கலைஞர் புகழ் வணக்கம் !
===========================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்
(பகுதி – 1)
இடம் : மியுசிக் அகாடமி, சென்னை
நாள் : 04.09.2018
சான்றோர் பெருமக்களே,
கழகத்தின் பொருளாளராகத் திகழும் நண்பர் துரைமுருகன் அவர்களே,
கடந்த முப்பது நாட்களுக்கு மேலாகத் தமிழகம் கலங்கிப் புலம்பித் தவிப்பதை நாம் காண்கிறோம். இந்திய நாட்டின் அரசியல் தலைவர்கள், நீதியரசர்கள், துணைவேந்தர்கள், மகளிர், குழந்தைகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், சைவ அன்பர்கள், வைணவப் பெருமக்கள் என்று உலகமே திரண்டு கொண்டாடிக் கலைஞர் எழுந்து வருவாரா என்று ஏக்கத்தோடு அவர்கள் பேசியதெல்லாம் கேட்டபோது, மாவீரன் அலெக்சாண்டர் மறைந்தபோது, அவருடைய நினைவு நாள் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடந்ததாம். நாள் தவறாமல் மாசிடோனியா மக்கள் தங்கள் மன்னன் அலெக்சாண்டரை எண்ணி உருகியதாக எழுதியிருக்கிறார்கள்.
நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள், வாய் திறந்தால் தமிழ் சிந்தும். கை எழுதத் தொடங்கினால் காவியமாகப் பிறக்கும். கணக்கெடுத்துப் பார்த்து ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவர் பேசும்போது எப்படி இயல்பாகவே அவருக்குக் கருத்துகள் பொங்கி வரும் என்பதற்கு ஒரு சான்று, பொருளாளர் அவர்களுக்கு நினைவிருக்குமா என்று எனக்கு நினைவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சராக அவர்கள் இருந்தார்கள். அப்போது முதல்வர் கலைஞரும் பொதுப்பணித்துறை அமைச்சரும் வந்து நின்றார்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் பின்னால் நின்று கொண்டிருந்தார். நான் ஏதோ வாய் மறந்து கேட்டேன். என்ன அண்ணா இருவராக வந்திருக்கிறீர்களே, பாதுகாப்புக்கு யாரும் இல்லையா? என்று கேட்டேன். என்னோடு உடன் வந்திருப்பவர் முரு”கன்” என்றார். இப்படி யார் சொல்வார்? சொன்னது மட்டுமில்லை.
புறநானூற்றில் ஒரு புலவன் புலம்புவதைப்போல,
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!
களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர்எதிர்ந்
தெம்முளும் உளனொரு பொருநன் வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே
என்றுதான் புலம்ப வேண்டியிருக்கிறது.
பத்துத் துறைகளை எடுத்தால் பத்துத் துறைகளிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார். இன்னும் ஒன்று நினைவுக்கு வருகிறது. அருட்திரு ஊரன் அடிகளார், இராமலிங்க அடிகளார் வரலாற்று நூலை வெளியிடுவதற்காக, நான்தான் அழைக்கப்போயிருந்தேன். அப்போது ஊரன் அடிகளார் அமர்ந்திருந்தார்கள். உடனே என்னைப் பார்த்துக் கேட்டார்…”என்னுடைய பெயரும் ஊரன்தான் தெரியுமா?” என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. எப்படி அண்ணா சொல்கிறீர்கள் என்று கேட்டபோது சொன்னார்…. “நம் தலர் ஊரன் என்று படித்ததில்லையா?” என்று கேட்டார். திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் ஊரன் என்று பெயர் உண்டு. அவர் சிந்தனை எவ்வளவு ஆழ்ந்து செல்கிறது என்பதற்கு ஒரு சான்று சொல்வதென்றால், அவர் எழுதிய கோப்புகளில் எப்படித் தமிழ் எழுதுவார், அவருடைய சிந்தனையெல்லாம் எப்படிப்பட்ட சீர்திருத்த வெள்ளமாக இருக்கும்… ரொம்ப நகைச்சுவையாக நான் தெரியாமல் கேட்டேன். இயலிசை நாடகப் படிப்பு நடைபெறுகிற இசைக்கல்லூரியில், நாதசுரம் படிக்க வந்திருக்கிற இளைஞர்களுக்கு நாம் தருகின்ற ஊதியத்தைக் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என்று கேட்டேன்.
சிரித்துக்கொண்டே சொன்னார், “ஊதியதால்தானே உயர்வு கேட்கிறார்கள்?” என்றார்.
நினைத்தவுடனே ஒரு கருத்து சொல்வார். புறநானூற்றில் ஒரு தொடர்… அந்த ஒரு கவிதைக்கு 120 வரிகளில் ஓவியம் வரைந்திருக்கிறார். புறநானூற்று பாடல் வீரம் சொட்டுகிற, கொதிக்கிற, கலைஞரின் வரிகளில் சொல்வதென்றால் புறநானூற்று வரிகள் போர் வரிகள், வாள் வரிகள் என்று சொல்வார்.
அந்தப் புறநானூற்று பாடல், குடிசைதான், அங்கு வாள்கள் வரிசையாக இருக்கும். நரை முதிர்ந்த கிழவி, தன்னுடைய மகனைப் பற்றி பேசுகிறார்கள். புறமுதுகுற்றான் உன்னுடைய மகன் என்று கேட்டவுடனே துடித்தாள், வெடித்தாள், குடும்ப விளக்கு எரிந்துகொண்டே கூறுகிறாள். “கெட்டதுதான் கெட்டதே, நமது குடிமுழுவதும் பட்டொழிந்து போகட்டும்” என்று துடித்தாள். இதுகூடப் புறநானூறுதான். இது முடிந்த பிறகு, என்னுடைய மார்பை அறுத்தெறிவேன் என்று சொல்கிறாள் என்று முடிக்கும்போது, வாள் இங்கே, சொன்ன வஞ்சகன் நாவெங்கே என்று புறநானூற்றுக்கும் மேலே ஒரு தொடர் எழுதிய பெருமை கலைஞர் அவர்களைத்தான் சாரும். கலைஞர் 73 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அந்தப் பாடல்…..
குடிசைதான்! ஒரு புறத்தில்
கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும் – வையத்தைப்
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை –
புதுமையன்று!
கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் –
மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்பப்
பொக்கை வாய்தனைத் திறந்து
பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி,
ஓடி வந்தான் ஒரு வீரன்
‘ஒரு சேதி பாட்டி!’ என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல்
பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி?
மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்; பின்,
பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள் அந்தக்
கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டுத் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி – உன்
வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
`மடிந்தான் உன் மகன் களத்தில்’
என்றான் – மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!
‘தாயம் ஆடுகையில் காய்களை
வெட்டுவதுண்டு – களமும் அதுதான்.
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்’ என்றாள் – முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்;
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
‘கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர்
போர் வீரனாம்! முன்பொரு நாள்
பாய்ந்து வந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்.
அவருக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே – குட்டிச்
சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.
இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் – இங்கு
வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும்!
மதுவும் சுறாவும் உண்டு வாழும்
மானமற்ற வம்சமா நீ – ஏடா
மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய்
மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன் – தின்று கொழுத்துத்
திமிர் பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையா? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற
கோழையே – என் வீரப்
பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள்
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.
சென்றங்குச் செரு முனையில்
சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப்
புரட்டிப் பார்த்தாள் – அங்கு
நந்தமிழ் நாட்டைக் காக்க
ஓடிற்று ரத்த வெள்ளம்!
பிணக்குவியலிலே பெருமூச்சு
வாங்க நடந்தாள்!
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை – மகன்
பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு
எல்லையுண்டு – அவன்
இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் – இதயங் குளிர்ந்தாள்!
‘எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான்’ என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன்
அவன் குடித்த மார்பை – அடடா!
கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?”
அவர் துடிக்கிற துடிப்பும், எத்தனை சிந்தனைகள் என்று பாருங்கள். மகளிர் மனம் உள்ளவரையில் நினைக்கின்ற நாள் வரையில், மகளிருக்குக் குடும்பத்தில் சொத்துரிமை உண்டு என்று நிலைநாட்டியவர் கலைஞர்தான். 1989ல் அவர் அப்படி ஆணையிட்டார். 2005ம் ஆண்டு இந்திய நாட்டின் அத்தனை மாநிலங்களும் இதனை ஏற்றுக்கொண்டன.

Add a Comment