POST: 2020-07-17T12:08:40+05:30

குமுதம் இதழில் 14.07.2020 அன்று வெளியான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை

=========================
எவர் தொடுவார் இந்த உயரம்!
எங்கள் வைரமுத்துவே சிகரம்!
=========================

டாக்டர் ஒளவை நடராசன்

(மேனாள் துணைவேந்தர் – தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)

திறமைகளின் புதையலாகத் திகழ்பவர் கவிப்பேரரசு வைரமுத்து என்று நான் பெருமிதமாகக் குறிப்பிடுகிறேன்.

66 அகவையைத் தொட்டிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவை 86 இல் இருக்கும் நான் வாழ்த்துவதைப் போலவே, இன்று இருந்திருந்தால் 96ஐத் தொட்டிருக்கும் முத்தமிழ்க் கலைஞர் முத்தமிட்டுத் தழுவிப் போற்றுவதையும் நாம் கண்டு மகிழ்ந்திருக்கலாம்.

ஒருமுறை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் என்னிடத்தில் பேசும்போது கேட்டார், “வைரமுத்துவினுடைய நடை, உடை, நளினம், ஒலிப்பு, சிரிப்பு இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவர் உங்களுக்கு மாணவரா என்று நான் கேட்க விரும்புகிறேன்” என்றார். நான் சிரித்துக்கொண்டு சொன்னேன், “வைரமுத்து எனக்கு மாணவர் அல்லர்; ஆசிரியர்” என்றேன். இயக்குநர் பாலச்சந்தருக்குப் பெரிய வியப்பு. “அது எப்படி ஆசிரியர் சொல்லுங்கள்” என்று கேட்டார். “எனக்குத் தெரியாத பலவற்றை, புரியாத சிலவற்றை எவ்வளவு அழகாக எடுத்து எழுதிக் காட்டியிருக்கிறார். உங்கள் படங்களின் பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் நான் புதிய உலகத்துக்கே போய் வருகிறேன். ஆகையினால் வைரமுத்து எனக்கு ஆசிரியர்” என்றேன். இயக்குநர் பாலச்சந்தர் எவ்வளவு திறமையானவர் என்பதற்குச் சான்றாக, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “ஆமாம். வைரமுத்து ஆசிரியர் தான். நீங்களோ பேராசிரியர்” என்றார்.

கவிப்பேரரசு அவர்களை மாணவப் பருவத்தில் இருந்தே அறிவேன். இன்று எட்டிப்பார்க்கவும் முடியாத மலை உச்சியில் இருக்கும் போதும் அணுஅணுவாகக் கண்டு ஒவ்வொரு பருவத்தையும் பார்த்துப்பார்த்து எல்லையில்லாத விம்மிதம் அடைகிறேன்.

உள்ளங்கால் தொட்டு உச்சந்தலை வரை பாட்டு வெள்ளம் உணர்வின் உயிர்ப்பாக எப்போதுமே ஊறித் ததும்பிக் கொண்டிருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன்.

அவர் அமைதியாக அமர்ந்து இருந்தாலும் கவிஞரின் நெஞ்சத்தில் அலைகடல் கரைகடந்து புரண்டு கொண்டிருப்பதையும் அவர் விரல் நகத்தின் அசைவுகளில் கூட இரண்டு விருத்த வரிகள் வந்து விழுந்து விடுமோ என்பது போல நடமாடும் கவிதையாகவே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

வைரமுத்து நினைத்திருந்தால் தான் படித்து முடித்த கல்விக்காக கல்லூரியில் பேராசிரியராக மாறியிருக்க முடியும். ஏன்? அவருக்கிருந்த வாய்ப்பினைக் கருதிப் பார்த்தால், துணைவேந்தர் பொறுப்பு என்பதெல்லாம் அவர் தொட்டுவிட்ட பொறுப்புக்கள் ஆகியிருக்கும்.

விரிந்து பரந்த இந்திய நாட்டின் பாடலாசிரியர் விருது என்று பார்த்தால் ஏழு முறை பெற்றவர்; அவரைத்தேடி எண்ணற்ற பட்டங்களும் பாராட்டுக்களும் வந்து குவிந்திருக்கின்றன. இவற்றைப் பட்டியலிட்டாலே ஆண்டுக்கு ஒன்று என்று கணக்கிட்டால் கூட அறுபத்து ஆறினை எப்போதோ தாண்டிவிட்டார்.

எனக்குத் தெரிந்த வரையில், ‘மூன்றாம் உலகப்போர்’ நாவலுக்கு 10,000 அமெரிக்க டாலரை அயல்நாட்டுப் பெருமகனார் பரிசாக வழங்குவது என்பது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மட்டுமே வாய்த்த மகத்தான சிறப்பாகும்.

வைரமுத்துவிற்குக் கற்பனை வெள்ளம் போலப் பெருகும் என்றாலும், உணர்வலைகள் எப்போதும் மேலோங்கிருக்கும். தன்மானம் என்பது எந்தக் கணத்திலும் அவரிடத்தில் தழலாகப் பொங்கி வழியும். பகுத்தறிவு உணர்ச்சி என்பது அவர் உடல் முழுவதும் படர்ந்த நரம்புப் பின்னலாகும். அவர் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் கூட ஆழ்ந்த சிந்தனையில் என்றோ நினைத்த கருத்தை அந்தக் கணத்துக்குத் தேடிக் கண்டுபிடித்து அமைப்பதாக இருக்கும்.

பாட்டு வாத்தியார், பாடலாசிரியர், கவிஞர் என்றெல்லாம் திரை உலகத்தில் அழைத்த காலத்தில் கவிப்பேரரசு என்ற ஒரு பெரும் தகுதியைப் பெற்றவர் இவர்தான் என்று சொன்னால் மிகையாகாது. கவியரசரை கதையாசிரியராக, கட்டுரை வரைவாளராக, நாடகப் புனைவாளராக, நயம்படப்பேசும் நல்லறிவாளராகப் பார்த்திருக்கின்றோம். திரைப்பாடல்களில் அவர் பெற்றிருக்கும் வெற்றி என்பது அவருடைய புகழ் ஒளியில் வெற்றி வைரத்தில் ஒரு பகுதியை மட்டும் காட்டுவதாகத்தான் முடியும்.

இதுவரையில் எனக்குத் தெரிந்தவர்களில் தாம் கொண்ட கொள்கையில் விடாப்பிடிவாதமாக இருந்தது மட்டுமில்லாமல் எவ்வளவு பெருமை உடையவர்களாக எவர் இருந்தாலும் தன்னுடைய தன்மானத்துக்கு ஒரு இழை பழுது ஏற்படுகிறது என்றால் வேழங்களைக்கூட விலக்கிவிட்டு நடக்கின்ற வீரமறவராக வாழ்ந்து வெற்றிகளைத் தொடர்ந்து தொட்டவர் வைரமுத்து.

நான் எப்போதும் நினைந்து உருகும் பாடல் ஒன்று கூறுங்கள் என்று பிபிசி வானொலி நிலையம் கேட்டபோது, எல்லோருக்கும் தெரிந்த எளிய சொல் உயிர்.

‘உயிரே! உயிரே’ என்று தொடங்கி ‘என் கண்ணோடு கலந்துவிடு; மண்ணோடு கலந்துவிடு’ என்ற பாட்டு வரியைப் போல வரிகளுக்கு ஏற்ற அழகும் அந்த வரிகளுக்கு அமைந்த இசையினுடைய பொலிவும் இதுவரையில் என் நெஞ்சை வேறு எந்தப் பாடலும் தொட்டதில்லை என்று சொன்னால் பிற பாடல்களை ஏன் விட்டுவிட்டீர்கள் என அவர் வருந்த மாட்டார் என நினைக்கிறேன்.

“என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன்”

என இந்தப் பாடலில் வரிகள் நீளும்போது, மனம் விரும்பிய பெண்ணை மணக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் மடலேறத் துணியும் சங்க இலக்கியத் தலைவன் ஒருவனின் பழுதுபடாத காதலைப் பார்க்க முடிகிறது.

“நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா ”

இந்த இரண்டாம் நூற்றாண்டுத் தமிழ் இருபத்தோராம் நூற்றாண்டில் ஒருபடப் பாடலின் பல்லவியாய் மலர்ந்ததும் தாய்ப்பாலையும் தாய்மொழியையும் நினைவு தெரியும் முன்பே மறந்த இந்த மண்ணின் பிள்ளைகள் இந்தப் பாடலை ஒலிநயம் குறையாமல் பாடித் திரிந்ததும் நம் கண் முன்னே வைரமுத்து நிகழ்த்திக் காட்டிய அதிசயம். இந்தப் பாடலில் ‘கொற்றப்பொய்கை’ என்னும் ஒற்றைச் சொல்லே அவள் இளவரசி என்பதை உணர்த்துகிறது. இந்தச் செவ்வி தலைப்படுவார் சிலரேயாவார்.

“மங்கை மான்விழி அம்புகள் – என்
மார்துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்டு – என்னுடல்
பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்தவண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை”

அகநானூறு பாடிய அருந்தமிழ்ப் புலவர் ஒருவர் திரைச்சந்தத்திற்குள் சிந்திப்போன முத்துக்களோ இவை என நம்மைத் திகைக்க வைக்கின்றன வைரமுத்துவின் இந்தச் சொல்லாண்மை. கவிஞர் வைரமுத்து தேசிய விருதினை முதன்முறையாகப் பெறுவதற்குப் பாதையிட்ட பாடல் பூங்காற்று திரும்புமா என்பதாகும். தமிழகத்தின் மேனாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்ட பாடல்களில் இது முதன்மையான ஒன்று என்று அவரை நன்கறிந்தவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். தலைமைத்துவத்தில் தனக்கென ஒரு கொடி நாட்டியவர்கள் தனக்கென ஒரு தாய்மடி கிடைக்குமா எனத்தவித்த நொடிகளில் இந்தப் பாடல் ஆறுதல் தரும் அருமருந்தாய் அவர்களுக்கு விளங்கி இருக்கலாம். உச்சிச் சிகரங்களில் உலவும் பொழுது எதிர்கொள்ளும் தன்மை எத்தகையது என்பதை இந்தப் பாடல் வழியே எவரும் உணர்ந்திருக்கலாம்.

அவரது ‘சின்னச் சின்ன ஆசை’ மொழிகடந்த உலகப் பாடல். அதில் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில்விட ஆசை’ என்று எழுதியிருப்பார். “மீன் பிடித்தல் மனித சுபாவம். அதை மீண்டும் ஆற்றில் விடுதல் உன்னதமான உயிர் நேயம். என்னமா எழுதியிருக்கிறார் வைரமுத்து” என்று வியந்து சொன்னாராம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன். இதை எனக்குச் சொல்லி மகிழ்ந்தவர் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இந்தியக் குடியரசுத் தலைவர் மட்டுமல்ல சிங்கப்பூர்க் குடியரசுத் தலைவரின் சிந்தையிலும் நிறைந்திருந்தது வைரமுத்து பாடல். சிங்கப்பூர்க் குடியரசுத் தலைவர் எஸ்.ஆர்.நாதனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் சார்பாளர்கள் ஒரே கூரையின் கீழ் கூடியிருக்கிறார்கள். சீனரான ஒரு சிங்கப்பூர் அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வருகிறார். “இப்போது எங்கள் குடியரசுத் தலைவருக்குப் பிடித்த பாடல் ஒலிபரப்பாகும்” என்று அறிவிக்கிறார். அந்த உலக அரங்கில் ஒலிக்கிறது ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற வைரமுத்துவின் திருப்பாடல்.

“வைரமுத்து மகாகவி ஆயிற்றே” என்று இந்தியாவின் அந்நாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாமும், ‘கவி சாம்ராட்’ என்று இந்தியாவின் அந்நாள் பிரதமர் வாஜ்பாயும் கொண்டாடித் திளைத்த தமிழின் பெருங்கவிஞர் வைரமுத்து. ஆண்டவர் முதல் ஆண்டி வரை அத்துணை பேரின் இதயங்களையும் ஆண்டுகொண்டிருப்பவர் கவியரசர்.

இவருடைய கொள்கைப் பிடிப்பை உலகம் உணரும் விதமாக தந்தை பெரியார் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதினார் வைரமுத்து. பொது வாழ்வுக்கு ஆட்படுகிறவன் குடும்பச் சுமைகளைப் பொருட்படுத்தாமலும் பெரிதுபடுத்தாமலும் கடமைகள் ஆற்றக் களத்தில் நிற்கிறான் என்னும் உருக்கமான உண்மையை வைரமுத்து வரைந்து காட்டிய விதம் நினைந்து நினைந்து நெகிழத்தக்கது.

“கடலில் பிறந்தாலும் முகில் எங்கோ அலையும்
மழை எங்கோ பொழியும்
அதுபோல்தான் உறவும்

தாய்க்குப் பிறந்தாலும் தாய் வேறு உலகம்
மகன் வேறு உலகம்
இதில் என்ன பாசம்

வீசும் காற்றுக்கு தேசம் கிடையாது
வீதிக்கு வந்த மனம் பாசம் அறியாது
நான் என்னை மட்டும் நம்பி நம்பிப் பயணம் போகிறேன்”

இந்த வரிகள் தந்தை பெரியார் வாழ்ந்த அகவாழ்வு, புறவாழ்வு இரண்டையுமே அடையாளம் காட்டுகின்றன.

வாய்ப்பு வரும்போதெல்லாம் திரைச்சீலையை எழுத்துப் பலகையாக்கி இலக்கிய, இலக்கண வகுப்புகளை நடத்த வைரமுத்து தவறியதே இல்லை.

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு – ஒரு பெண்ணில் இருக்கு” – என்று சிறிய மாற்றத்தோடு திருக்குறளைத் திரைத் தமிழில் எழுதியவர் இவர்தான்.

“சலசல சலசல இரட்டைக் கிளவி
கல கல கல கல இரட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ”
என்று உலக அழகியின் உதடுகளை அசைய வைத்து இலக்கணப்பாடம் நடத்தியவரும் இவர்தான்.
இலக்கண வகுப்பும், இலக்கிய வகுப்பும் நடத்தினால் போதுமா?

“ஒளி குறையட்டும் திருவிளக்கு – இனி
இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு ”
என்று தேர்வுக் கூடத்தின் கேள்வித்தாளைத் திரைப்படத்தில் எழுதி நீட்டியவரும் இவர் தான்.

முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும்குழல் மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ – என்று சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில் விதைத்த விதை,

“உயிரைத் திருகி உந்தன்
கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே” – என்று வைரமுத்து வரிகளில் புதுமைப்போர்வை அணிந்து கொண்டு நிற்கிறது.

இசையின் வளைவு நெளிவுகள் நடுவே வட மொழி கலவாமல், சுருதி நயம் பிறழாமல் தனித்தமிழில் காதலைக் கனித்தமிழாக எழுதிக் காட்டுகிறார் வைரமுத்து.

“செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
உன் கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க “- பொருது வெல்கிற போர்க்குணம் கவிஞர் வைரமுத்துவின் வெற்றிச் சூத்திரங்களில் முக்கியமானது.

தடைபோட்ட கதவுகளைத் தகர்த்து நடைபோட்ட பெருமைக்குரியவர் இவர்.
அந்த வெற்றித் திறவுகோலைத் தன் பாத்திறத்தால் ஒரு பாத்திரத்தில் பெய்து பாடுகிறார்.
எனக்கோ இந்த வரிகள் இவரே தன்னைப்பாடுவது போலவே தோன்றுகிறது.

“ஆகாயம் தடுத்தால் பாயும் பறவையாவோம்!
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகமாவோம்!
காடு தடுத்தால் காற்றாய்ப் போவாம்!
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்!”

இத்தனை வித்தகம் வாய்க்கப் பெற்ற புலமைப் புதையல் கவிஞர் வைரமுத்து

“தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு- ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு” – என அறைகூவல் விடுக்க அத்தனை தகுதிகளும் கொண்டவர் ஆவார்.

தன் பல்லாயிரம் பாடல்கள் நடுவிலிருந்து இவர் தேர்ந்தெடுத்து வெளியிட்ட ஆயிரம் பாடல்கள் எனும் அருந்தொகுப்பு அழகியல் ஆவணமாகவும் வாழ்வியல் ஓவியமாகவும் விளங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.

ஒரு தலைமுறையின் சுவைப் போக்கை மடைமாற்றம் செய்து காட்டிய ஆற்றலாளர் வைரமுத்து என்பதை ஆய்வு நோக்கில் காணும் அனைவரும் ஒப்புவர்.

எனக்கு லியானார்டோ டாவின்சியைப் பற்றிய நினைவு வருகிறது. ஓவியம், காவியம், கவிதை, திறமை இரு கைகளாலும் எழுதும் வல்லமை வாய்த்த டாவின்சி உலகப்புகழ்பெற்ற ஓவியர் ஆவார். அவருடைய வளர்ச்சியை நான் படிக்கும்போது, வைரமுத்துவின் வளர்ச்சியை ஒப்பிடத் தோன்றுகிறது என்று ஒரு கட்டுரை எழுதினேன்.

தமிழாற்றுப்படை தனிப்பெரும் புகழ் வாய்ந்த வரலாற்றுப் பொற்குவியலாகும். திருமுருகாற்றுப்படை போல இந்தத் தமிழாற்றுப்படை நிலைத்து நிற்கும். நூலாக வெளியிடப்பட்ட நாளிலேயே 50 ஆயிரம் படிகள் விற்ற பெருமை வரலாற்றுச் சிறப்புடையதாகும். தமிழாற்றுப்படையை எடுத்துப் படிக்க முடியாதவர்கள், வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் – கருவாச்சி காவியம் என்னும் நவீன இரட்டைக் காப்பியங்களைக் கற்றுக் களிகூரலாம். நெடுங்கதைகளைப் படிப்பதற்கு நேரமில்லை என்றால், சிறுகதைகளைப் படித்துச் சிந்தனைகளில் தெளிவு பெறலாம். சிறுகதைகளையும் படிக்க முடியவில்லையெனில், கண்ணை மூடிக்கொண்டு பத்துக் கணங்களுக்கு ஒருமுறை உலக வானொலிகளில் ஒலிபரப்பாகும் கவிப்பேரரசின் கானங்களைச் செவிமடுக்கலாம்.

“போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு” என்ற பாட்டு வரியைக் கேட்கும் போதெல்லாம் கேட்டவர்கள் கண்களில் பொலபொலவென நீர் உதிர்வதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

பாட்டு வகையால் பெயர் பெற்ற பெருமை சிலருக்கு உண்டு. “வெண்பாவில் புகழ் பெற்றவர் புகழேந்தி” என்று நாம் அறிந்திருக்கிறோம். விருத்தத்தில் புகழ் பெற்றவர் திருத்தக்கதேவர் என்று குறிப்பிடுவார்கள். அந்த வகையில், ‘தாண்டக வேந்தர்’ என்பது திருநாவுக்கரசருக்கு வழங்கிய ஒரு புகழ்ப்பெயராகும். தாண்டகம் என்பது, தொல்காப்பியச் செய்யுளின்படி, எண்சீராக வந்த கொச்சக ஒரு போகு என்னும் செய்யுளாகும்.

வைரமுத்துவின் பாடல் தொகுதி முழுவதையும் ஆராய்ந்தால் ஒருவகை உரைத்தாண்டகம் போல, நம்முடைய உள்ளத்தில் எதிர்நின்று, பாடுவது போன்ற, இன்பத்தை உணரலாம். எனவேதான், இந்த உரைக்கவிதைத் திறம் வைரமுத்துவிற்கு வாய்த்தது போல் பிறருக்கு வாய்க்கவில்லையே என்று நான் ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறேன். எழுதுவதெல்லாம் ஒரு மன உறுதிக்காகவும், மக்களுக்குத் தரும் செய்தியாகவும் தான் எழுதவேண்டும் என்பது ஒரு குறிக்கோளாகும்.

Remember I write to the purpose என்று தான் சொல்வார்கள். நான் எழுதாமால் ஏன் இருக்கிறேன் என்று கேட்டால், there is no purpose to write என்று சொல்வார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவிதையாக எழுதினாலும், கட்டுரையாக எழுதினாலும், மேடைகளில் கருத்துரையாக எடுத்துச்சொன்னாலும் கூட, கற்பனை வேண்டுமென்றால் ஆங்காங்கு தலைகாட்டுமே தவிர, கடமை உணர்ச்சியும், சமுதாயத்தின் மறுமலர்ச்சியும்தான் தன்னுடைய உள்ளுணர்ச்சியாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற கவிப்பேரரசை நாம் பெற்றிருப்பது நமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகும்.

குறிப்பாகத் திரையுலகில் நாற்பதாண்டுகள் இவர் மேற்கொண்டிருப்பது எளிய பயணம் அல்ல, ஈடற்ற நெடும்பயணம். இலக்கிய உலகில் சற்றொப்ப அரை நூற்றாண்டு அயராது இயங்கி வருகிறார். இச்சாதனைப்பயணம் நீளட்டும்; கவிப்பேரரசர் எம் இதயங்களை ஆளட்டும்.

அறுபத்தாறு வயது இளைய நம் வைரத்தின் ஒளியால் இவ்வையம் வெளிச்சம் பெறட்டும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *