====================================================================
தின செய்தி நாளிதழில் 08.12.2019 அன்று வெளியான என் சித்தப்பா மருத்துவர் ஔவை மெய்கண்டான் அவர்களின் கட்டுரை
====================================================================
புறநானூறு காட்டும் புதுமைப்பெண்
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
புறநானூறு என்ற சங்க காலத் தொகை நூல் தமிழர்களின் வீரத்தையும், போர்த்தொழிலில் காட்டிய போற்றத்தக்க மாண்பினையும் வரைந்துகாட்டும் வனப்பு வாய்ந்தது. அவற்றின் மூலம் பல்வேறு சங்ககால வரலாற்று நிகழ்வுகளையும் மக்கள் வாழ்ந்த சமூக அமைப்பினையும் நெறிமுறையினையும் அறிந்து கொள்ளலாம்.
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என நாற்குணமும் நாற்படையாக மகளிர்க்குப் பண்புகளாகப் போற்றப்பட்ட காலத்தில்கூட, மகளிர்பால் மிளிர்ந்த வீரத்தையும், உறுதியையும் எடுத்துக்காட்டும் பாடல்கள் பல புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
போர்வீரர்களின் தாய், உடன்பிறந்தோர் , மனைவியர் பற்றிய உணர்ச்சிமிக்க பாடல்களை அவர்கள் பாடியுள்ளனர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சங்க காலப் பெண் பாற்புலவர்கள் திகழ்கின்றனர். பழங்காலத் தமிழ் இலக்கியப் படைப்பில் பெண்கள் ஆற்றியது பெரும்பங்கு என்றே கூறலாம். மகளிர் பாடியனவாக ஏறத்தாழ 140 பாடல்கள் சங்ககாலத் தொகை நூல்களிலும் பிற நூல்களிலும் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆடவர் ஆதிக்கச் சமுதாயமாக இருந்த காலத்தில், பெண்கள் மறக்கவியலாத உயர்ந்த பாடல்களை இலக்கிய நயத்துடன் இயற்றிப் பாடியிருப்பதே புதுமையுணர்வையும், அறிவுத்திறத்தையும் காட்டுவனவாகும் .
“பெண்உரு ஒருதிறன் ஆகின்றுஅவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”
எனப் பெண்ணை சக்தி வடிவாக ஒரு பக்கம் கொண்ட இறைவனைப் பெருந்தேவனார் பாயிரமாகப் பாடிய கடவுள் வாழ்த்துடன் தான் புறநானூறு தொகுக்கப்பட்டுள்ளது.
பாலை நிலத்தில், கணவன் இறந்த நிலையில், தனிமையில் விடப்பட்ட பெண்ணைப் பாடும் பாடல்கள் மனதை உருக்குவன – இப்பாடல்களை முதுபாலைத்துறை எனத் தமிழறிஞர்கள் வகுத்துள்ளனர். போர்வீரர்களின் வீரச்சாவிற்குப் பின்னால் நடப்பவை பற்றிய இப்பாடல்கள் இயற்கையான அவலம் நிறைந்தவையாகத் தோன்றினாலும், உள்ளிழைந்து ஓடும் பெண்களின் கடமையுணர்வைப் படிப்பவர்கள் உணரும் போது வியப்பு மேலிடுகிறது .
குளம்பந்தாயனார் இயற்றிய ஒருபாடலில்,
“நின் பிரிவினால் என்திறம் அவலம் கொள்ளும்
என எண்ணாமல், நீ இறந்துவிட்டாயே!
இனி நான் என் செய்வேன் ?
நின்னொத்த இளைஞர்கள் இன்னும்
போராடுகையில், நீ மட்டும் என்னுடன் –
உறவாட மனமின்றி முடிவைத் ;
தழுவி விட்டாய்!
வளையல் இழந்து வாடிவருந்தி
வெளுத்த கையைத் தலையில் வைத்து
உள்ளூர் சென்று உன் உறவினர்களிடம்
என் இழப்பை எப்படி உரைப்பேன்!”
எனப் பாடுகையில்,
“இறுதிநேரத்தில் நீ என்னிடம் என்ன சொல்ல நினைத்தாய்”; என வினவுதல் போல, ‘ஒய்வலோ கூறு நின்னுரையே! எனக் கேட்பாள். இப்படிப்பட்ட காட்சிகளின் நடுவே, ஒருபெண் கேட்பாள்.
“நாங்கள் எப்படியும் வாழ்வில் போராடி வாழ்ந்து விடுவோம்); உன்னைச் சீராட்டி வளர்த்த தாய் எப்படித் தாங்குவாளோ!” என மாமியாரின் வருத்தத்தை வடித்துக்காட்டும் காட்சி மிகவும் சிறப்புடையது.
புறநானூறு காட்டும் மேலும் பல பாடல்களில், வீரம் நிறைந்த பெண்களைக் குறிப்பிடுவது, பயில்வார்ப் பிணிக்கும்” சொற்றொடர்களாகும்.
பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடிய பாடல் ஒன்று; அதில் கணவனை இழந்த பெண்களை நோக்கிப் பாயும் சமுதாயச் சடங்குகளும் சங்கடங்களும் பற்றி அடுக்கடுக்காக எடுத்துரைக்கப்பட்டு, அதன் உள்ளிருக்கும் தாங்காத வேதனை தரும் கருத்துகள், பெண்ணின் உணர்வின் ஊற்றாகப் பிழிந்து தரும்.
அவளின் தன்மான உணர்வும் தகைமையும் படிப்பவர் மனத்தில் நெகிழ்வைத் தரும்.
“பல் சான்றீரே! பல் சான்றீரே!
செல்க எனச் சொல்லாது
ஒழிக என விலக்கும்
பொல்லாச்சூழ்ச்சிப்பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங்காய்
வாள் போழ்ந்திட்ட காழ்போல்
நல்விளர் நறுநெய் தீண்டா !
தடையிடை க்கிடந்த கைபிழி பிண்டம்;
வெள்ளென் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சியாகப்
பரல் பெய் பள்ளி பாய் இன்றி வழியும்;
உயவல் பெண்டிரேல் அல்லல் யாம்!
பெருங்காட்டுப் பண்ணிய
கருங்கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுக;
எமக்கு எம்பெருந்தோள் கணவன்
மாய்ந்தென –
அரும்பு அற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும்
ஓர் அற்றே !
– என்கிறார்.
கணவன் மேல் இட்ட தீயும் தாமரைபூத்த குளிர்நீர்ப்பொய்கையும் எனக்கு ஒன்றுதான்; எனவே, தீயில் மூழ்குவதற்குத் தயங்கமாட்டேன் என ஓலமிட்டுப் புலம்புகிறாள் .
கணவன் இழந்த கைம்பெண் நிலை கொடுமையான துயரமாக இருந்த காலம் அது. அக்கால மக்களுக்கிடையே இருந்த சடங்குகள் பெண்களுக்கு எதிராகவே இருந்திருக்கலாமோ எனவும் எண்ணத்தோன்றும்.
“கொய்ம் மழித் தலையொரு கைம்மையுற” (புற : 261)
எனப் பெண்களை முடி இழக்கச் செய்தனர் எனத் தோன்றுகிறது.
அதைவிட, அவர்கள் உணவும், உறக்கமும் பிறர் வரையறுத்த படிதான் இருக்க வேண்டும் என்ற நியதிகள் இருந்திருக்கின்றன. இவற்றை எதிர்க்கிறாள் அந்தப் புறநானூற்றுப் புதுமைப்பெண்.
“உடன்கட்டை” ஏறுவதைத் தடுக்கும் பெரியோரை, “சான்றோரே! என முதலில் அழைத்துப் பின், “அய்யா! போதுமய்யா!” உங்கள் சூழ்ச்சி எனச் சுட்டிக் காட்டுகிறாள்.
இறந்த கணவனுடன் எரியாது இருக்கச் சொல்வதை, சூழ்ச்சி என அவள் சொல்வதை முதலில் படிக்கும் பொழுது, “ஏன் இந்தப் பெண்மணி இப்படிச் சொல்கிறாளே! எனத் தோன்றும். ஆனால், மேலே அவள் கூறுவதைப் படிக்கும் போதுதான் அவளின் புரட்சி எண்ண ம் புரியும்; “கணவனை இழந்த பெண்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் போல் நடத்தப்படுகின்றனர்.
அவர்களின் உணவும் படுக்கையும் இனி இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சட்டம் போடப்படுகிறது.” அதைத் தனிமனித சுதந்திரம் என்ற நிலையில் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக எதிர்க்கிறாள் இந்த அரசி – அணில்வால் போன்ற வெள்ளரிக்காய்ச் சாறு பிழிந்து, வெறும் சோற்றில் உண்ண வேண்டும்; கசக்கிறது என நெய் ஊற்றி விடக்கூடாது:
வெள்ளை எள்ளில் புளி சேர்த்துச் சமைத்து வேக வைத்த கீரையை மட்டும் சாப்பிட வேண்டும்; அதுவும் ஒரு வேளை மட்டும் கற்கள் நிறைந்த படுக்கையில் அதுவும் பாயின்றிப் படுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான “தீண்டாமை” வாழ்க்கை வேண்டாம். தீயே போதும் என “உடல்வலி” நோக்கி அவள் சொல்லவில்லை. கைம்பெண்களின் கையறு நிலையைச் சமுதாயம் கட்டாயப்படுத்துவதை எதிர்க்கிறாள், விதவைப்பெண்டிரை “உயவல் பெண்டிர்” என இப்பாடல் குறிக்கிறது.
“எங்களையும் மற்றவரைப்போல் உண்ணவும், உறங்கவும் உரிமை தராமல் ஒதுக்கிவைக்கும் உங்கள் சட்டம் இருக்கும் வரை” செந்தணலும் குளிர்நீராகும்; கணவன் கருங்கோட்டு ஈமக்கட்டையில் எரியும் இடம் தாமரை பூத்த தடாகமாக இருப்பதாக அந்தக் காதல் மனைவி கவிதையாகப் பாடுகிறாள். பல் சான்றிரைப் புகழ்வது போல் சூழ்ச்சி செய்பவர்கள் எனச்சுட்டிக்காட்டுகிறாள் அந்தச் சுதந்திரவேட்கை கொண்ட புதுமைப்பெண். ஆனந்தப்பையுள் என்ற துறை சார்ந்தது இந்தப் பாடல்.
உவகைக் கலுழ்ச்சி என்ற துறையில் வரும் மற்றொரு பாடலில், கணவன் நெஞ்சில்வாள் குத்தி வீழ்ந்து கிடப்பதால் வீரமரணம் எய்தியுள்ளான் என அப்பெண்ணின் ஆழ்மனம் மகிழ்வதாகப் புறநானூறு காட்டும்.
கணவன்-மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்ததையும், மனைவி கணவனைக் கேலி செய்வது போல்”கறங்கு வௌ; அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து” என அவனின் கரிய நிறம் வெள்ளருவியில் குளித்து வந்த பின் கொஞ்சம் வெண்மையாகிவிட்டது என வரும் பாடலில் தன் கணவனைச் “சொல்வலை வேட்டுவன்” எனச் சொந்தம் கொண்டாடுவாள்!
புறநானூறு வெறும் போர்க்களப்பாடல் தொகுப்பு அன்று ! வீரர்கள் நிறைந்த சமுதாயத்தைக் காட்டும் சரித்திரச் சாளரம்.
விசும்பு ஏறும் வௌளியும்
குடம்பை விட்டுக் குரல் தரும் புள்ளும் (பறவையும்)
பொய்கைமலர் கண் விழிக்கும்;
நிலவின் ஒளி மங்கிக்கதிரவன் வரவில் விடியும்;
முரசும் சங்கும் முழங்கத் தொடங்கும்;
வையகம் முழுதும் வைகறை அரவம் நிரம்பும்
என்றெல்லாம், இயற்கைப் புனைவுகளை அடுக்கும் புறநானூற்றுப் பாடல்கள் படிக்கப்படிக்க இனிமை பெருக்குவன.
– டாக்டர் ஔவை மெய்கண்டான்,
தொடர்புக்கு: meikandan_avvai@yahoo.com

Add a Comment