தனிப்பெரும் தலைமை – ஔவை 85
========================================
சிந்தனைச் செம்மல் சிவ.சதீசுகுமார்,
தமிழாசிரியர், சென்னை.
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்பது தமிழ் மரபு. உயர்ந்த சான்றோர் ஒவ்வொருவரின் இருப்பின் காரணமாக உலகம் இன்னும் வாழ்ந்து வருகிறது. உலகையே வாழ வைக்கும் ஒப்பற்ற ஆற்றல், ஆண்டவனுக்கு அடுத்ததாக அறம்சார் அறிஞர்களுக்கும் உண்டு.
அவ்வகையில் உலகம் வாழ, வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களின் முதல் வரிசையை அலங்கரிப்பர் தான் “தாமரைத்திரு” ஒளவை நடராசனார் பல்கலைக்குரிசில். வாழும் தமிழுக்கு வளஞ்சேர்க்கும் இவர், பழுதின்றித் தமிழாய்ந்த பண்பாளர்.
உலகிலுள்ள அனைத்துச் செல்வங்களும் அழியும் தன்மை உடையன, அவற்றையே பலர் தன் பரம்பரைச் சொத்தாகப் பாராட்டிக் கொண்டு பரிணமிக்கிறார்கள். ஆனால், உலகிலேயே அழிவிலாச் செல்வமாகிய நுண்ணறிவைத் தன் பரம்பரைச் சொத்தாகக் கொண்டு தன் மரபுளோர் பெருமையெல்லாம் தன் புகழாக்கிக் கொண்ட ஒளவை நடராசனார் “உரைவேந்தர்” என்னும் புகழ்ப்பெயருடன் வாழ்ந்த பெரும் பேராசிரியர் ஒளவை சு.துரைசாமி அவர்கள் ஈன்றெடுத்த தலைமகனார் ஆவார்.
இவரின் தந்தையார் வாழ்ந்த காலத்திலேயே இவர், தன் புலமைத்திறத்தை நிரூபித்து உன்னத இமய மலைபோல் ஓங்கிடும் கீர்த்தி பெற்றார். இத்தகு சீர்த்தியைக் கண்டு “இவன் தந்தை என்நோற்றான் கொல்” என்னும் சொல்லானது இவரின் தந்தையாரின் செவிகளை எட்டியது. இத்தகைய பெருமையைப் பாராட்டிக் “கருவிலேயே திருவுடையவர் என்னும் மொழிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஒளவை நடராசன்” என்பார் தவத்திரு ஊரன் அடிகளார்.மொழிப்பாடம் கற்றவர்களுக்கு வாய்ப்புகள் என்பவை இரு வகைகளில்தான் வரும். ஒன்று கையின் மூலம் எழுதுவது, மற்றொன்று வாயாரப் பேசுவது.
இவ்விரு கலைகளும் எவருக்கும் எளிதில் வாய்க்காது.அப்படி இக்கலைகளில் கரை கண்டோர்க்கு ஆளுமைத் திறன் என்பது அகப்படுவது அரிது.சரி, இத்துணையும் கிடைத்தாலும் அயல் மொழிகளில் ஆர்வம் இருக்காது.ஆனால்,
ஒளவையாரோ எழுத்து, பேச்சு, ஆளுமைத் திறன் மற்றும் ஆங்கிலப்புலமை ஆகிய அனைத்தும் பெற்று எல்லாப் பட்டைகளிலும் படரொளி பரப்பும் வைரம் போல் மிளிர்பவர்.
“கற்றுவலார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை வாதியா வினை” என்ற திருஞானசம்பந்தரின் வாக்கின்படி வாக்கு வன்மையை வளமாகப் பெற்றுத் திருநாவுக்கரசராகத் திகழும் இவர், தமிழ்ப் பேச்சுலகில் தன்னிகரற்று தாய்வாழை போல் வாழ்ந்து, தனது அடியில் பல கன்றுகளை தழைக்கச் செய்துள்ளார். அவ்வண்ணம் வளர்ந்த பல வாழைகள்தான் தமிழ்நாட்டில் மட்டுமின்றி தரணி முழுவதும் தமிழ் பரப்பும் தகுதி பெற்றுள்ளார்கள்.
மழலையர் நல மருத்துவப் பணியைச் சிறப்புற ஆற்றி ஓய்வு பெற்றவர் இவரின் துணைவியார் டாக்டர் தாரா நடராசன் அம்மையார். இவர் இப்படிப் பணி செய்ய, ஒளவை நடராசனாரோ இலக்கிய உயிர் ஊட்டும் வாணராக பார்த்துக்கொள்ளம் நல்ல பணியாகிய ஆசிரியப் பணியைச் சிலகாலம் ஆற்றியவர்.
இவரிடம் படித்த மாணவர்களுள் பட்டிமன்றத்தை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டுச் சேர்த்த பேராசிரியர் சாலமன் பாப்பையா, கவிஞர் மீ. ராஜேந்திரன் ( மீரா ), ஆங்கிலப் பேராசிரியர் சிவகாசி இராமச்சந்திரன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிக்கோ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இவரிடம் முறையாகப் பயிலா விட்டாலும் ஏகலைவர்களைப் போல் எட்ட நின்று கற்றவர்களோ பலர். அவ்வண்ணம் கற்றவர்களுள் சொல்வேந்தர் சுகிசிவம், கவிப்பேரரசு வைரமுத்து, வழக்கறிஞர் இரவி கல்யாணராமன் என எண்ணற்றோர் நயந்தோர் அவையத்து நண்ணி தம் நாவன்மையையும் பாவன்மையையும் காட்டி வருகிறார்கள்.
ஏராளமான இளவல்களை இனங் கண்டு தாராளமாக வளர்க்கும் இவர், தமிழகத்தின் டெமஸ்தனிஸ். திருவள்ளுவர் வாக்கின் படி “ஊரின் நடுவில் இருக்கும் ஒரு பழமரம்”.
இந்த துரோணர் மகாபாரதத்தில் இருந்து மாறுபட்டவர். கற்றுக்கொடுக்கும் கலைக்குக் காணிக்கையாக விரலைக் கேட்காமல் வித்தையை விளைவிக்கும் விரலுக்குக் குரல் கொடுத்து வாழ்த்துச் சொல்பவர். பச்சையப்பர் கல்லூரியில் பயின்ற கவிப்பேரரசு வைரமுத்து வருடிய கவிதை வரிகளைக் கற்ற இவர் “உங்கள் விரல் நுனியின் வித்தகம் வெல்க”என்று வாழ்த்து எழுதிக்கொடுத்து வளரும் பயிருக்கு நீர் வார்த்த நல்லேருழவர்.
வாழ்க்கையில் வளர்ச்சி என்றாலே அனைவருக்கும் வருவது ஆனந்தம்தான். ஆனால், அதே வளர்ச்சி மற்றவர்க்குகு வந்தால் சிலரின் மனம் சிதைவடையும். ஆனால், அடுத்தவர் வளர்ச்சியில் அகம் மிக மகிழும் ஒளவையார், யார் எந்தத் துறையில் வெற்றி பெற்றாலும் முன்னேறினாலும் முழுமனத்துடன் பாராட்டும் சீராளர். அவ்வாறு வாழ்த்தும்போது கூடத் தாமதிக்காமல் தக்க நேரத்தில் வாழ்த்து சொல்பவர். ஏனெனில் காலம் கடந்த வாழ்த்திற்கு கடுகளவு கூடப் பயனில்லை என்று கருதுபவர்.
அமரருள் உய்க்கும் ஆயுதமாகிய அடக்கத்தைத் தன் வாழ்வில் அடைக்கலமாகக் கொண்ட இவர் அன்பும் அருளும் தவழும் அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளையும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளையும் ஏற்றுப் போற்றுபவர்.
அதனால்தான் பொள்ளாச்சி வள்ளல் அருட்செல்வர் டாக்டர்.நா. மகாலிங்கம் அவர்கள்
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறட்பாவிற்கேற்பச் சென்னை இராமலிங்கர் பணி மன்றத்திற்கு முதல் செயலாளராகப் பணியமர்த்தி மகிழ்ந்தார். இப்பணியைத் தலைமேல் ஏற்றுக்கொண்டு இவர் செய்த பணிகள் யாவும் அருட்பிரகாசர் மற்றும் அண்ணலாரின் சொற் கோயில்களுக்குத் திருப்பணிகள் எனலாம்.
பணி மன்றத்தின் செயற்பாட்டைப் பற்றி சொல்வேந்தர் சுகிசிவம் ஒருமுறை கூறும்போது “எல்லா மாணவர்களும் காலேஜுக்குக் கட் அடித்துவிட்டு சினிமாவிற்குப் போவார்கள். ஆனால், நானும் என் நண்பர் இரவியும் ஒளவை நடராசன் பணியாற்றும் பணி மன்ற அலுவலகத்திற்குச் செல்வோம். அங்கு ஆத்திகம் முதல் நாத்திகம் வரை அரசியல் முதல் ஆன்மிகம் வரைஅலசப்படும்” என்று தான் வளர்ந்த திறத்தைக் கூறினார். இவரின் பணி மன்றப் பட்டறையே பலரின் வகுப்பறையாக இருந்ததை அறிய முடிகிறது.
“எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்து இவ்வைந்தும் நோக்கி” என்ற சங்கப்பாடலுக்கேற்ப சாதுரியமாகப் பேசும் இவர், அரசு செயலாளராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா ஆகிய முப்பெரும் முதல்வர்களிடம் பணியாற்றியவர்.
இவர் எம்.ஜி.ஆரிடம் பணியாற்றியபோது “கார் ஓட்டி” என்று முதலமைச்சர் எழுதிய கோப்பில் “காரோட்டி” என்று திருத்தினார் ” ஏன் இப்படித் திருத்தினீர்கள்?” என்று கேட்டபோது “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்”என்று இலக்கண விதியையெல்லாம் கூறி விளக்காமல் “நான் படகோட்டி பார்த்துப் பழக்கப்பட்டவன்” என்று எளிமையாக மனம் கொள்ளும் வகையில் கூறினார்.இது இவரின் நா வன்மைக்கு நலமான சான்றாகும்.
பத்மஸ்ரீ, தமிழ்ச்செம்மல், வாழ்நாள் சாதனையாளர், தன்னேரில்லாத தமிழ் மகன் என எண்ணற்ற பட்டங்கள் இவரைத் தேடி வந்தாலும் ஆசிரியர், இயக்குநர், அரசு செயலாளர், துணை வேந்தர், துணைத்தலைவர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எனப் பல பதவிகள் வந்தாலும் பணிவையே தனது பண்பாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். ஒருமுறை “அழைப்பிதழில் தங்கள் பெயருக்கு முன்னால் எந்தப் பட்டத்தை போடட்டும்” என்று நான் கேட்டபோது “ஒளவை என்ற பட்டத்தை விட வேறொரு பட்டம் வேண்டுமா?” என்று கேட்டார்.அப்போதுதான் “சாயக் கண்டது காய்குலைச் செந்நெல்” என்ற பள்ளுப் பாட்டுக்கு எனக்கு ஒரு சரியான சான்று கிடைத்தது.
வாழ்வில் எவ்வளவுதான் உயர்ந்தாலும் எளிமை என்பதையே எப்போதும் பின்பற்றி, யாவரும் எளிதில் அணுகும் வகையில் எல்லோரையும் அரவணைக்கும் மாண்பு மிக்க இவரின் எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு எனக்கு நினைவுக்கு வருகிறது.
“நான் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது பல்கலைக்கழக வளாகத்திற்குப் பெரும்பாலும் நடந்து செல்வதுதான் வழக்கம். அப்போது அங்கு தோட்டத்தில் வேலை செய்யும் தோட்டக்காரர் கூட என் தோள் தொட்டுக் கையைப் பிடித்து அன்புடன் நலம் விசாரிப்பார்” என்று என்னிடம் சொன்னார். இந்நிகழ்வு சக்கரவர்த்தித் திருக்குமாரரான இராமர் அயோத்தியில் நடந்து செல்லும்போது அனைத்து மக்களையும் நலம் விசாரிப்பார் என்பதை,
“எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன் முதிர்வரு கருணையின் முகமலர் ஒளிரா.
எதுவினை? இடரிலை? இனிது நும் மனையும்” என்று பாடும் கம்பரின் பாடலடிகளுடன் ஒப்பிட முடிகிறது.
தலைமைப் பண்பு என்பது காவல் புரிவதற்கே அன்றி ஏவல் புரிவதற்கு அல்ல என்பதை உணர்ந்த ஒளவையார் அவர்கள் உலகப்புகழ் பெற்றவர்.
“தாயெழிற் றமிழை என்றன் தமிழரின் கவிதை தன்னை, ஆயிரம் மொழியிற் காண,இப்புவி அவாவிற்று”
என்று பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் நூல்கள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டுமெனப் பாடுகிறார். இக்கூற்றினை ஏற்றுப்போற்றும் வகையில் ஒளவை நடராசனார், மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல அயல் நூல்களை பாருக்கு எடுத்துரைத்தது தமிழின் பெருமையை வளர்த்தெடுத்தார். இவர் விட்ட பணிகளை தற்போது அவரின் திருமகனார் முனைவர் ந.அருள் தம் பணிகளை கவினும் கவர்ச்சியும் கொண்ட நிலையில் அவர் புகழ் வளர் பிறையாக வளர்ந்து வருவது பெருமைக்குரியதாகும்.
இவ்வாறு பேச்சு, எழுத்து, ஆட்சித் திறம், மொழிபெயர்ப்பில் முனைப்பு,எளிமை, புலமை, தலைமை என ஏராளமான மணிகளைக் கொண்டுள்ள மாலைகளை அணிந்து அவனியின் பவனிவரும் ஒளவையாரின் 85 ஆம் பிறந்தநாளில் அவரை வணங்கி, மேடையில் பேச்சு எனும் மெல்லிய பூங்காற்றை காற்றை வீசத் தொடங்கி இன்று 75 ஆம் ஆண்டின் தொடக்கம் என்பதும் பெருமையான செய்தியாகும்.
இத்தகைய பெருமகனாரைப் பாதம்பணிந்து வாழ்த்துவோம், வாழ்த்துப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
===========

Add a Comment