தின செய்தி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை
புறங்காட்டி ஓடாப் படை மறவர் ~ முனைவர் ஔவை ந.அருள்
பதிணென் கீழ்கணக்கு பாவள வரிசையின் நிறைவாக களவழி நாற்பதின் பாடல்கள் சிலவற்றின் போர்க்களச் சிறப்புகளின் வீரச் சுவையறிவோம்.
களவழி நாற்பது
அறிமுகவுரை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், புறப்பொருள் சார்ந்த நூல் களவழி நாற்பது. களவழி என்பது, ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடலாம் என்று ‘தொல்காப்பியம்’ கூறுகின்றது. இந்நூலானது, போர்க்களம் பற்றிய பாடல் தொகுதி.
பாடல்கள் அனைத்தும், ‘களத்து’ என்று முடிவதனாலும், போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையாலும் ‘களவழி’ என்றும், எண்ணிக்கை அளவினால் ‘நாற்பது’ என்றும் கொண்டு, ‘களவழி நாற்பது’ என்னும் பெயராயிற்று.
இந்நூலைப் பாடியவர், பொய்கையார் என்பவர், இப்பெயர், இயற்பெயரா காரணப் பெயரா என்று துணிவதற்கில்லை. காரணப் பெயராயின், ‘பொய்கை’ என்பதை நாட்டின் பெயராகவோ, ஊரின் பெயராகவோ கொள்ள இடமுண்டு. சேரன் பொருட்டாக இப்புலவர் பெருமான், ‘களவழி நாற்பது’ பாடுவதால், இவர் சேர நாட்டைச் சார்ந்தவராக இருக்கலாம்.
பொய்கையார், களவழி நாய்பது பாடிச் சேர மன்னனைச் சிறையினின்றும் விடுவித்தாரென, கலிங்கத்துப் பரணி, மூவருலா, தமிழ் விடு தூது முதலிய பிற்கால நூல்கள் அறிவிக்கின்றன.
யாப்பருங்கல விருத்தியுரையில், பொய்கையார் வாக்காகச் சில பாடல்கள், மேற்கோள்களாக எடுத்தாளப் பெற்றுள்ளன. பன்னிரு பாட்டியலில், பொய்கையார் பெயரால் சில நூற்பாக்கள் உள்ளன. கார் நாற்பதில், நாற்பது பாடல்கள் உள. இக்களவழி நாற்பதில், நாற்பத்தொரு பாடல்கள் உள்ளன என்பதுடன், மிகைப் பாடலாக ஒன்றும் காணப்படுகின்றது.
ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து. 3
மேகத்தின் முழக்கமென மாபெரும் வெற்றி முரசினை உடைய நிரைநீர் நாடனாகிய சோழன் செங்கணான், தனக்குத் தவறிழைத்தவரைக் கொன்று குவித்த செருக்களத்தில் புகுந்தவர், இறந்தவரின் குருதியைக் கலக்கிக் கடக்கவியலாமல் தளர்வர். பின்னர், மடிந்த களிறுகளின் கொம்புகளை ஊன்றிக்கொண்டு எழுவர்.
அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி,
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே – செங் கண்
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து. 7
சிவப்புக் கண்களையும் வரிகளையும் உடையவரால் மீன்கள் துள்ளுகின்ற காவிரியாறு பாயும் நாட்டையுடைய செங்கட்சோழன், தன் பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், கருமலையொத்த யானைகள், போர்க்களத்தில் கலக்கிக் குருதியில் நனைந்து, சாதிலிங்கக் குன்றுகள் போலத் தோன்றுமே.
பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது
ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின்
செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் – புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து. 10
நீர்வள மிக்க காவிரி நாடனாகிய சோழன் செங்கணான், பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், மிகுதியான அம்புகளும் எவ்விடங்களிலும் பாய்வதால், செல்லவியலாமல் தளர்ந்து வருந்துகின்ற களிறுகள் யாவுமே. அவையெல்லாம் பழைமைச் சிறப்பின் செம்மண் தோய்ந்த மலைகளைப் போலத் தோற்றமளிக்கும்.
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானைக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும் – செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து. 13
பேராற்றலாம் போராற்றலில் மிகச் சிறந்த சோழ மன்னன் செங்கணான், போரிட்டு வென்ற போர்க்களத்தில், நல்லொளி வீசுகின்ற நீண்ட கூர்வாளை நீட்டியவாறு, மலையென விளங்கும் யானையின் தும்பிக்கையைத் துண்டிக்க, அத்தும்பிக்கையானது, மலையின்மேல் இடு விழுந்த பாம்பெனப் புரளும்.
கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன்
வினை படு பள்ளியின் தோன்றுமே – செங் கண்
சின மால் பொருத களத்து. 15
சிவந்த கண்களுடன் சினங்கொண்ட கோச்செங்கட்சோழன் போர் செய்த களத்தில், எல்லாவிடங்களிலும் தேர்களின் குடைகளைச் சிதைத்துக் சொல்கின்ற யானைகள் புகுந்தவுடன், அவ்விடங்களில் எல்லாம் பிணங்கள் விளங்கவும், தச்சனின் தொழிற்பட்டறைபோல் அவ்விடங்கள் விளங்கும்.
இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்
சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற – புனல் நாடன்
நேராரை அட்ட களத்து. 20
நீர்வளங் கொண்ட நாடனாகிய செங்கட்சோழன், பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், கழுகுகள் தம்முடைய இரு சிறகுகளை விரித்து ஈர்க்குகளைப் பரப்பிக் குருதியுடன் பிணங்களைக் கவர்கின்ற தோற்றமானது, சலனமற்ற ஓசையுடைய முழவைப் பண்ணமைப்பவனைப் போல விளங்கியது. மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற – புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து. 25
நீர்வளம் மிகுந்த சோழ நாட்டையுடைய செங்கணான், பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், மலை வருந்த மலை மோதுவது போலப் பகைமன்னரின் யானைகள் நிலைகொள்ளாதவாறு தன்னுடைய யானைகள் மோதுவதால், அவற்றின் கொடிகளின் மேலெழுந்த தோற்றம், வானத்தைத் துடைப்பன போல தோன்றின.
செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற – புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து. 27
நீர்வளம் மிகுதியும் உடைய காவிரிச் சோழன் செங்கணான், தன் பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், குருதிச் சேற்றில் செல்கின்ற யானைகள் சினந்து மிதித்ததால், சிதறிக்கிடந்த குருதித்துளிகளெலாம் ஒருங்குகூடி நின்றிருந்தவை, சிவந்த மலர்களைக் கொண்ட நீர்க்குடத்தைப் போல விளங்கித் தோன்றின.
மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்-
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து. 30
செயலறாத வீரத்தையுடைய மார்ப்பினையும், சிவந்த கண்களையும், சினத்தையும் உடைய செங்கட்சோழன், பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், மலைகள் சரியுமாறு வீசி, அம்மலைகளை உருட்டிச் செல்லும் வெள்ளமெனப் பரந்துபட்ட ஒளிக்குருதி வெள்ளம், கொல்லப்பட்ட களிறுகளை அடித்துச் செல்லும்.
ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் – புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து. 31
நீர்வளச் சோனாட்டுச் செங்கணான், தன் மாற்றாரைக் கொன்ற போர்க்களத்தில், புறங்காட்டி ஓடாப் படை மறவர் வேல் வீசவும், நெற்றிப் பிளவுண்ட கொம்புடைய வீரக்களிறுகளின் மத்தகத்தில் பிணைந்த ஒளி வீசும் பட்டம், மேகத்தின் மின்னல் கீற்றுப் போலவே விளங்கும்.
அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற – புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து. 37
நீர்வளம் மிகுந்த சோழநாட்டுச் செங்கணான், தன் பகைவரை அழித்த போர்க்களத்தில், பிணங்களிலிருந்து சிந்திய குருதி வெள்ளமானது, முத்துடைக் கொம்பின் யானைகளை எல்லாப் பக்கங்களிலும் இழுக்க, அவை கடலில் மிதக்கின்ற தோணிகளைப் போலவே விளங்கின.
வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த – பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து. 40
வேல்கள் பலவற்றையும், முரசு முழங்கும் போர்ப்படைகளையும், சிவந்த கண்களையும் உடைய சோழ மன்னன் செங்கணான் அம்புமழை பெய்த போர்க்களத்தில், வெள்ளிக் கலப்பையால் நிலத்தை உழுவது போல், எல்லாக் களிறுகளும் முகங்களைப் புதைத்து, நிலத்தைச் சென்றடைந்தன.
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர்,
மொழி பெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment