விகடகவி இதழில் இன்று (06.06.2020) வெளியான கட்டுரை
===============================================
பாரதியின் குயில் பாட்டு இசை வடிவில்! – ஆர்.ராஜேஷ் கன்னா.
===============================================
மகாகவி பாரதியார் எழுதிய குயில் பாட்டு கவிதை வரிகளை உலகம் முழுவதும் இணையத்தில் கொண்டு சேர்க்க ‘குயில் பாட்டு பாடுவோம்’ என்ற தலைப்பில் ஆன்லைனில் 25 எபிசோடுகளாக கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி ஆர் சூரிய பிரகாஷ் மற்றும் தமிழ் அறிஞர் டாக்டர் ஔவை அருள் நடராசன் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குயில் பாட்டு பாடுவோம் என்ற தலைப்பில் வெளியான முதல் இரண்டு ஆன்லைன் எபிசோடுகளில் பாரதியார் குயில் பாடல்களை பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஆர்.சூரிய பிரகாஷ் பாடி முடித்த பிறகு, அதற்கான விளக்கத்தினையும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் டாக்டர் ஔவை அருள் விளக்குகிறார். குயில் பாட்டு பாடுவோம் என்ற இணைய சுவை நறுக்குகளை பௌளி, நாட்டைகுறஞ்சி, ஆகிரி, சுமநேச ரஞ்சனி, நளினகாந்தி, அடாணா, சிந்து பைரவி, தர்பாரி கானடா ராகங்களில் மெட்டமைத்து கர்நாடக இசையில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. குயில்பாட்டு பாடுவோம் ஆன்லைன் எபிசோடிற்காக குயில் குறிஞ்சி மற்றும் சூரியவசந்தா என்ற இரு புதிய ராகங்களை கண்டுபிடித்து அரங்கேற்றி, சூர்ய பிரகாஷ் பாடி வருவது இசை உலகத்தையே சிலிர்க்க வைத்திருக்கிறது. குயில் குறிஞ்சி ராகம் கிராமிய இசையினை தழுவியும், இயற்கையாக ஏற்படும் மகிழ்ச்சியைக் கொண்டும் உற்சாக ராகமாக உருவாக்கப்பட்டுள்ளது சூரியவசந்தா ராகம் வீர உணர்ச்சி மற்றும் சோக உணர்ச்சியினை ஏற்படுத்தும் மற்றெரு புதிய ராகமாக உருவாக்கியுள்ளார் கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் ஆர்.சூரியபிரகாஷ்.
“பாரதியார் எழுதிய குயில் பாட்டு பாடல்களை இசை ஆர்வலர்களுக்காக கர்நாடக சங்கீத மெட்டுகளில் பாட வைக்க வேண்டும் என்று நானும் கர்நாடக இசை மேதை சூரிய பிரகாஷும் பேசி, ஆன்லைனில் 25 எபிசோட்களாகத் தயாரித்து ஒளிபரப்ப முடிவு செய்து… தற்போது இரண்டு எபிசோட்கள் ஆன்லைனில் யூடியூப் மூலமாக 24.5.2020 மற்றும் 01.06.2020 என ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 7.00 மணிக்கு தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். நானும், இசையறிஞர் சூரியபிரகாஷும் சென்னை கிறித்துவக் கல்லூரி மேனிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். அண்மையில் 5.5.2020 அன்று வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பாரதி புகழ் வழக்கறிஞர் ரவி என்னை பாரதியைப்பற்றி கட்டுரை எழுத தூண்டியபோது, நான் பாரதியாரை நாளும் நினைவோம் என்று தொடங்கி, புதுவைக் குயிலின் பொன்னோவியம் என்ற தலைப்பில் நான் எழுதியதை நண்பர் சூரியபிரகாஷ் படித்துவிட்டு, ‘நாம் இருவரும் இணைந்து இதற்கு ஒரு புது வடிவம் கொடுக்கலாமே’ என்றார். ‘இந்த 744 அடிகளையும் பாட்டாக நான் பாடுகிறேன், நீங்கள் கருத்துரை செய்க’ என்று அவர் முடுக்கிவிட்டதின் விளைவாக, 24 ஆம் தேதி மே திங்களில் இத்தொடர் தொடங்கியுள்ளது” என்று பெருமையாக நம்மிடம் தமிழக அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநரான முனைவர் அருள் சொல்லி மகிழ்ந்தார். “புதுச்சேரியின் மேற்கில் அமைந்துள்ள ஒரு மாஞ்சோலையில் குயில் கூவுவதின் பொருளினை புரிந்து கண்டு மகாகவி பாராதியார் குயிலின் காதலை கவிதையாக எழுதியிக்கிறார். குயில் பாட்டில் ஒரு காளை, குரங்கு, முனிவர் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களைச் சேர்த்து ஒரு காவியமாக தனது ஒப்பற்ற கவிதையை பாரதியார் இயற்றி இருக்கிறார். மகாகவி பாரதியாரின் ஆளுமை, தேசபக்தி பற்றி எதிர்கால தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே குயில்பாட்டு பாடுவோம் ஆன்லைன் எபிசோட் பேரார்வத் திட்டம் (Passion project) ” என்கிறார் முனைவர் ஔவை அருள்.
“குக்கூ என்ற குயிலின் குரலில் காதல், அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், சூழல் ஆகிய பத்துப் பொருண்மைகளையும் ஒளியாலும், சூழலாலும், குரல் வெளிப்பட்ட முறையாலும் பாரதியார் உணர்கிறார். சின்னக்குயிலின் மடியில் வெட்டுண்ட நிலையில் கிடக்கும் சேரமானின் இறுதிப் பேச்சு, கண்ணகியின் மடியில் வெட்டுண்ட கோவலன் பேசிய இறுதிப் பேச்சை பல இடங்களில் குயில் பாட்டில் எனக்கு நினைவூட்டுகிறது. மேலும், ஐயுற்று மன்னன் மகன் வீசும் வாள்வீச்சு, காயசண்டிகையின் கணவன் உதயகுமரன் மீது வீசிய வாள் வீச்சும் குயில் பாட்டு படிக்கும்போது நினைவுக்கு வந்து வந்து போகிறது. பாரதியாரின் கவித்திறனுக்கும், கற்பனை வளத்திற்கும், புதியன புனையும் ஆற்றலுக்கும், சொல்லோவியத் திறனுக்கும் குயில் பாட்டு தனிப்பெரும் சான்றாகத் திகழ்கிறது” என்று உள்ளம் உருகுகிறார் என்று மனம் நெகிழ்கிறார் முனைவர் ஔவை அருள்.
கொரோனா பரவாமல் தடுக்க உலகமே பொது ஊரடங்கில் முடங்கியுள்ள சூழலிலும், இந்த இசையால் மயங்கி வருவதை யு-டியூப் மூலம் உலகமே கண்டு மகிழ்கிறது. பாரதியாரின் கவிதைகளை குயில்பாட்டு பாடுவோம் ஆன்லைன் இன்னிசைத் தொடர் மூலம் இனி உலகத் தமிழர்கள் மகாகவியின் பாடல்களோடு இணையலாம் என்பது பெரும் பாக்கியம் தான்!

Add a Comment