POST: 2020-07-04T10:46:37+05:30

ஔவை 85
*************

டாக்டர். கே ஆர் சிதம்பர குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்
===========================================

போற்றத்தகு பண்பாளர் திரு.ஔவை நடராசன் அய்யா அவர்கள் / வியக்கத்தகு வித்தகர் திரு.ஔவை நடராசன் அய்யா அவர்கள்
——————————————————————-

நான் 1961ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கல்லூரியில் எனது பட்டப்படிப்பைப் பயின்று வந்தேன்.
ஒரு நாள் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டாக்டர்.ஔவை நடராசன் அவர்கள் எங்கள் வகுப்பிற்குள் திடீரென நுழைந்து தனக்கே உரிய சொல்வன்மையுடன் ஒரு சொற்பொழிவாளரைப் போல் விரிவுரையாற்றத் தொடங்கினார், அவரின் பேச்சாற்றலால் நாங்கள் அனைவரும் மெய்மறந்து போனோம். என் வகுப்பு தோழர்கள் அவரை மாபெரும் நடிகர் திரு. சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டனர். இச்செய்தி மிக விரைவில் கல்லூரி முழுவதும் பரவத்தொடங்கியது. அனைத்து மாணவர்களின் விழிகளிலும் ஒளி நட்சத்திரமாய் அவர் மின்னினார்.
எங்கள் கல்லூரி நூலக கட்டிடத்தில் அவரின் திருமண வரவேற்பு விழா நடத்தப்பட்டதைக்கூட நான் மிகச் சரியாக நினைவில் கொண்டுள்ளேன். மேலும் எனது கல்லூரி நண்பர்கள் ’சிக்கல்’ எனும் தலைப்பில் ஔவை அய்யா குறித்த கவிதை ஒன்றை வாசித்ததையும் நான் கேட்டேன். அந்த கவிதை பின்வருமாறு:-

சிக்கல்

நடராசன் நண்பரொடு எங்கும் சுற்றும்
நடைராசன்! நாம் வெள்ளித் திரையில் காணும்
படராசன் அல்லஇவர் அறிவு வாதப்
படைராசன் பிடித்தபிடி யாகப் பேசும்
அட ராசன்!திட ராசன்!அன்பு ராசன்!
அழகுதமிழ்க் கவிதைகளை நிறுத்தக் காட்டும்
எடை ராசன்!இவருக்கு எழுந்த சிக்கல்!
இனம்புரியாப் புதுச்சிக்கல்! இன்பச்சிக்கல்!

வீட்டுக்கு வரும்நேரம் காலம் என்னும்
விதிமுறைகள் சதிமுறைகள்! எனது நட்புக்
கூட்டுறவு நேரத்தைக் குறைய வைக்கும்
குறைபாட்டுத் திட்டம்தான் என்பார் இன்றோ
மாட்டிக்கொண் டார் பெரிய சிக்கல் தன்னில்!
மரியாதையாய் அந்தி மாலை நேரம்
வீட்டுக்கு வராவிட்டால் என்ன ஆகும்
விழி அம்பு பாயாதா நெஞ்சு நோக்கி!

எட்டுகஜம் பத்துகஜ தூரம் மட்டும்
இருக்கட்டும் உன்வெளிச்சம் நிலவே! என்று
கட்டுதிட்டம் எவன்செய்வான்? அரட்டை நேரம்
கால்மணிதான் உனக்கென்று வாய் அடைப்புச்
சட்டமிட முடியாது எனக்கு என்பார்
சரியல்ல இனிஅந்தப் பேச்சு! வீட்டில்
எட்டடிக்கும் முன்இரவில் வருதல் வேண்டும்
இல்லையென்றால் கிளம்பாதா நெருப்பு வார்த்தை!

என்னாடா இதுபெரிய வம்பு வீட்டில்
இருந்திடுவோம் எப்போதும் எனநினைத்தால்
என்னாகும் அப்போதும்? அடிமை யாக
இருக்கின்றார் மனைவிக்கு என்போம் நாங்கள்!
துன்பம் தான்! சிக்கல் தான்! இந்தச்சிக்கல்
துடைக்கத்தான் நடக்கின்றார் வெளியில் கொஞ்சம்!
அன்புருவ நடராசன் பழைய ஆளா?
ஆகிவிட்டார் இப்போது புதிய ஆளாய்!

ஆண்டுகள் உருண்டோடின. அதற்குள் வெற்றி மாலைகள் பல அவரைத்தேடி வந்திருந்தன. அவரின் வாழ்க்கை தமிழ் வரலாற்றின் ஒரு பகுதியாக அமைகிறது.

ஒரு அறிஞராக, 1996 ஆம் ஆண்டில் ஒரு கல்விப் பணிக்காக மாநிலக் கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். ஒரு நாள் முழுவதும் நான் அவருடன் நெருக்கமாக இருந்தேன், தனது உரைநயத்தாலும் மதிநுட்பத்தாலும் அந்த அறை முழுவதையும் அவர் ஒளிரச் செய்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த பேராசியர்களின் மீது அன்பு மழையையும் அவர் பொழிந்தார்.

மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் திரு.கு.ராஜவேலு அவர்களின் புத்தக வெளியீட்டின்போது அய்யா அவர்களின் உரையை நான் கேட்டேன். ஔவை அய்யா பேசியபோது ஒவ்வொருவரும் கரவொலி எழுப்பினர். அதிக கரவொலி எழுப்பிய மிக முக்கிய நபர் திரு. ஆர். வெங்கட் ராமன் அவர்கள் .ஆம், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட் ராமன் தான் அவர்.

டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் அனைவரையும் நேசிப்பதில் தனித்துவமானவர்.

நீங்கா நினைவுகளுடனும் மிகுந்த மரியாதையுடனும்
டாக்டர். கே ஆர் சிதம்பர குமாரசாமி
முதல்வர் (ஓய்வு), அரசுக் கல்லூரி, பொன்னேரி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *