POST: 2019-12-14T05:57:33+05:30

என் மனங்கவர்ந்த மருத்துவர் டாக்டர்.பத்மானந்தன் புகழ் வாய்ந்த தந்தை – ” செஞ்சொல் முரசு ” செங்கோட்டை சனார்த்தனம் அவர்களின் திருமகனாவார் .

பாரதி விருது பெற்ற நண்பர் பத்மானந்தன் திருக்குறள் ஆய்வில் தம் சிந்தனையை செலுத்தும் பெருமிதம் வாய்ந்தவர் .

கடுகளவும் தன்னலம் இல்லாமல் – கடலளவு பொதுநலச் சிந்தனையோடு வாழ்ந்து வரும் பத்மானந்தன் அறிஞர் அண்ணா – இந்திய மருத்துவ ஆய்வு நிலையத்தில் சிறந்த பொறுப்பில் ஓய்வு பெற்ற நிலையிலும் அவருடைய மருத்துவப் பணி சிறந்து வருகிறது .

வாரம் தவறாமல் திங்கள் ,புதன் ,வெள்ளிக்கிழமைகளில் என்னைத் தேடி வந்து இருபது மணித்துளிகள் நீவுகைச் செய்வதோடு தம் இலக்கிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார் .

அன்றன்று புதுமைக் கருத்துக்களை புலமை வளத்தோடு இணைத்துப் பேசுவதில் என் நெஞ்சம் கவர்பவர் .

நேற்று அவர் பேசிய செய்தியை அவர் மொழியிலேயே இங்கே பதிவு செய்திருக்கிறேன் ….

நடப்பே ஒரு நடிப்பா !
===================

உலகமே ஒரு நாடக மேடை .நாமனைவரும் அதில் நடிக்கின்ற மாந்தர்களே ! . சேக்ஸ்பியர் தீர்மானமாக வந்த முடிவிது .காலையில் ஒரு வேடமும் மாலையில் மற்றொரு வேடமும் புனைந்து வாழ்நாள் முழுவதும் நிசமாக வாழாமல் நிழலாகவே வாழ்ந்து மறைபவர்கள் தான் இந்த வேடதாரிகள் .ஒரு கலைஞன் பல வேடங்களைப் புனைகிறான் .அந்த கதை மாந்தராகவே தன்னை மாற்றிக் கொண்டு வலம் வருகின்ற பொழுது நம் முன்னே அரங்கேற்றுவது தான் உண்மை என்று நாம் நம்புகிறோம்.கொள்கைகளிலும் – கோட்பாடுகளிலும் – சித்தாந்தங்களிலும் ஊறித் திளைத்தவர்கள் கால ஓட்டத்தில் – தத்தம் நிலைபாட்டினை மாற்றிக்கொண்டு , முற்றிலும் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களோடு உடன்படுவதும் தொடர்ந்து அந்தக் கூட்டிலேயே சேர்ந்து செல்வதும் – நமக்கு அதிர்ச்சியை அளித்தாலும் ,நடப்பது அனைத்தும் நாடகமே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்ற பொழுது தான் உண்மை புலப்படும் .

ஒவ்வொரு கொள்கைக் கோட்பாடும் – தீர்மானங்களும் அவை தோன்றும் போது உள்ள சூழல் மாறிவிடுவதால் – அவற்றைப் பின்பற்றுபவர்களுக்குச் சரியான புரிதலின்றி – முரண்பாடு கருடன் – சமரசம் செய்து கொண்டு தத்தம் இயக்கங்களில் தொடர்கின்றனர் .தன்னலமும் – கொள்கைப் படிப்பின்மையும் மட்டுமே காரணம் என்று சொல்லி நாம் ஒதுங்க முடியாது .மாறுகின்ற சூழலில் – தம் கொள்கையை எப்படி செயற்படுத்துவது என்ற தொலைநோக்கு

இல்லாததே இதற்குக் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது .ஒரு படைப்பை படைப்பாளியின் கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற போது தான் படைப்பின் அழகும் படைத்தவனின் அறிவாற்றலையும் உணர முடியும் .அது போலவே கொள்கைகளையும் – சித்தாந்தங்களையும் அது தோன்றிய போது ஏற்படுத்திய அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு – மாறுகின்ற உலகில் மாறாத சில நியதிகளோடு இதனை ஒப்பிட்டு – எவ்வாறு தீர்வு காண்பது என்ற தெளிவற்ற நிலையில் நடித்தாவது வாழ்ந்தே தீர வேண்டும் என்ற முடிவிற்கு வந்து விட்டார்களோ சமுதாயச் சிற்பிகள் .

—– முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *