POST: 2018-09-07T13:31:00+05:30

இதற்கு மேல் எழுத இயலவில்லை
——————————————————–
நானும் என் துணைவியாரும் அண்ணல் இராமசுந்தரம் அவர்களின் அரவணைப்பை பெற்று மகிழ்ந்தோம். என் மூத்த மகன் டாக்டர்.கண்ணன் 02.09.2018 அன்று பேசிய இரங்கலுரைக்கு மேல் ஓர் எழுத்தும் என்னால் எழுத முடியவில்லை.

ஆல் போல் தழைத்த அவர் குடும்பம் அவர் நினைவை என்றும் போற்றுமாக!

அவர் திருமகனார் எங்களைச் சுற்றுலா அழைத்துச் சென்றதை நினைந்து நெகிழ்கிறோம்.
அன்பின் வழிவந்த கேண்மை அழிவதில்லை.

….. ஔவை நடராசன்

என் மகன் கண்ணன் பேசிய இரங்கலுரை உருக்கமாக உள்ளது.

பிரிஸ்பேன் ஞானத்தந்தை – பொதுநலச் செம்மல் இராமசுந்தரம் பிரிவு.
======================================================================
டாக்டர் கண்ணன் நடராசன்,
முதியோர் நல மருத்துவர்
குயின்ஸ்லாந்து

இந்நாள், நம் மனமெல்லாம் துயரத்தில் துடித்துக்கொண்டிருக்கிற நாளாக இருக்கிறது. இந்நகரின் முதுபெரும் தமிழர் அவர்களின் இழப்பு துக்கம் தருவதாகும். ஐயா அவர்கள், பிரிஸ்பேன் நகரில் தமிழின் அடையாளமாக விளங்கியவர். இம்மாநிலத்திற்குப் , புதிதாக வரும் தமிழர்களை அன்போடு அரவணைத்து விருந்தோம்பல் செய்வதில் பெரிதும் மகிழ்ந்தார். அப்படி பயன்பெற்றவர் இங்கு அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தக் குழுமியுள்ளோம்.

15 ஆண்டுகளுக்கு முன் நான் குயீன்ஸ்லாந்து மாநிலத்திற்கு இடம்பெயர்ந்த சமயம். சில மாதங்கள் கழித்து அவருடைய அறிமுகம் கிடைத்ததே ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி. 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலைத் தொடர்பான வானொலி நிகழ்ச்சியில் என் பேச்சைக் கேட்டுவிட்டு, இப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் என்னை தொலைபேசியில் அழைத்தார். உங்களை நேரடியாகப் பார்க்க வேண்டும் , அந்திநேரத்தில் auntyயோடு உங்கள் வீட்டுக்கு வருகிறோம். வரும்போது வடை, இடி அப்பம் கொண்டு வருகிறேன் என்றார். அந்திநேரம் வந்தது, இன்முகத்தோடு ஐயாவும், அம்மாவும் முதன்முறையாக எங்கள் வீட்டிற்கு வருகை தந்த அந்த அருமையான ஜனவரி நாளை என் மனைவியும், நானும் மறக்க முடியாது. பல காலம் தெரிந்தவர் போல் அவர் காட்டிய பரிவு, நெகிழ்ச்சி. அன்றுமுதல் ஏற்பட்ட நட்பு என்று சொல்வதைவிட எங்களுக்கு ஐயா, அம்மா மேல் ஏற்பட்ட அன்பு கலந்த மரியாதை நாங்கள் செய்த பெரும்பயன் எனக் கருதுவேன்.

இந்நாட்டில், என் பெற்றோர்கள் போல என்னை அரவணைத்து வந்தவர் ஐயா அவர்கள். அவரோடு பல கூட்டங்கள், முதியோர் விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள் என அழைத்துச் சென்றுள்ளார், வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் முதியோர் நலம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்ற எனக்கு வழிவகுத்தார். கடந்த 3 ஆண்டுகளாக, முதியோர் விடுதிகளுக்குச் செல்வது எங்களது வாடிக்கை. அங்குச் சென்று வரும்போதெல்லாம் அவர் சொல்லும் ஒரு கருத்து, “எவ்வளவு நாள்கள் நாம் நம் வீட்டில் குடும்பத்தோடு வாழ்கிறோமோ அதுவே சுதந்திரம், அதைத் தொலைத்து விட்டால் இப்படியான விடுதிகளில் நம்மவர்களின் தனிமையும், சமூக தொடர்பின்மையும் தான் நிரந்தரம்!” என கண்கலங்குவார்.

பலரிடம் பரிவு காட்டுவதில் அவருக்கு இணை அவரே. பல எடுத்துக்காட்டு உள்ளது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். முன்பு, கூப்பர்ஸ் பிளேன்ஸ் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்தார். அங்குப் போகும் போதெல்லாம் எனக்கு ஏற்பட்ட வியப்பு என்னவென்றால் இந்நாட்டிற்குப் புலம்பெயர்ந்தோர் பலர் முதலில் ஐயாவின் இல்லத்திற்கு வந்து அவரிடம் ஆசி பெற்று வாழ்வு தொடங்கியதும், அவர்களுக்கு ஐயா ஆற்றிய உதவிகளும் பன்மடங்கு. அவரது இல்லம், ஒரு தமிழினத்தின் தூதரகம் போல் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

இதற்கு எல்லாம் அடிப்படை 19 ஆண்டுகளுக்கு முன் ஐயா அவர்கள் ஏற்படுத்திய இந்திய வழிமுறையினர் தோட்டத் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம். அச்சங்கத்தின் வழியாக பொருளாதரச் சூழல் குறைந்த இளையோருக்கு கல்வி பயிலத் தனது ஓய்வூதியம், நன்கொடைகளை உதவித் தொகையாகக் கொடுத்து மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்த முன்னோடி ஆவார். அக்டோபர் மாதம் வரும் போதெல்லாம் அவரின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடுவது என்பதில் தான் கவனம் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன், ஒரு மின்னஞ்சல் குழுமத்தில் பிறந்தநாள் செய்தியாக, ‘நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, மலைநாட்டில் உள்ள தமிழர் வாழ்வு முன்னேற,’ என அனுப்பியிருந்தேன். அதை பார்த்துவிட்டு நானும் வாத்தியார் ரசிகன் தெரியுமா எனறார். அவரிடம் 15 ஆண்டுகள் மாணவனாக இருந்தேன் என்பதுதான் உண்மை. அவரின் பல பண்புநலன்களை உற்று கவனித்து வந்துள்ளேன். அதில், எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை திறம்பட அதே நேரம் விரைவாகச் செய்து முடிப்பது.உடனுக்குடன் ஒன்றை யோசித்து சரியாக செய்வதுசொல்வது என்பன.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதியதை கற்றுணர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஐயாவை, இங்குள்ள தமிழ் அமைப்பு, கலைக்கூடங்கள் வாழ்த்துரை கூற அழைத்தால், அந்த உரைக்கு அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை ஆச்சிரியப்படுத்தியது. அடிக்கடி அவர் சொல்வது, நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் முக்கிய கருத்தை எடுத்துச்செல்லும் சொற்கள் கேட்போரின் செவியில் ஊன்றி பதியம் போட வேண்டும் என்பார்.

குளிர்காலங்களில், ஆஸ்துமாவால் அவரின் நுரையீரல் பாதிக்கப்படும் போதெல்லாம், அவரிடம் ஐயா மருந்துகளை தவறமால் எடுத்துக்கொள்ளுங்கள் என்பேன். அதற்கு, வழக்கமாக அவர் சொல்வது செல்வ விநாயகர் பார்த்துக்கொள்வார் அல்லது நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள், என்ன குறை வந்துவிடப் போகிறது என்பார். தன் உடல்நிலையைவிட மற்றவர்களை ஊக்கப் படுத்தவேண்டும் என்பதில் தான் அவர் மனம் அமைதி கொண்டது.

அவரின் நம்பிக்கைக்கு ஏற்றவனாக அமைய வாய்ப்பு கிடைத்தமையால் சில தனிப்பட்ட கருத்துகளை அவரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. 15 ஆண்டுகளாக நான் கேட்ட கேள்விகளுக்கு விடைகள் அவரிடம் இருந்தன . வாரத்தில் 3 நாள் அந்திநேரம் 6.30 மணிக்கு எங்கள் இல்லத் தொலைபேசி மணி அடித்தால், அந்த அழைப்பு ஐயாவுடையதாக இருக்கும். இந்நகரத்தில், தமிழ்ப் பண்பாட்டுத் தூண்களாக இருவரைக் கருதுவேன் அதில் முதன்மையானவர் ஐயா. அவரின் அறிமுகமும், பழகக்கூடிய வாய்ப்பும் கிடைத்ததைப் பெரும்பேறாக என் உயிர் உள்ளவரை கருதுவேன்.

அவர் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார் எனும்போது நம் விழிநீர் ததும்புகின்றன. இறுதிநாள் வரை, பிறர் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் நிழலாக இருந்த ஞானத்தந்தை. இந்நாட்டில், இன்று தந்தையர் தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. ஆண்டுதோரும், இந்நாளில் ஐயாவிற்கு முதல் வாழ்த்துச் சொல்வதாக இருந்துவந்தது. இந்தாண்டு இப்படியாக நன்றி பாராட்டுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நம்மிடையே சிறப்புற வாழ்ந்து, வீடு பேறு அடைந்த ஐயாவின் ஆன்மா இறைவன் திருவடிகளில் திளைக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டுவோமாக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *