நேற்றைய நினைவு … 3
இராணி வாராந்தரி – 30.09.1990
தமிழில் என்ன இல்லை?
….. முனைவர் ஔவை நடராசன்
தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன.
புதிய சொற்களைப் படைக்க முயற்சிக்கும் பொழுது, முதலில் பழைய சொற்களைத் தேடிப் பார்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும்.‘
இதில் எந்த முயற்சியுமே செய்யாமல், “இதுக்கு என்ன தமிழ்?” என்று அறைகூவல் விடுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒரே பதில் – “தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டு அடைவீர்கள்”
ஈனில்
=====
சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். மருத்துவமனைகளில் உள்ள ‘லேபர்’ அறைக்கு என்ன தமிழ்? என்று. அப்போது மகப்பேறு நடைபெறும் அறை ”மகப்பேறு இல்லம்” என்று புதிய சொல்லைப் படைத்திருக்கும். ஆனால், அதற்குப் பழைய சொல் ஒன்றும் இருக்கிறது. அது – ஈனில்.
இது சங்க இலக்கியத்தில் உள்ள சொல். ”இல் என்றால், இல்லம் – அறை. ”ஈன்” என்றால், பெறுதல். ”ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்றாள் அல்லவா, ஒரு வீரத்தாய். ‘மாடு கன்று ஈன்றது’ என்று நாமே சொல்லுகிறோம் அல்லவா? எனவே, மகப்பேறு நடைபெறும் அறையை, ”ஈனில்” என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.
உழைச்செல்வார்
================
மகப்பேறு நடைபெறும்பொழுது, ”நர்சு” கள் உடன் இருந்து உதவுகிறார்கள். அந்த ”நர்சு”களுக்கு என்ன தமிழ்ச் சொல்?
தேடி அலைய வேண்டியது இல்லை. திருவள்ளுவரே அழகான சொல்லைக் கொடுத்துப் போயிருக்கிறார். அது – உழைச்செல்வான்.
இந்நாளில் பெண்களும் நர்சுகளாக இருக்கிறார்கள். எனவே, இருபாலருக்கும் பொதுவான ”உழைச்செல்வார்” என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
வயமை
=======
இப்பொழுது சிலர் மதுவுக்கு அடிமையாகிறார்கள். மயக்கம் தரும் மாத்திரைகளுக்கு அடிமையாகிறார்கள். இதை இன்றைய அறிவியல் ”அடிட்” என்று சொல்கிறது. இதற்குத் தமிழிலே சொல் உண்டா?
உண்டே!
வயமை.
”வயமை” என்றால், ”வயப்படுதல்” (வசப்படுதல்) என்று பொருள். ”அடிட்” என்பது அதுதானே!
எனவே, தமிழில் இல்லாதது இல்லை. தமிழ் ஒரு பெருங்கடல். அந்தக் கடலிலே மூழ்கி முத்து எடுக்கும் திறமைதான் நமக்குத் தேவை!

Add a Comment