POST: 2019-01-02T10:43:43+05:30

கலைமகள் இதழில் 01.01.2019 அன்று வெளியான என் கட்டுரை
======================================

ஜி.யு.போப் அவர்களின் திருக்குறள் முன்னுரைக்கு முனைவர் ந.அருளின் தமிழாக்கம்

குறிப்பு
**********

எண்ணினால் 100 ஆண்டுகள் இருக்கும். தமிழகத்துக்குச் சமயப்பணி பரப்புவதற்காகத் தேர்ந்தெடுத்த தெரிவார்ந்த கிருத்தவப் பெருந்தகையாகிய டாக்டர்.போப் பெருமகனார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் காடு மேடுகள் சிற்றூர், பேரூர்களுக்கு கால் தேயத் தேய நடந்து தமிழ் மக்களின் வாழ்வியலைக் கண்டும் கேட்டும் சிந்தித்தும் தெளிந்தவர்.

தமிழ்நாட்டுக்கு வந்த டாக்டர்.போப் தம்மைத் தமிழ் மாணவர் என்றே அழைத்துக் கொண்டவர். மொழிபெயர்ப்புத் திலகம் என்ற வகையில் திருக்குறள், திருவாசகம், நாலடியார், புறப்பொருள் வெண்பா மாலை, இலக்கணச் சுருக்கம், சொற்பொருள் தொகுதி, புறநானூற்றில் நூற்றுக்கு மேற்பட்ட அரிய பாடல்களை ஆங்கிலத்தில் நாடி நரம்புகளிலெல்லாம் ஆங்கிலக் குருதியோடிய ஆங்கிலப் பெருமகனாருக்குத் தமிழகம் நன்றி பாராட்டும் வகையில் கடற்கரையில் திருவுருவச் சிலையை நிறுவியுள்ளது. அவ்வண்ணமே, தமிழக அரசு தலை சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் பெயரில் விருதும் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

ஆறு மாதமோ, ஆறு வாரமோ அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து பிறகு திரும்பிப்போய்த் தமிழ் வரலாறு, ஆராய்ச்சி என்று தடம் புரண்டு எழுதுபவரில்லை. தான் கேட்டுப் பழகி மயிலாப்பூர் மக்களின் பண்பாட்டு கூறுகளை அறிந்த வகையில் திருக்குறளுக்கு இந்த முன்னுரையை எழுதியிருக்கிறார். டாக்டர்.போப் நம்பிய செய்திகளும், கதைகளும், தாமாகவே என்னும் கருத்துகளும் நமக்கு உடன்பாடானவை என்று கருதத் தேவையில்லை. அந்தக் காலத்தில் வழங்கிய பொய்க்கதைகளை அறிஞர்கள் புறக்கணித்து விட்டனர். இன்றைய இளைஞர்களுக்கு அக்கதைகளே தெரியாதது மட்டுமல்ல வேண்டாதனவாகும். தமிழ் மக்கள் நற்பேறு பெற்றவர்கள், தம் இலக்கியச் செழுமையையும் பண்பாட்டு பெருமிதத்தையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. அயல்நாட்டில் இருந்துவரும் ஆட்சி அலுவலர்கள் தமிழ் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் அமைந்த இந்த முன்னுரையை நான் எழுதியிருக்கிறேன் என்றும், வறுமை வீட்டுக்கு வாயிற்படி தமிழ்ப் படிப்புதான் என்று வருந்தியும் ஒரு நூலில் குறித்துள்ளார் ஜி.யு.போப்.

============================================
அருட்தந்தை ஜி.யு.போப் எழுதிய அறிமுகக் குறிப்பு
============================================

திருவள்ளுவர் என்ற பெயரால் அறியப்பட்ட அறிஞர், மைலாப்பூர் நெசவாளர் உலகின் தலைசிறந்த அறிஞர்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை. ஆனால், புகழ் தென்னிந்தியாவிற்குள் மட்டுமே தொன்மை வாய்ந்த ஒரே ஓர் இனத்தினருக்கு மட்டும் தெரிந்த ஒன்றாக உள்ளது. தமிழ் மக்களுடைய போற்றுதலுக்குரிய மாமுனிவராகவும் நெறியாளராகவும் திகழ்ந்த அத்தகைய தமிழ் மக்களுள் ஒருகோடிக்கும் குறையாதோர் மைய மற்றும் தென் கர்னாடகப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

ஆசியவியற் பனுவில் என்ற இதழில் (நவம்பர்-திசம்பர் 1848) வெளியிடப்பட்டதும் எம்.ஏரியல் பர்னோவுக்கு வரைந்த மடலில் திருவள்ளுவருடைய மாபெரும் படைப்பு தமிழிலக்கியத்தில் தனிப்பெரும் நூல் என்றும் மனித சிந்தனையின் உன்னதமானதும் தூய்மையானதுமான வெளிப்பாடு என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் கூறுவது, ‘‘அனைத்திற்கும் மேலாக வியப்பூட்டுவது என்னவெனில் நூலாசிரியர் தனக்குத் தானே கூறிக் கொள்வதைப் போல அந்நூலை அமைத்துள்ளார்; எந்தவொரு குறிப்பிட்ட வகுப்பினரையோ, இனத்தவரையோ, சமய நம்பிக்கையையோ முன்னிலைப்படுத்த வில்லை; முழுமையான மனித சமுதாயத்திற்குப் பொதுவான கருத்துகளை முன்வைக்கிறார்; அனைத்து உயிர்களையும் தழுவிய அறநெறிகளையும், முற்ற முடிந்த பகுத்தறிவுக் கோட்பாட்டையும் நெறிப்படுத்துகிறார்; நற்பண்புகளையும் வாழ்வியல் மெய்ம்மைகளையும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய வகையில் அளவில் சிறியதாய் சுருக்கமாக நெறிகளின் சாரத்தை வடித்தளித்துள்ளார்; ஒருபுறம், குடும்ப வாழ்க்கைக்கும் சமுதாய வாழ்க்கைக்குமான மிக உன்னத விதிகளை உள்ளது உள்ளபடி அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக் கூடிய நிலையில் வகுத்துள்ளார்; அதே அளவிற்கு முழுநிறைவான சிந்தனைத் தெளிவுடன் புலமைச் செறிவு குன்றாத மொழிநடையில் தெய்வீகம் பொருந்திய இயற்கையின் மாபெரும் மறை பொருள் ஆன்றவிந்தடங்கிய சான்றோரின் புலன்கடந்த அக உணர்வுகளின் தெளிந்த முடிவுகளை மிக எளியமுறையில் கூறிச்செல்கிறார்.’’

நூலாசிரியரான புலவருக்கோ, படைத்த மாபெரும் நூலுக்கோ தனிப்பட்ட முறையில் சிறப்புப் பெயர் வையுமில்லை என்பது மேலும் புதுமையாக உள்ளது. அவரைத் திரு-வள்ளுவ-நாயனார் என்று பொதுப்படையான ஆதிநினைவர் பெயரால் அழைக்கின்றனர். அதன் பொருள்: ‘ஆதிதிராவிடர் இனத்தின் புனிதமான பற்றுறுதியாளர், சமய குரு, வருமுன் உரைப்பவர்.’ மரபுப்படி அவர் நெசவாளராகக் கருதப்படுகிறார், ஏனைய வகுப்பினர் அனைவராலும் ஒதுக்கப்பட்ட சமுதாயத்தினர் – ஆதிதிராவிடர் இனத்தவர். அந்த இனத்தைச் சேர்ந்த சமய ஆசிரியர்களையும் மதகுருக்களையும், முற்றுணர்ந்த திறனாளர்களையும், ஆசான்களையும், இறைத்தூர்களையும் வள்ளுவர் என்றழைத்தனர். ஆனால், அவர் ஒரு சமயச் சான்றோர் போல எழுதவில்லை. அத்துடன், திருவிளக்கு ஏற்றி, மக்களுடைய காணிக்கைகளைப் படைத்து அவர் பூசனை செய்த ஆலயம் எவ்வகைப்பட்டது என்பதை அவருடைய நூலிலிருந்து அறிந்து கொள்வதற்கு எள்ளளவும் இடமில்லை. தென்னிந்தியாவின் மாபெரும் கவிஞரை அடையாளம் காட்டுகின்ற ஒரே ஒரு பட்டப் பெயர், மிகவும் தாழ்த்தப்பட்டதும், தன்னைப் பொய்யாமொழி என்று பல நூற்றாண்டுகளாகப் போற்றிப் பாராட்டி வருகின்ற எண்ணற்ற மக்களால் வெறுப்புடன் நோக்கத் தக்கதுமான குலத்தினுடைய பெயராக இருப்பது வியப்பினும் வியப்பு. உண்மையில், கடைக்கோடி என்று கருதப்பட்டது இனம் முதன்மை வகித்துள்ளது. ஆதாரமற்றதும் முற்றிலும் நம்பத்தகாததுமான செவிவழிச் செய்தியில் அவருடைய தந்தை பிரம்மன் என்றும் தாய் சாதியற்றவள் என்றும் கதை கட்டுகிறது. அத்துடன், அவ்வை மூதாட்டியார், அவருடைய பெயரும் தெரியவில்லை. அவருக்கு உடன்பிறந்தார் என்றும், துண்டு, துக்காணியாக சில செய்திகள் மட்டுமே அறியப்பட்டுள்ளன ஏனைய புலவர்கள் அவருடைய உடன்பிறப்புகள் என்றும் செய்தி நிலவுகிறது. நம்மால் உறுதியாக அறிந்துகொள்ளக் கூடியவை எல்லாம் — அவர் ஆதிதிராவிடர் குலத்தைச் சேர்ந்தவர்; நெசவாளர்; தற்பொழுது சென்னையின் ஒரு பகுதியாக அமைந்த சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தவர்; சிறிய கப்பலின் தலைவனான கடற்சி்ம்மம் என்ற பொருள் கொண்ட ஏலேல சிங்கன் அவருடைய நெருங்கிய நண்பராகவும் புரவலராகவும் விளங்கினார்.

கீழ்த்திசை நாடுகளுக்கே உரிய தனித்துவமான அழகு மிளிரும் சூழலில் திருவள்ளுவரின் இல்லம் அமைந்திருந்தது.அப்பகுதியில் பெருத்த மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இன்றைக்கும் கூட அப்பகுதியைக் கடந்து செல்லும் போல தறிநாடாவை இழுத்தபடி முறுக்கேற்றும் ஓசையுடன் இனிமை தவழும் அவருடைய திருக்குறட்பா ஒலிக்கப்படும் மெல்லிய குரலும் இழைந்து செவிப்படுவதை உணரலாம். 1840 ஆம் ஆண்டில் எனது சமயப்பணி வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து என் நெஞ்சுக்கு நெருக்கமான அப்பகுதி குறித்தும் சமையப் பணி நிமித்தம் நான் சென்ற அப்பகுதியைச் சுற்றிய சிற்றூர்களைப் பற்றியும் என்னுள் எழுகின்ற ஆர்வமூட்டக் கூடிய நினைவலைகளில் தோய்ந்து திளைப்பதற்காக என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.மாபெரும் தமிழ்க்கவிஞர் மீதான பேரார்வத்தை அவைதாம் ஊற்றெடுக்கச் செய்தன; என்னுடைய வாழ்க்கையின் பொருள் தெளிவு பெறுதற்குத் தலையாய காரணியாகத் திகழ்வன. மயிலாப்பூர், அல்லது மயிலை, மயில்கள் நிறைந்த நகரம்; பழங்கோயில்களைச் சுற்றிலும் தோப்புகளும் தோட்டங்களும் நிறைந்த இடம் என்பதை அதன் பெயரே சுட்டுகிறது. தென்னை மரங்கள் கரை கட்டி நிற்கின்ற பெரியதொரு குளம் இன்னமும் ஆங்கே உள்ளது. காய்ந்த இலை, தழைகளால் வேயப்பட்ட மண்ணுக்குரிய வீடுகள் நிறைந்த சதுக்கம்; அவற்றுள் ஒன்றில் தான் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அண்மையில் கடற்கரை உள்ளது; மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் ஏலே சிங்கனுடைய வழித்தோன்றல்கள் இன்றைக்கும் ஆங்கே வாழ்கின்றனர். நுரை கக்கும் அலைகளுடைய ஓலத்தைப் திருவள்ளுவர் கேட்டிருக்கக் கூடும்; நாம நீர், கொடுமைமிக்க பேரலை என்று அவரே குறிப்பிடுகின்ற அந்தக் கடற்கரை மணலில் அமர்ந்தபடி அவர் பெரும்பாலான நேரங்களில் சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும்.

நீண்ட காலமாக அரசல், புரசலாக அறியப்பட்டதும், தற்பொழுது, உறுதிப்படுத்தப்பட்டது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான, புனித தாமஸ் இப்பகுதியில் தான் சமயப் பரப்புரை மேற்கொண்டார், திருக்குறள் நூலில் அடிக்கடி பயன்படுத்துகின்ற ”வேல்” ஒன்றினால் தாக்குண்டு மடிந்தார், இங்கே தான் புதைக்கப்பட்டார்* என்கிற மரபுவழிச் செய்தியால் குறைந்த அளவு கிறித்தவர்கள் மத்தியில் இப்பகுதியும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் பேரார்வம் ஊட்டக் கூடியவையாகக் கருதப்படுகின்றன. மயிலாப்பூர் பகுதியைச் சாந்தோம் என்கிற பெயரில் நாம் நன்கு அறிவோம். மிகவும் தொன்மைக் காலத்திலிருந்தே இப்பகுதியில் கிறித்தவ சமுதாயத்தினர் வாழ்ந்து வந்தனர்.வனப்பும் பழைமை வாய்ந்தவையுமான ஆர்மீனிய போர்துகேசியர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவக் கல்வெட்டு ஒன்றும் இங்கே காணப்படுகின்றன. அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த பான்டேனஸ் இப்பகுதியில் சமயப்பணி மேற்கொண்டார். இங்கே ஒரு செய்தியை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய தேவை எழுகிறது. செறிந்த சிந்தனையாற்றல் மிக்கவரும், மெய்விளக்கத் துறையில் பல கோட்பாடுகளையும் ஆய்ந்து திரட்டக் கூடியவருமான திருவள்ளுவர்; இந்து சமயக் கோட்பாடுகளைப் போலவே சமண சமய அருளுரைகளிலும் தோய்ந்து திளைத்தவர்; நன்கு அறியப்பட்ட அந்நியர்களுடன் ஒட்டி உறவாடுவதில் சாதிய மனக் கோணல்களால் கட்டுப்படுத்த முடியாதவர்; அனைத்திலிருந்தும் அறிவைத் திரட்டுவது ஒன்றையே தவமாகக் கொண்டவர்; கப்பல் தலைவனை நண்பராகக் கொண்டதால் அன்றாடம் கரை சேர்ந்த அந்நியர்களுடைய வருகையைக், குறிப்பாக, இலங்கையிலிருந்து அவருடைய தோணியிலேயே சென்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்; கிறித்தவ ஆசான்களுடன் கிறித்துவ சமயக் கருத்துகளை, அலெக்சாண்டிரிய சிந்தனைகளையும் இணைத்து ஆய்வு செய்தவாறும் அவற்றைத் தனது நூலில் பயன்படுத்திக் கொள்கின்ற வழி வகைகளைத் தேடியவாறும் கடற்கரை மணலில் உலவுகின்ற காட்சியை மனக்கண் முன் கொணர முடிகிறது. (இவ்வாறாக அயல் நாட்டுச் செய்திகளுள் சாக்ரடீஸ் பற்றிய செய்தியையும் அறிந்திருந்ததால் தானோ என்னவோ ”பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்” என்று தொடங்குகின்ற குறளில் அத்துணை கண்கூடாகக் காட்சிப்படுத்தியுள்ளார் – மொழிபெயர்ப்பாளர்)

பன்னெடுங் காலந்தொட்டே மேலை நாட்டினரும் கீழைநாட்டினரும் மிகவும் யதார்த்தமாகவும் இன்னமும் முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள இயலாத விதத்திலும் உறவு கொண்டாடியுள்ளனர். திருத்தூதருடைய பணிகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலேயே மிகச் சிறந்த புனித இடமாக கிறித்துவ ஆளுகையின் கண்கள் பதிந்திருந்த அதே மயிலாப்பூரிலிருந்து கீழ்த்திசை மறைஞானத்தை ஏந்தி வெளிவந்த நூலின் பெரும்பான்மையான கருத்துகள் ஏசு கிறித்துவின் மலைப்பிரதேசப் பேருரையின் எதிரொலியாக அமைந்துள்ளது என்கிற உண்மை குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை.

கவிக்கோவினுடைய மாபெரும் ஒற்றை நூலுக்குக் குறள் என்று பெயரிடப்பட்டமை தனிப் பெருஞ் சிறப்பு. 133 அதிகாரங்களையும் அதிகாரம் ஒன்றிற்குப் பத்து பாக்களையும் பா ஒன்றிற்கு இரண்டடி மேனி மொத்தம் 2660 அடிகளைக் கொண்டது இந்நூல்.

குட்டையான யாதொன்றையும் குறள் என்கிற சொல் குறிக்கிறது. வடமொழியில் ”குற்” என்ற பதமும், கிரிட் என்கிற சொல் இலத்தீன் மொழியிலும் குட்டையைக் குறிப்பன. ஆகவே, தமிழ் மொழியில் உள்ள பாவினங்களிலேயே மிகவும் குறைந்த அடிகளாக இரண்டே அடிகள் கொண்ட பாக்களால் இயற்றப்பட்ட நூலுக்குக் குறள் என்ற பெயர் மிகவும் பொருத்தமானதே.

ஆகவே, திருவள்ளுவர் இயற்றிய பாக்கள், மதிப்பீட்டில் தமிழ்மொழியில் உள்ள ஏனைய அனைத்து இலக்கியங்களையும் விஞ்சி நின்ற போதிலும், வடிவத்தில் எவ்வாற்றானும் பெரியவை அல்ல. அந்நூல் என்றென்றைக்கும் அழிவில்லாத வகையில் ஒட்டுமொத்த மக்களுடைய ஆன்மாவினுள் புகுந்து நின்று நிலவுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாபெரும் படைப்புகளில் ஒன்றாகச் சுடர்கின்றது. ஐரோப்பிய இலக்கியங்களில் அறியப்பட்டுள்ளவை போலவே, தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த புலவர்கள் பலருடைய பெயர்களைத் தாங்கியுள்ள பாக்களின் தொகுப்பு (அவற்றுள் பெரும்பாலானவை மிகவும் அண்மைக் காலத்தைச் சேர்ந்தவை) ”திருவள்ளுவ மாலை” என்கிற பெயரில் புலவருடைய தன்னேரில்லாத் தகைமையைப் பலவாறாகப் போற்றிப் புகழ்கின்றன.

அவற்றுள் பல பாக்கள் செப்பமிக்கவை. பரணர் என்கிற புலவர் தான் இயற்றிய பாடலில், திருமால் வாமன (குறள்) வடிவத்தில் தோன்றி இம்மண்ணில் மூன்றடி அளவு கேட்டுப் பெற்று, மண்ணுலகையும் விண்ணுலகையும் இரண்டே அடிகளில் அளந்ததைப் போல, வெண்பா வகையினத்தில் இரண்டே அடிகளைக் கொண்ட குறள் வெண்பாக்களைக் கொண்டு திருவள்ளுவர் பேரண்டம் முழுமையையும் அளந்து அளித்துள்ளார் என்கிறார்.

மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியான்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவன்
வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாம்அளந்தார் ஓர்ந்து.

புலவருடைய ஒட்டுமொத்த நூலும் தன்னளவில் முழுமைப்பேறு அடைந்திருந்த தகைமையால் கால வெள்ளத்தை வென்று நின்று எவ்வாற்றானும் சிறிதளவும் ஊறு நேராமல் நமக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் குறிப்பிடத்தக்க பாட வேறுபாடு ஒன்றையேனும் காண்பது அரிது. தமிழ்நாட்டில் எதிரும் புதிருமான நெறிகளைப் பின்பற்றுவோர் கூட திருக்குறள் தமக்குரியது என்று உரிமை பாராட்டுகின்றனர். தத்தமது சிந்தனைப் போக்கிற்கேற்ப விளக்க உரைகளாலும் திறனாய்வுத் திரட்டுகளாலும் இந்நூலினை மென்மேலும் செழிக்க வைத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கென்று தனியே ஒரு மறை நூலின் தேவை உணர்ந்து அக்கம் பக்கத்து மக்களெல்லாம் வேண்டியதற்கு இணங்க திருவள்ளுவர் குறளை யாத்தார் என்று என்றொரு மரபுவழிச் செய்தி உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை அனைத்து விதமான நன்னெறிக் கூறுகளுக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணமாகத் திகழ வேண்டும் என்கிற நோக்கத்துடன் இயற்றப்பட்டது என்பதில் ஐயமில்லை. புலவர் ஏற்கெனவே மக்கள் மத்தியில் பெரும்புகழ் வாய்ந்தவராக விளங்கியிருத்தல் வேண்டும். இல்லாவிடில் அவரிடம் அத்தகைய வேண்டுகோளை வைத்திருக்க வாய்ப்பில்லை. ஆன போதிலும், அவர் வேறு நூல்களை இயற்றியமைக்கான சுவடுகள் எதுவும் தென்படவில்லை.

குறளை இயற்றி முடித்த பின்னர், பண்டைப் பாண்டிய மன்னர் வம்ச சேகரர் ஆட்சி புரிந்த மதுரை மாநகரில் கற்றுத் துறைபோகிய சான்றோர் பலர் வீற்றிருந்த தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றுவதற்காகப் புலவர் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்பெருஞ் சபையில் சிவபெருமான் தமிழ்மொழியின் பெருமையை நிலைநாட்டுவதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக நாற்பத் தொன்பதாவது புலவராகத் தோற்றமளித்தார். அத்தமிழ்ப் பேரவையில் திண்ணிய வைரத்தாலான சங்கப் பலகை ஒன்று இறைவனால் அருளப்பட்டிருந்தது. (Wilson’s Hist. Sketch of Kingdom of Pandya என்கிற நூலைக் காண்க) நுண்மாண் நுழைபுலமிக்க பழுதற்ற புலவரன்றி வேறு எவராலும் அப்பலகையின் மீது அமர இயலாது. நாற்பத்தெட்டுப் புலவர்களுடைய பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் இயற்றியதாகச் சொல்லப்படுகின்ற நூல் எதுவும் எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை. அப்பேரவையில் திருவள்ளுவர் தோன்றியதன் விளைவு குறித்துப் பலவாராகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், பொதுவான கருத்து என்னவென்றால், உயர் சாதியினர்ற கருதப்பட்ட புலவர்கள் வீற்றிருந்த அவையில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த வள்ளுவரைத் தமக்குச் சமமாக அமர்த்துவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லையாம். தான் புறக்கணிக்கப்பட்டதற்குப் புலவரே தடையேதும் சொல்லாமல் இணங்கிப் போனமையால், தனது நூலை சங்கப் பலகையின் ஒரு ஓரத்திலேனும் வைப்பதற்கு அனுமதி கோரிய அவருடைய வேண்டுகுாள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாம். நூலைச் சங்கப் பலகையின் மீது வைத்தவுடன் பலகை மாயமாக மறைந்திட புலவர்கள் அனைவரும் பொற்றாமரைக் குளத்தில் மிதந்தனராம். இக்கதை அதனைப் போலவே நிலவக் கூடிய மற்றொரு கதையுடன் ஒத்துப் போகவில்லை. தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக வீற்றிருந்த கபிலர் பறையர் இனத்தைச் சேர்ந்தவர்; திருவள்ளுவரின் உடன்பிறப்பு.

அக்காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வடமொழியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. சாந்தோம் புலவருடைய வருகைக்குப் பின்னர் அவருடைய புகழ் தென்னிந்தியப் புலவர்களுடைய புகழையெல்லாம் இருளடையச் செய்து விட்டது என்பது தான் உண்மையெனத் தோன்றுகிறது.

நமது புலவருடைய புகழ் ஓங்கியிருந்த காலத்தைத் துல்லியமாக அறுதியிட்டுக் கூறுவதற்கு உரிய தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. அவருடைய காலம் கி.பி. 800 – 1000 ஆக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருடைய கவிதை நடை அலங்காரமிக்கதாக இல்லை; சீவக சிந்தாமணியுடன் ஒப்பிடும் போது மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. புலவர் சாதியத் தளைகளால் கட்டுண்டவர் அல்லர், கப்பல் தலைவனுடைய நெருங்கிய நண்பர், சாந்தோம் பகுதியில் வாழ்ந்தவர், மெயவிளக்கத்தைப் பொறுத்தவரை பல்வேறுபட்ட சிந்தனைகளையும் ஆய்ந்து தெளிபவர், அவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றிலும் கிறித்துவ சமையப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவருடைய நூலின் பல பகுதிகள் சாராம்சத்தில் கிறித்துவ சிந்தனைகளுடன் ஒத்துப் போகின்றன என்பவை போன்ற பல்வேறு மெய்மைகளையும் நினைவிற் கொள்ளும் போது, புலவர் குறளை யாப்பதற்கான உணர்வெழுச்சியைப் பெறுவதற்குத் தூண்டுகோலாக இருந்தவற்றுள் கிறித்தவ மறைநூல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதற்குத் தயக்கம் கொள்ளத் தோன்றவில்லை.

தமிழ் இலக்கியத்தில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்த மாணவரான டாக்டர். கிரௌல் 1856ஆம் ஆண்டு லீப்சிக்கிலும் இலண்டனிலும் ஜெர்மானிய மற்றும் இலத்தீன் மொழிபெயர்ப்புகளில் ஒரு பதிப்பினை வெளியிட்டார். அவருடைய இறப்பினால் முழுபெறாமல் போன போதிலும், பிழைகள் மலிந்திருப்பினும், அந்நூல் மதிப்புமிக்கது.

அளப்பரிய திறமை படைத்த கீழ்த்திசைப் பண்பாட்டியல் அறிஞர் திரு.எஃப்.டபிள்யூ.எல்லிஸ் ஏராளமான குறிப்புரைகளுடனும் விளக்கங்களுடனும் குறளின் ஒரு பகுதியை அச்சிட்டுள்ளார். முழுமையடையாத அப்பணியின் 304 தாட்களைக் கொண்ட பகுதியை தற்பொழுதும் கூட பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையிலுள்ள இலண்டன் திருச்சபையின் பணிக்குழுவைச் சேர்ந்த அருட்தந்தை டபிள்யூ. எச். டிரூ ஆங்கில மொழிபெயர்ப்புடன் குறளின் 63 அதிகாரங்களைப் பதிப்பித்தார். பரிமேலழகரின் தெள்ளிய உரையுடன் பழம்பெரும் தமிழ் மேதை இராமானுசக் கவிராயருடைய* கூடுதல் குறிப்புரைகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இது வரை வெளிவந்துள்ள பதிப்புகளில் மிகச் சிறந்த பதிப்பு இதுவே சென்னையைச் சேர்ந்த மாபெரும் தமிழறிஞர் காலஞ்சென்ற சரவணப்பெருமாள் அய்யருடைய தலைமையின் கீழ் பதிப்பிக்கப்பட்ட தாயக வெளியீடு தூய்மையானதும் துல்லியமானதும் மதிப்புமிக்கதுமாகும்.

திருக்குறள் நூல் முழுவதையும் தாயக உரையாசிரியர்கள் பன்னிருவர் தமது வாய்மொழி திறனாய்வுரையாக விளக்கியுள்ளனர். ஆகால், தமிழ் மாமுனி தமது விடாப்பிடியான பழங்கருத்துகளையே கற்பித்துள்ளார் என்பதை நிறுவுகின்ற வேணவா மீதூரப் பெற்ற தாயக, ஐரோப்பிய நபர்கள் பாக்களுக்குத் தமது போக்கில் பொருள் கூறுவதற்கு முற்படுவதை மாணவர்கள் தவிர்த்திடுதல் நன்று. பொதுவாக, திருவள்ளுவர் மிகவும் எளிமையாகத் தனது நூலினை யாத்துள்ளார். ஆனால் உரையாசிரியர்கள் தமது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகின்றனர்.

திருக்குறள் கற்பிக்கின்ற மெய்யியல், சமையம் சார்ந்த அமைப்புமுறையைப் பொறுத்த வரை பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்து சமையத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் இம்மாபெரும் புலவரைத் தமக்கு உரிமை கொண்டாடுவதுடன் அவருடைய பாக்களுக்குத் தமது கொள்கைகளுக்கேற்ப விளக்கவுரை நல்குவதற்கு முற்படுகின்றனர். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் அவர்கள் அளித்துள்ள குறிப்புரைகளில் தத்தமது சமையக் கொள்கையைத் தொடர்புறுத்தி ஏதேனும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். குறிப்பாக, சமண சமையத்தவர் அவரைத் தம்மவர் எனக் கொண்டாடுகின்றனர். அவர்களுடைய சமைய வழக்கிலுள்ள பல சொற்களை அவர் பயன்படுத்தியுள்ளார் என்பது உறுதி. ஆனால், அவை அச்சமையத்தின் மிகப் பிந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தோன்றுகிறது.

இருப்பினும், திருவள்ளுவர் சமண சமையத்தவர் என்கிற கருத்தைத் தவிடு பொடியாக்கும் வகையில் ஒரு குறள் உள்ளது. மூன்றாம் அதிகாரத்தின் நான்காம் குறளில் இந்திரன் குறித்த கதை ஒன்று இடம்பெற்றுள்ளது. தேவர்களைக் காட்டிலும் துறவியர் ஆற்றல் மிக்கவர் என்கிற கருத்து ஆங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையை ஏமாற்றிய இந்திரனைச் சபித்தார். ஆனால், சமண சமைய விதிகளின்படி துறவியருக்கு மனைவி இருக்கக் கூடாது. அத்துடன், அவர் சினங்கொள்ளுதலும் கூடாது; தண்டனை விதிக்கின்ற ஆற்றலையும் பெற்றிருத்தல் ஆகாது. சமணர் ஒருவர் அத்தகைய கதையை நம்பவும் மாட்டார்; குறளாசான் பயன்படுத்தியதைப் போல அக்கதையை விவரித்திருக்கவும் மாட்டார். இந்நூல் கீழ்த்திசை நாடுகளின் பண்பாட்டினைச் சார்ந்தது என்கிற முறையில், திருவள்ளுவருடைய அறவுரைகள், ஆதிசங்கரருடைய சீர்திருத்தங்களின் அடிப்படையிலும், பிந்தைய காலத்திய மாற்றங்களுடன் கூடிய சமண சமையத்தை இணைத்தும், பகவத்கீதையில் உள்ள கருத்துகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டவை போலத் தோன்றுகின்றன.

தென்னிந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் நிலவிய பலதரப்பட்ட செய்திகள், அமைப்புமுறைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் என்று யாதொன்றினுடைய சுவடுகளைக் கூட குறளில் காண முடியவில்லை. பல்வேறு நெறிகளிலும் உள்ள சிறந்தவற்றை மட்டிலும் தெரிவு செய்து கொள்ளும் சிந்தனைமுறையை புலவர் கைக்கொண்டதனாலும், இந்நூல் சமையப் பிணக்குகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் அறநெறிகளை மட்டுமே விளக்குகின்றது என்பதாலும் தேவையற்றவை புறந்தள்ளப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவர் கற்பிக்கின்ற மெய்யியல், பகவத்கீதையில்* முன்னிலைப்படுத்தப்படுவதைப் போல, பல்வேறு நெறிகளிலும் உள்ள நல்லவற்றை மட்டிலும் தெரிவு செய்தல் என்கிற சிந்தனைமுறையைச் சார்ந்தது.

பக்தியைப் பொறுத்தவரை, கிறித்துவ சமையத்தின் செல்வாக்கு தான் அஃது இம்மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்டமைக்குத் தலையாய காரணமாக இருந்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் குறளின் முதலாவது அதிகாரம் மிகவும் அழகிய வெளிப்பாடு.

குறள் தானடைந்த பரவலான செல்வாக்கைப் பொறுத்தவரை, தனது கவின்மிகு கவித்துவ வடிவத்திற்குப் பெரிதும் கடன்பட்டுள்ளது. குறள் இரட்டை அடிகளைக் கொண்டது. (மூன்றாவது இலக்கண நூல் பக்கம் 187) அதற்குள் முழுநிறைவானதும் ஆழமானதுமானதொரு கருத்து செழுமையானதும் திறமிக்கதுமான செய்யுள் வடிவத்தில் அடக்கப்பட்டுள்ளது. அதன் நெஞ்சை ஈர்க்கும் தகைமையை வெளிப்படுத்துதற்கு எத்தகையதொரு மொழிபெயர்ப்பாலும் இயலாது. உண்மையைச் சொல்வதென்றால் ‘வெள்ளித்தட்டு ஏந்துகின்ற தங்கக்கனி அது. கிரேக்க மொழியில் போர்நடைப்பாடலாக அமைந்துள்ள Martial-லிலும், இலத்தீன் மொழியின் அவலச்சுவை ததும்பும் புலம்பற் பாடல்களிலும் ஓரளவு அதைப் போன்றதொரு வகையைக் காணலாம். இத்தகைய பாக்களில் பல படிப்போருக்கு இலத்தீன் மொழியில் அவலச்சுவைப் பாக்களை இயற்றிய புரோப்பர்டியஸினுடைய கவித்திறத்தை நினைவுபடுத்தும் வகையில் புலவர் தனது சொல்லாட்சித் திறத்தால் தமிழ்க் காப்பியத்தைக் கட்டியெழுப்பியுள்ளார். ஒருவேளை வடமொழியின் மேலாதிக்கம் ஓங்கியிருந்ததாகச் சொல்லப்படுகின்ற அக்காலத்தில் அதிலுள்ள சுலோகங்களை விஞ்சும் வகையில் பாக்களை இயற்றக் கூடிய தமிழ்மொழிக்கான மிகச் சிறந்த தூதுவன் என்கிற முறையில் அத்தகைய திறத்தைக் கையாண்டிருக்கலாம்.

தமிழ் மொழியின் மாபெரும் சொல்வேந்தருடைய கூற்றுகளுக்கு குறள் என்கிற வடிவம் வழங்கிய அத்தகைய செறிவு தெய்வீகத் தன்மையை நல்கியுள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட நன்னெறி சார்ந்த திட்ப, நுட்பக் கவிதைகளாக விளங்குகின்றன.

கண்டிப்பான விதிகளிலிருந்து சற்றும் விலகிச் செல்வதற்கு அனுமதிக்காததும், பெரிதும் வியத்தகு விதத்தில் சுருங்கக் கூறும் திறன் தேவைப்படுவதும், தமிழ்மொழியில் மிகவும் கடினமானதுமான செய்யுள் வடிவத்தை நீண்டநெடும் பாவியத்தை யாப்பதற்குத் தெரிவு செய்தததென்பது, புலவர் தன்னுடைய உச்சநிலைத் திறன் மொத்தத்தையும் என்றென்றும் நிலைபெற்றிருக்கக் கூடியதும் தமிழினத்தின் தலைமுறை தலைமுறைக்கும் பேரின்பப் பெருவாழ்வு நல்கக் கூடியதுமான நூல் ஒன்றை உருவாக்கத் துணிந்து விட்டார் என்பதையே காட்டுகின்றது.

திருக்குறள் யாக்கப்பெற்றுள்ள ‘வெண்பா’ என்கிற பாவினத்தின் விதிகள்மிகவும் நுட்பமானவை; உண்மையைக் கூறுவதென்றால் யாப்பிலக்கணத்தில் தனித்துவம் வாய்ந்தவை. அவ்விதிகளை மேலும் விவரிக்கக் கூடும்; இருப்பினும், தமிழ் பயிலும் மாணாக்கர்கள் என்னுடைய மூன்றாம் இலக்கண நூலை கூடுதல் விளக்கவுரை பெறுவதற்குக் கற்குமாறு வேண்டுகிறேன். தமிழ்ச் செய்யுள் இலக்கணம் ஒட்டுமொத்தத்தையும் வீரமாமுனிவர் தன்னுடைய Clavis humaniorum litterarum sublimioris Tamulici idiomatic என்கிற நூலில் மிகவும் விரிவாக விவரித்துள்ளார். காலஞ்சென்ற டாக்டர்.ஏ.சி.பர்னெல், கீழ்த்திசை மொழிகளுக்கு அவர் ஆற்றியுள்ள பல தொண்டுகளுள் ஒன்றாக, மேற்சொல்லப்பட்ட மதிப்புமிக்க நூலின் மறு அச்சாக்கத்தை வெளியிட்டுள்ளார். அந்நூல் தாயக நூலாதாரங்களிலிருந்து பிறழாத நம்பகத்தன்மை கொண்டது. அந்நூலின் சிறந்த கருத்துகள் என்னுடைய மூன்றாம் இலக்கண நூலில் தருவிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தத் திருக்குறளின் பகுப்பாய்வுக் கருத்தாக, பரிமேலழகர் உரையில் கண்டுள்ளவாறு, கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகத் திருக்குறள் வகுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவருக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த நன்னூல் எனும் செவ்விலக்கண நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அடைவதே சிறந்த நூல்களைக் கற்பதன் வாயிலாகப் பெறக் கூடியவை என்று விதித்துள்ளது. இதே கருத்தினை இதோபதேசம் என்கிற வடமொழிச் சாத்திரம் தர்மார்த்த-காம-மோட்சணம் எனக்குறிப்பிடுகிறது.

நம்முடைய புலவரோ அவற்றுள் மூன்றை மட்டிலுமே கையாண்டுள்ளார். அவர் தனது நூலினை நிறைவுறச் செய்யாமல் விட்டுவிட்டாரா? அல்லது, உலகியல் செய்திகளுள் நடைமுறைக் கண்ணோட்டம் சார்ந்தவற்றை மட்டிலுமே எடுத்துக்கொள்வது என்கிற முடிவு காரணமாக, வீடு அல்லது மோட்சம் பற்றிய விளக்கவுரை தருவிப்பதைத் தவிர்த்துவிட்டாரா? மாந்த வாழ்க்கையினுடைய எதிர்காலம் குறித்து அவர் பெற்றிருந்த ஒளிக்கீற்றுகளால் நிறைவடையவில்லை என்றும் மேலும் கூடுதல் ஒளி பெறுவதற்காகக் காத்திருந்தார் போலும் என்று நான் எண்ணுகிறேன். அன்றேல், ஒருவேளை, தன்னுடைய மக்கள் உயர்ந்த நிலைக் கற்பித்தலுக்கு இன்னமும் அணியமாகவில்லை எனக் கருதினார் போலும். அதிகாரங்கள் 35-37 இப்பொருள் குறித்த அணுக்கமான அணுகுமுறையை நல்குகின்றன.

———-

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *