POST: 2018-10-18T09:47:36+05:30

=========================================
துக்ளக் இதழில் – வி.வி.ஐ.பி. மீட் பகுதியில் இடம்பெற்ற நேர்காணல்
=========================================

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஔவை து.நடராசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஒளவை து.நடராசன் நாடறிந்த தமிழறிஞர். தனது தூய தமிழ் பேச்சால் எல்லோரையும் கவர்பவர். பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகித்தவர். தமிழறிஞர் என்ற வகையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவரை ‘துக்ளக்’ வாசகர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். அந்தக் கலந்துரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே :

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
“இன்றைக்குப் பல்கலைக் கழகத்
துணைவேந்தர்கள் பழி வேந்தர்கள் ஆவது ஏன்?”
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1, பத்மனாபன்:

ஒளவை என்ற பெயர் எப்படி உங்களோடு ஒட்டிக் கொண்டது ?

ஔவை நடராசன்:

இது நிறைய பேர் நிறைய தடவை கேட்ட கேள்விதான். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே என்பார்கள். ஆனால், இங்கே சிலருக்கு ஊரே பேராகி விட்டது. பசும்பொன் என்றாலேயே அது தேவர் பெருமகன்தான். பெருமழைப் புலவர் என்பதும் அப்படித்தான். கோவூர் தெரிந்தது; ஆனால் பெயர் தெரியவில்லை. அவர் கோவூர் கிழார் என்றே அழைக்கப்பட்டார். அது போல இந்த ஒளவை என்பதும் ஒளவையாரைக் குறிப்பதல்ல; எங்கள் ஊரைக் குறிப்பதுதான். தென்னாற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் இருக்கிறது. திண்டிவனத்துக்கு அருகே, மைலத்திற்கு மேற்கே ஆலக் கிராமம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஆலக்கிராமத்தை அடுத்து ஒளவையார் குப்பம் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அங்குத்தான் என் அப்பா பிறந்தார். அவர் பெயர் துரைசாமி. அவர் மேல் நிலைப் பள்ளியில் படித்தபோது, அங்கு மற்றொரு துரைசாமியும் பயின்றுள்ளார். இதனால் சில நேரங்களில் பெயர்க் குழப்பம் வருவதுண்டாம். அப்போது அங்கிருந்த தமிழாசிரியர் என் அப்பாவை ஒளவை துரைசாமி என்றும், மற்றொரு துரைசாமியை செஞ்சி துரைசாமி என்றும் ஊர் பெயரைச் சேர்த்து அழைத்திருக்கிறார். பின்னாட்களில் என் அப்பா ஒளவை துரைசாமி என்றே கையெழுத்திட்டு வந்தார்.

ஆரம்பத்தில் நான் டி.நடராசன் என்று கையெழுத்திட்டேன். பிறகு என்னை அழைத்தவர்களில் பலர் திரு.டி.நடராசன் என்று அழைத்தார்கள். அதாவது ‘திருடி’ நடராசன் என்பது போல் உச்சரித்தார்கள். அதன்பின் து.நடராசன் என்று கையெழுத்திட்டேன். இறுதியில் நானும் ஒளவை நடராசன் ஆக மாறிவிட்டேன் இதுதான் ஒளவைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. மற்றபடி அந்த அம்மை யாருக்கும் எனக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. ஒன்று வேண்டுமானால் சொல்லலாம். நான் முனைவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு – ‘சங்ககாலப் புலமை செல்வியர்’. சுமார் 32 பெண்பாற் புலவர்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டேன். அதில் ஒளவையாரும் உண்டு. ஒளவையார் வேடத்தில் நடித்ததால் கலைஞர் தி.க.சண்முகம் அவர்களுக்கு ஒளவை சண்முகம் என்று பெயர் கிடைத்தது. நான் ஒளவையாரைப் படித்ததாலோ என்னவோ எனக்கு ஔவை நடராசன் என்ற பெயர் கிடைத்து விட்டது. இன்றும் கூட இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பக்கத்தில் அமரும் போதெல்லாம், ‘குமரிக்குப் பக்கத்தில் கிழவிதான் சரி’ என்று சொல்வார்.

2. பாலமுருகன்:

நீங்கள் பேராசிரியராகப் பணியாற்றினீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதானே?

ஔவை நடராசன்:

நான் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலம் 6 ஆண்டுகள் கூட இருந்திருக்காது. தஞ்சை சரபோசி மன்னர் கல்லூரி மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றினேன். பொதுவாக மாணவர்கள் இளநிலை, முதுகலை என்று 5 ஆண்டுகள்தான் கல்லூரியில் படிப்பார்கள். அதே ஐந்து ஆண்டுக் காலப் பேராசிரியர் பயிற்சிதான் எனக்கும் அங்குக் கிடைத்தது. கவிக்கோ அப்துல் ரகுமான், கவியரசர் மீரா, நா.காமராசன், கவிஞர் ஹபிபுல்லா , கா.காளிமுத்து, கவிஞர் மு.மேத்தா இவர்களெல்லாம் அப்போது அங்கு மாணவர்களாக இருந்தனர். அந்தக் காலம் இலக்கியக் கனவுகள் மலர்ந்த நிலாக்காலம். மணக்கும் நினைவுகள் கணக்கில்லாதவை. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் வேறு பணிக்குச் செல்ல நேரிட்டது. என் வாழ்க்கையை ஒரு அமெரிக்க நெடுஞ்சாலை என்று தான் சொல்ல வேண்டும். மழமழச் சாலை தான். எந்தக் காயமோ, தழும்போ, விபத்தோ – எங்கும் விளைந்ததில்லை. சுமார் 5 ஆண்டு காலப் பேராசிரியர் பயிற்சிக்குப் பின்னர் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களிடத்தில் செயலாளராக, இராமலிங்கர் பணி மன்றத்தில் பணி புரிந்தேன். சுமார் பத்து வருடங்கள் அங்குப் பணியாற்றினேன். அதன் பிறகு, அரசு வேலைக்கு என்னை அழைத்தார்கள். செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். ஆறு மாதத்தில் மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக அமர்ந்தேன்.

3. உஷா மதனகோபால்:

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மூன்று பேரிடமுமே நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். பாராட்டப்பட்டிருக்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியமானது?

ஒளவை நடராசன்:

காலம் எனக்குக் கொடுத்த கொடை அது என்றுதான் சொல்ல வேண்டும். மூவருமே கலைத் திலகங்கள்; கனிவால் வென்றவர்கள். கலை, கனிவு, கண்டிப்பு, ஆகிய இயல்புகளுக்கு இலக்கணம் வரைந்தவர்கள். கலைஞர்தான் என்னைப் பாசத்துடன் அழைத்துச் செய்தித்துறை துணை இயக்குநராக நியமித்தார். அதன் பிறகு மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராக 10 ஆண்டுகள் பணி புரிந்தேன். அந்தப் பணியை எனக்கு அன்போடு வழங்கியதும் கலைஞர் அவர்கள்தான்.

4. உஷா மதனகோபால்: கலைஞரிடம் நெருக்கமாக இருந்திருந்தால், எம்.ஜி.ஆரிடம் நெருங்குவது சிரமம் ஆயிற்றே ?

ஔவை நடராசன்:

அப்படி எந்த இடரும் எனக்கு நேரவில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு, எப்போதுமே என் மீது ஒரு அலாதியான அன்பு உண்டு. என்னைத் தொட்டுத்தான் பேசுவார்; அருகில் அழைத்து அணைத்துக் கொள்வார். அந்த அளவுக்கு என் மீது தனிப் பாசம் வைத்திருந்தார். இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். அரசுக் குறிப்பு ஒன்றில் ‘கவனக்குறைவாகக் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் அந்த ஓட்டுநரைப் பணி மாற்றம் செய்யலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தது. நான் ‘கார் ஓட்டி’ என்று இருந்ததை ‘காரோட்டி’ என்று திருத்தம் செய்தேன். அந்தக் கோப்பு எம்.ஜி.ஆரிடம் போனது. அவர் என்னை அழைத்து ‘கார் ஓட்டி ‘ என்பது சரி தானே ? அதென்ன ‘காரோட்டி?’ என்று கேட்டார். அப்போது நான் உடனடியாக, ‘நான் படகோட்டி பார்த்தே பழக்கப்பட்டவன்’ என்று பதிலளித்தேன். உடனே அவருக்குப் பெரிய மகிழ்ச்சி; முகத்தில் ரோஜாச் சிரிப்பு. சரி இப்போது விஷயத்துக்கு – வருகிறேன். நான் அரசுப் பணியில் பத்து ஆண்டுகள் முடித்து விட்டேன். ‘இனிமேல் அரசுப் பணியும், ஊதியமும் இல்லை. எனவே பொது வாழ்க்கையில் ஈடுபடலாம்’ என்று முடிவெடுத்தபோது, எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை அழைத்து, ‘அவசரப்படாதீர்கள்; தமிழுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். தலைமைச் செயலகத்தில் உங்களுக்காக ஒரு பணியிடத்தை உருவாக்க முடியுமா என்று ஆராய்வோம்’ என்று தெரிவித்தார்.
நான் உடனே, ‘அறிவியல் ஆய்வுத் துறை என்று ஒரு துறை மத்திய அரசில் இருக்கிறது. அதனுடைய செயலாளர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி இல்லை; ஓர் அறிவியல் அறிஞர்தான் செயலாளர். அதேபோல் சட்டத்துறைச் செயலாளர் சட்டத்துறையில் இருந்தே வருவார்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நியமிக்கப்படுவதில்லை. இது போன்று இங்குத் தொல்பொருள் ஆய்வுத் துறை, அருங்காட்சியகத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை, நூலகத்துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை, மொழி பெயர்ப்புத் துறை இவை தமிழோடு தழுவியதாக இருப்பதால், இத்தகைய பத்துத் துறைகளை ஒன்றிணைத்து, தலைமைச் செயலகத்தில் ஒரு அரசுச் செயலரை நியமித்து அவரது ஆளுகையின் கீழ், அந்தத் துறைகளைக் கொண்டு வரலாம்’ என்று எம்.ஜி.ஆர்., அவர்களிடம் தெரிவித்தேன். இந்தக் கருத்தை என்னிடம் தெரிவித்தது கல்வித்துறை இயக்குநராகவும், புதுவைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்த வேங்கடச் சுப்பிரமணியம் அவர்கள்தான் என்பதையும் இங்கு நான் “நன்றியோடு நினைவு கூர வேண்டும்.

இந்தத் தகவலை நான் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் அவர், ‘நான் தலைமைச் செயலாளரிடம் இது குறித்துப் பேசுகிறேன். இரண்டு நாட்களில் புதுடெல்லி செல்கிறேன். அங்கும் இது குறித்து விசாரித்து விட்டு வருகிறேன்’ என்று பதிலளித்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், சரியாக மூன்று நாட்கள் கழித்து எம்.ஜி.ஆரே எனக்கு ஃபோன் செய்து, “இன்று முதல் தமிழகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது; அதற்குப் பத்தாண்டுகள் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமுள்ள நீங்கள் அரசு செயலாளராக நியமிக்கப்படுகிறீர்கள்’ என்றார். இப்படித்தான் தலைமைச் செயலகத்தில் ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டது; அதற்கு நான் செயலராக நியமனம் செய்யப்பட்டேன். அதன் பிறகு அந்தச் செயலர் பதவிக்கு, அடுத்தடுத்து வருபவர்கள் எப்படி நியமனம் செய்யப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளையும் நாங்கள் வகுத்தோம். 20 ஆண்டுகள் தமிழ்ப் பணி; பத்தாண்டுகள் இயக்குநர் பணி ஆகிய, அனுபவம் இருக்க வேண்டும் என்றும், அப்படி அமையாது போனால் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் தமிழார்வம் கொண்டவர்கள் அங்கு நியமிக்கப்படலாம் என்றும் விதிமுறை வகுத்தோம்.

5. பாலமுருகன்:

செல்வி ஜெயலலிதாவோடு உங்கள் பழக்கம் எப்படி அமைந்தது?

ஔவை நடராசன்:

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டாண்டுகள் கழித்து ஒருநாள் காலை என்னை அழைத்தார். நானும் போனேன். என்னை அன்போடு வரவேற்ற அவர், ‘தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் செல்லுங்கள்’ என்று ஆணையிட்டார். நான் சற்றுத் தயங்கி, ‘எனக்கு இப்போது 55 அகவை தான் ஆகிறது. 58 அகவையாகி இங்கு ஓய்வு பெற்றதும், அந்தப் பணியை ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் எனக்கு நன்மை ‘ என்று தெரிவித்தேன். அவர் உடனே வெடுக்கென்று “உங்கள் நன்மை முக்கியமா? தமிழின் மேன்மை முக்கியமா?’ என்று கேட்டார். நான் வாயடைத்துப் போனேன், உடனே என் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்த மூன்றாவது நாளே தேடுதல் குழு, கவர்னர் ஆகிய அனைவரின் ஒப்புதலோடும் நான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டேன். நான் தஞ்சைக்குப் போனதும் தலைமைச் செயலகத்தில் இருந்த தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் செயலர் பதவி, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளின் மடியில் விழுந்து விட்டது. அன்று முதல் இன்று வரை அந்தப் பதவியை முதுநிலைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் ஒருவர்தான் வகித்து வருகிறார். இப்படி மூவேந்தர்களாகத் திகழ்ந்த மூன்று முதலமைச்சர்களிடமும் நான் அன்பைப் பெற்றிருந்தேன் என்பது பெருமைக்குரிய செய்தி. அரசுப் பணி யில் நான் இருந்த காலம் என்னைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலமாகவே அமைந்து விட்டது.

6. மகேசன்:

நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது, அப்போது துணை வேந்தராக டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் இருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு துணைவேந்தரோ, பேராசிரியரோ, ஒரு கல்லூரி முதல்வரோ தவறு செய்வது என்பது மிக மிக அரிதான ஒன்று. ஆனால், இன்றைக்குக் கோவை பல்கலைக் கழகத் துணைவேந்தர் கம்பி எண்ணுகிறார்; மதுரை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்; ஓய்வு பெற்ற’ சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைச் சந்தித்து வருகிறார்; சட்டப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முன்ஜாமீன் தேடி அலைகிறார். ஏன் இந்த அவலம்? இப்போதைய துணை வேந்தர்களின் தேர்வு சரியானபடி இருப்பதில்லையா அல்லது சரியான நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், அவர்கள் அரசியலுக்கு இரையாகி ‘தவறான நபர்களாக மாறிவிடுகிறார்களா?

ஔவை நடராசன்:

நாம் சுருக்கமாகச் சொல்லி விடலாம் ‘காலம் கெட்டு விட்டது’ என்று. ஆனால், உண்மையில் காலம் என்றுமே கெடுவதில்லை, உயரிய காலத்தில் வாழும் மக்கள் தங்களை, உன்னத உணர்வுகளால் காலத்துக்குரிய மக்களாக மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். பொருளாசை பெரிய இருளுக்குத் தள்ளுகிறது என்பதே உண்மை. நீங்கள் சொன்ன மு.வரதராசனார்தான் எனக்குப் பேராசிரியராக இருந்தார். அவர் எங்களிடம் சொன்ன விஷயம், ‘என் ஆசிரியர்கள் தண்ணீர் அருந்திக் கூட நான் பார்த்ததில்லை’ என்பது. அது நூறு சதவிகித உண்மை. அந்தக் காலத்துப் பேராசிரியர்கள் மாணவர்கள் முன்பாகத் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்; உணவருந்தவும் மாட்டார்கள். ஏனென்றால், ஆசிரியர் எந்த விதமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்; அதை எப்படிச், சாப்பிடுகிறார்; தண்ணீரை எப்படி அருந்துகிறார் என்பதையெல்லாம் மாணவர்கள் பார்த்து ஒரு வேளை ஆசிரியரிடம் தவறான பழக்கம் இருந்தால், அந்தப் பழக்கத்தை மாணவர்கள் கற்றுக் கொண்டு விடக்கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையில், ஆசிரியர்கள் அவ்வாறு நடந்து கொண்டார்கள், ஆசிரியர்கள் சிலருக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் ஒருநாள் கூட அவர்கள் புகைத்துப் பார்த்ததில்லை.

அன்றைக்கு ஆசிரியர்களைப் பார்த்தே, மாணவர்கள் தங்களுடைய நடை, உடை, பாவனை, கையெழுத்து ஆகியவற்றை அமைத்துக் கொள்வார்கள். ஆசிரியர்கள்தான் அவர்களுக்கு முன்னுதாரணம். ஆசிரியர்களும் இதை நன்கு உணர்ந்திருந்ததால் மாணவர்களுக்கு மத்தியில் அவர்கள் ஒரு நேர்த்தியான, வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். துணை வேந்தர் என்பவர்கள் நாடறிந்தவராக, உலகறிந்த வராக, புகழ் பூத்தவராக விளங்கினார்கள். எனவே ‘அந்த உயரத்தில் இருந்தவரின் உடையில் ஒரு தூசு படிந்தாலும் உலகம் ஏசும்’ என்று, ஒருமுறை மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே நேரத்தில் துணை வேந்தராயிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார், ”சென்னைக்குச் சென்றால் அலைபுரளும் கடற்கரை, அருங்காட்சியகம், அறிஞர் மு.வ. ஆகிய மூன்றையும் காணத் தவறாதீர்கள்’ என்று மதுரையில் இருந்து மாணவர் குழு வந்ததை நானறிவேன்..’

இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. அதற்காகக் காலத்தின் மீது பழி போட முடியாது. பாவம்! காலத்திற்கு இவர்களால் கறை ஏற்படுகிறது. கல்வி உலகத்துக்கு நீங்காத பழி ஏற்படுகிறது. இன்றைய உலகம் நாளுக்கு நாள் பதட்டம் நிறைந்ததாக உருமாறி வருகிறது. வாழ்க்கைமுறை இறுக்கம் நிறைந்ததாகவும், உளைச்சல் நிறைந்ததாகவும் மாறி வருகிறது. என் பேத்திக்கு ஏழு வயது கூட ஆகவில்லை . ‘ஏன் அம்மா அமைதியாக இருக்கிறாய்’ என்று கேட்டால், ‘எனக்கு மூட் அவுட். மனசு சரி இல்லை ‘ என்கிறாள். உலகம் அப்படி மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஒரு புலவரைப் பார்த்து ‘உங்களுக்கு ஒரு நரைகூட இல்லையே? எப்படி முடிந்தது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார், “நான் வாழும் ஊரில் சான்றோர்கள் பலர் வாழ்கிறார்கள்’ என்று. அதாவது ‘சான்றோர் பலர் நான் வாழும் ஊரே’ என்பது அவர் அளித்த பதில்.
எனவே இங்கு சான்றோர்கள் உருவாகி வர வேண்டும். அவர்கள் அஞ்சாமல் தமது கருத்துகளை எடுத்துச் சொல்லுதல் வேண்டும். ‘செல்வம் வரும் போகும். மன நிம்மதியே முக்கியம்’ என்ற மனப் பாங்கை நம்மிடையே வளர்க்க வேண்டும். ‘தவறான வழியில் பொருள் சேர்த்தால், சமூகம் தன்னை ஏளனமாகப் பார்க்கும்’ என்ற நிலையை இந்தச் சமுதாயம் உருவாக்க வேண்டும். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள். ‘வாய்மையே வெல்லும்’ என்ற அவரது கருத்து இந்த நாட்டில் வலுப்பெற வேண்டும். ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட குற்றங்களும், குழப்பங்களும்” அதிகமாகி, கடுமையாகி அதன் பிறகு தான் புயலுக்குப் பின் அமைதி, இருளுக்குப் பின் ஒளி, கலகத்துக்குப் பின் தெளிவு பிறக்க வேண்டும் போலத் தெரிகிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு அப்போது நல்ல பதில் கிடைக்கலாம்!

*******************************************************************
பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதால் நம் தாய்மொழி சீர்குலைந்துவிடாது
*******************************************************************

7. பத்மநாபன்:
———————

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட் டுத்துறைச் செயலராக இருந்த காலகட்டத்தில், தமிழுக்காக நீங்கள் சாதித்து என்ன?

ஔவை நடராசன்:
—————————-

ஒரு மொழியின் வளர்ச்சி என்றால் என்ன என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்ளலாம். மொழி வளர்ச்சி என்பது அந்த மொழியைப் பேசும் மக்களின் நெருக்கத்தோடும் பொருந்தியது; அந்த மொழியில் வெளியாகும் இதழ் களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; அந்த மொழியில் நாளிதழ்கள் வளர்வது; சிறுகதைகள் பெருகி வருவது; நெடுங்கதைகள் நிறைய வருவது ; காட்சி ஊடகங்கள் மூலம் அந்த மொழியில் செய்திகளையும் கருத்துக்களையும் வழங்குவது; கவிதைகள், கட்டுரைகள் பெருகுவது; மொழி பெயர்ப்புகள் அதிககரிப்பது; அறிவியல் நூல்கள் செழிப்பது; அந்த மொழி மூலமே பெரிய, பெரிய தேர்வுகளில் பங்கு பெறுவது இவையெல்லாம் மொத்தமாக வளர்வதுதான் மொழியின் வளர்ச்சி. இதற்கு அரசு என்ன வேலையைச் செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். அரசுத் தரப்பில் தேவையான ஆட்சிச் சொற்கள், கலைச் சொற்களை உருவாக்கித்தர வேண்டும். அப்படி இன்று வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய தமிழ்ச் சொற் கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தற்போதைய தமிழ் வளர்ச்சி இயக்குநர் சமீபத்தில் என்னிடம் கூறினார். தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் வாழ்வியல் கலைக் களஞ்சியங்களை, நாற்பது தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. ஒரு சொல் எப்படி வரும் என்ற கேள்விக்கு நாள் முழுதும் விடை சொல்லலாம். டைரக்டர் என்ற வார்த்தைக்கு இயக்குநர் என்பதா, நெறியாளர் என்பதா, என்று கருத்து வேறுபாடுகள் வரலாம். போர்டு என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஆயம் என்பதா, வாரியம் என்பதா என்ற கருத்து வேறுபாடுகள் வரலாம். நிகராடையா, சீருடையா என்று சர்ச்சை எழுந்தது. இவற்றையெல்லாம் நேர்க்கோட்டில் கொண்டு வர வேண்டும். மேலும் வருடத்திற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட வகைப்பாடுகளில் நால்களுக்கு கம்பர், பாரதியார், பாரதிதாசன், உ.வே.சாமிநாதய்யர், திரு.வி.க., டாக்டர் ஜி.யு.போப் இப்படி பத்துக்கும் மேற்பட்ட தமிழ் மேதைகளின் பெயர்களில் அரசால் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் அரசால் கெளரவிக்கப்படுகிறார்கள். இப்படி ஒரு மொழியை பரப்பு வதற்கும், பரப்புவர்களை கௌரவப்படுத்துவதற்கும் தமிழ் வளர்ச்சித் துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கு அரசுப் பணிகள் ஒரு தூண்டுகோலே தவிர, அனைத்துப் பிரிவினரும் அவரவர் நெறிகளில் – மொழி வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும்.

8. பாலமுருகன்:
————————

உங்கள் தந்தையார் உரைவேந்தர் ஔவை துரைசாமி, நிறைய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஆனால், நீங்கள் அந்த மாதிரி எழுத்தாளர் ஆகவில்லையே ஏன்?

ஔவை நடராசன்:
—————————-

நான் பேசிய அளவிற்கு எழுதவில்லை என்பது உண்மைதான். எனக்கு அது ஒரு பெரிய குறை. குரலால் வாழ்ந்தால் போதும்; விரலால் வாழத் தேவையில்லை என்று தவறாக நினைத்துக் கொண்டேனோ என்னவோ தெரியவில்லை. என் தந்தையார் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்று, பழைய உரையாசிரியர்களைப் போலத் தனது கருத்துக்களைப் புதுமையாகச் சேர்த்து உரையெழுதினார். எனக்கு அந்த மாதிரியான வாய்ப்போ, அந் தளவு புலமையோ அமையவில்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

9. பத்மநாபன்:
———————

தமிழ் வளர்ச்சித் துறை எல்லாம் வந்த பிறகும் கூட, இன் றும் பல அரசாணைகள் ஆங்கிலத்திலே யேதான் வெளியிடப்படுகின்றன. அதற்கு என்ன காரணம்?

ஒளவை நடராசன்:
—————————-

ஒரு செய்தியை நீங்கள் கவனிக்க வேண்டும். நாற்பதாண்டுகளுக்கு மேலாக நாள் தவறாமல் தமிழ் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மாற்றலாகி வெளியூருக்குப் போய்விட்டு, திரும்பி வரும் மகனைப் பார்த்து அம்மா, ‘ஏன்பா இப்படி இளைத்து விட்டாய்’ என்று ஏங்குவாள். அதுதான் தாய் மனம். அது போலத்தான் ஏராளமான ஆணைகள் தமிழில் வந்தாலும், சில ஆணைகள் இன்னமும் ஆங்கிலத்தில் வருகின்றனவே என்று கேட்பதும். நமது ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் பெரிய புலமை பெற்றவர்கள் அல்லர். அவர்கள் தமிழில்தான் சிந்திக்கிறார்கள்; தமிழில்தான் பேசுகிறார்கள்; தமிழில்தான் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அவைதான் சில உயர் அலுவலர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் படுகிறது. இது இன்றைய நேற்றைய பிரச்னை இல்லை. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டபோதே, இந்தப் பிரச்னை எழுந்து விட்டது.
பல்வேறு சட்டங்களையும் விதிகளையும் உருவாக்கும்போது, அவற்றை அந்தந்த மொழிகளில் வரையும்போது சில சிக்கல்கள் வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பிரதமரான நேரு தான் சொன்னார், ‘முதலில் எல்லாச் சட்டங்களையும், விதிகளையும், ஆணைகளையும், உட்கூறுகளையும் ஆங்கிலத்தில் உருவாக்கி வைத்துக் கொள்வோம். அதிலிருந்து வெவ்வேறு மொழிகளில் அந்த சட்டங் களை மொழிபெயர்ப்போம். இறுதியானது எது, சான்று அளிக்கக் கூடியது எது என்று சச்சரவு வரும் போது, ஆங்கிலமே இறுதியானது என்று வைத்துக் கொள்ளலாம்’ என்றார். எனவே அதிகாரிகள் மீது நாம் பழி போட வேண்டாம். பின்னாட்களில் மத்திய அரசுக்கு அனுப்புவதற்கும், உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்புவதற்கும் இடர்ப்பாடில்லாமல் இருக்கும் என்பதால், அவர்கள் ஆங்கிலத்தில் ஆணைகளைத் தயாரிக்கக் கூடும். சில நிலைகளில் இது தவிர்க்க முடியாததாகவும் இருக்கும். இனிவரும் காலங்களில் ‘துக்ளக்’ வாசகரான உங்களின் வேதனையை ‘அதிகாரிகள் உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

10. பாலமுருகன்:
————————

நம் முடைய பல துணை வேந்தர்கள் மீது நிறைய – குற்றச்சாட்டுகள் உள்ளன. இப்போது வேறு மாநிலத்தைச் சேர்ந்த – ஒரு துணை வேந்தரை நியமித்திருக்கிறார் கள். அவர் ஊழல் கறை படியாதவர், எந்த குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாதவர். ஆனால், அவரை இங்குள்ள அறிஞர் பெருமக்கள் எதிர்ப்பதற்கு என்ன காரணம்? இதில் மாநில வித்தியாசம் பார்ப்பது சரியா?

ஔவை நடராசன்:
—————————-

ஒரு சச்சரவு என்றாலே எதிர் நிலை, சார்பு நிலை என்று இரு நிலைகள் இருப்பது இயல்பே. எல்லாவற்றிற்கும் எதிர்க்கேள்வி கேட்பதும், எதிர்வினையாற்றுவதும் இந்த நூற்றாண்டின் நோய் என்றே சொல்ல வேண்டும். இதை போக்குவதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்ப் பல் கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தரே கேரளத்தில் இருந்து வந்தவர்தான். அவர் பெரிய தமிழறிஞர். டெல்லி தொலைநிலைக் கல்வி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் வா.செ.கு. சென்றதும், அறிஞர் அனந்தகிருஷ்ணன் கான்பூர் சென்றதும் நாம் அறிந்த ஒன்றுதானே ?

11. உஷா மதனகோபால்:
———————————–

மற்ற மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியைத் தவிர, ஹிந்தியும் பேசுகிறார்கள். நம்முடைய மாநிலத்தில் மட் டுமே தமிழைத் தவிர வேறு மொழி தெரியாமல் இருக்கிறோம். இது திராவிட கட்சிகள் நமக்கு செய்த துரோகமா? நன்மையா?

ஔவை நடராசன்:
—————————-

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று வாழ்வதற்கு அந்தந்த மாநில மொழிகளைத்” தவிர, வேறு மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக வேறு மொழிகள் தெரிய வேண்டும் என்ற தேவையும் இப்போது இருக்கிறது. நான் இப்போது சொல்லப் போகும் கருத்தை என் நண்பர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மொழி இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற பழமையும், தொன்மையும் நம் தலையின் மீது இருக் கிறது. தமிழினால் கிடைத்த பழமை, பெருமை என்ற சுமையை நாம் உணராமல் போய்விட்டதால், நம் முடைய கால்கள் தடுமாறின. எவ்வளவுதான் தொன்மையின் சிறப்பு இருந்தாலும், நம் முடைய தடுமாற்றத்தை உணர்ந்து, காலத்தின் உண்மை யைக் கருதி, நம் முடைய கருத்துக் களிலேயே புதுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உணர்வு பெருகுமானால், தமிழின் தகுதி எல்லா நிலைகளிலும் நிலை நாட்டப் பெற்றால், மற்ற மொழிகளும் வளர முடியும். இங்கேதான் தமிழ் போதிய அளவுக்கு இடம் பெறவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. மற்ற மொழிக்காரர்களுக்கு இந்த அளவுக்கு மொழித் தன்மையைப் போற்றும் பழக்கம் இருப்பதில்லை.

இன்றும் மத்திய அரசில் நம்முடைய தமிழ் மக்கள் பெருமிதத்துடன் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள், மஹாராஷ்ட்ரா, ஒடிஷா, குஜராத் போன்ற மாநிலங்களில் தலைமைச் செயலாளர் பதவியில் இங்கிருந்து சென்றவர்கள்தான் இருக்கிறார்கள். மொழி தெரியாமல் எங்கு போனாலும், அந்த மொழியைக் கற்றுக் கொண்டு இன்றும் சிறப்புடன் வாழ்கிறார்கள். நம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், ‘ஹிந்தி கற்றுக் கொள்ளாமலே ஐந்து வருட காலம் டெல்லியில், நம் நாட்டின் முதல் குடிமகனாக பதவி வகித்து விட்டேன்’ என்று நகைச்சுவையாகக் கூறினார். எனவே சூழ்நிலையைப் பொறுத்தே மாற்று மொழியைக் கற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் நடக்கும். மாற்று மொழியைக் கற்றுக் கொள்வதாலேயே நம்முடைய தாய் மொழி சீர்குலைந்து விடுவதில்லை .

12. மகேசன்:
—————–

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, துணைவேந்தர் ஒருவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியதாகவும், சரியான நேரத்திற்கு வந்து காத்திருந்த அவரை உரிய நேரத்தில் முதல் அமைச்சர் அழைக்காததால் துணைவேந்தர் எழுந்து சென்று விட்டதாகவும், பிறகு எம்.ஜி.ஆர். வருத்தம் தெரிவித்து அவரை மீண்டும் சந்தித்ததாகவும் ஒரு செய்தியைப் படித்திருக்கிறேன். ஆனால், இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை செல்ல இருந்த ஒரு பெண்ணை , சம்பந்தமே இல்லாமல் ஏழு, எட்டு துணைவேந்தர்கள் நேரில் சென்று சந்திக்கிறார்கள். இவர்கள் தலைமையில் நம்முடைய பல்கலைக் கழகங்கள் சரியான பாதையில்தான் செல்கின்றனவா?

ஔவை நடராசன்:
—————————-

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறையென்று வைக்கப்படும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப மக்கள் தலைவர்களுக்கு இருக்கும் மதிப்பும், செல்வாக்கும் சிறப்பான ஒன்றாகும். ஒரு கூட்டத்திற்கு அண்ணா காலதாமதமாக வந்தார். அவருக்கு முன்னால் கூட்டத்திற்கு வந்து விட்ட அமைச்சர் சி.சுப்ரமணியம், இதைக் குறித்து இடித்துக்காட்டும் வகையில் ‘delayed judgement is a denied judgement” என்று சொன்னார். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் அண்ணா “hurried judgement is a buried Judgement’ என்று சொன்னார். பல்வேறு அலுவல்களுக்கு இடையில் அவர்களால் சரியான காலத்திற்கு வர இயலாது. பொதுவாக அரசியல்வாதிகளுக்கு பல்வேறு மக்கள் பணிகள் இருக்கும். எனவே நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த துணைவேந்தர் பத்து நிமிடம் காத்திருந்தால் தவறில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால், இன்றைக்கு துணைவேந்தர்கள், தேவை கருதி தம்மை தாமே தாழ்த்திக் கொள்வது போலத் தெரிகிறது. அங்கே, இங்கே நடக்கிற சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவதை நான் தவிர்த்து விடுகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *