POST: 2020-07-13T09:53:26+05:30

தினசெய்தி நாளிதழில் இன்று (13.07.2020) வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்
(பகுதி -43)

========================================
சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் கிடைக்கும்
========================================

கிரேக்க மாமேதை அரிஸ்டாடில்தான் அறிவுத்துறைகள் அனைத்திலும் ஆழமாகத் தோய்ந்து ஆராய்ச்சிகள் நடத்தியவர். அவருடைய நூல்களே ஐரோப்பிய அறிவு வளர்ச்சியின் அடி நிலைகளாகும். அதனாலேயே ஐரோப்பியர்கள் அவரையே தம் இனத்திற்கு கிட்டிய பேரறிவுப் பிழம்பாகப் போற்றுகிறார்கள். மனிதனுடைய சிறப்பியல்பு எதுவாக இருக்கும் என்பது பற்றி நல்லறிஞர் அரிஸ்டாடில்தான் முதலில் ஆராய்ந்தார். ‘‘மனிதன் சிந்தனை செய்யும் திறத்தால் சிறப்படைகிறான்” என்று முடிவுரைத்தார்.
நாம் நாள்தோறும் எளிதாகச் சொல்லும் ‘மனிதன்’ என்னும் சிறு சொல்லும் ஆழ்ந்த பொருளைக் காட்டுகிறது. மனிதன் என்பதன் வேர்ச்சொல்லான ‘மன்’ என்பதன் பொருள் சிந்தித்தல் என்பதாகும். ஆகவே, சிந்திப்பவனே மனிதன் என்று கருத வேண்டும்.
ஆனால், விழித்திருக்கும் நேரம் முழுவதும் இது நடைபெறுவதில்லை. இடையிடையே நாம் ஏதேனும் ஒரு பொருளை அறிய விரும்புவதும் ஏதேனும் ஒரு செயலைப் பற்றி முடிவு செய்ய வேண்டியதும் நேர்கிறது. அப்பொழுது நாம் அவற்றில் நம்முடைய மனத்தை அதிக நேரத்தை நிலைத்து நிற்கும்படிச் செய்கிறோம். ஆனால், நாம் சிந்திக்கும் முறையில் நம்முடைய மனம் அவற்றில் அதிக நேரம் ஆழ்ந்துவிட வேண்டிய தேவையில்லை. நாம் அறிய வேண்டிய பொருளைப் பற்றியோ முடிவு செய்ய வேண்டிய செயலைப் பற்றியோ நுழைந்து ஆராயப் புகுந்தால் மட்டுமே நம்முடைய மனம் நெடு நேரம் அவற்றில் நிற்க வேண்டிய நிலை உண்டாகும். ஆனால், நாமோ காத்திருக்காமல் பலவற்றை விரைந்து முடிவு செய்து விடுகிறோம்.
நாம் நன்றாக அறிந்த ஒரு நிகழ்வை நினைவில் கொள்ளலாம். இங்கிலாந்து நாட்டில் நியூட்டன் உலக அறிவியல் பேரறிஞராகத் திகழ்ந்தார். அவர் ஒருநாள் தோட்டத்தில் அமர்ந்தபடி இயற்கை எழிலைக் கண்டு களித்திருந்தார். அப்பொழுது செழித்த ஒரு மரத்திலிருந்து ஓர் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் அவர், ‘‘இப்படிப் பழம் கீழே வந்து விழக் காரணம் என்ன?” என்று சிந்திக்கலானார். பொதுவாக நாம், அதைப்பற்றி நினைப்பதற்கு ஒன்றுமில்லை. சிந்திக்க வேண்டிய தேவையும் அதில் என்ன இருக்கிறது; பழம் விழுவதற்குக் காரணம் பழுத்ததுதான் ; பழம் பழுத்துவிட்டால் தானே கீழே விழாமல் என்ன செய்யும்? என்று எண்ணி விட்டுவிடுவோம். அல்லது யாரேனும் சிந்திக்க வேண்டுமென்று சொன்னால் இதைச் சொல்லிக் காட்டி, அவர்களை எள்ளி நகையாடுவோம். ஆனால், நியூட்டனோ அதைப் பற்றி ஆழ்ந்து தொடர்ந்து சிந்தித்தார். பழம் பழுத்துவிட்டதனால் மரத்தில் தங்கியிருக்க முடியாது. அதை விட்டுப் பிரிந்துவிட வேண்டியதுதான். ஆனால், அதற்காக அது கீழே நிலத்தில் விழுவானேன்? மரத்தை விட்டுப் பிரிந்த இடத்திலேயே தங்கி நின்றால் என்ன? அப்படி நிற்காவிட்டாலும் அது மேலே போகலாம் அல்லவா? இறங்கிக் கீழேதான் வர வேண்டுமென்ற கட்டாயம் என்ன? என்ற எண்ணங்கள் அவர் மனத்தில் படர்ந்தன. இப்படி ஆராய்ந்து பழத்தைக் கீழே விழும்படிச் செய்ய வேண்டுமானாற் நிலத்திடம் ஒரு கவர்ச்சிச் சக்தி ஈர்ப்பாற்றல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த முடிவே இயற்பியல் வளர்ச்சி அனைத்திற்கும் அடிப்படையான உண்மையாகும். இவ்விதம் நியூட்டன் சிந்தனையைச் செலுத்தியதால் புவி ஈர்ப்பாற்றலை உலகு கண்டு வியந்தது. அதன் பயனாக விளைந்துள்ள நாகரிக வளர்ச்சிக்கு எல்லையில்லை.
மனம் ஆயிரம் எண்ணும். “கருதுப கோடியும் அல்ல பல” என்பது திருக்குறள். ஒரு முடிவை ஓராயிரம் முறை திரும்பத் திரும்ப எண்ணினால்தான் நினைவு என்ற இழை வன்மை பெறும். எண்ணியர் திண்ணியராக முடியும். ‘சிந்தனைக் கிளைகளில்தான் சீர்திருத்தக் கனிகள் குலுங்கும்’ என்ற தொடரை நாவலர் மேடையில் சொல்லாத நாளில்லை. இப்படி சிந்தனையாற்றலில் கனிந்தவர்களையே அறிஞர், கலைஞர், கவிஞர், எழுத்துத் திலகம் என்று கூறலாம்.
‘நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார்’ என்று மணிவாசகர் தற்சிந்தனை செய்ததுபோல, தமிழ் எழுத்தாளர்கள் நாம் யார்? நம் பரம்பரை எத்தகையது? நம்மொழி எத்திறத்தது? நம் வாசகர்கள் எவ்வண்ணர்? நம் எழுத்து நோக்கங்கள் யாவை? அவற்றின் எதிர்கால விளைவுகள் என்ன இவற்றையெல்லாம் நாம் தற்சிந்தனை செய்ய வேண்டும்.
நம் எழுத்து முன்னோர்கள் யார் என்று சுழி வேகமாக எண்ணினாலும், தொல்காப்பியர் சங்க சான்றோர் திருவள்ளுவர், இளங்கோ, திருத்தக்கதேவர், சேக்கிழார், கம்பர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், இளம்பூரணர், சிவஞானமுனிவர், பவணந்தியார், காரைக்காலம்மையார், ஆண்டாள், வள்ளலார், வேதநாயகம், உ.வே.சா. மறைமலையடிகள், திரு.வி.க., பண்டாரத்தார், மு.வ., ஔவை துரைசாமி, பாவாணர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வ.வே.சு., புதுமைப்பித்தன், கல்கி, மௌனி, சோமலெ என ஆயிரக்கணக்கான முன்னோடிகள் பலர் தமிழ் வானத்தில் ஒளிர்ந்தனர். இப்பெருமைப் பரம்பரையில் நாம் தமிழ்ப் பிறப்பு எடுத்திருப்தற்குப் பெருமிதம் எய்துகின்றோம். அதுவும் எழுத்தாளராகப் பிறந்து சிந்தனை செய்து தமிழ்ப்பணி செய்வதற்கு மகிழ்கின்றோம். நம் முன்னோரை நாம் மதிப்பது போல, நம்பின்னோர் நம்மை நல்ல முன்னோர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற அவலக் கவலையும் நமக்கு இல்லாமல் இல்லை என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் எழுத்தாளர் மாநாட்டில் எடுத்துரைத்தார்.
‘மாவண் தமிழ்த்திறம்’ என்பது மணிமேகலையில் சாத்தனார் மொழிந்தபடி, தமிழுக்குப் பல துறைகளிலும் சொல்லும் திறமுண்டு; எழுத்தாளர்களாகிய நமக்குத் தமிழாக எழுதும் ஆற்றலும் உண்டு. தவறான மொழிக் கொள்கைப் போக்கால் நம் படைப்புகள் வலுவிழக்கின்றன என்று வ.வே.சு.ஐயர் குறித்ததைக் காணலாம்.
‘கடைசிக் கதையாவது எங்கள் ஊர் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை. கிட்டத்தட்ட அது பேசியபடியே எழுதியிருக்கின்றேன். படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகின்றேன். இருப்பினும் முற்றிலும் அது பேசியபடியே எழுதினால் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளை இன்னு, போரும் என்று எழுத வேண்டி வரும். படிப்போர் பொருள் கண்டுபிடிப்பது கடினமாகப் போய் விடும் என நினைத்து அவை போன்ற மொழிகளை இலக்கணப்படுத்தியே எழுதியிருக்கின்றேன்.’
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழிச் செம்மை குறித்து வரைந்த கோட்பாடு இன்றைய எழுத்தாளர்கட்கு வேண்டிய அறிவுரையாகும். ‘நிலை பெறுமாறு எண்ணுதியேல்’ என்று திருநாவுக்கரசர் கேட்டபடி நம் புதுமைப் படைப்புக்கள் எதிர்கால மன்பதைக்குச் சென்று இயக்க வேண்டுமானால் தமிழ் எழுத்தாளர்கள் பெயருக்குத் தகுந்த தனித் தமிழ் எழுத்தாளர்களாக சிந்தனை வளம் மிக்கவர்களாக ஒளிபெறல் வேண்டும். இதுவே நிலைபேறும் வழிப்பேறும் ஆகும். இதுவே நம் வேண்டுகோள் என்பது மூதறிஞரின் முன்மொழியாகும்.
புலவர், கவிஞர், கலைஞர், பேராசிரியர் என்றால் புரட்சித் தலைவர் அவர்களைக் கண்டு பேச பெரிதும் விரும்புவார். அவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டதோடு குறுக்கே எதனையும் சொல்ல மாட்டார். திரைக்கதை, பாடல், காட்சி மாற்றம் முதலியவற்றைப் பற்றி பலமுறை எண்ணிப் பார்த்து காட்சிகளை எடுத்த பின்னாலும்கூட செலவைப் பற்றி கவலைப்படாமல் பொருத்தமாக மாற்றுவாராம். அலைமோதும் எண்ணங்களில் அமிழாமல் தனக்கு வேண்டிய கருத்தை சிந்தித்து முடிவு காண்பார். கதைகளாலும், காட்சிகளாலும் மக்கள் திருந்த வேண்டும் என்பது அவரின் நோக்கமாகும். பாடல்களையும் அப்படியே திருத்துவார். அப்படி ஒரு கதையைத் திருத்தியபோதுதான் தமிழறிஞர், எழுத்தாளர் முதலிய கலைஞரின் மக்கட் செல்வங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இரண்டு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டாராம்.
திருவனந்தபுரத்தில், இப்போதும் வாழ்ந்து வரும் கலைத்திலகம் நீல பத்மநாபன் அவர்கள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற பழம் பெரும் எழுத்தாளர் ஆவார். கேரளத் தமிழ் நடையில், தமிழ் நெடுங்கதைகளை எழுதி நிலைத்த புகழ் பெற்றவர் திருவனந்தபுரத்தில் நான் அவரைக் கண்டு பேசி இல்லத்தில் மதிய விருந்து அருந்தியதை இப்போதும் எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன்.
மின்னியல் பொறியாளராக பல்லாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற நீல பத்மநாபன் அவர்களை நேரில் காணாமலேயே நூலை வெளியிட்ட பெருமை புரட்சித்தலைவரைச் சாரும். அந்த உரைதான் தொடர்கிறது…
1977ஆம் ஆண்டு நடைபெற்ற நீல பத்மநாபன் எழுதிய ‘உறவுகள்’ என்னும் தமிழ் நாவலுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆற்றிய உரை…
‘‘சில நேரங்களில் ஒரு சிலருக்குக் கிடைப்பதற்கரிய வாய்ப்புக் கிடைப்பதுண்டு. அதைப்போன்ற ஒரு வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது.
சில நேரங்களில் நேரடியாக எழுத்துலகில் பங்கு பெற முடியாவிட்டாலும், சில பரிதாபத்துக்குரியவர்கள் தாங்கள் எழுதி, யாருடைய பெயரிலோ வெளியிடுகிறவர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அப்படிப்பட்ட நிலை இங்கே இல்லாமல், தகுதி உள்ளவர் எழுதி, அதை நல்லோர் மத்தியில் பாராட்டக்கேட்டுப் பரிசு பெறுகிற இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
விஞ்ஞான வளர்ச்சியில் எப்படி எல்லாம் மாற்றம் ஏற்படுமோ என்று கருதத்தக்க நிலையில் விளையும் உணர்வுகள் – விளைவுகள் – அத்தனையும் தமிழால், அதன் சுற்றுச் சார்புள்ளனவாக இருக்கும் என்பதைக் கவனிக்கும் அவசியத்தில் இந்த நாடு உங்களைப் பாராட்டியே தீரும்.
ஒரு கதாசிரியர், ஒரு கதாநாயகனை உருவாக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். பிறகு ஒரு வில்லன் பாத்திரம் ஒன்றை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
கதாசிரியர் எதை நியாயம் என்று கருதுகிறரோ, அது நீதிக்கு மாறுபட்டது அல்ல என்று கருதுகிறரோ அதனை அந்தக் கதாநாயகன் பாத்திரத்தில் வைப்பார். அதற்கு எதிர்மாறான கருத்தை-குணாதிசயத்தை-எதிரியின் பாத்திரத்தில் வைப்பார். அப்படி அவர் சொல்கிறபோது இந்தச் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் அந்த எழுத்தில் கூறுகிறார் என்று அர்த்தமாகிறது.
நான் எழுத்தாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன், எழுதும்போது எங்களையும் மறந்து விடாதீர்கள் என்று. இப்படி நான் கூறுவது உங்கள் உள்ளத்தை ஈர்ப்பதற்காக அல்ல நான் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் கிடையாது. மக்களின் வாழ்வைப்பற்றிக் கவலைப்படுகிறவன்!
இந்த மூன்று மாதக் காலத்தில் நான் பல பேர் கூறிய பிரச்சினைக்கு வாதம் செய்து அதைப் பெரிதுபடுத்தாமல் மக்களின் பிரச்சினைகளையே கவனித்து வருகிறேன். மக்களுக்கு நானும், எனது நண்பர்களும் சரியாகக் கடமையாற்றுகிறோமா என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
எப்படிக் கடமையாற்றினால் தமிழர்களின் வாழ்வு பின்னால் மேன்மையுறும் என்று ஆய்ந்து பணிபுரிகிறோம். நீங்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளை எங்களுக்கு வழிகாட்டுகிறவைகளாக ஏற்போம்.
இந்த நாட்டின் பண்பாட்டை, யாரும் தகர்க்க முடியாத அளவுக்கு உங்கள் எழுத்துகள் பயன்பட வேண்டும்.
ஒரு பக்கம் நீதிபதி-மறுபக்கம் வழக்கறிஞர்-இடையில் நான். இங்கே சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் கூடியிருக்கிறீர்கள்.
இந்த உறவுகள் தொடரட்டும்-வளரட்டும்.
இந்த உறவுகளின் சொந்தக்காரர் – சிறந்த நாவலாசிரியர் நீல பத்மநாபன் இன்னும் பல்லாண்டு எழுத்துச் சேவையாற்றிட என் அன்னையை இறைஞ்சுகின்றேன்.”

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *