளிதான் என்னைப் போன்றவர்களையெல்லாம் துணை வேந்தர்களாக மாற்றியது.
இரவு 12 மணிக்கு – இலக்கிய வரிகளில் அய்யம் கேட்ட தலைவர்!
——————————————————————–
ஒருநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு நண்பர் சண்முகநாதன் தொலைபேசியில் கேட்டார்…”பொருதடக்கை வாள்” என்ற தொடர் எங்கே வருகிறது என்று. எனக்குக் கேட்டால்தான் எதுவும் நினைவுக்கு வராது. நான் அவரிடம் சொன்னேன்… “பொருதடக்கை வாள் என்று பொதுவாகப் போட்டுவிட்டால் போகிறது, யாரதைக் கவனிக்கப் போகிறார்கள் என்றேன்”
சண்முகநாதன் சொன்னார்… “உங்களுக்கு வேண்டுமென்றால் தூக்கம் வரும். கலைஞருக்கு விடியற்காலை வரையில் தூக்கம் வராது. அந்தத் தொடரைக் கண்டுபிடித்தால்தான் தூங்குவார்” என்றார்.
குஜிலிப்பாளையம் தொடர்பான அந்தக் கோப்பில் ஒரு விளக்கம் எழுதியிருந்தார். “குறிஞ்சிப் பாளையம் என்று மாற்றுவதில் குற்றமில்லை. ஆனால், குஜிலி என்ற சொல் வருகிறபோது, அதற்குப் பங்கஜம் என்பதைப் பங்கயம் என்று மாற்றுவதைப்போல, குயிலம்பாளையம் என்று மாற்ற வேண்டும், சிலப்பதிகாரச் சிந்தனை அதைத்தான் சொல்கிறது” என்று எழுதினார்.
கலைஞரின் எழுத்தில் சிந்தனை – ஆற்றல் இருக்கும் !
——————————————————————–
இன்று இந்து நாளிதழில் ஒரு கட்டுரையைப் படித்தேன். Writer Statesman என்று கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். A Scholar Statesman அவருக்குத் தெரியாத கருத்துகளே இல்லை. அவர் எதைச் சொன்னாலும் அதிலே ஒரு துளி இருக்கும். சிந்தனை இருக்கும். ஒளி இருக்கும். ஆற்றல் இருக்கும்.
புறநானூற்றில் கலைஞருக்குப் பிடித்த ஒரு பாடலைச் சொல்லி நான் முடிக்க விரும்புகிறேன். அவர் சொன்னார்… “ஒரு மாமன்னன் மறைந்தபோது அந்தச் சங்கப்புலவன் எப்படிப் புலம்பினான் என்றால், வேந்தன் என்று சொல்வதா, மக்களின் உயிர் என்று சொல்வதா, நாட்டு மக்களின் நாயகன் என்று சொல்வதா, எவ்வாறு சொல்வேன் என்று புலம்பியதைப்போல,
‘நாடன் என்போம்,
ஊரன் என்போம்
பாடிவீழ் கடல் சேர்ப்பன் என்போம்
யாங்கனம் மொழிவோம்
போங்குவார் காதுகை’
—– என்று புறநானூற்று புலவன் புலம்பியதைப்போல அவர் தொடாத துறையில்லை.
நீதியரசர் (கே.என்.பாஷா) அவர்கள் பேசும்போதுகூட எனக்கு நினைவுக்கு வந்தது. எண்ணிப்பார்த்தால், எழுபது ஆண்டுகளுக்கு முன்புகூட நீதியரசர் பேசும்போது என் நினைவுக்கு வந்தது. “பூமாலை, நீயேன் புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்” என்ற பாடல் என் நினைவுக்கு வருகிறது.
அந்தப் பாடலில்;
மாமன்மார் மூவர் தம்பி, உன் மாம்பழக் கன்னத்தில் முத்தமாரி பொழிந்திடுவார் அந்தத் தொடர் எப்படி வருமென்றால் வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைர எழுத்தாணி கொண்டு தெள்ளுதமிழ் பாடம் எழுத எழுபதாண்டுகளுக்கு முன்பு அந்தத் தொடர்தான் தமிழ் இயக்கத்தை உருவாக்கியது. தமிழ் உணர்ச்சியை உருவாக்கியது. அதுதான் தமிழ் எழுச்சியைத் தந்தது.
எனவே தமிழகம் கலங்கி நிற்கிறது. அறிவுலகம் புலம்பி நிற்கிறது. புலவர் உலகம் வழியில்லையே என்று தவித்து நிற்கிறது. இவ்வளவு துடிப்புக்குப் பிறகும்கூட நம்முடைய கவிப்பேரரசு சொன்னதுபோல, ஒரு நூற்றாண்டைப் புதைத்திருக்கிறோம். பத்துப் பல்கலைக்கழகங்களைப் புதைத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான நூல் நிலையங்களைப் புதைத்திருக்கிறோம். யார் இனித் தமிழகத்தைக் காக்க முடியும் என்றெல்லாம் எண்ணிக் கலங்குகிற இருட்டில்தான் நம்மையெல்லாம் தங்க வைத்துச் சென்றிருக்கிற அந்தத் தங்கத் தலைவனுக்கு நம்முடைய தமிழ்தான் துணையாக இருக்கும். அவருடைய வழிமுறையினர்தான் காத்து இருந்து கடமையை ஆற்றிச் செழிப்பாக்க முடியும் என்பதை அவரே வழிகாட்டியிருக்கிறார்.
உடன்பிறப்பே எனும் உயிர்ச்சொல் பிறந்த கதை
——————————————————————–
கலைஞர் ஒன்று சொன்னார்…. “தம்பிக்கு என்று அண்ணா எழுதியிருக்கிறார்…அந்த நாளுக்கு அது சரி…கோடிக்கணக்கான தங்கையரும், தாய்மாரும் நம்முடைய கழகத்தில் இருக்கிறார்களே…அதை எப்படிச் சொல்வது?” என்றார். அவர் எப்படிச் சொல்வது என்று கேட்டால், ஏற்கனவே முடிவு செய்திருக்கிறார் என்று பொருள். அன்று பிறந்த சொல்தான் “உடன் பிறப்பே” என்ற சொல்லாகும். (பலத்த கைதட்டல்)
உடன் பிறப்பே என்று சொல்கிற சொல்லில், தம்பி, தமக்கை, அண்ணன், மாமன், மைத்துனன் என்று அனைத்து உறவுகளும் அடங்கும் என்று காட்டியதையெல்லாம் நினைக்க நினைக்க நெஞ்சம் பொங்குகிறது. இந்தக் கலங்குகிற மனத்தைத் தேற்றுகிற கரங்கள் பெருக வேண்டும்.
கவிப்பேரரசுவுக்கு மனமார்ந்த நன்றி!
——————————————————————–
நெஞ்செல்லாம் மணக்கும் இந்தப் புகழ் வணக்கத்தைச் செய்யக் கவிப்பேரரசு அவர்கள் இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்.
அதை எண்ணிப் பார்த்தால் தமிழகத்தின் இல்லங்களில், உள்ளங்களில், வாழ்வில், நடைமுறையில், சிந்தனையில், எல்லாத் துறைகளிலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கலைஞர் பெருந்தகைக்கு என்னுடைய மணமார்ந்த புகழ் வணக்கம்.

Add a Comment