தின செய்தி நாளிதழில் இன்று (06.04.2020) வெளியான முனைவர் ஒளவை நடராசளின் கட்டுரை
‘கவிஞர்களின்
கனவுகள் நிறைவேறும்..!’’
கவிஞர்களின் கனவுகள் நிறைவேறும், நிறைவேற்றுவது எதிர்கால மக்களின் பொறுப்பு.
ஒரு முறை பாரதியார் கண்ட கனவுகளையெல்லம் பட்டியலிட்டுக் கைப்பட எழுதி வைத்திருந்தார். உடனிருப்பவர்களின் கருத்துகளை உற்றுக் கேட்பார். தான் பேசும்போது தன் உரையில் விடை சொல்ல அவர் போக்கில் முயல்வார். அது அவருடைய சொற்பொழிவின் போக்காக அமைந்திருந்தது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், பாரதியார் மீது பெருமதிப்பு கொண்டவராக இருந்தார். அவரது படைப்புகள் மீதும் அவர் வெளிப்படுத்திய புரட்சிகர கருத்துகள் மீதும் எப்போதும் ஈர்ப்புடையவராக இருந்தார். அவை அனைத்தின் வெளிப்பாடாக பாரதி நூற்றாண்டு விழாவில் புரட்சித் தலைவரின் உரை வெளிப்பட்டது.
தாய்க்குலத்தின் மீது நெஞ்சம் நிறைந்த நேசமும் அவர்களின் முன்னேற்றம் குறித்து அளப்பரிய அக்கறையும் கொண்டவராக இருந்தார். எனவேதான், மகளிர்க்கான எத்தனை எத்தனையோ திட்டங்களை அமல்படுத்தினார். அவர்களின் கல்வி, தொழில் வளர்ச்சிக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தினார். அந்த எண்ணங்கள் அவரது மனத்தில் எப்போதும் வேரூன்றியபடிதான் இருக்கும் என்பதற்கு சான்றாக பாரதி நூற்றாண்டு விழாவில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து நெகிழச் செய்தார்.
இதோ, 13.12.1981 அன்று எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு தொடக்க விழாவில் புரட்சித் தலைவர் ஆற்றிய உரை…
“நடந்து முடிந்த பாரதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் மனநிறைவை – மகிழ்ச்சியை – பூரிப்பை- பெருமையைத் தரத்தக்க வகையில் மூன்று நாட்களாக நடந்து முடிந்திருக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் உள்ளம் நெகிழ்ந்து போயிருக்கிறோம். இங்குள்ளவர்கள் – எட்டயபுரத்து மக்களின் எண்ணம் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர்கள் எல்லாம் பெருமையுடன் கொண்டாடி, 3 நாள் நிகழ்ச்சிகளையும், நடத்தி முடித்திருகிறார்கள். பெருமைக்குச் சொந்தம் கொண்டவர்களுடைய ஊரில் பிறந்து வாழ்பவர்கள் என்று அவர்கள் உள்ளம் பெருமைப்படுகிறது.
இங்கே தோன்றிய பாரதிக்கு – பல தியாகம் செய்த புலவருக்கு சாதி மதங்களைக் கடந்து நாட்டுக்குக் கடமையாற்றிய கடமை வீரருக்கு – எத்தனை இலட்சம் மக்கள்… கோடிக்கணக்கான மக்கள் என்பது கூடப் பொருந்தாது. உலகத்திலுள்ள மனித வர்க்கம் அனைத்துக்கும் வழி வகுத்துக் கொடுக்க நினைத்த மகாகவிக்கு விழா எடுத்து முடித்திருக்கிறோம். நாடு எப்படி நலம் பெற வேண்டும் மக்கள் எப்படி வாழ்ந்து நலம் பெற வேண்டும் என்று எடுத்துச் சொன்ன ஒருவர் – இந்திய மக்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதை எண்ணி நாம் அனைவருமே மிகுந்த பெருமைப்படுகிறோம். உலகத்தைக் கவனிக்க வைத்த ஈர்த்த விழாவாக இது அமைந்ததைப் பற்றி பாரதியின் ஊரிலேயே பேச வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். முதலமைச்சராக இருப்பதால்தான் இந்த வாய்ப்புக் கிடைத்தது என்று நான் பெருமைப்படவில்லை. அண்ணாவின் தம்பி என்பதால் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதனை எண்ணிப் பெருமையடைகிறேன். முதலமைச்சர் பதவி வரும்; போகும்; முதலமைச்சர் பதவி நாம் விரும்பினால் கிடைக்காது, மக்கள் விரும்பினால்தான் கிடைக்கும். நாம் ஆசைப்படலாம். ஆனால், மக்கள் ஆசைப்பட வேண்டும். இங்கே நான் அரசியல் பேச மாட்டேன். ஆனால், எனது பேச்சில் அரசியல் கலந்து வந்தால் அதை தவறாக எண்ண வேண்டாம்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்கள். உயிரோடு இருக்கும்போது யாரையும் நமது நாட்டில் மதிப்பதில்லை; மறைந்த பிறகு விழா எடுக்கிறார்கள் என்று கூறினார்கள். அதற்குப் பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒருவர் இந்த நாட்டில் அருஞ்சாதனைகளைச் செய்து, அவர் வாழ்ந்த காலத்தில் எத்தகைய உதவியுமின்றி வாழ்ந்தார் என்று அறிந்து கொள்ளும்போது, எதிர்கால சமுதாயம் அவரைப் பற்றி, அவரது தொண்டு பற்றி – தெரிந்த பிறகு அவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று முனைகிறது.
உயிரோடு இருப்பவர்களை யாரும் மறப்பதில்லை. தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் உயிரோடிருக்கும் போது அவரை யாரும் மறக்கவில்லை. இப்போது தான் மறந்துவிட்டார்கள். அவரைக் கொன்றுவிட்டார்களே தவிர வாழ வைக்கவில்லை. இந்தியத் தந்தை என்று அவருக்குப் பெயர் வைத்தார்கள். நேரு அவர்கள் இருக்கும் போது அவரைப் பாராட்ட மறந்துவிடவில்லை மக்கள். அவர் மறைந்த பின்னரும் அவரை மறந்துவிடவில்லை.
புலவர்கள் வாழ்ந்த காலத்தில் மற்றப் புலவர்கள் அவரது கவிதையில் எதுகை இல்லை… மோனை இல்லை… என்ன எழுதுகிறார் இவர், என்றெல்லாம் கூறுவார்கள். அவர் இறந்துவிட்டால் புகழ்வார்கள். புலவர்களுக்கு மட்டுமல்ல, இசைவாணர்களுக்கு, பத்திரிகையாசிரியர்களுக்கு, கலைஞர்களுக்கு, ஆசிரியர்களுக்கு இன்னும் பலருக்கும் இந்த நிலை உண்டு. பாராட்டினால் வளர்ந்து விடுவார்கள் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. பொறாமையைத் தூக்கி எறிந்துவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு நினைத்தால், நல்ல நிலை – நல்ல நேரம் தானாகவே வரும். அறிஞர் அண்ணா அவர்கள் பாரதிதாசன் உயிரோடு இருக்கும்போதே அவரைப் பாராட்டிப் பொற்கிழி வழங்கினார். எப்போது, எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்பது தமிழக அரசுக்குத் தெரியும்.
நான் முதல்வர் ஆனவுடன், உயிரோடிருப்பவர்களுக்குச் சிலை வைக்கக் கூடாது என்று உத்தரவு போட்டேன். போடாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? என் சிலையை வைக்கப் போகிறேன். என்று பலர் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். நான் அனுமதிக்கவில்லை. ஒருவர், எனது தோட்டத்திலே சிலையை வைக்கப்போகிறேன்! நீங்கள் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார். மறுத்தேன். எனது சிலையை வைப்பதற்கு நீங்கள் யார்? நான் அதை அனுமதிக்கமாட்டேன்’ என்று தெரிவித்தேன்.
கருநாடக மாநில முதல்வர் குண்டுராவ் அவர்கள் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். பாஷை ஒரு தடையாக இருக்கிறது. பாஷை தெரியாவிட்டால் எத்தனை கஷ்டம் அடைய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.
ஒரு மொழியை நாம் புரிந்துகொள்ள முடியாதபோது அந்த மொழியைப் புரிந்துகொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது. இந்தி மொழியில்தான் பேச வேண்டும் என்று சட்டம் இடும்பொழுது சிக்கல் ஏற்படுகிறது. உயிர்மொழியாம் தாய்மொழியை நீங்கள் யார் தடைசெய்ய என்று கேட்க நேரிடுகிறது. தமிழிலே சிந்தனை செய்ய வேண்டும். தமிழிலே பேச வேண்டும் என்று பாரதியார் சொன்னார். குழந்தை அழுகிறது. அந்த அழுகையில் அரசியல் இருக்கிறதா இல்லையா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குழந்தைக்கு அஜீரணம் ஏற்பட்டிருக்கிறது என்றால், மேலும் மேலும் திணிக்கக்கூடாது என்று சொல்கிறோம். அது அரசியல் இல்லை? நாட்டில் நன்மை எது, தீமை எது என்று தீர்மானக்க ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.
உயர்வு, தாழ்வு என்ற நிலை சமூகத்தில் இல்லாதபடி செய்ய வேண்டும். அதற்குரிய சட்டங்களைச் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்தம் பேசிப் பயனில்லை. பொருளாதாரவாதி, ஒழுங்கான முறையில் திட்டங்கள் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்று முயற்சி செய்யும்போது அங்கு அரசியல் வந்துவிடுகிறது. எங்களுக்குத் தெரிந்த அளவுக்கு எங்களது பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அப்படிப்பட்ட சாதனைகளுக்கு இப்படிப்பட்ட விழா பயன்தரும். பெண்களுக்கென ஒரு தனிப் பல்கலைக்கழகம் ஏற்படுத்துவதைப் பற்றி கல்பனாத் ராய் அவர்கள் பேசும்போது, இந்தியாவிலேயே இப்படி ஒரு பல்கலைக்கழகம் இல்லை என்று குறிப்பிட்டார்கள். பாரதி எழுதியிருந்த நூல் ஒன்றில் பூனாவில் பெண்களுக்கென ஒரு பல்கலைக்கழகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதை ஒட்டித்தான் நான் குறிப்பிட்டேன். தற்போது கல்பனாத் ராய் அவர்களின் உரையைக் கேட்ட பிறகு, மேற்படி பூனாவில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகம் தற்போது இயங்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பாரதி விழாவையொட்டி பாரதி வலியுறுத்திய சமுதாயச் சீர்திருத்தம், பெண்களுக்கு உரிமை, சட்டம், வறுமை ஒழிப்பு, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, ஆகியவை குறித்து பள்ளி மாணவ, மாணவியர் கல்லூரி மாணவ மாணவியர்க்கும், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கும் கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றை ஏற்படுத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் கட்டமாக எல்லா ஊராட்சி ஒன்றியங்களிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பெறுவர், பிறகு அவர்களுக்கு மாநில அளவில் பொதுப்போட்டி நடத்தி அதில் பெற்றி பெற்றவர்களுக்குப் பாரதி நூற்றாண்டு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். எட்டயபுரம் பகுதியில் பெண்கள் பாலிடெக்னிக் ஒன்று அடுத்த ஆண்டில் தொடங்கப்படும். பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் கணிசமான முறையில் அதிகப்படுத்தப்படும். பெண்கள் அதிகம் உள்ள இருபாலரும் படிக்கும் பள்ளிகள் முழுக்க முழுக்கப் பெண்கள் பள்ளிகளாக மாற்றப்படும்.
பாரதியாரின் வாழ்க்கை குறித்துத் தமிழக அரசு திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்புக் கிடைத்தால் நானே அதனை இயக்குவேன். பாரதியாரின் நூல்கள் 3 தொகுதிகளாக பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். இங்கு காலையில் யாரோ குறிப்பிட்டார்கள் என்று கருதுகிறேன். மத்திய அரசு மொழி பெயர்த்து வெளியிடுவதாகச் சொல்கிறது. அது வேண்டாம். அவர்களிடம் உதவித்தொகை பெற்று நாமே வெளியிடலாம் என்ற கருத்தைத் தெரிவித்தார்கள். அவர்களும் வெளியிடட்டும், நாமும் வெளியிடுவோம்.
எட்டயபுரம் பகுதியில் பாரதியின் பெயரில் நூற்பாலை ஒன்று தொடங்கப்படும். ஏறக்குறைய 400 பேர்களுக்கு வேலை வாய்ப்பை அந்த ஆலை அளிக்கும். இந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். பாரதியின் பெயரில் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் பெலோஷிப் அமைக்கப்படும். சென்னையில் பாரதி நினைவு மண்டபம் அமைக்கப்படும். பாரதியாரின் வாழ்க்கைத் தொடர்பான நிகழ்ச்சிகள் கொண்ட நினைவுச் சின்னமாக அது அமையும்.’’ என்ற வாக்குறுதிகளோடு மக்கள் மனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவாறு உரையை நிறைவு செய்தார்.தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Add a Comment