பேரறிஞர் அண்ணா 110 ஆவது பிறந்தநாள்
===========================================
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவால்தான் தமிழினம் பாராட்டு பெற்றது.
தந்தை பெரியார், அதட்டி எழுப்பினார். அண்ணாவோ அன்பால் வருடி உணர்வுகளைத் தூண்டினார்.
பெரியாரைச் சாக்ரடீஸ் என்று அழைப்பதுபோல, அண்ணாவை அறிவுக்கதிர்கள் ஆயிரம் கொண்ட அரிஸ்டாடில் என்று புகழ்ந்து சொல்லலாம்.
ஆழ்ந்த தமிழகமே நீ தலை நிமிர்வது என்நாள்?
அதுதான் தமிழகத்தின் பொன்னாள்.
மனமருள் கொண்ட மக்கள் கூட்டம் என்ற மான்கள் கானல் நீரைத் தேடி ஓடிய காலம் முடிகிறது.
அறிவுத் தெளிவு என்ற ஆலோலம் கேட்கிறது.
சிட்டுக் குருவிகள் விட்டு விடுதலையாகி விண்ணில் விரும்பியபடி பறக்கட்டும் என்றெல்லாம் உவமைத் தொடர்களை அடுக்குத்தொடர்களைத் தமிழகம் அதற்கு முன்னால் கேட்டதில்லை.
புத்துணர்ச்சியின் சிற்பியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா பகுத்தறிவுத் தென்றல் சுயமரியாதைச் சுடர் தன்மான இயக்கத்தின் கனல் பேரறிவின் நிழல். அவர் ஊட்டிய உணர்வு, மூட்டிய கனல் என்றும் அணையாது சுடர்விடச் செய்வது தமிழினத்தின் கடமையாகும்.
……பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment