தினசெய்தி நாளிதழில் இன்று (10.05.2020) வெளியான கட்டுரை
அருந்தமிழும் அன்றாட வழக்கும்
வாழ்நாளை வீணாளாக ஆக்காதீர்கள்..!
– முனைவர் ஔவை ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு
=================================================
பிற்காலத்தில் வடமொழியின் செல்வாக்கு வேரூன்றவும், வட மொழிச் சொற்கள் இன்றும் நீங்காமல் உள்ளமைக்கும் இக்காலத்தில் எழுந்த சமயப் பூசல்களும் காரணமாயின. இச்சூழலில் சைவர்கள் சமணத்தை எதிர்த்த வேகத்தில், சைவ இலக்கியங்களைத் தவிர, வேறு எவற்றையும் பயிலக்கூடாது என்னும் அளவிற்குப் பிற இலக்கியங்கள் எல்லாவற்றையும் எதிர்த்தனர். ‘ஐந்தெழுத்தால் ஒரு பாடையுளதென அறையவும் நாணுவர் அறிவுடையோரே’ என்று எழுதிய சாமிநாததேசிகர் வடமொழி வாணராகவும் வாழ்ந்ததோடு தமிழ் மொழியின் மாண்பினை பழிக்கத் தொடங்கி, அடிமைச் சேற்றில் சிக்கி அழிந்ததையும் காணலாம்.
மேலும், ‘மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம்’ என்று சொல்லி “இப்படிப்பட்ட நூல்களைப் படிப்பதை விட்டுச் சங்க இலக்கியங்களையும் சிந்தாமணி, பத்துப்பாட்டு, மணிமேகலை போன்ற நூல்களையும் படித்து வாழ்நாளை வீணாளாக ஆக்காதீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமயப்பூசல் மொழியின்மீது தாக்குதலை நிகழ்த்தி, வடமொழிக்கு ஏற்றமளித்த நிலைமை இக்காலத்தின் கோலமாகும்.
பிற்கால இலக்கியங்கள்
கம்பரின் காலத்திற்குப் பின்னர்த் தமிழ்ப் பேராறு பல ஓடைகளாகப் பிரிந்துவிட்டது. சிற்றரசர்களைப் பற்றிய புகழ்ச்சிப் பாடல்களும், காதற் பிரபந்தங்களும், புராணங்களும், பலவகைச் சிற்றிலக்கியங்களும் தமிழில் நிரம்பலாயின. இவற்றால் தமிழின் வளமையும் வன்மையும் சிறிது சிறிதாகக் குறைவுபடலாயின. இவ்வகை இலக்கியங்களும் நாளடைவில் நலிந்தன. அந்நாளில் தமிழ்மக்களது அறிவுவளர்ச்சியும், புதியன காணும் நுண்ணுணர்ச்சியும் தடையுற்றன.
பேராறாகவும், சிற்றாறுகளாகவும், கால்வாய்களாகவும் நாடு செழிக்கப் பரந்தோடி வந்த நீரோட்டம் முடிவில் சேற்றுப் பள்ளத்தில் ஆழ்ந்து தேங்கித் தமிழகம் கட்டுக்கிடையாய் நின்றுவிட்டது எனப் பிற்காலத் தமிழின் நிலையை அறிஞர் வையாபுரியார் எடுத்துக்காட்டுவதால், தமிழின் நிலையையும் பிறமொழிக் கலப்பால் தமிழுக்கு நேர்ந்த நலிவையும் நாம் உய்த்துணர முடிகிறது. இராசமாபுரத்தில் தெருக்களில் பதினெட்டு மொழி பேசுவோர் தங்களுக்குள் கூடிப் பேசும் பேச்சின் ஒலியை ஆலமரத்தில் பறவைகள் ஒலியெழுப்புவது போல இருந்தன என்று வரும் சீவகசிந்தாமணிப் பாடல் இந் நிலைக்குச் சான்றாகும்.
கலம்பகம், தூது, உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, பரணி எனச் சிற்றிலக்கியங்கள் பலவாகப் பெருகிய போதிலும், பிறமொழிக் கலப்பிற்கு இடம் தந்தே இவை அமைந்தன. பிரபந்தங்கள் எனப்படும் இக்கட்டமைவுக் கவிதைகளில் வடமொழிக் கலப்பு மிக்கிருந்தது. புராணங்கள் அனைத்தும் வடமொழிக் கலப்புடையனவே.
இதன் விளைவாக எழுத்துமொழியில் மட்டுமின்றிப் பேச்சு மொழியிலும் வடமொழியின் செல்வாக்கு வளர்ந்தது. வடசொற்கள் தொடக்கத்தில் மெலிந்த நிலையில் தமிழில் புகுந்து காலஞ் செல்லச் செல்ல மிகுந்து கொண்டே வந்தன. வடசொற்கள் அயலாரிடமும் கற்றவர்களிடையிலும் மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நிரம்பத் தொடங்கின. அதிகாரம், அதிட்டம், இந்திரன், ஈனசாதி, உத்தரவு, எசமான், எந்திரம், ஏலம், ஒட்டகம், கலியாணம், காரியம், சந்திரன், சனி, சாதி, சூரியன், தண்டம், தந்திரம், நகம், நாயன், பாவம், புதன், மந்திரம், மாசம், முகம், முக்கியம், முழுத்தம், யமன், ரத்தம், ராசா, லச்சை, லாபம், வசியம், வஞ்சனை போன்ற வடசொற்கள் கல்லாதவரிடத்தும் பயிலப்படலாயின. சமயம், தத்துவம், சாஸ்திரம் போன்ற துறைச் சொற்களும் தமிழில் புகுந்தன.
‘‘நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமா நிஷ்கள வசங்கசஞ் சகரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த தற்பர விச்வாதீத வ்யோம பரி பூரண சதானந்த ஞான பகவ சம்புசிவ சங்கர சர்வேச னென்றுநான் சர்வ காலமும் நினைவேனோ அற்புத வகோசர நிவிர்த்த பெறுமன்பருக் கானந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொருபசாஷாத்கார அனுபூதியனு சூதமுங் கற்பனை யறக்காண முக்கனுடன் வடநிழற் கண்ணுடிருந்த குருவே கருதரிய சிற்சபையிலானந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே”
என்னும் தாயுமானார் பாடலில் இடம்பெறும் வட சொற்களின் எண்னிக்கை, பிற்கால இலக்கியங்களில் வடமொழியின் செல்வாக்கை விளக்கி நிற்கிறது.
பிற்கால இலக்கியமான சரபேந்திர பூபாலக் குறவஞ்சி’யில் மலைவளங்கூறிக் குறி சொல்லும் குறத்தி, ஆங்கில மாதொருத்தியின் கை பார்த்துக் குறிசொல்லி மேகலை பெற்றதனை, ஒண்ணுதல் உறு இங்கிலீஷ் மாதொருத்தி, லுக்மை ஹேண்டென்றாள் ஓதினேன் அவள் பாணிரேகை கண்டுதவினாள் இந்த மேகலை. எனக் குறத்தியே கூறுவதாகக் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பாடியுள்ளார்.
இங்கிலீஷ், லுக், மை, ஹேண்டு எனும் ஆங்கிலச் சொற்களை இவ்வரிகளில் காணலாம். சூர்க்கொன்ற ராவுத்தனே எனக் கந்தரலங்காரத்தில் வருகின்ற பாடல் வரியில், ‘ராவுத்தன்’ என்ற அயன்மொழிச் சொல்லைக் காணலாம். குறவர் மகட்குச் சலாமிடற்கு ஏக்கறும் குமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும் என்னும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடலில் ‘சலாம்’ என்ற சொல் கலந்துள்ளதை அறியலாம். சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகிய கலிங்கத்துப் பரணியில்,
‘‘மழலைத் திருமொழியில் சில வடுகும் சில தமிழும் குழறித்தரு கருநாடகர்! குறுகிக் கடைத்திறமின்..!”
என வரும் பாடல், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து கொண்டிருந்த நிலையைத் தெளிவாக விளக்குகிறது. பல்வேறு சமயங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தமிழ்க் காப்பியங்களில், அவ்வச் சமயங்களின் மொழிகளிலிருந்து பெறப்பட்ட கலைச் சொற்கள் இடம் பெற்றிருந்தன. பெளத்த மத அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில், அச்சமய மொழியான பாலிமொழிச் சொற்கள் இடம் பெற்றிருந்தன. சமண சமய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களில் பாகதச் சொற்களும், வைணவ நெறியினைப் போதிக்கும் இலக்கிய நூல்களில் வடமொழிச் சொற்களும் பெருவழக்கைப் பெற்றன. பிற்காலத்தில் இசுலாமிய வழியை எடுத்துக் கூறும் நூல்களில் பெரும்பான்மையான அரபுச் சொற்களையும் ஓரளவு பாரசீகச் சொற்களையும் காணலாம்.
அரபு, பாரசீகச் சொற்களின் ஆட்சியே இசுலாமிய நூல்களின் கடமையாகவும் இன்றியமையாதனவாகவும் உள்ளன. எனவே, அரபு, பாரசீகச் சொற்களை இலக்கியங்களிலிருந்து பிரிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
இசுலாமியக் கருத்துகளைத் தமிழில் விளக்குவதற்கு அச்சொற்களே தேவைப்பட்டன. எனவே, பிற்காலத்தில் இசுலாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களிலே அரபுச் சொற்களும், குறிப்பிடத்தக்க அளவு பாரசீகச் சொற்களும் ஆளப்பட்டன.
‘‘மனத்தில்வேறு
எண்ணமின்றிப் பிசுமில்லா உரைத்தெடுத்து
உண்ண நல்லுரு வெய்தின என் உண்மையோன்.”
என்னும் சீறாப்புராணப்பாடல் ஒரு சான்றாகும். இவ்வாறு பிற்கால இலக்கியங்களின் காலமும் பிறமொழிக் கலப்பிற்கு இடம் தந்த காலமே எனத் தெளியலாம்.
– முனைவர் ஔவை ந.அருள், தொடர்புக்கு: dr.n.arul@gmail.com

Add a Comment