நாராயணி அம்மாள் கற்றுத்தந்த நாராயண நாமம் .
===============================================
நாங்கள் உறவாடிய குடும்பத்தின் புகழ்வாய்ந்த பெருமாட்டியார் மறைந்ததை நினைந்து மனம் சோர்கிறது.
நயவுரை நம்பிக்குத் தாயாக இருந்த தமக்கையார் , தாம்பரத்தில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஜகத்தை வளர்த்த தாய் வீடு அதுதான். அங்கிருந்துதான் எஸ்.ஐ.வி .ஐ டி. கல்லூரிக்கு நடந்து வந்தார்.அங்கே தான் வளர்ந்தார் .புகழ் ஏணியை எடுத்துச் செல்ல முற்பட்டது அங்கே தான் .
வாரி வழங்கும் வள்ளலைப் போலத் தன்னுடைய கைகளால் ஆயிரம் பேருக்கு அன்னம் ஊட்டிய தாய் நாராயணி அம்மாள். அவருடைய திருமகன் தான் காமராஜ், ஜகத்தின் கையால் வளர்ந்த பெருமிதம் கொண்டவர்.நம்பி வளர்ந்திருக்கும் தம்பி அவர் .
ஒருநாள் கூட அவர் கை நீட்டி மாமன் முன் நடந்து நான் பார்த்ததில்லை. பெற்ற மகனைப் போல அவர் காட்டிய பரிவு இன்றும் தொடர்கிறது.ஜகத் நாள்தோறும் சொல்லும் நாராயணா என்னும் பெயரில் நாராயணியும் கலந்திருக்கிறார் .எண்ணி இருபது நாள் கூட மருத்துவமனையில் இல்லை .
அந்தப் பிரிவு ஜகத்தின் நெஞ்சத்தில் பெரிய அம்பாகப் பாய்ந்திருக்கிறது. அம்பை எடுத்துவிட்டாலும் ஆழமான தழும்பு என்றும் இருந்துக்கொண்டே இருக்கும். நாராயணி அம்மையாரின் கனவு நாள்தோறும் அவர் உண்ணும்போதும் உடுக்கும் போதும் நினைவுக்கு வந்தே தீரும் .
என்னைப் பார்க்கிறபோதெல்லாம் சாப்பிட்டுப் போகலாமே என்று கேட்ட அந்த ஈர மனம் இன்னும் இருபதாண்டுகள் இருப்பார் என்று எண்ணினேன். எண்ணுவது போல் பல நடக்கவில்லை.ஏக்கம் தான் மிச்சம் .
—– ஔவை நடராசன்

Add a Comment