POST: 2018-09-09T09:06:41+05:30

கலைஞர் புகழ் வணக்கம் !
===========================
பத்மஸ்ரீ ஔவை நடராசன்

(பகுதி – 2)

சிந்தனையால் செயலால், ஆட்சித்திறத்தால், வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம். ஒரு நாளைக்கு முப்பது வரிகள் எழுதுவார். முப்பது பக்கங்களாவது முடியாமல் எழுந்திருக்கமாட்டார்கள்.
ஒருமுறை தஞ்சையில் இருந்து விடியற்காலை 06.00 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு. 08.00 மணிக்கு அலுவலகத்திற்கு வந்தவர் சொன்னார்… “நான் இப்போது பேசுகிறேன், என்னுடைய பேச்சைத்தான் எதிர்பார்க்கிறார்கள்… 10.00 மணிக்கு நான் பேச வேண்டும். நான் என்னுடைய பேச்சை எழுதிவிடுகிறேன்” என்று எழுது ஆரம்பித்தார். நாங்கள் நால்வர் சுற்றி நின்றிருந்தோம். நீங்கள் சொல்லுங்கள், நாங்கள் எழுதுகிறோம் என்று கேட்டோம். “நான் டிக்டேட்டர் இல்லை” என்றார். “நானே எழுதிவிடுகிறேன்” என்றார். அறுபது பக்கங்கள் எழுதி முடித்தார்.

மணி ஒன்பதாயிற்று. ஒன்பது மணிக்கு அதை எப்படி அச்சிடுவது? என்று கேட்டபோது சொன்னார், “என்னுடைய எழுத்தை அப்படி நகல் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கொடுத்தார். அந்த நகல்தான் அப்படியே பேச்சான மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு. முப்பதாண்டுகாலம் ஆட்சி. ஐந்துமுறை முதலமைச்சராக வந்தது மட்டுமல்லாமல் அவர் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கை, காந்தியடிகள் எழுதிய பக்கங்களின் எண்ணிக்கை 100 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் உரைகள் 4 தொகுதிகள்தான் வந்தன. கலைஞர் அவர்கள் எழுதிய பக்கங்களையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், ஏறத்தாழ 7 இலட்சம் பக்கங்கள் இருக்கும். இவ்வளவு பக்கங்கள் எழுதியவர் கலைஞர் அவர்கள்தான்.

நண்பர் ஜெகத்ரட்சகன், அவர் மாணவப் பருவத்திலிருந்து நாளும் கலைஞரைப் பார்த்து மருண்டவர். என்னிடத்தில் கடந்த முப்பது நாளாக அவர் பேசியதே இல்லை. நாள்தோறும் நலமா என்று கேட்பார். ஆனால் இப்போது கேட்கவே இல்லை.
ஒருநாள் மகிழ்ச்சியோடு பேசினார். இன்று நிம்மதியான நாள் அண்ணா எனக்கு. நான் என்னுடைய நிம்மதியைச் சொல்வதற்காகத்தான் இவ்வளவுநாள் பேசாமல் இருந்தேன். என்ன நிம்மதி என்றால், நாம் எதிர்பார்த்த தலைவர் தமிழகத்திற்கு வாய்த்துவிட்டார். நாம் அரவணைத்து மகிழ்கிற அண்ணன் துரைமுருகன் பொருளாளராக அமர்ந்திருக்கிறார். இனிமேல் நாள்தோறும் பேசுவேன் என்றார்.

என்னுடைய கண்ணீர் கொஞ்சம் காய்ந்திருக்கிறது என்று உருகிப் பேசுகிற வகையிலேதான், இந்த விழாவில் காலையில் சைவம், பிறகு வைணவம், இப்போது நடப்பது சன்மார்க்கம். அடிகளாருக்குச் சன்மார்க்கத் துறவி என்றே பெயர். அடிகளாரின் மீது பேரன்பு கொண்டிருந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
ஆழ்வார்கள் ஆய்வு மையத்திற்கு இன்னொரு தனிப்பெருமை, இராமானுஜர் விருதை ஆழ்வார்கள் ஆய்வு மையம் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு வழங்கியது. அப்போது சிரித்துக்கொண்டு சொன்னார்… “இது ஆழ்வார்கள் மையம் மட்டுமில்லை…என்னைப் போல் ஆள்வார்களுக்கும் இதுதான் மையம்” என்றார்.

இராமானுஜரின் நாடகத்தை அவர்கள் எழுதியபோது, எத்தனை நூறு பக்கங்களையெல்லாம் பல்வேறு நபர்களிடம் இருந்து புத்தகங்கள் வாயிலாகப் பெற்று அந்த நாடகத்தை முழுமையாக்கியவர் நம்முடைய கலைஞர் அவர்கள்தான்.

மீண்டும் நான் அதையே சொல்ல வருகிறேன். அவருடைய திறமைக்கு ஒரு கணக்கெடுப்பது என்றால், அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ஔவை பாடியபோது ஒரு தொடர் இருக்கிறது. வைகளும் என்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே
நீங்கள் கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள். நாள்தோறும் எட்டுத் தேர்களைச் செய்யும் திறமையாளன், எட்டுத் தேர்கள் என்று சொன்னால், ஒரு தேருக்கு நான்கு சக்கரங்களோடு நிறுத்துவதில்லை. கூடுதலாக ஒன்று ஐந்து சக்கரங்கள் பொருத்துவார்கள்.

அவன் திங்கள் வலித்த கால் அன்னோன். ஒருநாள் அல்ல. முப்பது நாள் அவன் எப்படி முயன்றால் செய்ய முடியும் என்று சொன்னால், அது கலைஞரின் திறமைதான்.

இந்தியத் தலைவர்களில், அரசியல் வாணர்கள் இருக்கிறார்கள், இலக்கியவாணர்கள் என்று அரசியல் வாணர்களைக் காண்பதற்கில்லை. உலக வரலாறு எழுதினார்கள். ஆனால், இயல்பான கற்பனை, எழுச்சியான நாடகம், சிந்தனைகளைத் தூண்டும் சிறுகதை, நினைத்துப்பார்க்க முடியாத நெடுங்கதை, தொல்காப்பியத்திற்குப் பூங்கா என்று தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்து காட்டி, சிலப்பதிகாரத்திற்குப் பூம்புகார் என்று வடிவமைத்துக்காட்டுகிறேன் என்று சொல்லி, வருகிறபோதெல்லாம் வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து, திருவள்ளுவர் சிலைகளைப் பார்க்கிறபோது, பெரியார், அண்ணா சிலைகளைப் பார்க்கிறபோது, நம்முடைய சிந்தனைகளைச் சிலிர்க்கச் செய்த பெருந்தகையாகக் கலைஞர் திகழ்கிறார் என்ற அளவிலே நம்முடைய அவலத்தை வேறு சொற்களால் எப்படிச் சொல்ல முடியும் என்று அமைகிறேன் வணக்கம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *