இளவல் மோகனுக்கு ஈடேது?
===========================
வாய்விட்டுக் கதற வேண்டும் போலத் தோன்றுகிறது. நேற்று முன்தினம் பேசினார். தமிழ் விருந்து நூல் வந்ததா? என்று கேட்டார். ஔவையின் நினைவுச் சொற்பொழிவை எப்படி நடத்துவது என்று கேட்டார். எண்ணி இருபது ஆண்டுகளுக்கு அவருக்கு எந்தப் பழுதும் இல்லை என்று பெருமிதமாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஏறத்தாழ நூறு தமிழ் நூல்களை வழங்கியவர்.
நினைவிற்கெட்டாத சாலப் பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தொடங்கி, நேற்று மாலை வந்த கவிதை வரை பாராட்டி மகிழ்ந்து சாரல் பனித்துளிகளாக எழிலுறத் திறனாய்ந்து காட்டும் சிந்தனைப் பெருங்கடல் எப்போது எதை எழுதினாலும் தெ.பொ.மீ, மு.வ., மூதறிஞர் வ.சுப.மா ஆகிய மூவரின் நிழல் படியாமல் எழுதியதே இல்லை.
நெஞ்சுவலி அவ்வளவு கொடுமையானதா? சென்ற வாரம் கூடச் சீனா சென்று வந்தார். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது அருளுக்கு அண்ணன் போல் இருந்து அரவணைத்துச் சொற்களை விதைப்பீர்களே? குறைந்தது பத்தாண்டுகளுக்கு இன்றே திட்டம் வகுத்திருந்தீர்களே?
28.02.2018 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஔவை அறக்கட்டளை நினைவு முதற் சொற்பொழிவை ஆற்றியவர். அச்சொற்பொழிவைக் கேட்டவர் மனம் உருகப் பேசிய கணத்தில் இருந்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக மோகன் இணையர் நெருங்கிய இடம் பெற்றனர். இளையவர்கள் மறைந்து போவது என் உள்ளத்துக்கு இடியாக விழுகிறது.
அறிஞர் திலகம் மோகன் முடிவுக்கு ஆறுதலே இல்லை. கற்றுத் தெளிந்த மாதர் மாமணியாகத் திகழும் பேராசிரியர் நிர்மலாவின் கலக்கத்தை நினைப்பவர் நெஞ்சம் தவித்துத் துடிக்குமே !
அறிஞர் மோகன் இடம் பெறாத குழுக்கள் இல்லை. தலைமை பெறாத கூட்டங்கள் இல்லை. பெறாத பரிசுகள் இல்லை. ஞானபீட விருது வழங்கும் குழு உறுப்பினராக இருந்தவர்.
புன்னகையோடு எந்தப் பொறுப்பையும் சுமக்க முன் வரும் கல்வித் திலகம்.
இன்று இல்லை என்பது தான் பெருமையா !
….. ஔவை நடராசன்

Add a Comment