கலைமகள் – ஜுலை 2020 வெளியான முனைவர் ஔவை நடராசன் கட்டுரை
வள்ளலார் செய்த புதுமைகள்
=======================
அருளாளர்கள் வாழையடி வாழையாக வருவதுண்டு. திருவள்ளுவர் முதலாகத் தோன்றிய சான்றோர் தாம் பெற்ற அருளார்ந்த அருளின்பத்தைத் தாமே துய்த்து மகிழாமல் உலகத்துக்கு வழங்குவதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார்கள். இன்றும் சிலர் அவ்வாறு திகழ்கின்றனர்.
தாமே துய்த்து மகிழ்பவர்களைச் சீவன் முத்தர்கள் என்று தத்துவ உலகத்தில் சொல்வார்கள். “காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவபோகம் என்னும் புத்தமுதம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவில் கிடக்குது ஐயையோ இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரீர் செகத்தீரே” என்றார் தாயுமானவர்.
இலக்கியமாய் இருந்ததை இயக்கமாக்கிப் புதிய வழிகாட்டியவர் வள்ளலார். வடலூரில் பசி தவிர்த்தல் செய்யத் தருமச்சாலையை உருவாக்கினார். இது வடலூரில் மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. அக்காலம் தாது ஆண்டு பஞ்சம் என்று கூறினர். மக்கள் தவித்து துடித்த காலமது. இந்த வறட்சிக் கொடுமை பல ஆண்டுகள் நீடித்ததாம். பசி தாளாமல் மக்கள் மடிந்ததுண்டு. பிணங்களைக் கூட உண்டு பசி தணித்துக்கொண்டனர் என்றெல்லாம் கொடுமையின் உச்சத்தை சிலர் குறித்தனர். நாற்பதுகளில் நேர்ந்த வங்கத்துப் பஞ்சம் போல தமிழகத்திலும் கொடிய வறட்சிக் கேடு அக்காலத்தில் நிலவியது. ஏறத்தாழ நாற்பத்து ஐந்து பஞ்சங்கள் நிலவின என்று அந்நாளில் குறித்தனர்.
பசித்துன்பத்தை வள்ளலார் காட்டியது போல உலகில் எவருமே பேசியதில்லை. வள்ளலார் வாழ்ந்த பத்தொன்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருபத்து நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டன என்பர். வள்ளலார் பாடல்களில் பசி நீக்குதல் பெரிதும் வற்புறுத்துவார். நாடறிந்த சிதம்பரத்திற்கு வடக்கே மருதூர் என்’னும் சிற்றூரில் வாழ்ந்த இராமைய்யா பிள்ளையின் ஐந்து மனைவியரும் மகப்பேறு இன்றி மறைந்தனராம். ஆறாம் முறையாக திருமணம் செய்து அவருக்கு ஐந்தாம் மகனாக இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டில் தோன்றினார். அண்ணன் பொறுப்பில் குடும்பத்தினர் தாய் வீடாகிய சென்னை வந்தனர். சென்னையில் தொடக்க காலத்தையும் தென்னாற்காடு மாவட்ட சிற்றூர்களில் பிற்காலப் பகுதியையும் வடலூரிலும் சித்தி வளாகத்திலும் நிறைவாழ்வை நடத்தினார். வள்ளலார் மருதூரில் பிறந்திருந்தாலும் (05.10.1823) தம்முடைய நினைவு தெரிந்த நாளில் இருந்து ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு மேலாகச் சென்னையிலே வாழ்ந்தார். வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை அவர் பாடல்களில் குவிந்துகிடக்கும் செய்திகளில் இருந்து அறிய முடிகின்றன.
“உயிர்தான் உயிர் இரக்கந்தான் ஒன்றல்லது இரண்டிலை
இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும்”
என்பது திருவருட்பா.
இந்த உருக்க உணர்ச்சிதான் அவரை பொதுநலம் காட்டிய புதுமைத் துறவியாக காட்டியது.
பசியால் நேர்ந்த அவலத்தை ஏறத்தாழ முப்பதுக்கு மேற்பட்ட நிலைகளால் அடிகளார் அடுக்கிச் சொல்லி நம் மனத்தைப் பிழிகிறார். இந்த நிலையில்தான் பசிக்கு உணவு, உணவுக்கு நெல், நெல்லுக்கு கதிர், கதிர்தான் பயிர், பயிர் வாடினால் உயிர் வாடும் என்று நெகிழ்ந்து நெகிழ்ந்து வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாடல் வருத்த த்திலேயே பிறந்தது.
வடலூர் அல்லாமல் நாடு முழுவதும் தருமச் சாலைகளை ஆங்காங்கே நிறுவ வேண்டும் என்று அவர் உள்ளம் நினைத்தது. அவரோ, ஏதுமில்லாத ஏழைத்துறவி. வடலூரில் மட்டுமே எடுத்துக்காட்டாக முன்மாதிரியாக சாலையை திறக்க முடிந்திருக்கிறது. பசி தீர்ந்த பின் கல்விதானே வேண்டும், செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். இதன் உட்கிடையை வள்ளற்பெருமான் நன்கு உள்வாங்கிக் கொண்டார். அதனைச் செயற்படுத்தவே கல்விச்சாலையையும் தொடங்கி, தாமே பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் மாறினார்.
வேண்டிய வருவாயோ, பிற செலவினங்களை ஏற்கவோ, முடிவு செய்யவோ நேரமில்லை. இந்த இடர்ப்பாடான நிலையில் எந்த அளவு கல்விச்சாலையை நடத்த முடிந்தது என்ற குறிப்புக்கள் கிடைக்கவில்லை. அந்தக் காலத்திற்கேற்ப தமிழ், வடமொழி, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தது நீண்ட நோக்கம் உடையது. அவர் காலத்தில் மட்டுமில்லாமல் எதிர்கால உலகத் தொடர்புக்கும் உறவுக்கும் தவிர்க்க முடியாத நெருக்கமுடையது ஆங்கிலம் என்று கருதினார்.
திருவள்ளுவர் தொடங்கி, அருளாளர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்றே அறிவுறுத்தினார்கள். அவர்கள் அறிவுரைகள் ஏட்டளவிலேயே நின்றுவிட்டன. பிணி தீர்த்தல், தேவைக்கு உதவுதல், பாம்புக்கடியிலிருந்து மீட்டல், செத்தாரை எழுப்புதல் போலச் செய்திருக்கிறார்கள், என்பதை பாடல்களிலும், பிற நூல்களிலும் காணலாம். அற்புதங்கள் மட்டுமே ஒருவரை மகான் ஆக்குவதில்லை.
சமுதாய வாழ்வில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய சிலவற்றை வள்ளலார் வகுத்தார். அவற்றுள் முக்கியமானவை
1.கொலை, புலையற்ற உணவு, இதுவே முதல் நோன்பு.
2 .சிற்றுயிர்க்கு இரக்கம் காட்டுதல் அறிவு சமயத்தின் அடிப்படையாக அமைந்தது.
பல தெய்வங்கள் வழிபாடு ஒழிக்கப்பட்டு ஒருவரே கடவுள் என்ற கோட்பாடு வலியுறுத்தியதால் இந்த அடிப்படையில் ஓமம், பரிகாரம், யாகம், முதலியன ஒழிக்கப்பட்டன. சாதி, குலம் என்பவை அழிக்கப்பட்டன.
தீட்சை முதலியன அறவே இல்லை. எனவே தம்பிரான்கள், மடங்கள், சாமியார்கள் சமுதாயத்தில் செலுத்தி வந்த மேலாதிக்கத்துக்கும் இடமில்லை.
இறப்புத் தீட்டுக்காக்க வேண்டியதில்லை. கணவன் இறந்தால் மனைவி மங்கலச் சின்னங்களை நெற்றித்திலகம், பூ, தாலி முதலியவற்றை அகற்ற வேண்டியதில்லை. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டா. இறந்தவர்களைப் புதைக்க வற்புறுத்தினார். இதற்குக் காரணம் பல சொல்லப்படுகின்றன என்றாலும் நீர்க்கரைகளில் (பலர் எரித்தார்கள்) வசதியில்லாதவர்கள் புதைத்தார்கள். இறந்த உடலத்தை சுடுகிறபோது, நெளிவதைக்கூட உடம்பு துடிப்பதாகவே வள்ளலார் பார்த்தார். இதைத் தவிர்ப்பதற்காகவே, அவர் புதைக்கச் சொன்னார் போலும். புல்லும் கருகுவதைப் தாங்கிக்கொள்ள முடியாத வள்ளலார் துயரம் நாம் அறிந்ததே. நகைகள் அணிய வேண்டாம் என்கிறார் வள்ளலார். காது மூக்குகளில் நகை அணிவதைக் கடவுள் விரும்பியிருந்தால் நம்மைப் பிறப்பிக்கும்போதே காது மூக்குகளில் துளையிட்டு அனுப்பியிருப்பாரே என்றார். வள்ளற்பெருமான் செய்த புதுமைகளில் முக்கியமானது. சமயங்கள், பொதுமை, சமரச உணர்வு, சமுதாய நலம் பேணுவதை மறந்து பூசலுக்கு இடம் தந்தனர்.
இருப்பதைத் திருத்துவார்கள் எல்லாரும் ஆனாலும், வள்ளலார் புதுமையான சமயம் ஒன்றையே நிறுவிவிட்டார். இச்சமயத்துக்கு பெயர் “சமரச சுத்த சன்மார்க்கம்”. இதற்கு என தனிக்கொடியே அமைத்தார். கோயில்களைப்போல மேளதாளம், குருக்கள், பட்டர், அந்நிய மொழியில் அருச்சனை நெய்வேத்தியம், திருவிழா வழிபாடு. விக்கிரகம் : ஏதுமில்லாத ஒளிவிளக்கு இதற்கு மந்திரம் : அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை இந்த மந்திரத்திற்கு உரியவர்களாக உலகோர் அனைவரும் இடம்பெறலாம்.
தோற்றத்தில் புதுமை! வேறு எந்தச் சமய வாதியும் பூண்டிராத கோலத்தில் வள்ளலார் இருந்தார். தலைமுடியை நீள வளர்த்திருந்தார் என்பர். அதனை வெள்ளை உடையால் மூடி முக்காடு அணிந்திருந்தார். உடம்பை முழுதுமாக மூடியிருந்தார். உடம்புச் சூட்டை எப்போதும் கதகதகப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அவர் கூற்று.
காவி, சடைமுடி, துளசிமணி மாலை, தண்டகம், கமண்டலம், தலை முண்டிதம் ஏதுமில்லாத இல்லறத்தார் வடிவில் வந்த முழுத்துறவி, இவ்வாறு தோற்றம், துறவு, தொண்டு, நிறுவனங்கள் என்ற வகையில் புதுமைகளைச் செய்திருக்கிறார். பொதுவாகவே, போலித்துறவிகளைப் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், தெருக்கூத்தில் பாடப்பெறும் ஒரு பாடலை நான் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பெண்டு பிள்ளை இல்லாதோன்
பிழைக்க வழி இல்லாதோன்
சண்டையினால் ஊரைவிட்டோன் தங்கமே
சாமியாய்ப் போனாரடி ஞானத்தங்கமே
பூசாரி பொய்யன் புலவனும் பொய்யன்
அந்த பூதேவன் என்பவனோ
அடங்காத பொய்யனடி ஞானத்தங்கமே
வாதிபுளுகன் மந்திரவாதி வீண் புளுகன்
சோதிடன் என்பவனோ தங்கமே
சுத்தப் புளுகனடி ஞானத்தங்கமே
இந்த நிலையில், தூய பிறவியாக புதுமைத் துறவியாக ஊரன் அடிகளார் அழைத்தது போல புரட்சித் துறவியாக வள்ளலார் செய்த புதுமைகள் பலவாகும். இந்தப் புதுமைகள் நிறைவேற வேண்டும் என்பது சமுதாயத்தின் விழைவுமாகும்.

Add a Comment