ஔவை – 85
===========
செருக்கற்ற அறிவே வாழி!
**********************************
திரு.சீனி.இராசகோபாலன்,
துணை மேலாளர் (பணி நிறைவு),
பாரத ஸ்டேட் வங்கி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 1963ஆம் ஆண்டு தொடங்கி, 1969ஆம் ஆண்டில் நிறைவடைந்ததுதான் எனது புகமுக வகுப்பும் பட்டப்படிப்பும் ஆகும். இளங்கலைப் பட்டப்படிப்பில், ஆங்கிய இலக்கியத்தை சிறப்புப் பாடமாகப் படித்துப் பட்டம் பெற்று, தொடர்ந்து முதுகலைப் பட்டப்படிப்புக்காக, அப்பல்கலைக்கழகத்திலேயே தெரிவு செய்யப்பட்டு இருந்தும் இளங்கலை பட்டத்துடன் மட்டும் பல்கலைக்கழக கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரிட்டது. காரணம், என் தாய் தந்தைக்கு என்னையும் சேர்த்து பத்துப் பிள்ளைகள்! அக்காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் இருப்பார்கள்! என் பெற்றோருக்கு ஏழு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள்! என் இளவல், அச்சமயம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலுள்ள முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வந்தார். குடும்பப் பொருளாதார நிலையைச் சொல்லிக்காட்டி, என் தந்தையார் என்னை இளங்கலைப் பட்டப்படிப்போடு நிறுத்திக்கொண்டு, என் தம்பி, தங்கைகளுக்காக சிறியதொரு ‘தியாகம்’ செய்யுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். விருப்பமின்றி, தந்தையின் வேண்டுகோளை ஏற்று இளங்கலைப் பட்டத்துடன் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறினேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழிக் கல்வியாலும், இசையாலும் மிளிர்ந்து வந்த பல்கலைக்கழகமாகும்! மிகப்பெரும் நூலகத்தைக் கொண்டிருக்கும் அப்பல்கலைக்கழகத்தில் மொழி ஆராய்ச்சி நூல்களும் மிகுந்த எண்ணிக்கையில் காண இயலும்.
எந்தவொரு கல்லூரியிலும் ஒரு தலைசிறந்த பேராசிரியர் அல்லது ஒரு விரிவுரையாளர் இருக்கத்தான் செய்வார். ஆயினும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் பயின்ற காலம் உண்மையிலேயே ஒரு பொற்காலம்! பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சர்.சி,பி.இராமசுவாமி ஐயர், ஆங்கிலத்துறைப் பேராசிரியராக (லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துவிட்டு, அவ்வூரின் குளிர்ச்சி மிகுந்த சூழ்நிலை தமக்கு ஒத்துவரவில்லையென்ற ஒரே காரணத்தால் தாயகம் திரும்பிய தஞ்சைத் தரணியைச் சேர்ந்த) எம்.எஸ்.துரைசாமி, தமிழ்த்துறைத் தலைவராக முனைவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், கீழ்த்திசை மொழிகள் (ஆராய்ச்சித்) துறையைச் சேர்ந்த பேரறிஞர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், ‘ஜிப்பா’ சீத்தாராமன் எனும் பெரும்புலமை மிக்க ஆங்கில விரிவுரையாளர், ஷேக்ஸ்பியர் நாடகங்களில் சிலவற்றை உயிரோட்டமாக நடித்துக் காட்டி, வகுப்பிலுள்ள மாணவர்களை அப்படியே தம்பக்கம் ஈர்த்துவிடும் ஆற்றல்மிக்க திரு.சி.ஆர்.மயிலேறு எனும் விரிவுரையாளர்!
இப்படி எண்ணற்ற பேரறிஞர்கள் ஒரு விண்மீன் கூட்டமென அப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த காலமது! கல்லூரிக் காலத்தில் நான் ஒரு சராசரி மாணவனாகத்தான் இருந்தேன். ஆயினும், அச்சமயம் அப்பல்கலைக்கழகத்திலுள்ள பெரியதொரு நூலகத்திற்குச் சென்று இலக்கியம் சார்ந்த மிகுந்த எண்ணிக்கையிலான ஆங்கில மற்றும் தமிழ் நூல்களை இடைவிடாது படிக்கும் வழக்கத்தை நான் மேற்கொண்டிருந்த காரணத்தால், பின்னாளில், எனது மொழியறிவு வளர்ச்சிக்கும் இலக்கிய தாகத்துக்கும் அவ்வழக்கம் பெருமளவு வித்திட்டு நின்றது.
ஔவை ஐயா அவர்கள் பெரிதும் போற்றும் இனமானப் பேராசிரியர் அன்பழகனாரும், நாவலர் நெடுஞ்செழியனாரும் பயின்றது அண்ணாமலைப் பல்கலைக்கழகமே என்பதனை எண்ணி இன்றளவும் நான் பெருமிதமும் பேறு உவகையும் கொள்வதுண்டு!
என்னடா இவன் ஔவை ஐயாவைப் பற்றி எழுதிக்கொண்டு வருகிறவன், திடீரென்று தன் வரலாறு எழுதத் தொடங்குவதைப்போல் தடம் விலகிப் போகிறானே! என்று அருள்கூர்ந்து யாரும் எண்ணிவிடாதீர்கள்! என் சிந்தையில் நீங்காத இடம் பெற்றுவிட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப்பற்றி என்னையும் அறியாமலே வெகு ‘சுருக்கமான(?)’ ஒரு குறிப்பு வரைய நேரிட்டுவிட்டது.
நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலந்தொட்டே, ஔவை ஐயா அவர்கள் பட்டிமன்ற நடுவராகவும் பல இலக்கிய மேடைகளில் வெவ்வேறு பொருண்மைகளில் மிகச் சுவைபடப் பேசும் சொற்பொழிவாளராகப் பெரும்புகழ் பெற்று விளங்கிவந்து கொண்டிருந்ததை நான் கேட்டறிந்து வந்துள்ளேன்! அப்போதே ஐயா அவர்கள் மீது எனக்குப் பெருமதிப்புத் தோன்றத் தொடங்கிவிட்டது. அப்போதிருந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் பட்டிமன்றத்திற்குப் பெரும்புகழ் சேர்த்து வந்தனர்.
மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவுடன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் (1963 சூலைத் திங்கள் முதல் 1965 மார்ச்சுத் திங்கள் முடிய) எனக்கு Tutor in English ஆகப் பணியாற்ற வாய்ப்பு ஒன்று கிட்டியது. திரு.அலெக்சாந்தர் ஞானமுத்து என்பாரை அடுத்து தமிழறிஞரான முனைவர் வ.சு.ப. மாணிக்கனார் அக்கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். அவரும் ஔவை ஐயாவைப் பற்றியும், ஐயாவின் தந்தையார் உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்களைப் பற்றியும் பல செய்திகளை என்னிடம் பகிர்ந்ததுண்டு! கல்லூரி வளாகத்தினுள் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளும் முனைவர் வ.சு.ப. அவர்கள் மாலை நான்கு மணி கடந்து, கல்லூரியை விட்டு வெளியே வந்துவிட்டார் என்றால், ‘இராஜகோபால், எங்கே வீட்டுக்கு புறப்பட்டுட்டியா? சரி, சரி, அதற்கு முன்னாடி என்னோட கொஞ்சம் நடந்து வர்றீரா? பேசிக்கிட்டே போலாம்? அவசரம் ஒன்னுமில்லையே?” என்பார்! என்னால் நம்ப முடியாதளவுக்கு இருக்கும். அவ்வளவு பெரிய மனிதர் நம்முடன் நடந்து செல்ல என்னை அழைப்பதைக் கேட்கும்போது, தயக்கத்துடனும், சிறிய நடுக்கத்துடனும் சரி என்பேன்! ‘இந்தா வேர்க்கடலை சாப்பிடு’ என்று என்னிடம் கூறிக்கொண்டே என் தோள் மீது அன்புடன் கைவைத்து நடக்கத் தொடங்குவார்! காரைக்குடி செக்காலை சாலையில் பல நாட்கள் நாங்களிருவரும் நடந்ததுண்டு. தமிழிலக்கணத்தில் எனக்கு அவ்வப்போது தோன்றும் ஐயங்களை அவரிடம் கேட்பதுண்டு! அப்போதெல்லாம் அவர் என்னிடம், “ஏம்ப்பா, நீயோ இங்கிலீஷ் டியூட்டர்! ஆனால் என்னிடம் தமிழிலக்கண ஐயங்களை எல்லாம் கேட்கிறாயே? ஏதேனும் விடுமுறை நாட்களில் டியூசன் எடுக்கிறாயா? என்பார்! ‘இல்லை ஐயா, தாய்மொழியான தமிழைப் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்தானே ஐயா என்பேன்! அப்படியே நெகிழ்ந்து போய்விடுவார்!
இதனை நான் இங்கு விரிவாகக் கூறுகிறேன் என்றால், முனைவர் ஔவை ஐயாவை ஈர்த்தத் தமிழ்ப் பேரறிஞர்களில் முனைவர் வ.சு.ப. அவர்களும் ஒருவராவார். வசுப அவர்கள் நூல்கள் வரைந்தாலும் மேடையில் முழங்கினாலும் தனித்தமிழ் சொற்கள் வீறு கொண்டு எழும்!
ஔவை திருமுகம் இதோ எனக்கு அறிமுகம்!
காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஏறத்தாழ இரண்டாண்டுகள் பணிபுரிந்துவந்த எனக்கு, 1965ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று, பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராகப் பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. பட்டுக்கோட்டை கிளையில் தொடங்கிய எனது வங்கி வாழ்க்கை, ஒன்பது கிளைகளில் இடையில் ஒருசில பதவி உயர்வுகளைப் பெற்றுத்தந்து, பல்வேறு நிலைகளில் நான் பணியாற்றக்கூடிய செறிவானதொரு அனுபவத்தையும் (பட்டறிவையும்) எனக்களித்து, இறுதியில் வங்கி நிருவாகமே அழைப்பு விடுத்த ‘விருப்ப ஓய்வுத் திட்டத்தையும் (அப்போது நிலவி வந்த குடும்பச் சூழ்நிலை காரணமாக) என்னை ஏற்கச் செய்து, பொள்ளாச்சி கிளையிலிருந்து 2001ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் முப்பத்தோறாம் நாளன்று பணி நிறைவைத் தந்தது.
அப்போதெல்லாம் முனைவர் ஔவை ஐயா அவர்களுடன் நெருங்கிப் பழகுதற்கான அரும்பெரும் வாய்ப்பு ஒன்று பின்னாளில் கிட்டும் என்பதனைக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை! அதுவரையில் கோவையில் வசித்துவந்த நான், என் மனைவியுடன் புறப்பட்டு 2001ஆம் ஆண்டு சூலைத் திங்களில் ஒருநாள் சென்னையிலுள்ள என் மகனின் குடும்பத்துடன் தங்கியிருக்க நேரிட்டது. குடும்பச் சூழல் காரணமாக, ஏறத்தாழ நிரந்தரமாகவே பின்னர் நானும் என் மனைவியும் சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்கள் ஆகிவிட்டோம்.
காலம் கனிந்தது. இத்தருணத்தில்தான் முனைவர் ஔவை ஐயா அவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கான அரியதொரு வாய்ப்பு எனக்கு என் மூன்று சம்மந்திகளில் ஒருவரான, புலவர் தருமபுரி கோவிந்தன் அவர்கள் வாயிலாகக் கிட்டியது. தருமபுரி சம்மந்தியான கோவிந்தனார், முனைவர் ஔவை ஐயா அவர்களின் நெடுங்கால நண்பர் என்ற விவரம் எனக்குப் பிறகுதான் தெரிய வந்தது.
என் ஒற்றை மகன் அலெக்சாந்தரின் மாமனாரான கோவிந்தனார், 1982ஆம் ஆண்டிலிருந்து 1995ஆம் ஆண்டு முடிய, தருமபுரி அரசு கலைக்கல்லூரியில், தமிழ்த்துறையில் துணைப் பேராசியராகப் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற பெருமகனார் ஆவார். தருமபுரியில், விவேகானந்தர் அறக்கட்டளை என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவுவதற்குப் பொறுப்பானவராவார். அவ்வறக்கட்டளை வாயிலாக, ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்கவும், ஆதரவற்ற குடும்பங்களிலுள்ள பெண்கள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழவும், பிற சமூகம் சார்ந்த சேவைகளை வழங்கிடவும் அவர் பெரிதும் துணை நின்றார். அவைத் தவிர கல்விக்கூடம் அமைத்திடவும் உதவிப் புரிந்தார்.
அவர் தருமபுரியிலிருந்து புறப்பட்டு சென்னை வரும்போதெல்லாம். முதலில் தன் மகளான என் மருமகள் வீட்டில்தான் தங்குவார். அங்கிருந்து என் மருமகளின் சீருந்தில், தியாகராய நகரிலுள்ள ஔவை ஐயா அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது எனக்குப் பல நாட்கள் வரை தெரியாது!
இவ்வாறிருக்க, 2009ஆம் ஆண்டில் ஒரு நாள் அவர் சற்று உடல்நலம் குன்றியிருந்தார்! அந்த நிலையிலும், அவர் அன்று ஔவை ஐயாவைப் பார்க்க புறப்பட்டுவிட்டார்! வழக்கம்போல், அவர் மகளான என் மருமகள், என்னை நோக்கி, “அப்பா, நீங்களும் முடிந்தால், என் அப்பாவுக்குத் துணையாக புறப்பட்டுப் போய் வருகிறீர்களா?” என்று கேட்க, நானும், “ஆகட்டும் அம்மா” என்றேன்! என் சம்மந்தியுடன் சீருந்தில் நானும் ஏறி அமர்ந்தேன். வண்டி புறப்பட்டது. சைதாப்பேட்டையை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், நான் மெல்ல, என் சம்மந்தியாரிடம், “நாம் இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? யாரைப் பார்க்கப் போய்க்கொண்டு இருக்கிறோம்?” என்றேன். அதற்கு அவர், “தெரியாதா அண்ணா, ஔவை நடராசன் ஐயாவைத்தான் நாம் பார்க்கப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்றார். என்னைவிட அகவையில் அவர் மூத்தவராயிருந்தும் என்னை அவர் எப்போதுமே, “அண்ணா” என்று அன்பொழுக அழைப்பதே வழக்கம். தியாகராய நகரிலுள்ள ஔவை ஐயா அலுவலகத்திற்கு நுழைந்ததுமே, ஐயா அவர்கள் அன்புடன் என் சம்மந்தியாரை வரவேற்று, “வாங்க புலவர் ஐயா, நல்லா இருக்கீங்களா? ஊர்லே ஐயா நல்லா இருக்காங்களா?” என்று கேட்ட மாத்திரத்தில், “உங்க அன்பினால் நாங்க நன்றாகவே இருக்கிறோம் அண்ணா” என்று சொல்லியவாறே என்னைச் சுட்டிக்காட்டி, “இதோ, இவர் என் சம்மந்தி, பெயர் இராஜகோபாலன், ஸ்டேட் பாங்க்கில் வேலை பார்த்து ரிடையர் ஆன ஆபீசர். உங்க(ள்) மீது பெரும் பற்றுக் கொண்டவர். நான் இங்கே வந்து போயிண்டிருக்கறது இதுநாள்வரை அவருக்குத் தெரியாது! ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவராய் இருந்தாலும், தமிழ் மொழி மீது மிகப்பெரும் ஆர்வம் உள்ளவர். என் மருமகனுக்கும் மகளுக்கும் இவரது மனைவியும் இவரும் உதவியாய் இருந்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்திற்குத் தேவையானவற்றை இவர்களிருவரும் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். என் மகளும் அலுவலகம் போய் வந்துகொண்டிருப்பதால், அவளுக்கும் இவர்களது உதவிகள் அவ்வப்போது தேவைப்படுவதுண்டு!” என்று மிக நீண்டதொரு அறிமுகக் குறிப்பை வழங்கிவிட்டார்!
ஔவை ஐயா அவர்கள், “அப்படிங்களா, ரொம்ப மகிழ்ச்சி! ஏன் நிக்கறீங்க, உட்காருங்க!” என்றார். சற்று நேரத்துக்கெல்லாம், தொலைபேசியில், ஔவை ஐயா அவர்களிடம், மறுமுறையிலிருந்து யாரோ ஒருவர் நீண்டநேரம் சங்க இலக்கியப் பாடல் ஒன்றினைப்பற்றி ஏதோ சில ஐயங்களுக்கு விளக்கங்கள் பெறவேண்டி உரையாடிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அவருக்குப் பதிலளித்துக்கொண்டிருந்த ஔவை ஐயா அவர்கள், பாடலாசிரியர் புனைந்து காட்டியிருந்த பாடல் வரிகள் சிலவற்றின் சொல் நயம், பொருள் நயம், உவமை நயம் போன்றவற்றை மிக அழகாக விளக்கிக் கொண்டிருந்தார்!
அதனை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நான் பெரிதும் வியந்து போனேன்! என் சம்மந்தியார் பக்கம் திரும்பினேன். ஔவை ஐயா அவர்களின் தொலைபேசி உரையாடலால் ஈர்க்கப்பட்டிருந்த அவரும் என்னைப் பார்த்து, மெல்லப் புன்முறுவல் பூத்தார்! அவரது புன்னகையில் ஆயிரமாயிரம் பொருண்மைகள் அடங்கியிருக்கக்கூடும் என்பதை என்னால் உணரமுடிந்தது!
ஔவை ஐயாவுக்கும் என் சம்மந்தியாருக்கும் இடையேயான நட்பு கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையேயான நட்புக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்!
என் சம்மந்தியார், ஔவை ஐயாவை எனக்கு அறிமுகப்படுத்திய நாள் தொடங்கி, தியாகராயநகர் அலுவலகத்திற்கு ஐந்தாண்டுக் காலம் (விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நாட்களைத் தவிர) தொடர்ந்து நான் சென்று வந்துகொண்டிருந்தேன். என்றென்றும் என் வாழ்நாளில் மறக்க முடியாத பொன்னான நாட்கள் அவை!
வள்ளல் இராமலிங்க அடிகளார் தாமியற்றிய
திருவருட்பாவின்,
இரண்டாம் திருமுறையில், இவ்வாறு
நெக்குருகப் பாடுவார்!
“பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும்தாய் மறந்தாலும்
உய்ய தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருத் தோக்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேனே! ”
இப்பாடலின் இறுதி அடி ஒன்றில் வரும்
“ஔவைப் பெருமகனாரை
நான் மறவேனே!”
என்று சற்று மாற்றம் செய்து அன்றாடம்
இந்த முழுப் பாடலையும் அப்படியே,
எளியேன் பாடிக் களித்திடக் கடமைப்பட்டவன்
ஆவேன்!
நாவில் பொங்கி வரும் தமிழ்,
நெஞ்சில் சுரக்கும் அருள்,
நேர்மைத் திறத்தால், பஞ்சமின்றி
அறிஞர் பெருமக்களைப்
போற்றிடும் பாங்கு,
வயது வேறுபாடின்றி, திறமை
வெளிப்படும் இடமெல்லாம் அதனைக்
கேள்வியுற்ற மாத்திரத்திலேயே
ஊக்குவிக்கும் உயர்ந்த
உள்ளம், சங்க இலக்கியங்களின்
சாரத்தை, மேடைதோறும்
தேன் துளிகளாய்த்
தெளித்திடும் புலமை,
எந்தச் சூழலிலும்
கட்சி அரசியலிலும்
சிக்கிக்கொள்ளாத லாவகம்.
அதேநேரம் அனைத்து அரசியல் கட்சித்
தலைவர்களும் ஓடிவந்து, தம்மைத்
தழுவிக் கொள்ளும் அளவிற்கு,
அவர்கள் அனைவரிடமும் கொண்டிருக்கும்
நீடித்த நட்பு, நள்ளிரவில்
கண் விழிப்பினும், திருக்குறளில்
ஓர் ஐயம் என்றால், சற்றும் சலியாது
அதனைத் தீர்த்து வைக்கும் பேரார்வம்,
யார் தம்மைக் காண வந்தாலும்,
அவர் எந்தப் பொருள் குறித்துத்
தம்மிடம் உரையாட வந்திருக்கிறார்
என்று அறியாத நிலையிலும்,
“வாங்க, வாங்க,
நல்லா இருக்கீங்களா,
என்ன சாப்பிடுறீங்க?”
என்ற வினாவுடன் தோன்றி – நீள்கின்ற
விருந்தோம்பல்,
ஏற்கனவே அறிமுகமாகியுள்ள இளைஞர் எவரேனும்
வந்தால், அவரையும் மதித்து, இருக்கையில்
அமரச் செய்து,
“என்ன ராஜா நல்லாயிருக்கியா, அப்பா-அம்மா
எல்லாரும் நல்லாயிருக்காங்களா, இப்ப என்ன செஞ்சிட்டு
இருக்கே, வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்ற
பரிவுடன் கூடிய உசாவலோடு நின்றுவிடாமல், அந்த இளைஞர்தம் குடும்பத்திலுள்ள பெரும்பாலோரது பெயர்களைத் தனித்தனியே
சொல்லி, அவர்களது நலம் பற்றியும் கேட்டறியும் அற்புத நினைவாற்றல்
எந்த இலக்கிய மேடையானாலும் தமக்குமுன் பேசியவர்களின்
கருத்துகளை அப்படியே உருமாற்றி வழிமொழியாமல்,
தமக்குத் தோன்றியவற்றை மட்டுமே, தமக்கே உரித்தான
இனிய எளிய நடையில், வலிமைமிக்க கருத்துக்களோடு
புதுப்புனலென உரையாடுகின்ற தனித்துவம்,
பள்ளி விழாக்களிலும், கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்களிலும்
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுத் தாம் அவற்றில்
கலந்துகொள்கின்ற அந்த நேரத்தில், அந்தப் பிஞ்சு
உள்ளங்களுக்கும் இள நெஞ்சங்களுக்கும்
அவர்களது எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை
ஆழ விதைக்கும் விதத்தில் உலகப் பேரறிஞர்களின்
பல்வேறு கருத்துகளை மேற்கோள்களாகக் காட்டி,
நல்ல நகைச்சுவைக்கும் சீரிய சிந்தனைக்கும்
இடமளிக்கும் வகையில், மொத்த அரங்கினையும்
தம்மகத்தே முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் பேராற்றல்! –
இவைமட்டுமன்றி இன்னும் எத்தனையோ (எத்தனையத்துணையோ)
பன்பு நலன்களையும் கொண்டு தம் 85ஆம் அகவையில்
இன்று பீடுற வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் ஔவை ஐயா
அவர்களை, மேற்கண்ட ‘திருவருட்பா’ பாடல் கொண்டு,
நான் வாழ்த்தி வணங்குவதில் வியப்பு என்ன இருக்கமுடியும்?
இருப்பினும் தங்களது
தகவல் உதவி எனது கட்டுரைக்கு
வலுச்சேர்க்கும் என்பது என் துணிவு.
எனவே, உதவிடுவீர்!
என்னுடைய உவகையைப்
பெருக்கிடுவீர்!
ஔவை ஐயா அலுவலகம் என் திண்ணைப் பள்ளிக்கூடமாயிற்று! நம்மில் பெரும்பாலோர், நம் வீட்டில் சில நூறு புத்தகங்களை சேகரித்து வைத்து ஒரு நூலகத்தை உருவாக்கிவிட்டோம் என்று மகிழ்ச்சி கொள்வோம்! ஆனால், ஒரு நூலகத்திற்குள்ளேயே ஒரு வீட்டை உருவாக்கி வாழ்ந்து மகிழ்ந்து வாழும் மாமனிதர் ஔவை ஐயா ஆவார்கள் !
எப்போதும் ஏதாவதொரு நூலைப்படித்த வண்ணம் இருப்பார்! இதனைப் பார்க்கும்போது எனக்குப் பேரறிஞர் அண்ணா நினைவு வரும்! ஔவை ஐயா அவர்கள் சற்று உடல்நலிவின் காரணமாக தியாகராய நகர் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை அப்படியே எடுத்து வந்து, ஏற்கனவே, தமது அண்ணா நகர் இல்லத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான நூல்களோடு சேர்த்துத் தமது அருமைப் புதல்வன் அருளின் உதவியோடு மாபெரும் நூலகத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டார்.
முனைவர் அருள் அவர்கள் தம் தாய் தந்தையரைப் பேணிவருவதைப் போன்று வேறு யாரும் பேணி வரயியலுமா என்பது பெரும் வினாவாகத்தான் அமையும்!
ஔவை ஐயா அவர்கள் தம் இன்னுயில் வாழ்க்கைத் துணையான மருத்துவர் தாரா அம்மையாரின் மிகப்பெரும் ஆதரவுடன் தம் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி நல்ல நிலையில் அவர்களை நிலை நிறுத்தியுள்ளார்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் (67)
என்ற திருக்குறட்பாவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வண்ணம் ஒரு தந்தை என்ற நிலையில் தமது கடமையைச் செவ்வனே செய்து முடித்துள்ளார்!
அக்கரைச் சீமையில் இரு மகன்கள் பெயரும் புகழும் பெற்று விளங்கி வருகின்ற நிலையில், இரண்டாம் திருமகனாகிய முனைவர் அருள் அவர்கள், தாய்த்திருநாடான இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழகத் தலைநகராம் சென்னையிலே தம் வாழ்க்கையைச் சிறப்புற நடத்தி வந்துகொண்டிருக்கிறார்! எத்துணை அலுவலகப் பணிக்கிடையேயும் அன்றாடம், அண்ணா நகரில் வாழ்ந்துவரும் தன் ஆருயிர் பெற்றோருக்குச் சேவை செய்திட மறவாதவர்!
பிள்ளைகள் மூவருமே இன்று சீர்பட வாழ்ந்துவரும் நிலையைப் பார்க்கும்பொழுது,
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல் (70)
என்ற குறட்பாவுக்கு முழுமையான இலக்கணம் வகுத்துத் தம் தந்தைக்குப் பெருமை தேடித் தந்துகொண்டிருக்கிறார்கள் என்ற கருத்தில் எள்ளவும் மாற்றமில்லை! அதுமட்டுமா?
ஈன்றபெழுதிற் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாயாக (69)
இன்று மருத்துவ மாமணி திருமதி தாரா அம்மையாரும் மிகுந்த மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறார்!
‘இதுவல்லவோ குடும்பம்’ என்று அனைவரும் சொல்லிச் சொல்லி மகிழும் வண்ணம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தராகப் பணியாற்றிய ஔவை ஐயா அவர்கள் அற்புதமான ஒரு குடும்பத் தலைவராக விளங்கி, தமது குடும்பத்தையே ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக உருவாக்கியுள்ளார்!
நான் நித்தமும் தொழுதெழும் முத்தமிழ் அன்னையின் வித்தகப் புதல்வனாய்!
முத்தென முறுவலிக்கும் செவ்விய தமிழேநித்தமும் தொழுதெழும் முத்தமிழ் அன்னையின் வித்தகப் புதல்வனாய்!
முத்தென முறுவலிக்கும் செவ்விய தமிழே! ஔவை நடராசரே!
வாழிய நீர் இன்னும் வளம் பலகண்டு வாழ்க பல்லாண்டு!
தில்லை மைக்கங்கில்லை – இதோ சென்னை மன்றிலாடும் நடராசரே!
நும் தமிழாய்வு மன்றத்துள். ஆம் இங்கன்றோ உளது!
தந்தை வழி நின்று தமிழாய்ந்து புகழ் கவித்து, அகவைப் படிக்கட்டில் இன்னுமொரு படியேறி, மெல்லப் பெருமிதம் தோன்றி வெல்லட்டும் ஆயுள் நீண்டு!
நான் உம்மை வாழ்த்தவும் செய்வேன்! வணங்கவும் செய்வேன்! தமிழ்த்தாய்க்கு வாழ்த்துக் கூறும்போது, அத்தாயின் தவப்புதல்வனையும் வாழ்த்துவது இயல்புதானே!
எனவே வாழிநீர் நீடுழி வாழ்க பல்லாண்டு! நும் போல் தமிழறிஞர், பலரைக் கண்டதுண்டு!
ஆனால் வியந்ததுண்டு சிலரை மட்டும்!
காரணம், செருக்கற்ற அறிவே அறிவின் திரு! என் கண்ணாட்டத்தில் நெடிதுயர்ந்த குன்றம் போல் நிற்கின்நுரையா நீர்!
அறிவின் திருவிடமாய்!
ஆற்றலின் உறைவிடமாய்!
அடக்கத்தின் இலக்கணமாய்!
நல்லோர்கை திருவிளக்காய்!
எல்லோருக்கும் இனியவராய் இனிதே திகழ்கின்றீர்!
கலைமாமணி விருது நும் இல்லக்கதவை தட்டியது!
அண்ணா விருது நும்மை ஆரத் தழுவியது!
எத்தனை கலை இலக்கிய மன்றங்கள் எத்தனை அமைப்புகள் கொட்டிக்குவித்தன விருதுகளை நுமக்கு!
முத்தாய்ப்பு வைத்தாற்போல் இழைகோலம் இழுத்ததுபோல் தமிழ் தழைக்கச் செய்த நும் தகைமைகண்டு வழங்கியதே பத்மஸ்ரீ விருதை நடுவண் அரசு இன்று! விருதுகளுக்கா பஞ்சம்!
ஆயினும், எந்த விருதையும் நீர் அடையவில்லை தஞ்சம்!
ஔவையிடம் தந்தான் நெல்லிக் கனியை, அதியமான்!
இந்நாள் நலம் கண்ட ஔவையிடமிருந்து நெல்லிக்கனிபோல், இன்சுவைத் தமிழறிவுக் கனியைப் பெறக் கைநீட்டும் அதியமான்கள் பலருண்டே!
தாயே!
என் தமிழே!
தருகவே நுண்ட ஆயுள் என் ‘ஔவை’க்கே!
தாள் பணிந்தோம் – நாளும் பணிந்தோமே!
——————–

Add a Comment