POST: 2020-03-21T09:47:36+05:30

நேற்றைய நினைவு…
=====================

காற்று
வாங்கப்
போனேன்.

கவிஞர், வழக்கறிஞர்,
வானவில் கே. இரவியின் தமிழ்ப்படைப்புகள்

——-

சுகி சிவமும் நானும் எங்கள் கல்லூரி நாட்களில் இரசித்துப் படித்துக் கொண்டிருந்த கவிஞர்களில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கே முதலிடம். அதற்குக் காரணமாக இருந்தவர் திரு. ஔவை நடராசன்.

சுரதாவின் கவிதைகளை, கம்பாசிடர் கவிதைகள் என்று திரு.சோ அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்துவிட்டார். அந்த விமர்சனத்துக்கு ஓர் அருமையான கவிதை மூலம் சுரதாவே விடைசொல்லியிருந்தார். அந்தக் கவிதையின் நிறைவு வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய வரிகள்.

“மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை.”

நான் ஒரு பெரிய மனிதன் என்ற நம்பிக்கை வந்து விட்டது. சுரதா, ஔவை நடராசன், இசைக்கவி இரமணன், வா.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும் ஒரு பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு இத்தொடரைத் தொடருகிறேன்.

சோவுக்கு பதில் சொல்வதாக, சுகி சிவம் எழுதிய கவிதைதான்,

“எலி தாக்கிப் புலியிங்கே வீழ்வதில்லை.
எருக்கம்பூ தாமரையாய் ஆவதில்லை.” என்பதாகும்.

இந்தக் கவிதையை நான் பாராட்டினேன். படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஔவை நடராசனும் முதலில் பாராட்டினார். பிறகு சிவத்தையும் என்னையும் தனியே அழைத்துச் சொன்னார்.

“ராஜா, கோபுர மதிற்சுவரை மாடுமுட்டுவது இயற்கையாக அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இப்படி இயல்பான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு, மாடு முட்டும். ஆனாலும், கோபுரம் சாய்வதில்லை என்கிறார் சுரதா. அதுபோல், கூழாங்கல் மாணிக்கம் ஆவது இயற்கையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆனால், மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை என்கிறார் சுரதா. இப்பப் பாரு ராஜா. எலி போய்ப் புலியைத் தாக்கும் நிகழ்ச்சி எங்கேயாவது நடக்குமா? இல்லை, எருக்கம்பூ தாமரையாவோ, தாமரை எருக்கம்பூவாவோ ஆவதுண்டா? யோசிச்சுப் பாருங்க, அப்பத்தான் சுரதாவின் உவமைகள் எவ்வளவு யதார்த்தமானவை என்பதும், அர்த்தம் பொதிந்தவை என்பதும் புரியும்.” என்று அவர் அருமையாகப் பாடம் எடுத்த லாவகம் எங்கள் மனத்தில் அப்படியே பதிந்து விட்டது.

மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது, சிகாமணியில்லாமல் மனோன்மணி மட்டும் பிரயோசனமில்லையென்று. சிகா-மனோ உறவில்தான் கவிதை மலர வாய்ப்புண்டாகிறது என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கியது.

அந்த உறவை அற்புதமாகப் பிரதிபலிக்கும் இன்னொரு கவிதை எழுந்த வரலாற்றை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அந்த வரலாற்று நாயகரும் ஔவை நடராசன்தான்.

எங்கள் கல்லூரி நாட்களில், சிவமும் நானும் ஔவையுடன் அதிக நேரம் உடனிருப்போம். பெரும்பாலும், அப்போதெல்லாம் அவரோடு எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாம். அவர், ‘சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்’ என்று முனைவர் பட்டத்துக்காக ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அதற்கு ஓரளவு உறுதுணையாக இருந்த பெருமைக்கு நாங்கள் இருவரும் உரியவர்கள் ஆனோம். ஒருசில நாங்கள் ஔவையோடு சுற்றிக் கொண்டிருந்ததைக் கடுமையாக விமர்சனம் செய்யும் அளவிற்கு நாங்கள் நெருக்கமாகக் காணப்பட்டோம்.

சிறிது காலத்திற்குப் பிறகு, எங்கள் படிப்பு, குடும்பம் என்ற பணிகள் காரணமாகவோ என்னவோ சிவமும், நானும் ஔவையை அடிக்கடி சந்திக்க முடியாமற் போய் விட்டது. பல மாத இடைவெளிக்குப் பிறகு, ஒரு கூட்டத்தில் ஔவை மேடையில் வீற்றிருந்தார். நான் பார்வையாளனாக அரங்கில் சென்றமர்ந்தேன். அப்போது, அவர் என்னைப் பார்த்துவிட்டு ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி அனுப்பினார். பிரித்தேன். படித்தேன், நெகிழ்ந்தேன். அந்த்த் துண்டுக் காகிதத்தில் நாலு வரிகள், அமர வரிகள், எழுதப்பட்டிருந்தன;

“ஊரார் அலர் உரைக்கக் கேட்டு – நீ
உள்ளம் வெதுப்புறலாமா
ஆரார் எதுசொன்ன போதும்
யாழா முழவோடு மோதும். ”

சற்று நேரம், சிலையாகிவிட்டேன். யாழும் முழவும் மோதிக் கொள்ளலாமா? சுருதியும், லயமும் இணைந்தால்தானே சங்கீதம்! எவ்வளவு பொருத்தமான ஓர் உருவகத்தை, எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார்! அதுவரை அவர் எழுதியதாக எந்தக் கவிதையையும் அவர் எங்களிடம் படித்த்தில்லை, காட்டியதில்லை. ஏதாவது கவிதை அதற்குமுன் எழுதினாரா என்றே தெரியவில்லை. அதற்குப் பிறகும் அவர் கவிதை எழுதியதாகத் தெரியவில்லை. ஒரே பாடலால், காலங்கடந்து வாழும் காக்கைப் பாடினியார், செம்புலப்பெயல் நீரார் போன்ற மிக உயர்ந்த புலவர்கள் வரிசையில் இந்த யாழ்முழவார் சேர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

தந்தையினும் கழிகூரத்தழுவி சிவத்தையும் என்னையும் தமிழிலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்தியவர் டாக்டர் ஔவை நடராசன்.

சிந்தனைக் கோட்டம் செயலற்றவுடன், திரு ஔவை நடராசனின், நல்யோசனையின்படி ‘வானவில்’ என்று ஒரு கட்டமைப்பில்லாத, அதாவது, ஆங்கிலத்தில் informal என்பார்களே அப்படியோர் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதில் ஒவ்வொரு மாதமும், ஓர் இலக்கிய ஜாம்பவானை அழைத்துப் பேசச்சொல்லிக் கேட்பது என்று 1971-ஆம் ஆண்டு முடிவு செய்தோம். மீண்டும் அதே பழைய ‘வானவில்லையே’ 1994-ஆம் ஆண்டில் பிறந்ததுதான் ‘வானவில் பண்பாட்டு மையம்’.

1986-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி பாரதி விழா மூன்றாவது ஆண்டு சென்னை மியூசிக் அகாதமி பிரதானக் கூடத்தில் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அதில் பாரதி விருது வழங்க இரண்டு பேரைத் தேர்வுசெய்து விட்டோம். ஒருவர், பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் நிறுவனர், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி. இன்னொருவர், அப்போது புதுதில்லியில் மிக முக்கியமான அரசு அலுவலராகயிருந்தார். அவர்தான், அப்துல் கலாம். அவர் என்னிடம், நான் பாரதி பக்தன். மேலும் உங்கள் விழாக்குழுத் தலைவர் செம்மங்குடி சீனிவாச அய்யரின் அபிமானி என்று நெகிழ்ந்து சொன்னார். நீதியரசர் பக்தவச்சலம் விருதுகளை வழங்கினார். திருமதி ஒய்.ஜி.பி.யும், டாக்டர் அப்துல் கலாமும் நல்லுரையாற்றினார்கள். நமக்குத் தொழில் கவிதை – என்ற என் நூலை டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஔவை அவர்கள் அந்த விழா நிறைவின்போது, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஏன் கவிதை என்பதை அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ மாயப்பொருளாக்க் காட்டியிருக்கிறாய்? நம் நாட்டில்தான் அறிவு புறக்கணிக்கப் படுகிறது. நிலம், நீர், காற்று என்று நாம் அன்றாடம் காணும் பொருள்களைக் கூடப் பஞ்சபூதங்கள் என்று சொல்லிக் கதையளக்கிறோம். நீயும் ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறாய்?” அந்தக் கேள்விக்கு நான் அப்போது எதுவும் விடை சொல்லவில்லை. சிந்தித்துப் பிறகு சொல்லுகிறேன் என்று நழுவி விட்டேன்.

ஔவையிடம், உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். இன்னும் சொல்லவில்லை. ஆனால், அதற்கான விடை மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும், ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ்நூலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையெழுதி ‘Verses of Wisdom’ என்ற நூலாகப் படைத்தபோது அதில் வெளிப்பட்டது.

‘கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று’. சரியான கேள்வி கேட்பதே தீர்வின் முதற்படி இல்லையா? ஔவை நடராசன் அவர்கள் 1986-இல் கேட்ட கேள்வியால், ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கழித்து, ‘ஞானத்தாழிசை’ மூலம் ஒரு தீர்வு கிடைத்த வரலாறு இதுதான் ஐயா! அவருக்கு என்றும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும், கவிப்பொழிவில் நான் கலந்துகொண்டு கவிதை சொல்வேன். அந்த அரங்கின் ஓர் ஓரத்தில் எங்கிருந்தோ, ‘பலே பாண்டியா’ என்று பாரதி குரல்கொடுத்துப் பாராட்டுவதாக அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். 2000-ஆம் ஆண்டு கவிப்பொழிவில், ‘இதுதான் சமயம்’ என்ற கவிதையைச் சொன்னேன். சொல்லிமுடித்துவிட்டு வந்ததும், அரங்கில் அமர்ந்திருந்த ஔவை நடராசன் அவர்கள் என்னைப் பாராட்டிவிட்டுச் சொன்னார், “அது சரி ராஜா, நீ கவிதை படித்தபோது, ‘சிங்கப்பறவை’ என்ற சொல் காதில் விழுந்தது. தமிழில் சிம்புட்பறவை என்று சொல்வதுண்டு. அப்படி நீ எழுதியிருக்கலாமோ?”

அவருடைய அந்தக் கேள்விக்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால், பிடறி சிலிர்த்துக் கொண்டு, ஒரு சிங்கம் பறக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமோ, அப்படிச் சூரியன் தன் கிரணங்களை விரித்துக் கொண்டு எழுந்த பிரம்மாண்டமான காட்சிச் சிறப்பைச் சிம்புட்பறவை என்ற சொற்சிமிழுக்குள் அடக்கிவிட முடியுமா? என்ற பதில் கேள்வி என் மனத்தில் எதிரொலித்தது. அறிவைக் கடந்த மேற்பரப்புக்களில், கவிதை சஞ்சாரம் செய்யும் நுட்பம் தெளிவாகியது. கவிதையை வெறும் அறிவுத் துலாக்கோல் வைத்து அளக்க முடியாது என்பது புரிந்தது. அறிவுக்கு முரணாகக் கவிதை அமையக் கூடாது என்ற பாடம் சொன்ன ஔவை நடராசன் அவர்களுக்கு, அறிவே கவிதைக்கு எல்லையாகிவிடக் கூடாது என்று நான் பதில் பாடம் நடத்த முடியுமா? அவருக்குத் தெரியாதா என்ன? என் சிந்தனையைத் தூண்டுவதற்காகவே அவர் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறார் என்று எனக்குத் தெரியும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *