மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..!
============================================
(பகுதி – 25)
‘‘உயிரைக் காக்க உதவுவோம்!’’
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் மக்கள் நலவாழ்வில் மிகப்பெரிய அக்கறை கொண்ட உருக்க உணர்ச்சி உடையவர். உடற்பயிற்சி செய்யும் குழுவோடு, தான் பங்குகொண்ட போது புலவர் காமாட்சிநாதன் என்னும் மற்போர் மாவீரனாகத் திகழ்ந்தவரோடு இணையாகப் பயிற்சி செய்வார்.
ஒரு முறை 500 தண்டால் எடுக்க முடியுமா என்று வாதிட்டு உடன் இருந்தவர்களை எல்லாம் சாய்த்து விட்டு வென்ற மகத்தான சமர் வீரர் என்று புரட்சித்தலைவரைப் புகழ்ந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.
புய வலிவோடு போராண்மை கொண்டிருந்த காமாட்சிநாதன் தமிழார்வம் காட்டியதற்காக அவரைப் புலவராக்கியது புரட்சித்தலைவர்தான். வாழ்வின் நிறைவில் வள்ளலார் பிள்ளைத்தமிழ் பாடினார் புலவர் காமாட்சிநாதன்.
‘‘மல்லரொடு விளையாடி மாங்குளத்தில் திரிந்த என்னை
நல்லுறவு காட்டி நற்புலவன் ஆக்கி வைத்தாய்
சொல்லரிய புகழாளன் சூழ்வையம் ஆள்பவன் காண்’’ –
என்று கண்ணீர் மல்கப் புலவர் காமாட்சிநாதன் கூறிய உரைகள் கல்வெட்டுத் தொடர்களாகும்.
ஒருநாள் காய்ச்சல் வந்தாலும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாமல் தன் உடல்நலனைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று அனைவரையும் கடிந்துரைப்பார் எம்.ஜி.ஆர்.
எளிய மக்களுக்கு எந்த நேரத்திலும் நல் மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட ஒப்பற்றவர் டாக்டர் ஹண்டே. இன்றும் கூட தொண்ணூறு வயது நிறைந்த நிலையில் கூட அமைந்தகரை மக்கள் தம் கண்கண்ட தெய்வமாக டாக்டர் ஹண்டேவைப் புகழ்வார்கள்.
எவ்வளவு பொதுநிகழ்ச்சிகள் இருந்தாலும், இரவு நேரத்தில் எத்தனை மணியானாலும் நோயாளிகளைக் கண்டு செல்ல அவர் தவறுவதேயில்லை. டாக்டர் ஹண்டே அவர்களை எம்.ஜி.ஆர்., மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கி நாள்தோறும் அவரிடம் மக்கள் நல்வாழ்வுப் பற்றிப் பேசி வந்ததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
டாக்டர் ஹண்டே அவர்களிடத்தில் தமது எண்ணங்களைச் சொல்லி எழுத்து வடிவமாக்கி அந்தக் கட்டுரையை டாக்டர் ஹண்டே அவர்களையே தொலைக்காட்சியில் உரையாற்றுமாறு செய்தார் எம்.ஜி.ஆர்.
அந்த நல்லுரை இதோ உங்களுக்காக…
‘‘இன்று நாகரிகம் என்னும் பெயரில் நாம் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் , உண்ணும் உணவு யாவும் , நம் உடல் நலத்தைப் பாதுகாக்கத்தக்கதாக இல்லை. சத்தில்லாத உணவை உண்ணுகிறோம். காபி, டீ போன்ற கேடு விளைவிக்கும் பானங்கள் அருந்துகிறோம். சிலர் புகைப்பிடிக்கிறார்கள். இவை நமது உடல் நலத்தைச் சிறிது சிறிதாகக் கெடச் செய்து, நம்மை நோய்க்கு இருப்பிடமாகச் செய்து விடுகிறது. உடற்பயிற்சி என்பது நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அம்சமாக இல்லை. இப்படிப்பட்ட இயந்திர வாழ்க்கையில் இன்று மனித இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் கொடிய நோய் காச நோய்.
உலக நாடுகள் இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் முனைந்து செயல்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன. நமது இந்தியத் துணைக் கண்டத்தில் காசநோய் ஒரு பெரிய ஆட்கொல்லியாக இருந்து வருகிறது. அறுபத்து மூன்று கோடி மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் சுமார் 99 இலட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறது. அதாவது ஆயிரம் பேர்களில் பதினைந்து பேர் காச நோயாளிகள். இந்த 90 இலட்சம் பேர்களில் 25 இலட்சம் பேர், பிறருக்கும் இந்த நோயைத் தொற்றவைக்கும் நிலையில் உள்ளனர்.
இந்தியத் துணைக் கண்டத்தில் காசநோய் காரணமாக ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் மக்கள் சாவைத் தழுவுகின்றனர். தமிழகத்தின் 4 கோடி மக்களில் 10 இலட்சம் பேர் காசநோய்க்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களில் 2 இலட்சம் பேர், முழு காச நோயாளிகளாக உள்ளனர். இது மகிழ்ச்சித் தரத்தக்க ஒன்றல்ல. பல துறைகளில் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் மனித இனத்தின் வளத்துக்காகவும் பாடுபட்டு வரும் இந்நேரத்தில், மக்களில் ஒரு பகுதியினர் காசநோயால் அவதியுற்று வருவது பெரிதும் வேதனைக்குரிய செய்தியாகும். எனவே, இந்த நிலையை மாற்றியே தீரவேண்டும். போர் முனைப்புடனும், தற்காப்பு உணர்வுடனும், நாம் அனைவரும் செயல்பட்டு நமது மக்களை, இந்தக் கொடிய நோயின் பிடியிலிருந்து, விடுவித்தாக வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், காச நோய் நிலையங்கள் ஆகியவற்றில் இந்த நோயுற்றவர்களுக்கு இலவசச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்படி சுமார் 9 இலட்சம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள். தமிழகத்தில் காசநோயால் ஆண்டுதோறும் நாற்பத்தைந்தாயிரம் ( 45,000 ) உயிரிழப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.
ஒரு காலத்தில் காசநோய், தீராத வியாதி என்ற நிலையிருந்தது. இன்று அந்த நிலை மாறிவிட்டது. அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் இந்நோயை எந்தக் கட்டத்திலும் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இப்பொழுது இந்த நோய்க்கிருமிகளை மனித உடலில் இருந்து விரட்டி, அழித்து, நோயை அறவே குணப்படுத்தி விட முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், நோய் வராமல் தடுத்திடவும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன.
இப்பிரச்சினையை நாடு தழுவிய வகையில் அணுகி, நமது முயற்சிகளை முறைப்படுத்தி, ஆவன செய்ய இந்திய அரசு 1962ஆம் ஆண்டில் சிறந்த திட்டமொன்றை வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது. காசநோயால் பீடிக்கப்படாதவர்களை, அந்நோய்களுக்கு ஆளாகாமல் தடுப்பது, ஏற்கெனவே நோய் தொற்றியிருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தக்க சிகிச்சை அளித்து நோயைத் தீர்க்கும் தீவிரப் பணியில் ஈடுபடுவது ஆகிய இரண்டு செயற்பாடுகளும் அத்திட்டத்தின் அடிப்படை அம்சங்களாகும்.
காச நோயாளிகளைக் கண்டுபிடித்து, சிகிச்சையளித்து அவர்களைக் குணப்படுத்துவதன் மூலம் அவர்கள் நலம் பெறுவதோடு, அவர்களால் பிறருக்கு நோய் தொற்றக்கூடிய அபாயமும் அகற்றப்படுகிறது. ஏனெனில் ஒரு காச நோயாளி மூலம்தான், அந்நோய் பிறருக்குப் பரவுகிறது. காசநோயாளி இருமும் போதும், தும்மும் போதும் எண்ணற்ற காசநோய்க் கிருமிகள் வெளிப்பட்டு, காற்றில் கலந்து அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும் போது அவர்களது உடம்பிலும் தொற்றிவிடுகிறது. இருக்கும் வரையில் சமுதாயம் இந்த நோயின் ஆபத்திலிருந்து நீங்கிவிட்டதாகக் கொள்ள முடியாது. இதை நாம் அனைவரும் உணர வேண்டும். நகரங்களில் வாழ்வோரும், கிராமங்களில் வாழ்வோரும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், இந்த நோயின் தன்மை பற்றிய உண்மைகளை உணர்ந்து கொள்ளும் வகையில், விரிவான, விரைவான பிரசாரம் செய்யப்பட வேண்டும். இந்தப் பணியைக் காசநோய்க் கழகம் முழு மூச்சுடன் செய்ய வேண்டும்.
காசநோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கித்தான் சிகிச்சை பெற வேண்டுமென்பதில்லை. அவரவர்களின் இல்லங்களில் இருந்துகொண்டே, மருத்துவ ஆலோசனைகளை அவ்வப்போது பெற்று மருந்துகளை வேளை தவறாமல் முறையாகப் பயன்படுத்தி வந்தால் எளிதில் குணம் அடையலாம். தொடர்ச்சியான ஓய்வோ, உயர்ரக உணவோ தேவையில்லை. சாதாணமாகக் கிடைக்கும் சத்துள்ள உணவுகளே போதுமானதென்று ஆராய்ச்சியின் பயனாய்க் கண்டறிந்துள்ளார்கள். இந்த விவரங்களைப் பாமர மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டும்.
காசநோய் சிகிச்சை சாதாரண மனிதனின் கைக்கு எட்டாத ஒன்று என்ற நிலை, இப்போது இல்லை என்பதையும், ஏழை எளியவர்களும் தக்க சிகிச்சையை எளிதாகப் பெற்று சிரமமின்றிக் குணம் அடையலாம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த அரிய பணியில் காசநோய்க் கழகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வருவது பாராட்டுக்குரியது.
1939ஆம் ஆண்டில் இந்திய காசநோய்க் கழகம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு காசநோய்க் கழகமும் தொடங்கப்பெற்று சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. 1950 முதல் 1979 வரை இக்கழகம், காசநோய் முத்திரை 10 பைசா, 20 பைசா வில்லைகள் விற்பனையின் மூலம் ரூ.95 இலட்சம் வரை திரட்டியுள்ளது.
இந்தப் பணம் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த காசநோயாளிகளுக்குச் சிகிச்சைக்காகப் பொருளுதவி புரியவும், காசநோய் மருத்துவ நிலையங்கள், சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை அமைக்கவும், விரிவாக்கவும், சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான எக்ஸ்ரே போன்ற கருவிகள் வழங்கவும் காசநோய் பற்றிய விவரங்களைப் பொதுமக்களிடையே திரைப்படம், விளம்பரங்கள் மூலமாகப் பிரசாரம் செய்து பரப்புவதற்காகவும், காசநோய்க் கழகத்தால் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய தன்னியக்க நிறுவனம் ஒன்று தனித்து நின்று, இரக்கத்திற்குரியவர்களைப் பிணியிலிருந்து காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்வளிக்கும் சீரிய பணியில் ஈடுபட்டிருப்பது, போற்றிப் பாராட்டத்தக்க அரிய செயலாகும். எனவே, இக்கழகம் ஆற்றிவரும் அரும்பணியில் அதற்குத் துணை நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். காசநோய்த் தடுப்பு முத்திரை வில்லைகளை 20 காசு கொடுத்து வாங்குவதன் மூலம் இந்த நோயால் அழியும் மனித உயிரைக் காப்பாற்ற நமக்குரிய சிறிய பங்கைச் செய்கிறோம் என்ற உணர்வினை நாம் அனைவரும் பெறவேண்டும். பெரிய தொகைகளைத்தான் அளிக்க வேண்டுமென்பதில்லை. சிறு தொகைகளே போதும்.
நாலரைக் கோடி தமிழக மக்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் தங்கள் பங்கைச் செய்தால், இக்கழகத்திற்குக் கணிசமான தொகை கிடைக்கும். கேளிக்கைக்காகவும், காபி, டீ, அருந்துவதற்கும், புகை பிடிப்பதற்கும், வெற்றிலை போடுவதற்காகவும் ஒவ்வொருவரும் எவ்வளவோ செலவிடுகிறீர்கள். ஒரு சிறிய தொகையைக் காசநோய்க் கழகத்துக்கு வழங்குவது உங்களுக்குச் சிரமமில்லை. எனவே, இந்தப் பணியில், இந்த விற்பனை இயக்கத்தில் உங்களது சிறிய பங்கைச் செய்யுமாறு உங்களனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் சிறிய தொகை உங்கள் உடன் பிறப்புகளின் உயிரைக் காக்க உதவுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள மாநில – மாவட்ட காசநோய்த் தடுப்பு கழகத்தார் அயராது பணியாற்றி, இப்பணியில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன்னணியில் நின்று, கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிக் கேடயத்தை ஈட்டித் தந்துள்ளார். எனவே, காசநோய்க் கழகத்தாரும், அவர்களது வெற்றிக்குக் காரணமாயிருந்து வந்துள்ள உங்களனைவருக்கும் என் நன்றியைக் கூறி இக்கழகம் தனது பணியில் தொடர்ந்து வெற்றி பெற உங்களது முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment