தினசெய்தி நாளிதழில் 29.12.2019 அன்று வெளியான கட்டுரை
=============================================
மக்களை நலிவுறச் செய்யாததே மன்னனுக்கு அழகு
=============================================
– முனைவர் ஒளவை ந.அருள், இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு
================================================
பதிணென்கீழ் கணக்கு நூல்களான சிறுபஞ்ச மூலம் மற்றும் ஆசாரக்கோவை நூல்களிலிருந்து ஒரு சில பாடல்களையும் அதன் பொருளையும் அறிவோம். சிறுபஞ்ச மூலம்: சிறு என்பது, சிறிய என்பதையும், பஞ்சம் என்பது, ஐந்து என்பதையும், மூலம் என்பது வேரையும் குறிப்பன. எனவே, சிறிய மூலிகை வேர்களால் தயாரிக்கப் பெற்ற மருந்தினைக் குறிப்பது ‘சிறுபஞ்ச மூலம்’ என்பது. அத்தகு வேர்கள் ஐந்தும் யாவை என்பதைப் ‘பதார்த்தக் குணச் சிந்தாமணி’ என்னும் நூல் குறிப்பிடுவதாவது,
சிறிய வழுதுணைவேர், சின்னெருஞ்சி மூலம் சிறுமலிகண்டங்கத்தரிவேர், நறிய பெருமலி ஓரைந்தாம் பேசுபல் நோய் தீர்க்கும்
அரிய சிறுபஞ்ச மூலம் (495) ‘பொருட்டொகை நிகண்டு கூறுவதாவது,
‘சிறுபஞ்ச மூலம் கண்டங்கத்திரி, சிறுவழுதுணை சிறு மல்லி, பெருமல்லி,
நெருஞ்சி இவற்றின் வேராகும்மே. (867) இந்த மருந்தினை உட்கொண்டால், உடல் நோய் நீங்கும்; இந்த நூலைக் கற்றால், உளநோய் நீங்கி, வாழ்வு வளம் பெறும்.
இந்நூலின் ஆசிரியர் காரியாசான்’. இவர்தம் இயற்பெயர் காரி’. ஆசான் என்பது, தொழிற்பெயர். இவர், மருத்துவத்திலும், சோதிடத்திலும் வல்லவர் என்பதைப் பல பாடல்களின் மூலம் அறியலாம்.
மன்பணைக்குத் தேவையான பல்வேறு நெறிமுறைகளை, இந்நூல் விளங்கத் தருகிறது. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகிய கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள், இந்நூலில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இந்நூலில், 102 பாடல்கள் உள்ளன. புறத்திரட்டிலும் 3 பாடல்கள் உண்டு.
பொருள் உடையான் கண்ணதே, போகம், அறனும், அருள் உடையான் கண்ணதே ஆகும், அருள் உடையான் செய்யான் பழி பாவம் சேரான், புறமொழியும்
உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. -1 பொருட்செல்வத்தை உடையவனிடமே இன்பம் உண்டாகும். அருட்செல்வத்தை உடையவனிடமே அறப் பயனும் உண்டாகும். அருளுடையவன் என்பவன், பழிச்செயல் செய்யமாட்டான்.
பாவத்தோடும் சேரமாட்டான். வெற்றுரையையோ, புறங்கூறுதலையோ பிறர் செவியில் நுழையுமாறு ஒருபோதும் செய்யமாட்டான்.
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின் இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம், நடைதனக்குக் கோடாமொழி வனப்பு, கோற்கு அதுவே சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு. நால்வகைப் படைகளுள், யானைப் படையே மேலானதும், அழகானதும் ஆகும். பெண்ணின் இடை என்பதற்கோ நுட்பம் என்பதே அழகாகும். மொழிநடை என்பதற்கோ சற்றும் பிழையில்லாமல் பேசுவதே அழகாகும். அரசனுக்கும் அதுவே அழகாகும். வீரனுக்கோ சற்றும் குறையாக வீரமே அழகாகும்.
கண்வனப்புக் கண்ணோட்டம், கால் வனப்பு செல்லாமை; எண் வனப்பு, இத்துணை ஆம் என்று உரைத்தல், பண் வனப்புக் கேட்டார் நன்று என்றல், கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான், நன்று என்றல் வனப்பு. -7
கண்ணுக்கு அழகென்பது இரக்கமுடைமை. காலுக்கு அழகென்பது எவ்வகையானும் யாசிக்கச் செல்லாமை. கணக்கிடுகைக்கு அழகென்பது இந்த அளவினதாம் என்றுரைத்தல். பாவிசைக்கு அழகென்பது அதனைக் கேட்டவர் நந்றென்றுரைத்தல் ஒளியுடை மன்னனுக்கு அழகென்பது தன் நாட்டு மக்களை நலிவுறச் செய்யாத நல்லவன் என்பது.
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும், ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,
நாவகம் மேய்நாடின் நகை -10 வெட்கமில்லாதவன் கொண்டுள்ள தகுதிப்பாடும், ஒழுக்கமில்லாதவன் செய்கின்ற தவச் செயலாகிய விரதமும், தனக்கே உண்ண உணவில்லாதவன் செய்கின்ற கொடையும், வலிமையில்லாதவன் செய்கின்ற வீரத்தனமும், செந்தமிழைத் தெரிந்து தெளியாதவன் செய்கின்ற பாப்புனைவும் ஆகியவற்றை ஆராய்வோமானால், எள்ளி நகைக்கவே இடமாகும்.
வைத்தனான் ஆகும் வசை, வணக்கம், நன்று, ஆகச் செய்ததனான் ஆகும், செழுங்குலம்; முன் செய்த பொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்த அருளினான் ஆகும் அறம்
– 33 பிறரை நிந்தித்ததனால் உண்டாகும் குற்றம் பிறரைப் பணிவுடன் வணக்கத்தை நல்லமுறையில் செய்ததனால் உண்டாகும் செம்மையான குடிப்பெருமை; முன்னச் செய்த பொருட் செல்வத்தினால் உண்டாகும் இன்பம்; இளகிய நெஞ்சகத்தின் அருளுடைமையால் உண்டாகும்
அறச்செயல்
மயிர்வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும், உகிர்வனப்பும், காதின் வனப்பும், செயிர்தீர்ந்த பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த குற்றமற்ற பல்லின் அழகும் அழகுகளல்ல. சொல்லின் அழகே அழகு.
– 49
கொல்லாமை நன்று கொலை தீது எழுத்தினைக் கல்லாமை தீது, கதம் தீது, நல்லார் மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி. எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது நல்லது. தன்னலங்கொண்டு தான் வாழப் பிறரைக் கொலை செய்தல் கெட்டது. கண்ணெனத் தகும் எண்ணையும் எழுத்தையும் கல்லாமலிருப்பது கெட்டது. கோபம் கொள்ளுதல் கெட்டது. சான்றோர் பழிப்பதற்கு முன்பாகத் தன் உறவினர் அனைவரும்த பழிக்காமல் இருப்பவனே பல்லோரின் தலைவனாவான்.
பொன் பெறும், கற்றான் பொருள் பெறும், நற்கவி, என் பெறும் வாதி, இசை பெறும், முன் பெறக் கல்லார் கற்றார் இனத்தர் அல்லார் பெறுபவே, நல்லார் இனத்து நகை.
– 54 கண்ணெனத் தகும் கல்வியைக் கற்றறிந்த சான்றோன், பொன்னையும் பொருளையும் பரிசில்களாகப் பெறுவான். நல்ல கவிஞனானவன், வள்ளலிடம் சென்று பல்வேறு பொருள்களைப் பரிசில்களாகப் பெறுவான். சொற்போரில் வல்லவன், எதனைப் பெறுவான்? மேலான புகழைப் பெறுவான். இளமையில் கல்லாதவரும், கற்றார் இனத்தில் அல்லாதவரும் ஆகிய கீழ்மக்கள், சான்றோரின் நகைப்பைப் பெறுவர்.
தக்கார்வழி கெடாதாகும்; தகாதவர் உக்க வழியராய் ஒல்குவார் தக்க இனத்தினான் ஆகும்,
பழி, புகழ், தம் தம் மனத்தினான் ஆகும், மதி.
– 79 தக்காராகிய மேலோரின் நெறிமுறை, சற்றும் கெடாததாகும். தகாதவராகிய கீழோரின் வழிமுறை, செல்லும் வழி பாழ்பட்டுத் தளர்ச்சி அடைவார். தக்கரோடு சேர்ந்து பழகினால் புகழ் உண்டாகும். தகாதவரோடு சேர்ந்து பழகினால் பழி உண்டாகும். அவரவர் எண்ணத்திற்கேற்பவே அறிவானது அமைவதாகும்.
ஆசாரக்கோவை: ஆசாரம் என்பது வடசொல் தமிழில் ஒழுக்க நெறிமுறை என்று கூறலாம். கோவை என்பது தொகுப்பாகும். எனவே, ஒழுக்க நெறிமுறைகளைத் தொகுத்துக் கூறும் நூல் ஆசாரக் கோவையாகும். இதன் சிறப்புப் பாயிரம் கூறுவதாவது:
யாருமறிய அறனாய மற்றவற்றை ஆசாரக் கோவை யெனத்தொகுத்தான் – தீராத் திருவாயிலாயத் திறல் வண் கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளியென்பான் (2-5)
புறத்தூய்மையையும், அகத்தூய்மையையும் எடுத்தியம்புவது இந்நூல். காலையில் எழுவது முதல் இரவில் உறங்கச் செல்வது வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பனவற்றையெல்லாம் கட்டளையாகவே கூறுகிறது. பல்துலக்குவது, வெளிக்குப் போவது, குறிப்பது, உடுத்துவது, உண்பது, படிப்பது, யார்யாருக்கு எவ்வெவ்வாறு மரியாதை செய்வது? யார் யாருக்கு உதவி செய்ய வேண்டும்? யார் யாரிடம் எவ்வெவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? உறக்கத்தினின்றும் எழும்போது என்ன செய்ய வேண்டும்? உறங்கப்போகும் போது என்ன செய்ய வேண்டும்? என்பனவற்றையெல்லாம் இந்நூல் தொகுத்துக் கூறுகின்றது. முதல் பாடலே, ஒழுக்க நெறி விதைகளாக எட்டினைக் குறிப்பிடுகின்றது. இந்நூலில், நூறு பாக்கள் உள்ளன. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா என
எல்லா வகை வெண்பாக்களும் உள்ளன.
இந்நூலாசிரியரின் பெயர் ‘கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்’. முள்ளியர் என்பது இயற்பெயர். கயத்தூர்ப் பகுதியாகிய பெருவாயில் என்பது வாழ்ந்திருந்த இடமாகலாம்.
நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசாரவித்து -1 பிறர் செய்த நன்மையை உணர்தல், பொறுமையைக் கடைபிடித்தல், நன்சொல்லாகிய இன்சொல்லையே பேசுதல், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல், கண்ணெனத்தகும் கல்வியைக் கற்றல், உலக நடைமுறையினைச் செய்ய உணர்தல், அறிவுச் செல்வத்தைப் பெற்றிருத்தல், நல்லவரோடு நட்பு செய்தல் என்னும் இவையெட்டும் நூலோர் சொல்லிச் சென்ற ஒழுக்க நெறிமுறைகளின் விதைகளாகும்.
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோயின்மை இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். -2 நற்குடிப் பிறப்பு, நீண்டநாள் நல்வாழ்க்கை , பொருட்செல்வம், அழகு, நிலவுரிமை, பெருமிதம், கல்விச் செல்வம், நோய்நொடி இன்மை என்னும் இவ்வெட்டு சிறப்புகளையும் எந்நாளும் நல்லொழுக்கம் தவறாதவர் அடைவர்.
வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே முந்தையோர் கண்ட முறை -4 வைகறைப் பொழுதில், உறக்கத்தினின்றும் விழித்தெழ வேண்டும். அன்றைய பொழுதில் தான் செய்ய வேண்டிய நல்லறச் செயலையும், சிறப்புடைய பொருளையும் எண்ணிப்பார்த்து, பெருஞ்சிறப்புக்குரிய தாயையும் தந்தையையும் முன்னறி தெய்வங்களாகத் தொழுது வணங்க வேண்டும் என்பதே நம்முடைய முன்னோர் கண்ட நன்னெறியாகும்.
பொய்குறளை வௌவல் அழுக்காறு இவைநான்கும் ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் – சிந்திப்பின் ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும். – 38 பொய்யுரைத்தல், கோள் சொல்லுதல், பிறர் பொருளைக் கவர்தல், பொறாமை கொள்ளுதல் ஆகிய இவை நான்கு செயல்களையும், மயக்கமற்ற சான்றோர் பெருமக்கள் எண்ணமாட்டார். ஒருவேளை எண்ணுவாராயின், பிச்சை எடுக்க வைத்து, கொடிய நரகத்திலும் தள்ளிவிடும். மேலும், தெய்வமும் கூடக் கடுங்கோபம் கொண்டுவிடும்.
பாழ்மனையும் தேவகுலனும் சுடுகாடும் ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும் தாமே தமியர்புகாஅர்பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர். – 57 தாம் நோயற்ற தன்மையை விரும்பக்கூடியவர், பாழடைந்த வீட்டிலும், கோயிலிலும், சுடு காட்டிலும், ஊரின் வழியில் வளர்ந்துள்ள மிகவும் முதுமை வாய்ந்த மரத்தடியிலும் தாமே தன்னந்தனியராகச் சென்றடைய மாட்டார். பொழுதெல்லாம் தங்கிக் கழிக்க மாட்டார்.
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள் இன்பவகையால் ஒழுகலும் – அன்பின் செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள. – 79 துன்பம் வரும்போது அதனை ஏற்றுக்கொண்டு வாழ்தலும், இன்பம் வரும்போது அந்த நிலையைக் கொண்டு வாழ்தலும், அன்புடைமையைக் கொண்டவரின் வீட்டிற்குச் செல்லாமையும் ஆகிய இந்த மூன்று குணங்களும், மனத்திட்பம் உள்ளவரிடமே உள்.
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழைஉறை சியமும் என்றிவை நான்கும் இளைய எளிய பயின்றன என்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும். – 84 புற்றுக்குள் வாழ்கின்ற பாம்பும், அரசும், நெருப்பும், குகைக்குள் வாழ்கின்ற சிங்கமுமாகிய இவை நான்கும் இளையன, எளியன, நெருங்கிப் பழகியன என்றெல்லாம் அலட்சியப்படுத்தினால், பொல்லாங்கு தரும்.
நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம் அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றியானும் படும். – 96 சங்காகிய சிப்பி, எறும்பு, தூக்கணம் பறவை, காக்கை எனப்படும் இவை போலத் தம்முடைய கடமைகளை நல்லமுறையில் கடைப்பிடிப்பதோடு, அக்கடமைகளும் அத்தகு நன்முறையில் முடியுமாறு முயற்சி செய்பவர்க்கு, வாழ்வின் ஒழுகலாறு சிறப்பாகவே அமையும்.
– முனைவர் ந.அருள்,
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment