தினசெய்தி நாளிதழில் இன்று (24.02.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 23)
‘‘திருக்குறளைப் பரப்புவதுதான் தமிழர்களின் கடமை..!’’
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
=========================================
உலகப் பொதுமறையாம் திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் அளப்பரிய பற்றுதல் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கேள்வி வழியாகவும் பலரோடு பழகும்போதும் நாடக உலகத்திலிருந்தே உரையாடல் எழுதிக் கொடுத்த ஆசிரியர்கள் மூலமும் திருக்குறளை அவ்வப்போது கேட்டுத் தெரிந்திருக்கிறேன், பேரறிஞர் அண்ணா எப்போது பேசினாலும் – எது நிகழ்ந்தாலும் பொருத்தமாகத் திருக்குறள் அகப்படும் இல்லையென்றால் – தக்க திருக்குறளை நாம் பொருத்திக்கொண்டு சிறப்படையலாம் என்று ஒரு முறை கூறினார்கள். அதனால் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் திருக்குறள் தெரிந்தவர்களைப் பொருத்தமானத் திருக்குறளைச் சொல்லிக் காட்டுங்கள் என்று கேட்பதை புரட்சித்தலைவர் வழக்கமாக வைத்திருந்தார்.
முன்னரே ஒருமுறை விண்வெளி வீரர்கள் வந்திருந்தபோது நான் எடுத்துக்காட்டிய திருக்குறளைப் பாராட்டி மகிழ்ந்ததை எழுதியிருக்கிறேன். எப்போதும் அழகான பொன்னட்டை பொலியும் திருக்குறளை அயல்மாநிலத்தவர் – அயல்நாட்டினர் விருந்தினராக வரும்போது பரிசாக வழங்குவார். அவ்வப்போது, பொருத்தமான இடத்தில் பொதுமறையிலிருந்து பொருந்தும் திருக்குறளை அடிக்கோடிட்டு படிக்கச் சொல்லிக் கேட்பார்.
புரட்சித்தலைவியாரை நினைவுகூரும் அவரது பிறந்தநாளான இந்நாளில் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும். அவர் கையில் வைத்திருந்த திருக்குறள் ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பாகும். எதிர்பாராமல் நடந்த ஒரு அலுவலகக் கூட்டத்தில் திடீரென்று திருக்குறளை எடுத்து நூலிழை செருகியிருந்த ஒரு பக்கத்தின் ஒரு குறளைப் படிக்கச் சொன்னார்.
“இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்”
“HUMAN’S FRAME IS SORROW’S TARGET – THE NOBLE MIND REFLECTS
NOR MEETS WITH TROUBLED MIND – THE SORROW IT EXPECTS”
என்பதைக் கேட்டு MAN என்பதை HUMAN என்று மாற்றியது உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது என்று கூறினார்கள். அந்தத் திருக்குறள் அவர் வாழ்வின் வரைபடமாகும். ஓராண்டு கழித்துத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முகப்பில் திருவள்ளுவர் சிலை நிறுவ உடனே இசைந்தது குறிக்கத்தக்கது.
குடந்தையில் வாழ்ந்த ஆயர் வளமனையின் திருத்தந்தையைப் பார்த்து, அவர் ரோம் செல்கிற போது இத்தாலியச் சிற்பியைக் கொண்டு திருவள்ளுவருக்கு ஒரு பளிங்குக்கல் படிமத்தை வடிக்கச்செய்து எங்களுக்கு வழங்குங்கள் என்று வேண்டியிருந்தேன் அவ்வாறு பெற்றும் வந்தார். அதனைப் பயன் கொள்ள முடியாமல் போனது பற்றி முன்னொருமுறை எழுதினேன். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முகப்பில் இன்றும் புரட்சித்தலைவியார் நிறுவிய திருவள்ளுவர் சிலை பொலிவாக உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் பொன்மனச் செம்மல் ஆற்றிய பொதுவான உரை அரசியல் களத்திலும் பொதுத் தளத்திலும் பாராட்டைப் பெற்றது. அவ்வுரையில் அவர் குறிப்பிட்டு ஆற்றிய அத்தனை கருத்துகளும் அங்குமிங்குமாகச் சென்று திருக்குறளின் பெருமையை நிலைநாட்ட விரும்பியனவாகும். எல்லா நூல்களிலும் நல்லனவற்றை எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு என்ற பரிமேலழகரின் குறிப்பு எப்போதும் அவர் பேச்சில் இழையோடியபடி இருக்கும்.
இனி அவர் ஆற்றிய உரைவடிவத்தைக் காணலாம்:
‘‘இன்றைக்கு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவள்ளுவர் திருநாள் நமக்கெல்லாம் மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. கட்சிச் சார்பற்ற முறையில், அரசியல் சார்பில்லாத நிலையில் நடைபெறும் இந்த நல்ல விழாவில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கக் காரணமாயிருந்த கலைஞர் கருணாநிதி அவர்களைப் பாராட்டுகிறேன். குறைகள் – தவறுகள் நடந்திருக்கலாம். இப்படிப்பட்ட திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாட வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டதற்கும் அதற்குக் காரணமானவர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது எனது கடமை என்று கருதுகிறேன்.
உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் வள்ளுவருக்குக் கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். அண்ணா அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில்தான் இங்கு வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது.
இங்கே நடைபெறும் இந்த விழா தமிழர் திருநாள் விழா, தமிழ் மொழிக்கும் – தமிழகத்திற்கும் சிறப்புச் சேர்க்கும் திருநாள், உலக மக்கள் அனைவரும் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துத்தந்த திருவள்ளுவரைத் தமிழகத்திற்குச் சொந்தமாக்கிடச் சென்னையில் மட்டும் விழா எடுத்தால் போதாது.
தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் ஊராட்சிகள், நகராட்சிகள், அரசுக்குச் சொந்தமான அமைப்புகள்-ஏன், பட்டி தொட்டிகள் எங்கும் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் உத்தரவே பிறப்பித்து இருக்கிறோம்.
திருவள்ளுவருக்கு – திருக்குறளுக்குச் சிறப்புச் சேர்க்க எண்ணுகிற அதே நேரத்தில், சென்னை நகரில் மட்டும் இந்த விழா நடைபெற்றால் இங்கே கூறப்படுகிற சில செய்திகள் மட்டும் பத்திரிகைகளில் வெளியாகும். முழுமையான கருத்தைத் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்கள் அறிந்து கொள்ள முடியாது. எனவே, தமிழகம் எல்லாம், தமிழர்கள் வாழும் இடமெல்லாம் திருவள்ளுவர் திருநாளை நடத்தி, அதில் அறிஞர் பெருமக்களைப் பங்கு பெறச்செய்து, திருக்குறளின் பெருமையைப் பரப்ப வேண்டும் என்பதுதான் எங்களது பேரவா.
அமெரிக்காவில் உள்ள தமிழர்கள், பாரிசில் உள்ள தமிழர்கள், அல்ஜீரியாவில் உள்ள தமிழர்கள் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாட முடியும். திருவள்ளுவரைத் தமிழர்கள் உரிமை கொண்டாடினாலும், உலகம் முழுவதிலும் உள்ள நன் மக்கள் அனைவருக்கும் திருவள்ளுவருக்கு விழா எடுக்க உரிமை உண்டு.
இங்கே அறிஞர் பெருமக்கள் – கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. புலவர் பெருமக்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. அதை உதவித்தொகை என்று சொல்ல மாட்டேன் காணிக்கை என்றுதான் சொல்வேன்.
இங்கே வழங்கப்பட்ட உதவித்தொகை நன்றாக வாழ்வதற்குப் போதுமானதா என்று கேட்கக் கூடும். நன்றாக வாழ்வதற்குப் போதுமானது இல்லைதான். அடையாளமாக – ஆரம்ப கட்டமாக – இந்த உதவித் தொகையை வழங்க முனைந்துள்ளோம். நிதி நிலைமை சீரானவுடன் போதுமான அளவிற்கு உதவித்தொகையை உயர்த்துவோம்.
தமிழ் கற்ற – தமிழைப் பரப்புகிற – புலவர்கள் ஏழ்மையில் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற சமுதாய அமைப்பு இனி இருக்குமானால் அதை மாற்றி அமைக்க இந்த அரசு பாடுபடும். தமிழ் கற்ற புலவர்களின் குடும்பமும் – சுற்றுச் சார்பும்-மகிழ்ச்சியோடு இருக்க நாங்கள் பாடுபடுவோம்.
தமிழ் கற்றவர்களுக்கு-தமிழுக்குச் சொந்தக்காரர்களுக்கு – முதலிடம் அளிக்கப்படும். அப்படி அளிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். அத்தகைய நிலை வர வேண்டும். தமிழ் கற்றவர்களுக்கு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை.
தமிழ் மொழியில் இலக்கியத்தை-வரலாற்றை-அறிவியலை-கணிதத்தை கற்றுக் கொடுக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும். “எங்கும் தமிழ்-எதிலும் தமிழ்” என்ற நிலை வர வேண்டும். நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாம் கூறியதை மறந்து விடவில்லை.
அறிஞர் பெருமக்களுக்கு இங்கே ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட தொகை சிறு தொகைதான். அப்போது அவர்கள் முகத்தைக் கவனித்தேன். அவர்கள் முகம் மலர்ந்திருந்தது. வழங்கப்படும் தொகை காரணமாக அவர்கள் முகம் மலரவில்லை. நம்மையும் மதிக்கிறார்களே என்றுதான் அவர்கள் பெருமிதப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ் படித்தவர்கள்- தமிழை வளர்ப்பவர்கள்-வீட்டிலே கண் கலங்காமல் இருக்கும் நிலை உருவானால்தான், தமிழ் கற்ற அறிஞர்களுக்கு நாம் உரிய மரியாதையை அளித்திருக்கிறோம் என்று அர்த்தம்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – எதையும் தாங்கும் இதயம் இருந்தாக வேண்டும்” என்ற உறுதிப்பாட்டோடு கடமையாற்றி வருகிறோம். நம் உள்ளத்தைப் புண்படுத்தி, வேதனைப்படுத்தும் அளவிற்கு மற்றவர்கள் இகழ்ந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களிடம் எதைச் சொல்லி இங்கே வந்தோமோ அதை நினைத்து, அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றும் கடமை உணர்வோடு-பொறுமையோடு-செயல்பட்டு வருகிறோம்.
மக்கள் எங்களிடத்தில் அதிகாரத்தை அளித்திருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குத் துணையாக நிற்கிறார்கள். மக்கள் அளித்த அந்த அதிகாரத்தைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவோ கோபதாபத்திற்காகவோ பயன்படுத்துவது எவ்வளவு தவறானது என்பது எங்களுக்குத் தெரியும். பொறுப்பு அதிகம் ஆக ஆக, பொறுமையை அதிகமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரிசைப்படுத்தி-வகைப்படுத்தி-அறிவுரை புகன்ற ஒரு மாபெரும் புலவரைப் பற்றிய வரலாற்றினைச் சரியாக-முறையாக-நாம் தெரிந்துகொள்ள முடியவில்லை.
தமிழகத்தின் உண்மையான வரலாற்றைத் தமிழ் அறிஞர்கள்-வரலாற்று ஆசிரியர்கள்-உருவாக்க முனைய வேண்டும். இரண்டாயிரம் ஆண்டு தமிழகத்தின் வரலாற்றைப் படைக்க முடியாவிட்டாலும், முதலில், தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றையாவது உருவாக்க முயலவேண்டும் என்று அறிஞர் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தின் உண்மையான வரலாற்றைத் தயாரிக்க முனையும் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழக அரசு எல்லா வித உதவிகளையும் செய்யும். 5 ஆண்டுக் காலமோ அல்லது 10 ஆண்டுக் காலமோ பிடித்தாலும் நமது எதிர்காலச் சந்ததியினர் அறியும் வண்ணம் தமிழகத்தின் உண்மையான வரலாற்றினை நாம் தயாரித்தாக வேண்டும். குமரிக் கண்டம் இருந்த காலம் தொட்டுத் தமிழக வரலாற்றை அறிய நாம் விரும்புகிறோம். நமது வரலாறு, தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு, இன்னா நாற்பது என்று பெருமையாகப் பேசலாம்.
இலக்கியம் தந்தவர்களை – அதற்கு வரைமுறை ஏற்படுத்தித் தந்தவர்களை – இலக்கணம் – நிகண்டு தந்தவர்களை நாம் மறக்கப் போவதில்லை. ஆனால், தமிழகத்தின் முந்தைய கால வரலாறு முழுமையாக இதுவரை இல்லை. அதை உருவாக்குவதில் தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியைப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ் வளர, வளர-உயர, உயர-இந்த நாடு செழிக்கும் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மழை நீர் பூமிக்கு வந்து சேரும்போது நல்ல நீராகத்தான் வருகிறது. அது பூமிக்கு வந்தவுடன் எந்த மண்ணில் அந்த நீர் படுகிறதோ, அதற்கு ஏற்ப அந்த நீரின் நிறமும், தன்மையும் மாறுகிறது. அதுபோல ஓர் அரசியல் கட்சியின் கொள்கை நல்ல கொள்கையாக இருக்கலாம். ஆனால், அந்த அரசியல் கட்சி சேருகிற இடத்திற்கு ஏற்ப அதன் கொள்கைகள் அமைகின்றன. ஒரு மனிதனுக்கு நல்ல எண்ணம் வேண்டும். எப்போதும் கொள்கைப் பசி இருக்க வேண்டும். நல்ல குறிக்கோளும், இலட்சியமும் இருக்க வேண்டும். தன்னை எடைபோட்டுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் எதிரியையும் எடைபோட மறந்து விடக்கூடாது. மாற்றான் வலிமையை எடைபோடத் தெரியாதவன் ஏமாறுகிறான்.
இலக்கியத்தை, இசையை, கலையை, நாட்டியத்தை, வரலாற்றை, அறிவியலை, சட்ட நுணுக்கத்தை வளர்க்க ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்க இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் ஒரே தொடராக எல்லாவற்றையும் சொல்வதென்றால் அது திருக்குறளின் சாரமாகும். திருக்குறள் நமது கண்ணாடி – நாள்தோறும் நாம் நம்மைப் பார்த்து திருத்திக்கொள்வோம். திருக்குறள் தான் நமது அடையாளம் – எங்கும் பரப்புவோம். திருக்குறள் வாழ்க!
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை….
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment