பேராசிரியர் மணவாளன் பெரும்பிரிவு
====================================
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் என்னும் அருமையான தொடருக்கு இலக்கியமாக வாழ்ந்து ஒளிர்ந்தவர் தமிழ்மாமணி என்று அறிவுலகம் மதித்துப் போற்றிய பேராசிரியர் அ.அ.மணவாளன் பன்மொழி அறிவைப் பாங்குறப் பெற்று ஓங்கிய தமிழ்ப்புலமையும் உயரிய ஆங்கில வளமையும் அணிபெற வாய்ந்தவராகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைமையை நடத்திய பேராசிரியர் மணவாளன் மறைவு, முதுமையாலும், தளர்ச்சியாலும் விளைந்த முடிவுதான் என்றாலும் அமைதி காண முடியாமல் வருந்துகிறோம் .
சென்னையில் ஓய்வு பெற்று வாழ்ந்த நிலையில், முதுகலை மாணவர்க்கு முனைவர் பட்டத்திற்கு ஆய்வு நெறியாளராக அமைந்து ஆற்றிய பணிகள் அளவில்லாதன .
பேராசிரியர் பாராட்டு விழாவில் மாணவியர் இருவர் உருகிப் பேசியது இன்னும் என் செவிகளில் ஒலிக்கின்றன .இந்திய மொழிகளில் இராமகாதை இடம்பெற்றதை ஆராய்ந்து வெளியிட்ட நூற் களஞ்சியத்தைக் காணும்போதெல்லாம், நம் மனத்தில் பேராசிரியர் மணவாளன் நிலைத்து நிற்பார்.
பேராசிரியர் மணவாளனுடைய மகளாரும் பேராசிரியராகத் திகழ்ந்து அவருடைய பெருமிதத்திற்கு புகழ் சேர்ப்பவர் .பரிவோடு அவர் அழைத்து ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கு பெறும் வாய்ப்பை நான் இழந்ததை எண்ணி இன்றும் ஆறாத்துயரம் அடைகிறேன்.
என் மகன் அருளை முதுநிலை ஆய்வு மாணவனாகச் சேர்த்தபோது அரவணைத்து ஆங்கிலப் புலமையைப் பெற ஊக்கம் தந்ததையும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேக்ஸ்பியர் நாடகங்களை ஆய்வுப் பொருண்மையாக எடுத்ததைப் பாராட்டி நிறைவில் சில திருத்தம் செய்து முனைவர் பட்டப்பேற்றுக்கு வாய்ப்பினை வழங்கினார்.
பன்மொழிப் புலமையும், பண்பாட்டுச் சீர்மையும் வாய்ந்த அறிஞர் அ.அ.மணவாளன் மறைந்ததை மாணவச் செல்வங்கள் ஆற்ற முடியாது அரற்றுவர்.
அறிஞர் மணவாளன் தமிழ்த்தொண்டு வாழ்க.
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment