POST: 2018-09-05T09:33:51+05:30

கருணீகர் நல்வாழ்வு
ஜூன் – 2017 இதழில் வெளிவந்த கட்டுரை
=======================================

வெற்றிக்கு எல்லை வேறெங்கும் இல்லை!
========================================
முனைவர் ஔவை நடராசன்

நம்நாடு விடுதலை பெற்ற பத்தாண்டுக் காலத்திற்குள் தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவனாகத் தந்தை பெரியாரும், தண்டமிழ்த் தண்ணிலவாகப் பேரறிஞர் அண்ணாவும், தமிழினத்தின் தனிப்பெரும் தாரகையாகக் கலைஞரும் சுயமரியாதைத் சுடர் ஒளியை ஏழு கோடித் தமிழ் நெஞ்சங்களில் எழுச்சி பெற ஏற்றி வைத்தனர்.

நாநலத்தாலும் எழுதுகோலின் பேராற்றலாலும் அண்ணாவும் கலைஞரும் தமிழக அரசியல் நாகரிகத்தில் நாணயத்தின் இரு பக்கங்களாகத் திகழ்ந்து ஈடிணையற்ற வகையில் தமிழகத்தைத் தழைக்கச் செய்தனர்.

அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டினை ஓராயிரத் தலைவர்கள் பின்பற்றியிருந்தாலும் நேரு பெருமகனாரையே தன் அரசியல் வழித்தோன்றல் என்று அறிவித்தார் காந்தியடிகள். அதே நிலையில் திராவிட இயக்கத்தைத் தமிழ்நாட்டில் அரியணை ஏற்றிய பேரறிஞர் அண்ணாவின் அரசியலுக்கு ஆற்றலும் அழகும் ஊட்டிய அணையாச் சுடராகத் தமிழகத் தலைவருக்குத் தலைவராக நம் முத்தமிழறிஞர் கலைஞர் திராவிட உணர்வைக் காத்து வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 15 உறுப்பினர்களுடன் அடியெடுத்து வைத்த நாள் முதல் கடந்த 60 ஆண்டுகளாக நின்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடிச் சட்டப்பேரவையில் செயலாற்றி அறுபது ஆண்டுகள் நிறைவு செய்வதை நினைக்கும் போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது.

கல்லூரி மாணவனாக நான் இருந்த காலத்திலேயே தலைவர் கலைஞர் அவர்களின் தமிழால் கட்டுண்டு, தலைநாள் போன்ற விருப்புடன் இன்று வரை எந்த நிலைக்குச் சென்றாலும் மாணவன் என்று பணிந்து உணர்ச்சியுடன் பழகிவரும் பேறு பெற்றவன். தமிழகச் சட்டமன்றத்தின் உறுப்பினராக வைர விழாக் காணும் மகத்தான பெருந்தகை கலைஞர் அவர்களைப் பணிவுடன் நன்றி பாராட்டி வாழ்த்தி வணங்குகிறேன்.

தலைவர் கலைஞரின் பண்பு நலன்களை எண்ணுந்தோறும் அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாராட்டிய புறநானூற்றுப் பொன்வரிகளே இந்த எளிய ஒளவையின் நெஞ்சினில் எப்போதும் தோன்றும்.

அப்பாடல் வரிகள்…

சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!

பெரிய கள் பெறினே,

யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!

பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே!

என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே!

அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே!

நரந்தம் நாறும் தன் கையால்,

புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே!

அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ,

இரப்போர் கையுளும் போகி,

புரப்போர் புன்கண் பாவை சோர,

அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்று வீழ்ந்தன்று, அவன்

அரு நிறத்து இயங்கிய வேலே!

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?

இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;

பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்

சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று

ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!

(புறநானூறு -235)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *