தினசெய்தி நாளிதழில் 17.02.2020 அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
===========================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..!
( பகுதி – 22 )
‘‘தமிழிசையைக் கேட்டே மகிழ்ந்தவன் நான்..!’’
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீராத பற்றும் மாறாத உறுதியும் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவ்வகையில் தமிழிசையின் மீதும் தனிப்பட்ட அக்கறையும் ஆர்வமும் கொண்டவராக இருந்தார். தமது காரில் மெல்லியக் கருவியோசையை ஒலிக்கவிட்டிருப்பார். சில நேரங்களில், “தாமரை பூத்த தடாகமடி’’, – இசைச்சித்தர் பாடிய ‘‘சிந்தையறிந்து வாடி” என்ற பண் வரிகளைக் கேட்டிருக்கிறேன்.
இந்நிலையில், 23.12.1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழிசைச் சங்கத்தின் 35-ஆவது ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழுணர்ச்சிக்கு ஏற்றம் தருவது என்று வாயார வாழ்த்தி மகிழ்ந்தனர் அறிஞர் பெருமக்கள். புரட்சித்தலைவர் ஆற்றிய உரை…
‘‘இன்று, தமிழிசைச் சங்கம் 34 ஆண்டுகளைக் கடந்து வீறுநடை-வெற்றி நடைபோடுகிறது. தனது கடமையிலிருந்து வழுவாமல், சிறப்பாகப் பணி செய்து வருவதைப் பார்க்கும்போது பெருமைப்படுகிறேன். அதைத் தொடர்ந்து மற்றவர்களும் தமிழிசை வளரப் பாடுபடக் கேட்டுக்கொள்கிறேன்.
பதவியையும், பணத்தையும் வாழ்க்கையின் சுகபோகங்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல்-தன்னை உயர்த்திக் கொண்டால் மட்டும் போதும் என்று கருதாமல்-தமிழ் மொழி வளர, தமிழிசை வளர-நாட்டை, நாட்டு மக்களை உயர்த்த வழிகாட்டியவர்களை-அதற்கு முன்னின்று தமிழிசையைத் தொடங்கி வைத்தவர்களை-நாம் எல்லோரும் போற்றுகிறோம். நமது வருங்காலச் சந்ததியினரும் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகும் பாராட்டுவார்கள். செட்டிநாட்டு அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களுக்கு நன்றி கூறுவார்கள்.
தமிழுக்குச் சொந்தக்காரன் என்ற உரிமையோடு நான் இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மொழி-தமிழிசைக்குப் பாதுகாப்பு ஏற்படுத்த-பிற மொழிகளால் தமிழ் மொழி-தமிழிசை-பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக-பிற மொழிகள் தமிழ் மொழி மேல்-தமிழிசை மேல்-மேலாதிக்கம் செலுத்தாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான்-தமிழிசைச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது என்று கருதுகிறேன்.
நான் இப்படிக் கூறுவதில் தவறு இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மைக் காரணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனது உள்ளத்தில் நம்பிக்கை எழுகிறது.
சிலரை மட்டும் ஈர்க்க என்று இல்லாமல் படித்தவர்கள், பாமரர்கள், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரையும் ஈர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. அத்தகைய இசையின் வழியாக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் உணர்ச்சியை-தமிழ்ப் பண்பாட்டை-ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தோடுதான் தமிழிசைச் சங்கம் தொடங்கப்பட்டது.
தமிழிசையைக் கேட்டு மகிழ்பவன் நான். தமிழ்மொழிக்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள், அதற்காகத் தமது இன்னுயிரையே இழந்தவர்கள், தமிழகத்தின் எல்லையைக் காக்கப் போராடியவர்கள், இப்படிப்பட்ட பெரியவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தமிழிசைக்காகப் பாடல்கள் இயற்றித் தந்த கவிஞர்களையும்-தாங்கள் ஒதுக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தும் அச்சப்படாமல் துணிந்து தமிழுக்குக் கடமையாற்ற வந்த கவிஞர் பெருமக்களையும்-இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தமிழிசையைக் காப்பதில் என்ன அவ்வளவு அக்கறை? இது தேவைதானா? என்று சிலர் கேட்கலாம். பண்டைத் தமிழிலக்கியத்திலேயே தமிழிசையின் பெருமை குறித்தும்-அதன் வளர்ச்சி குறித்தும்-பாடல்கள் உள்ளன என்ற செய்தியினைச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் குறிப்பிட்டதாக இங்கே தலைமை ஏற்கும் பெரியவர் கூறினார்.
அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழிசையை-செழுமை மிகுந்த தமிழிசையை மீண்டும் சொந்தம் கொண்டாட தமிழிசைச் சங்கம் 35 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம். எனவே, தமிழை-தமிழிசையைக் காப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை என்று கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இமயம் தோன்றாக்காலத்திற்கு முன்னரேயே குமரிக்கண்டம் இருந்தது என்ற வரலாற்றினை நாம் அறிகிறோம். அத்தகைய இமயம் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய தமிழக மக்களின் நாகரிகத்தை – பண்பாட்டை – கலாசாரத்தை-எல்லாத் தமிழக மக்களிடமும் பரப்பி இருக்கின்றோமா? என்பதையும் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
தமிழுக்குச் சிறப்புச் சேர்ப்பது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாகும். நாம் ரசிக்கின்ற-கேட்டு மகிழ்கின்ற நாத ஒலியை-இசையை-ஒழுங்குபடுத்தி, சீர்படுத்தி வெளிப்படுத்துகிறார்கள்.
வரிவடிவத்தில் உள்ள எழுத்துகள் வார்த்தைகளாகி, வாக்கியங்களாகி, பாடலாக-இசையாக-ஒலியாக-வெளிப்படுகின்றன. அது நாடகமாகவும், கூத்தாகவும் மாறி நடித்துக் காட்டப்படுகிறது. இந்த முறையில் பெரியவர்கள் முத்தமிழை வளர்த்தார்கள்.
தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள, கடமையாற்ற வேண்டிய பொறுப்பு அரசியலில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமல்ல, அறிஞர் பெருமக்களுக்கும் உண்டு.
நம்மால் மதிக்கப்படுகிற, சிலரால் சில காலங்களில் ஒதுக்கப்பட்ட இசைப்பேரரசு தண்டபாணி தேசிகர் அவர்களை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கின்றோம். தமிழிசை பாடியதற்காக அவரைச் சங்கீத வித்வான் என்று ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களும் உண்டு. சங்கீதத்திற்கும் தமிழிசைக்கும் சம்பந்தமில்லை என்று கூறியவர்களும் உண்டு.
தமிழிசை பாடிடும் வித்வான்கள் எல்லாம் இரண்டாம் தரம் என்று பேசியவர்களும் உண்டு. இப்படிப்பட்ட கருத்துகளைக் கேட்கின்ற நேரத்தில் நான் ஆத்திரப்பட்டதுகூட உண்டு.
இசை தமிழர்களுக்குப் புதுமையானது அல்ல! தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது இசை. இசையை இரவல் வாங்கிப் பாட வேண்டிய அளவிற்குத் தமிழர்கள் எந்தக் காலத்திலும் இருந்திருக்கவில்லை என்பதைத்தான் நமக்கு வரலாறு எடுத்துக் கூறுகிறது.
இங்கே சின்னஞ்சிறு இளவல்-இளந்தளிர்-நாதசுரம் இசையைத் திறமையாக வாசித்ததை அனைவரும் கேட்டு மகிழ்ந்து கைதட்டி வரவேற்றதைப் பார்த்தோம்.
நாதசுரம் இசையில் புலமை பெற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் இன்னார்தான் இந்த நாதசுரம் இசையை வாசிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. இன்று அந்த நிலைமை மாறிவிட்டது.
இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், தவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் – நாதசுரக் கலையில் நம்மால் பாராட்டப் பெற்றவர்கள் எல்லாம் கூட-பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிற நேரத்தில் இரவு முழுவதும் சுவாமி பல்லக்குக்கு முன்னே நாதசுரம் வாசித்ததை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் எல்லாம் தவிலைத் தூக்கிக்கொண்டு, நடந்து கொண்டே வாசித்து மக்களை மகிழ்வித்து இந்தக் கலையை வளர்த்த காலம் உண்டு. இன்று அந்த நிலைமை மாறிவிட்டது.
இப்போது, நாதசுரம் இசையை வளர்ப்பதில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் கூட இந்தத் தொழிலை மறந்து மற்றவர்களைப் போலத் தங்கள் பிள்ளைகளும் படித்துப் பட்டம் பெற்று வேலை பார்க்கின்ற நிலையில் வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
நாதசுரம் இசை, குலத்தொழில் ஆகக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துவதில் மற்றவர்களைப் போல நான் முன்னால் நிற்கிறேன்.நெஞ்சில் தொடங்கி, நாக்கில் தவழ்ந்து மூச்சை அடக்கி வெளிப்படும் நாதம்தான் நாதசுரம் , தங்கள் உயிர் மூச்சைத் தந்து மக்களை மகிழ்விக்கிற நாதசுரக் கலையைக் காப்பாற்றத் தமிழக அரசு விரும்புகிறது.
படிப்புக்குக் குந்தகம் ஏற்படாமல் நாதசுரக் கலையை முறையாகப் பயில ஆர்வமிக்கவர்கள் யார் முன் வந்தாலும் அவர்களுக்குத் தேவைப்படுகிற வசதியைத் தமிழக அரசு செய்து கொடுக்கும். அவர்களுக்கு மாதா மாதம் உதவித் தொகை ரூ.500/-க்குக் குறையாமல் கொடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதைப்போல, கோயில்களில் இசையின் மூலம் பக்தியைப் பரப்பி வந்த தேவார ஓதுவார்கள் இன்றைய தினம் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, கோயில்களில் ஓதுவார்கள் தமிழிசைமூலம் பக்தியைப் பரப்பினாலும் சரி “எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை,” “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கருத்தைப் பரப்பினாலும் சரி மக்கள் கோயில்களுக்குச் செல்லும்போது ‘தமிழ், தமிழ் என்ற இனிமையான ஒலி கேட்க வேண்டும்!’ என்ற ஆசை-பேரவா இந்த அரசுக்கு உண்டு!
எந்தெந்தக் கோயில்கள் என்று இல்லாமல், எல்லாக் கோயில்களிலும் நாத வெள்ளம் மக்கள் உள்ளத்தைக் கவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
1942-ஆம் ஆண்டு விக்டோரியா மெமோரியல் அரங்கில் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், செட்டி நாட்டு அரசரும், அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களும், மற்றும் பெரியவர்களும் தமிழிசையைப் பற்றி விவாதித்தார்கள். அப்பொழுது தமிழ் வளர தமிழ் இனம் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வலியுறுத்தினார்கள்.
புதிய புதிய பாடல்கள் தமிழிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது. சிறந்த புதிய தமிழ்ப்பாடல்களைப் புனையும் கவிஞர் பெருமக்களைப் பாராட்டி அவர்களை மகிழ்விக்கும் முறையில், இசை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அதன் மூலம் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுக்கும். அதனை இயற்றிய கவிஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கத் தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இசையில் எத்தனையோ இராகங்களை வைத்திருக்கிறார்கள். மேலும், புதிய புதிய இராகங்களைக் கண்டு, மக்களுக்கு அளித்து, இசையைச் செழுமைப்படுத்தவேண்டும் என்று இசைப் பேரறிஞர்களை கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
கர்நாடக சங்கீதத்தின் வரைமுறைகளை மீறாமல் புதிய இராகங்களைத் தருகிற இசைப் பேரறிஞர்களையும் இந்த அரசு ஊக்குவிக்க விரும்புகிறது.
இன்னொன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இசைக் கலையைப் பயில்கிறவர்கள் கல்வி பயிலாமல், இசைக் கலையை மட்டும் கற்பது என்றால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இசையைக் கற்கின்ற அதே நேரத்தில், மொழியை-அறிவியலை-வரலாற்றை-இலக்கியத்தைக் கற்க வேண்டும். இரண்டையும் சேர்த்து கற்கச் செய்யப் பெற்றோர்கள் அக்கறை காட்ட வேண்டும்.
எந்த நாட்டிலும் மொழிப்பற்று இல்லாதவர்கள் முன்னுக்கு வந்ததாக வரலாறு உண்டா? மொழி என்பது இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்த உணர்வாகும்.
மொழியைக் காப்பாற்றும் பணியில் நமக்கு எத்தனை எத்தனையோ சோதனைகள் ஏற்படலாம்! பலர் நம்மைக் குறை சொல்லலாம். ஆனால், நாம் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்தால், வருங்கால சந்ததி நம்மைப் பாராட்டத் தயங்காது என்பதையும் இங்கே கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
தமிழிசை வளர வேண்டும். அதன் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் பாடுபடுவீர்களேயானால்-போராடுவீர்களேயானால் உங்கள் பக்கம் தமிழக அரசு நிற்கும். தமிழ் மொழியை அழியவிட மாட்டோம். அதைப் பாதுகாப்போம். இது நம் அனைவரது கடமையாகும். இந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இதை நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று எல்லாத் துறைகளிலும் தமிழ் மொழி வளர நாம் பாடுபட வேண்டும்.’’ என்று தமிழிசையின் வளர்ச்சியை வலியுறுத்தி உரையாற்றினார்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் நினைவுகளை….
– ஔவை நடராசன்,
தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment