POST: 2018-12-18T11:59:13+05:30

மருத்துவத் திலகம் நாராயணன் மறைவு !
======================================

மருத்துவத் திலகமாகவும், துணைவேந்தராகவும், மருத்துவ முதல்வராகவும் இப்படி அவர் மருத்துவத் துறையில் பெற்ற புகழ் அளவற்றது.

மருத்துவப் பதவி இருந்தபோதே அவருடைய இரக்க உணர்வும், உருக்க மனமும் நான் நன்றாக அறிவேன்.

குடியேற்றத்தில் பிறந்து ஓயாத முயற்சியால் உயர்ந்து மருத்துவ உலகில் சிறந்த நிலையில் உயர்ந்து வாழ்ந்தார்.

எளிய மாணவர்களுக்கு எவர் பெயர் என்றுகூடத்
தெரியாமல் ஏராளமான நலங்களைச் செய்தவர். மனித நேயத்திற்கு மாசற்ற திருவுருவாகத் திகழ்ந்தார்.

திருக்குறள் ஆர்வத்தில் அவருக்கிருந்த பற்று என்னை வியப்படையச் செய்தது. முத்தமிழ்ப் பேரவைக்கும் வள்ளுவர் கோட்டத்தில் திருக்குறள் வகுப்புக்கும் தொடர்ந்து பலமுறை வந்தவர். ஆயிரம் திருக்குறள் தெளிவுரையை வாங்கி நண்பர்களின் திருமணங்களில் வழங்கினார். தளர்ந்து முதிர்ந்த நிலையிலும் மறதி வந்தாலும்கூடத் திருக்குறள் உறுதி அவரை வாழ வைத்திருந்தது.

அவருடைய நெருங்கிய நண்பராகப் பள்ளித் தோழராகக் கல்விப் பணிகளுக்குத் தோள் கொடுத்தவராக இருந்தவர், விஐடி வேந்தர் திரு.ஜி.விசுவநாதன்.

ஒப்பரிய மருத்துவர். ஓங்கிய புகழோடு வாழ்ந்து மறைந்துவிட்டார். வயது தளர்ச்சியால் நேர்ந்த முடிவுதான். இனி அவரைக் காணப்போவதில்லையே என்ற கலக்கம் கண்களில் நீர் மணிகளைத் தேக்குகின்றன.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *