ஔவை – 85
****************
————————————————————————
மஸ்கட் ராஜ்குமார், மஸ்கட் தமிழ்ச்சங்க உறுப்பினர் (முன்னாள்)
நட்சத்திர ஹோட்டல் பொது மேலாளர்
————————————————————————
பெறுநர்
மேனாள் துணைவேந்தர்
பெருமதிப்பிற்குரிய திரு. ஔவை நடராசன் அவர்கள்
அனுப்புநர்
மஸ்கட் ராஜ்குமார்,
மும்பை.
அன்புள்ள அப்பா.. நலமா, அம்மா சௌக்யமா..
உங்களுக்கு பாதம் பணிந்த என் பணிவான வணக்கங்கள். நீங்களும், அன்பு அம்மாவும் என்றென்றும் நோயற்ற வாழ்வும் நிறைந்த செல்வமும் பெற்று நலமாயிருக்க ஆண்டவனை வேண்டுகிறேன். மஸ்கட்டில் (ஒமான்) நான் ஹோட்டல் ‘ஹாலிடே இன்’னில் பணியில் இருந்த 1986 / 2001 கால கட்டத்தில், மஸ்கட் தமிழ்ச்சங்கத்திலும் நான் அங்கத்தினனாய் இருந்தேன்.
மஸ்கட் தமிழ்ச்சங்கம், 2000ம் ஆண்டு, திருமதி சித்ரா நாராயணன் அவர்கள் மூலமாக உங்களையும் அம்மாவையும் மஸ்கட்டிற்கு வரவழைத்து, மஸ்கட் தமிழ்ச்சங்கத்தில் நடக்க இருந்த பட்டி மண்டபத்தில் உங்களை பட்டிமன்ற நடுவராகவும், மற்ற தமிழ்ச் சமூகங்களிலிருந்து பொறுப்பு மிக்க பதவியில் பணியாற்றிய வந்த தமிழர்கள்/ கம்பெனி மேலாளர்கள் இடையே ஒரு கார்ப்பரேட் கலந்துரையாடலுக்கும் ஆவன செய்திருந்தது. நீங்களும் அம்மாவும் மஸ்கட்டிற்கு வந்து விட்டீர்கள் என்பது எல்லா அங்கத்தினர்களுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டாலும், அன்று மாலையில் நடக்க இருந்த அந்த பட்டி மண்டபத்தில்தான் நான் உங்களை நேருக்கு நேர் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது.
உங்களைச் சந்தித்த அந்த கணம்.. என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நேரம், உங்கள் அன்பு பார்வையும் அறிவு ஒளியும் ஒருங்கே வந்து ஒரு சேர என்னை ஆட்கொண்டன. அன்று மாலை சங்கத்தில் நடக்கவிருந்த பட்டிமன்றத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்த தலைப்பில் பேச நான் ஒத்திகை செய்து கொண்டிருந்தேன். காரணம், பேசவிருந்த மூன்று குழுக்களில் ஒரு குழுவின் தலைவன் நான் என்ற காரணத்தாலும் பொறுப்பாலும் என் குழுவிடம் அன்று பேசவிருக்கும் தலைப்பு பற்றிய ஒத்திகையில் நான் மிகவும் கவனமாய் ஈடுபட்டிருந்தேன். காரணம், அது எப்போதும் தமிழ்ச்சமூகத்தினரிடையே நடக்கும் ஒரு
சாதாரண பட்டிமன்றம் அல்ல, உங்கள் தலைமையில் மஸ்கட்டில் நடக்கவிருந்த முதல் பட்டிமன்றம். அதற்காகவே அத்தனை முன்னேற்பாடும், முனைப்பும். உங்கள் தலைமையில் பேச இருந்த எங்களை எல்லையில்லா ஆனந்தமும் அதே நேரம் சிறிது அச்சமும் ஆட்கொண்டிருந்தன.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தங்களுக்கு அவர் எழுதிய புத்தகம் ஒன்றை அன்பளிப்பாகத் தருகையில் அதில் அவர் முன்னோட்டமாக உங்களைக் குறிப்பிட்டு ‘ஒரு கலங்கரை விளக்கிற்கு இந்தப் படகின் பரிசு’ என்ற எழுதிய வாக்கியம் என் ஞாபகத்திற்கு வந்து என்னை சிறிது சிலிர்க்க வைத்து வியர்க்கவும் வைத்திருந்தது.
கவிப்பேரரசு தன்னை ஒரு படகு போலவும் அந்தப் படகு கரை சேர உங்களை ஒரு கலங்கரை விளக்காகவும் கோடிட்டுக் காட்டியிருக்க, பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளராக மட்டுமே கலந்து கொள்ள வந்திருந்த என் நிலையை எண்ணிப்பாருங்கள். நானும் என் குழுவினரும், ஏனைய குழுவினரும் அதன் அங்கத்தினர்களும் மிகவும் ஆய்ந்து ஆராய்ந்து தத்தம் கட்சிகளின் தர்க்கம், பொருட்சுவை, சொற்சுவைகளை எப்படி ஆள்வது என்ற ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தோம்.. உங்கள் முன்னிலையில்.. உங்கள் கைகளினால் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற குறிக்கோளும், அதே நேரம் எங்களை எதிர்கொள்ள ஒரு தமிழ்ப்புயலும் தமிழ்ச் சூறாவளியும் மஸ்கட்டில் நிலை கொண்டு அதன் காரணமாக தமிழ்ப் புயலுக்கு முன்னே வரும் களேபரம் எங்களை அன்று பட்டிமன்றத்துக்கு முன் ஆட்கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.. நாங்கள் பேச இருந்த பட்டிமன்றம் பற்றிய விஷயங்களை எண்ணி எண்ணி நாங்கள் ஏகமாக வியர்த்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னாலும் அது வியப்பல்ல.
பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்துத் தந்திருந்த அந்த தலைப்பு இதுதான்..
இல்லத்தலைவனுக்கு இக்கட்டானது எது: தனக்கு உயிர் கொடுத்து வளர்த்த பெற்றோரை பேணிக் காப்பதா,
மணந்த மனைவியை மகிழ வைப்பதா.. தாம் பெற்ற பிள்ளைகளை நல்வழிப்படுத்தி நேர்வழிப்படுத்துவதா..
என்பதே.
இதில் மூன்றாவது தீர்வுக்கு.. ‘பெற்ற பிள்ளைகளை நல்வழிப்படுத்தி நேர் வழிப்படுத்துவது’ என்ற குழுவிற்கு நான் தலைவனாகவும் என் குழுவில் பேச திரு. கல்யாணராமன், ‘மஸ்கட் மனோரமா’ என்று அன்று அறியப்பட்டு வந்த திருமதி. அபிராமியும் பேச இருந்தார்கள். பட்டிமன்றத்தைத் தொடங்கி பேசத் தொடங்கியவுடன் நீங்கள் தேர்ந்தெடுத்துத் தந்த அந்த தலைப்புக்கு நீங்களாகவே விளக்கம் அளித்தீர்கள். நாங்கள் தமிழர்களாக இருந்தாலும் தமிழ்ச்சங்கம் மூலமாக அந்த பட்டிமன்றத்தில் பேச வாய்ப்பு பெற்றிருந்தாலும், உங்கள் விளக்கம் அந்த தலைப்பை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.
நீங்கள் தலைப்பில் இருந்த அந்த ‘இக்கட்டு’ என்ற வார்த்தையை அக்கக்காக பிரித்து.. இக்கட்டு எனபது ‘இடர் + கட்டு’ என்று சொல்லி எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஓவ்வொரு கட்சிக்கும்
அந்த இடர்+கட்டு என்ற வார்த்தைகளுக்கு பல்வேறு உதாரணங்கள் தந்து அங்கிருந்த பேச்சுப்போட்டி டென்ஷன் என்ற இக்கட்டிலிருந்து எங்களை விடுபட வைத்து, மாறாக உங்கள் விளக்கம் எங்களுக்கு வலு
சேர்த்து எப்படி ஒவ்வொரு கட்சியையும் வெற்றியை நோக்கி பயணிக்க வைக்கும் என்பதை ஆழமாக அலசி சுமார் அரை மணி நேரம் அதை விளக்கி பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தீர்கள்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அந்த பட்டிமன்றத்தில் மூன்றாவது குழுவின் தலைப்பில் நான் பேசிய ‘தாம் பெற்ற குழந்தைகளை நல்வழிப்படுத்தி நேர்வழிப்படுத்துவதில்தான் ஒரு இல்லத்தலைவனுக்கு
இடர் கட்டுகள் அதிகமாய் உள்ளது’ என்று நான் வாதிட்டு அமர்ந்தபின், நீங்கள் பட்டிமன்றத்தின் தலைவராய் மேடையில், நான் பேசியதை வழிமொழிந்து.. ‘திரு. மஸ்கட் ராஜ்குமார் அவர்களும் அவர்தம் தலைவராக இருந்து அவர் குழு அங்கத்தினர்கள் வாதிட்ட ‘குழந்தைகளை நல்வழிப்படுத்தி நேர்வழிப்படுத்துவதும்தான் மிகுந்த சிரமமும், அக்கறையும், பொறுமையும், அன்பும், அறமும் கொண்ட.. உண்மையான இடர் கட்டுகள் என்று கூறி, அவைதான் மிகுந்த பொறுப்பான தலைமைப்பண்பு என்றும் கூறி, தொடர்ந்து தாங்கள், ‘தாம் பெற்ற குழந்தைகளை நல்வழிப்படுத்துவது என்பது ‘ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தை மிகச்சரியாக அமைத்துக் கொடுப்பது போன்றது. இதை அவர்கள் விடலைப்பருவத்தில் வளரும் 13 வயது (டீன் ஏஜ்) முதல் 19 வரை 6 வருடங்களுக்கு மிகச்சரியாக் கண்காணித்து வளர்த்து விட்டால், அது பின் வரும் 60 வருடங்களுக்கு
அந்த விடலைகளுக்கு (வளர்ந்த பின்) அரணாக அமைத்துக்கொடுக்கும் என்றும் கூறி, ‘ஒரு கட்டிடத்தின்
உள்பூச்சையும் வெளிப்பூச்சையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளலாம்,
ஆனால் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தை அடிக்கடி மாற்ற முடியாது’ என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்து எனக்கும் எங்கள் குழுவினருக்கும்தான் அன்றைய பட்டிமன்ற ‘வெற்றி’யை அறிவித்து தமிழரசி தந்து வெள்ளிக்கோப்பையை அள்ளிக்கொடுத்து அதை வெற்றிக்கோப்பையாக, வெற்றிக்கனியாக ஆக்கினீர்கள்.
உங்கள் பொற்கரங்களால் பெற்றுக்கொண்ட அந்த வெற்றிக்கனியை சுவைத்த அந்த இன்பம் இன்றும் என் நெஞ்சில் இனிதே ஒட்டிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் முடிவில் ‘மஸ்கட் தமிழ்ச்சங்கம்’ உங்களுக்கும் அம்மாவுக்கும் முதல் மரியாதை தர மேடைக்கு வரவழைத்து மாலை மரியாதைகளுடன் எங்கள் அன்பின் நினைவாக ஒரு ‘தங்க ஆரம்’ உங்கள் பொற் கரங்களில் தந்தபோது அந்தப் பேழையை அங்கேயே திறந்து எல்லோருக்கும் காண்பித்து அம்மாவின் கழுத்தில் நீங்கள் உடனேயே அணிவித்தது பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி.
நம் தமிழ்ப்பண்பாடில் சாதாரணமாக இத்தகைய பரிசுகளை வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் போய் பிரித்துப்பார்த்து அந்தக் குடும்பம் மட்டும் பார்க்கும் பழக்கமும் வழக்கமும் இன்றும் இருக்கிறது. ஆனால், ஜப்பான், சீனா நாடுகளில் இப்படிப்பட்ட வழக்கங்கள் இல்லை என்பதை என் மஸ்கட் வாழ்க்கையில் பன்னாட்டு விருந்தினர்கள் விழாவில் நான் பார்த்திருந்தேன். அவர்கள், விழாவின் முடிவில் தங்களுக்கு தரும் அன்பளிப்புகளை அனைவரும் அறிய அங்கேயே எல்லோரும் பார்க்க தெரிவித்து விடுவது பன்னாட்டு பண்பு.
ஆனால் அன்று நீங்கள் தமிழ்ப்பண்பு, இந்திய கலாச்சாரம் இவை எல்லாவற்றையும் தாண்டி மஸ்கட் என்று மத்திய கிழக்கு நாட்டுக்கு வந்தவுடன் அத்தகைய பன்னாட்டு பண்பை அருமையாக ஆண்ட விதம்.. ஆட்கொண்ட விதம் என்னைத் வியப்பில் திகைக்க வைத்தது. இதைத்தொடர்ந்து, மறுநாள் தமிழ்ச்சங்கத்தில் எல்லோரையும் அழைத்து ஒரு அளவளாவல் நடந்தது. இன்ஃபார்மல் எனப்படும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், மனதிற்கிணக்கமாய் கிறக்கமாய் ஒரு அன்னியோன்ய கலந்துரையாடல் மாதிரியான அந்த தமிழ்க் கூட்டத்தில் “யாரும் என்னை என்ன வேண்டுமானாலும் ‘தமிழ்ப்’ பற்றி கேட்கலாம்” என்று நீங்கள் அறிவித்தீர்கள்.
பல பேர் பேசியும் கேட்டும் முடித்த பின்னர், நானும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்பால் நான் கொண்டிருந்த சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டேன். வாழ்வியல் என்ற அடிப்படையில் ஔவையார், திருக்குறள் மற்றும் சில நன்னூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பல அறிவார்ந்த கருத்துக்களுக்குள் இருக்கும் வேறுபாட்டையும் முரண்பாட்டையும் பற்றி நான் உங்களிடம் சில சந்தேகங்கள் கேட்டேன்.
அவை:
1. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்; இதற்கு முரண்பாடாக..
கிட்டாதாயின் வெட்டென மற!
2. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து; முரண்பாடாக..
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
3. ஏற்பது இகழ்ச்சி; முரண்பாடாக.. ஐயமிட்டு உண்
4. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்; முரண்பாடாக.. வானமே எல்லை
இப்படி, வாழ்வியலில் தமிழறிஞர்களால் சொல்லப்பட்டிருக்கும் இத்தகைய அறிவார்ந்த செய்திகளில் இருக்கும் சந்தேகங்களை நான் வினவ, தாங்கள் சிரித்துக்கொண்டு மிகவும் எளிமையாக அந்த சந்தேகங்கள் குறித்து எங்களுக்கு எங்கள் தமிழ் அறிவுக்கு ஏற்ப பாந்தமாய் எடுத்துரைத்த பாங்கு எத்தகைய தமிழ் அறிஞரை யாமும் இவ்வையகமும் பெற்றிருக்கிறது என்று எண்ணி எண்ணி பூரிக்க வைத்தது.
இதையடுத்து, பல கார்ப்பரேட் கம்பெனிகளின் மேலாளர்களுடனும் தமிழ்ச்சமுதாயம் சார்ந்த ஆனால் தமிழில் அவ்வளவு மொழி வளம் இல்லாத.. தெரியாத (நீண்ட காலம் வடக்கேயும், மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழ்ந்து வரும்) தமிழர்களுடன் அவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரளமாக பதில் பகர்ந்தீர்கள். உங்களைப்பற்றி நான் அன்று கேள்விப்பட்டவரை, நீங்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர், அரசியலிலும், கோட்டையிலும் முன்னாள் முதல்வர்களுடன் பணியாற்றிய தமிழ்ப்பெருந்தகை என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஆனால் ஆங்கிலத்தில் இப்படி சுமார் 4 மணி நேரம் எந்தக் குறிப்பும் கையில் வைத்துக்கொள்ளாமல் நாலா திசையிலிருந்தும் ஆங்கிலத்தில் வந்த கேள்விக்கணைகளை எந்த வித அலட்டலும் இல்லாமல் பதில்களாக வாரி வழங்கினீர்கள்.. தமிழ், தமிழர் பண்பாடு, இலக்கியம், கலை, பன்னாட்டின் பண்புகள், மொழிகள் பற்றிய பல்நோக்குப் பார்வை, பொருளாதாரம் இவைகளில் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் பார்வையாளர்கள் அடுத்தடுத்து கேட்க நீங்கள் யாதொரு பதட்டமுமில்லாமல் அந்த அவையை ஆங்கிலத்திலேயே செவ்வனே ஆட்கொண்டிருந்தீர்கள்.
இவர் தமிழறிஞர் மட்டுமே என்று சாதாரணமாக நினத்திருந்த பல பேருக்கு.. நானும் உட்பட. அந்த நாள் ஒரு ஆங்கில சரித்திர நாளாய் நினைவேட்டில் ஒதுங்கியது. அதற்கு வந்த மறுநாளும் மற்ற சிலநாட்களும் தாங்களும் அம்மாவும் மஸ்கட்டில் தங்கி இருந்து தமிழ்ச்சங்க அங்கத்தினர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி அவர்தம் அன்பு இல்லங்களுக்கு வருகை தந்து எங்களோடு உரையாடி, உறவாடி மகிழ்வித்தீர்கள். அத்தகைய அழைப்புகளினூடே தாங்களும் அம்மாவும், நானும் என் மனைவி சகுந்தலாவும் தங்களை எங்கள் இல்லத்திற்கு அழைக்க, அதை நீங்கள் அன்போடு ஏற்று, நான் பொது மேலாளராக இருந்த ‘மக்கா ஹோட்டலில்’ இருந்த என் இல்லத்திற்கு வருகை தந்து தாங்களும் மற்றும் சில தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் எங்களோடு விருந்தருந்திய அந்த நாள் என் வாழ்வில் ஒரு பொன்னான நாள்.
ஹோட்டலில் நான் தயாரிக்கச் சொல்லியிருந்த எல்லா வகை (புலால் தவிர்த்து) உணவுகளையும் தாங்களும் அம்மாவும் வயிறார அருந்தினாலும் முடிவில் என் மனைவி சகுந்தலா தன் கைப்பட வீட்டில் தயாரித்திருந்த பாயசத்தை மட்டும் மனதார மறுபடி மறுபடி வாங்கி ருசித்து ருசித்துச் சாப்பிட்டு சிலாகித்து வர்ணித்த அந்த நாள் என் மனைவிக்கு சந்தோசக் கண்ணீரை வரவழைத்தது. 2013ல் அவர் இறைவனடி சேர்ந்து இன்று அவர் என்னோடு இல்லை என்றாலும், வருடங்கள் பல சென்று விட்டாலும் இன்றும் முதன் முதலில் நீங்கள் எங்கள் இல்லம் வந்த அந்த நாளை என் நெஞ்சம் வாஞ்சையாக நினைத்துப் பார்க்கிறது. மஸ்கட் வருகையின் முடிவில் தாங்கள் எங்களிடமிருந்து விடை பெறும்போது என்னை அழைத்து.. ‘சென்னைக்கு நீங்கள் எப்போது வந்தாலும் என்னை வந்து பார்க்கவும்’ என்று உரிமையோடும் உண்மையான விருப்போடும் அன்போடும் என்னையும் என் குடும்பத்தினரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்தீர்கள் என்பதை நினைத்து நினைத்து நான் பல நாட்கள் புளங்காகிதம் அடைந்திருக்கிறேன்.
செப்டம்பர் 11, 2001 தேதியில் அமெரிக்காவில் ட்வின் டவரில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் மத்திய கிழக்கு நாடுகளும் பாதிக்கப்பட்டன.. ஆம்.. மத்திய கிழக்கு அரசுகளும், அங்கிருந்த பொருளாதாரமும் நிலைகுலைந்து போய், வியாபாரமும் கம்பெனிகளும் மூடப்பட்ட நிலையில் நான் சார்ந்திருந்த ஹோட்டல் தொழிலும் நசிந்து போயிற்று. நான் பொது மேலாளராக வேலை பார்த்த அந்த ஹோட்டலும் மூடப்பட்டு, நான் வேலை இழந்தேன்.
சில மாதங்கள் வேலை இல்லாமல் தவித்தாலும் ஹோட்டலில் நான் மேலாளராக இருந்ததால் சிறிது காலம் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனாலும் அடுத்து வந்த 5/6 மாதங்களுக்கும் நிலைமை சீர் அடையாமல் போன காரணத்தால், திசம்பர் இறுதியில் குடும்பத்தினருடன் நான் இந்தியா திரும்ப நேர்ந்தது. பம்பாயில் இறங்கி என் தாய் மற்றும் சகோதரர்களை சந்தித்து விட்டு, என் குடும்பத்துடன் இனி சென்னையில்தான் வாழ்க்கை என்ற எண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் நான் சென்னை வந்தடைந்தேன்.
சென்னையில், என் சகோதரன் இரவீந்திரன் வீட்டில் முதலில் வந்து தங்கியிருந்து அவனால் வீட்டினுள் எல்லா நலங்களும் எனக்கு அளிக்கப்பட்டாலும், அவன் வீட்டிற்கு வெளியே எனக்கு யாரையும் தெரியாது.. எந்த வெளி வட்டார நண்பர்களும் சொந்தங்களும் எனக்கு சென்னையில் அப்போது இல்லாமல் இருந்தது மனக்கவலையாக இருந்தது. அப்போது என் நினைவுக்கு வந்த ஒரே அறிஞர் பெருமான் நீங்கள்தான் அப்பா. மஸ்கட்டில் தாங்கள் என்னிடம் ‘சென்னைக்கு எப்போது வந்தாலும் என்னை வந்துப் பார்’ என்று மஸ்கட்டில் நீங்கள் அன்று சொன்னதை நான், ‘அப்பா ஒரு மரியாதை நிமித்தமாகத்தான் அழைக்கிறார்’ என்று எண்ணினாலும் அந்த அழைப்பும் நம் சந்திப்பும் இரு வருடங்களுக்குள் மீண்டும் நிகழப்போகிறது என்று அன்று எனக்கு கிஞ்சித்தும் தெரிந்திருக்கவில்லை.
உங்கள் தீர்க்கமான அழைப்பு, என் அனுபவமின்மை காரணமாகவும், ஒரு பொத்தாம் பொதுவாகவும் மேலோட்டமாகவும் தெரிந்த எனக்கு, ‘எப்படி ஒரு தீர்க்கதரிசி’ போல அன்று, ‘சென்னை வந்தால் என்னை வந்து பார்’ என்று அந்த நாட்டில் சொல்லி வந்தீர்கள் என்பதை நினைத்து பிரமித்தேன். உங்களை வந்து சந்திக்க நான் தயாராகி, என் சகோதரனிடம், உங்களைப்பற்றிச் சொல்லி, என்னை அவரிடம் அழைத்துப் போ என்று சொன்னவுடன், அவன் சிறிது ஆடிப்போனது உண்மை. என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவன், ‘என்ன அண்ணா, அந்த தமிழ் அறிஞர் ஔவை நடராசன் அவர்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் தெரிந்த பேரறிஞர்.. அப்படிப்பட்டவரைப் போய் பார்க்க, என்னை அழைத்துப்போ அவரிடம் என்று சர்வ சாதாரணமாக சொல்கிறாய், ‘வா சரவணபவனுக்கு’ சாப்பிடப்போகலாம் என்பது போல்’, என்று ஏளனமாகச் சொன்னான். நான் அவனிடம், ‘இரவி, நீ அவரை பத்திரிகைகளிலும், மேடைகளிலும், அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு அவர் செய்த தமிழ்ச்சேவையை மட்டும் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
ஆனால், நான் அவரை மஸ்கட்டில் தமிழ்ச்சங்கத்தில் சந்தித்தும் பின் நேரடியாய் எங்கள் இல்லம் வந்திருந்தபோது ஒரு குடும்பத்தினர் எப்படி நம்மிடம் அன்னியோன்யமாய் உறவாடுவார்களோ, அப்படி எங்களுடன் மிகவும் எளிமையாக பழகி உறவாடி அவரைப்பற்றி அதிகம் அறிந்து கொண்டேன். பெருமதிப்பிற்குரியவர். நாம் அவரைச் சந்திக்க சென்றால் நிச்சயம் நம்மை அவர் சந்திப்பார். எந்த பிரச்னையும் இருக்காது என்று உறுதியாகச் சொல்லி அவனை அழைத்துக்கொண்டு உங்களைப் பார்க்க வந்தேன்.
அவ்வாறே, நாங்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது உங்கள் காரியதரிசி உங்களிடம் ‘மஸ்கட் ராஜ்குமார்’ தொடர்பில் இருக்கிறார், உங்களை சந்திக்க வர அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறார் என்ற சொன்ன உடனே, நாம் சந்தித்து சுமார் 2 வருடங்கள் கடந்திருந்த போதும், எத்தனையோ பேரை தினம் சந்திக்கும் தாங்கள் அத்தனையும் தாண்டி என்னையும் நினைவில் வைத்திருந்து.. உடனே அவரிடம், எங்களை வரச்சொல்லி சொன்னதும், பின் நாங்கள் உங்களை வந்து சந்தித்ததும், உங்கள் அபார ஞாபக சக்தி எப்படி என்பது பற்றிய என் அனுபவம் சர்வ நாடியும் புல்லரிக்க வைத்து பூப்பூக்கவும் வைத்தன.
எப்பொழுதெல்லாம் உங்களை நான் காலையிலும் மாலையிலும் உங்கள் இல்லத்திலோ (அண்ணா நகர், தி. நகர்) கிண்டி அலுவலகத்திலோ (ABT Parcel Services) சந்திக்க வந்தாலும் தாங்கள் தூங்கும் நேரம் தவிர, நான் வந்திருக்கிறேன் என்ற செய்தி உங்களுக்கு சொல்லப்பட்ட உடன், உடனே உங்களைப்பார்க்க அனுமதித்தீர்கள். அப்பொழுது நீங்கள் உணவு உண்ணும் வேளையாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உடனே என்னை நேரடியாக கிச்சனுக்கோ அல்லது நீங்கள் உணவு எடுத்துக்கொள்ளும் அறைக்கோ வரவழைத்து, நலம் விசாரித்த பின், உடனே உங்கள் பணியாளரிடம் எனக்கும் அதே உணவு வழங்கச்சொல்லி நான் உண்ட பின்னரே, என்ன காரணத்திற்காக நான் உங்களைக் காண வந்திருக்கிறேன் என்ற கேள்வி உங்களிடமிருந்து வரும்.
எத்தகைய உயரிய விருந்தோம்பல் கோமான் நீங்கள்! நான் விருந்தோம்பல் துறையில் பல ஹோட்டல்களில் மேலாளராய் பணியாற்றினாலும் எங்களுக்கு பணி நிமித்தம் பல ஃபார்மாலிட்டிகள் உண்டு. நேரம், அப்பாயிண்ட்மெண்ட், வந்தவர் யார், எந்த மாதிரி, எங்கிருந்து வந்தார், என் மாதிரி அந்தஸ்தும் தகுதியும் உள்ளவரா என்றெல்லாம் அறிந்து கொண்ட பின்னரே நான் (என்னைப்போல் இன்னும் எத்தனையோ பேரும்) சில சமயம் மட்டுமே நாங்கள் உணவருந்தும் இடத்திற்கு அவர்களை வரவழைத்திருக்கிறோம்.
ஆனால் எத்தனை உயரத்தில் இருக்கும் தாங்கள் உங்களுக்கு சற்றும் சமமாக இல்லாத என்னையும் என் போன்ற பலரையும் இப்படி விருந்தோம்பலிலும் மரியாதை பல கொடுத்து வாஞ்சையாக.. ‘ராஜா என்றும்.. ராஜ்குமார்’ வந்திருக்கிறார் என்றும் அம்மாவிடமும், தங்கள் சத்புத்திரன், இளவல் அருள் ஐயாவிடமும் பல முறை சொல்லி என்னை வீட்டின் ஒரு பிள்ளை போல் அன்பு பாராட்டியிருக்கிறீர்கள். நான் 3 வருடம் கற்ற ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பும் 33 வருட அனுபவமும் உங்கள் ஒரு கண் அசைவு முன்னேயும், விருந்தோம்பல் தடபுடல்களிலும் தோற்றுப்போகும் அப்பா. உங்களிடம் நானும் ஏனையோரும் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன. இந்த ஒரு ஜன்மம் போதாது.
பல மாலை நேரங்களில் உங்களை சந்திக்க நான் தி. நகர் அலுவலகம்/இல்லத்திற்கு வந்ததுண்டு. அங்கு.. மாலையில் காப்பி, டிபன் என்று 5 மணி முதல் ஒரே களேபரமாய் இருக்கும். உங்களைச் சந்திக்க பல தமிழ் வல்லுனர்களும், தமிழ்ப்பண்டிதர்களும், புலவர்களும் வந்து அமர்ந்திருக்க, தாங்கள் அந்த வி.ஐ.பி.களுடன் மிகவும் சிரத்தையாக பேசிக்கொண்டிருந்தாலும், நான் வந்த உடனே என்னையும் ஒரு பெரிய மனிதன் என்று பாராட்டி அத்துணை பேரிடமும், ‘இவர் ராஜ்குமார், 5 ஸ்டார் ஹோட்ட்ல்களில் ஜி.எம்.மாக பணி புரிபவர்.. மத்திய கிழக்கு நாடுகளின் ஹோட்டல்களில் இவர் ராஜா மாதிரி பணி புரிவதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று என்னைப்பற்றி வானளாவ புகழ்ந்து மற்றவர்கள் என்னை மரியாதையோடு பார்க்க வைத்தும் பேச வைத்தும் பழக வைத்தும் பார்த்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் அப்பா, நீங்கள்.
எதைச் சொல்ல, எதை சிலாகிக்க என்று தடுமாறிக்கொண்டு இருக்கிறேன் நான். உங்களை அண்ணா நகர் இல்லத்தில் நான் முதன் முதலாக சென்னையில் சந்திக்க வந்த அன்றுதான் திரு. அருள் அண்ணாவையும் நான் பார்த்தேன். என்னை அறிமுகப்படுத்திய அந்த நாள் முதல் இந்த நாள் வரை அருள் அண்ணாவும் அவர்தம் மனைவி அண்ணி வாணி அவர்களும் அன்புக் குழந்தை ஆதிரையும் எங்கள் வீட்டு உறவினர் போல் ஆகி விட்டனர்.
உங்களுக்கு இருக்கும் அதே அன்பு, பண்பு, பாசம், விருந்தோம்பல் வீரம் எல்லாம் கலந்த ஒரு அற்புத சகோதரர் திரு. அருள் அவர்கள். நான் அவரை அவர் ஆபிஸில் நாடிச்சென்ற நாட்களெல்லாம்.. பெரும்பாலும் மதிய வேளைகளில்தான்.. முதலில் அவருடன் உணவருந்தச் செய்த பின்னரே மற்ற விஷயங்களைப் பேசுவார். வீட்டிலிருந்து அவருக்காய் வரும் உணவை நான் எத்தனையோ முறை அவருடன் பங்கு போட்டுச் சாப்பிட்டிருக்கிறேன். அவ்வாறே அண்ணா நகர் வீட்டிலும், அம்மா கையாலும், அண்ணி கையாலும் நான் கிச்சன் டைனிங் டேபிளிலேயே அமர்ந்து உணவு உண்ட தருணங்களும் ஏராளம் ஏராளம்.
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். வெண்ணிலா, தாரகை என்று.. அம்மா பெயர்தான் என் இளைய பெண்ணிற்கும் என்பதிலே எனக்கு ஒரு அபார ஆனந்தம். என் இளைய பெண் தாரகையை சுருக்கமாக தாரா என்றுதான் அழைப்பேன். சுமார் 10 வருடங்களுக்கு முன்னால், அவளை ஒரு நாள் உங்களிடம், தி. நகர் அலுவலக இல்லத்திற்கு அழைத்து வந்து உங்களுக்கு அறிமுகப்படுத்தியவுடன் அவளை வாஞ்சையுடன் உங்கள் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, என்ன செய்கிறாய், என்ன படிக்கிறாய் என்று அவள் வயதை ஒத்த ஒரு சிறு மாணவன் போலும் அவளுடைய நண்பராகப் பேசிக்கொண்டிருந்தீர்கள்.. அவள் உங்களைத்தன் உண்மையான தாத்தா (என் தகப்பனார் 1997ல் இறையடி சேர்ந்து விட்டதாலும்) என்று அன்று நினைத்தாள். பெரியவளாகி விஷயம் தெரிந்த இன்று கூட அடிக்கடி என்னிடம், ‘ஔவை தாத்தா எப்படி இருக்கிறார்’ என்று அன்போடு உங்களைப்பற்றி விசாரிப்பாள். ‘பாட்டி’ பெயர்தாண்டி உனக்கும் வைத்திருக்கிறேன் என்று நானும் அவளை இன்னும் சந்தோசப்படுத்துவேன். அப்போது அவள் கண்களில் ஒரு பளபளப்பு தெரிவதை நான் பாசத்துடன் பார்ப்பதுண்டு.
மத்திய கிழக்கு நாட்டில் இருந்து நான் திரும்பியப் பின்னும், அதற்கு பின்னும் எனக்கு நான் பணிபுரியும் ஹோட்டல் துறையில் ஏதேனும் உதவி வேண்டுவதாய் இருந்தாலும், புதிய பொறுப்பைத் தேடி நான் முயற்சிக்கிறேன் என்று தாங்கள் அருள் ஐயா மூலம் அறிந்தாலும் உடனே என்னை வரவழைத்து, என் முன்னேயே அருள் அவர்களிடம், ‘ஏம்பா, ராஜ்குமாரை எங்கே அனுப்பி புதிய பொறுப்பு கொடுக்கலாம், அந்த ஹோட்டல் ஓனர் இப்போ எங்கே.. இந்த ஹோட்டல் CEO எங்கே.. என்று ஒரு மீட்டிங் மாதிரி அரை மணி நேரம் அவருடன் பேசி, பல 5 நட்சத்திர ஹோட்டல்களில் பெரிய பொறுப்புகளுக்கு என்னை அனுப்பி வைத்து அழகு பார்த்தவர் நீங்கள்.
உங்கள் கண்ணெதிரே நட்சத்திர ஹோட்டல்களிலே நானும் ஒரு நட்சத்திரமாய் மின்ன நீங்களே காரணம். Le Royal Meridien, Accord Metropolitan Hotelகளின் முதலாளிகளுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாகவும் குருவாகவும், நண்பராகவும் இருக்கிறபடியால் உங்களின் ஒரு சொல், அவர்களுக்கு ‘எள் என்றால் எண்ணை’. இதை நான் கண்கூடாகப் பார்த்தும் அனுபவித்தும் வந்துள்ளேன். வருடத்திற்கு ஒரு முறை வரும் மற்ற சகோதரர்கள், திரு. கண்ணன், திரு. பரதன் அவர்கள் ஒரு முறை இந்தியா/சென்னைக்கு தத்தம் குடும்பங்களுடன் வந்திருந்த போது தி. நகரில் இருக்கும் அக்கார்ட் மெட்ரோபோலிடன் ஹோட்டலில் அவர்கள் தங்க நேரிட்டது. நான் அங்கு அப்பொழுது விருந்தோம்பல் துறை மேலாளராக இருந்தேன்.
அப்பொழுதுதான் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தேன். கண்ணன் அண்ணா ஆஸ்திரேலியாவிலும், பரதன் அண்ணா தென்னாப்பிரிக்காவிலும் மிகப் பெரிய பதவிகளில் இருக்க, அவர்கள் இருவரையும் திரு. அருள் ஐயா அவர்களையும் உங்கள் புத்திரர்களாக பார்க்கப் பார்க்க, அவர்களை நீங்கள் இத்தனை பெருமக்களாக உலகமே போற்றும் உத்தமர்களாக பெற்ற பாக்கியமும் வளர்த்த விதமும் அவர்கள் உங்களை ‘அப்பா’ என்று அழைக்கும் வண்ணம் அந்த உரிமை எனக்கும் கிடைத்ததை எண்ணி எண்ணி நான் மகிழ்ந்த நாட்கள் ஏராளம்.
ஒரு முறை நீங்கள் உங்கள் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் ஒருவரது கல்யாணத்துக்கு தலைமை தாங்கி நடத்த புதுவைக்கு சென்ற போது உங்களோடு பயணிக்க இன்னுமொரு கல்லூரி தமிழ்ப் பேராசிரியரையும் என்னையும் அழைத்தீர்கள். கரும்பு தின்னக்கூலியா.. சந்தோசமாக உங்களுடன் மகிழ்வுந்தில் பயணம் செய்யத் தொடங்கிய சிறிது நேரத்தில்.. முன் இருக்கையில் ஓட்டுநருடன் அமர்ந்திருந்த தாங்கள் ‘சட்’டென்று பின் பக்கம் திரும்பி, திரு. பூபதியிடம், “உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் ராஜ்குமார் பார்ப்பதற்கு பூனை, ஆனால் தமிழ்ப் பட வசனங்கள் பேசுவதில் புலி.. ‘சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய ‘சேரன் செங்குட்டுவன்’ நாடக வசனத்தை ராஜ்குமார் எழுத்துப் பிசகாமல் பேசுவதில் வல்லவர்’ என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டீர்கள். நான் அதிர்ந்தேன்.
காரணம், நான் என்றும் தங்களிடம் எனக்கு அந்த வசனம் நன்றாகப் பேச வரும் என்றோ, பேசிக்காட்டியோ நடித்தவனல்ல. என்றோ, எங்கோ, திரு. அருள் அவர்களிடம் பேச்சுவாக்கில் நான் சொன்னதையும் பேசிக்காட்டியதையும், அவர் உங்களிடம் சொல்ல, அதை கவனமாக ஞாபகத்தில் வைத்திருந்து, சரியாக பயண நேரத்தில் என்னை அந்த வசனம் பேசச் சொல்லி கேட்டுக்கொண்டதும் நான் திக்குமுக்காடிப்போனேன்.
சாதாரணமாக இப்படிப் பயணம் செய்பவர்கள் மகிழ்வுந்தில் ஏதோ ரேடியோவிலோ சிடியிலோ பாட்டு கேட்டுக்கொண்டும், புரளி பேசிக்கொண்டும், சினிமா பற்றிய அரட்டை அடித்துக்கொண்டும் இருக்க, தமிழ்த்தாய் பெற்றெடுத்த தாங்கள் அந்தப் பயணத்தின் களைப்பு தீர தமிழையே காது குளிரக் கேட்க ண்டும் என்று என்னை நினைவு கூரச்செய்து அந்த நீள வசனத்தை பேசச்செய்தது, யான் பெற்ற இன்பம். ‘சுவையான கதை ஒன்று சொல்லுங்கள் அத்தான்..’ என்று இளவரசி தன் காதலனைப் பார்த்து முகாந்திரத்துடன் தொடங்கும் அந்த வசனக் காட்சி திரையில் சுமார் 10 நிமிடங்கள் கேமராவை நகர்த்தாமல் கொள்ளாமல் ஸ்டில் போஸில் இருக்க, நடிகர் திலகம் சிவாஜி, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் கதாநாயகி என்று மூவர் மேடையில் நடிக்க, ஒரே ‘டேக்’கில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களால் அந்த சினிமாவின் நாடகக் காட்சியில் பேசி நடித்து மிகுந்த பாராட்டைப்பெற்ற அந்த நீண்ட அந்த வசனம் இதுதான்..
‘காவிரி தந்த தமிழகத்துப் புது மணலில் களம் அமைத்துச் சேர சோழ பாண்டிய மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலம் அது..” என்று நான் பேசத்தொடங்கி சிவாஜி அவர்கள் பேசிய அந்த வசனத்தை நானும் ஒரே டேக்கில் பேசி முடித்ததும், நீங்கள் ஒரு ரசிகன் போல் என் பேச்சை ரசித்துச் சுவைத்து கைதட்டி ஆரவாரித்து என்னைப் பாராட்டியது இன்றும் பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்துள்ளது.
அன்று இரவு நாம் புதுவைக்குப் போய்ச் சேர்ந்து உணவு உண்டு பயணக் களைப்பிலும் உண்ட மயக்கத்திலும் சீக்கிரமே உறங்கச்சென்று விட்டோம். உங்களுக்கு தனி அறையும், உங்கள் அறையை அடுத்த ஒரு டபுல் பெட்ரூம் அறையில் நானும் நண்பர் பூபதி அவர்களும் தங்கினோம். மறு நாள் காலையில் முகூர்த்தம் 7.30/9.00 என்றிருக்க, ஒரு 6 மணி அளவில் எழுந்தால் போதும் என்று நினைத்து 6 மணிக்கு அலாரத்தை செட் செய்து விட்டு நான் தூங்கி விட்டேன்.
மறுநாள் அதிகாலையில் அது எத்தனை மணி என்று தெரியவில்லை, பக்கத்து அறையிலிருந்து நீங்கள் யாருடனோ உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்க உங்கள் பேச்சில் தமிழ் தடையற பிரவாகமாக உரத்தே ஒலித்துக் கொண்டிருக்க.. நான் ‘சடே’ரென்று தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தேன். பக்கத்து அறையாக இருந்தாலும், நடுவே பெரிய சுவர் இருந்த காரணத்தால் உங்கள் குரல் மட்டும் கணீரென்று எனக்கு கேட்டதே ஒழிய, யாருடன் நீங்கள் இத்தனை காலையில் இப்படி உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்ன விஷயமாய் அந்த வாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்றும் புரியவில்லை.
எனக்கு அடுத்த படுக்கையில் படுத்திருந்த திரு. பூபதியைப் பார்த்தேன்.. அவர் ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம், அப்பாவைப்பற்றி எனக்குத் தெரியும், உனக்குத் தெரிய வேண்டும் என்றால், நீ போய்ப் பார்த்து தெரிந்து கொள்’என்று சொல்லாமல் சொல்கிற மாதிரி விட்டத்தைப் பார்த்தபடி கால்களை பரப்பிக்கொண்டு ‘பெப்பரப்பே..’ என்று தூங்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஆவலை அடக்க முடியவில்லை. பல் கூட விளக்காமல் அடித்துப் பிடித்து உடைகைளை மட்டும் சரி செய்து கொண்டு விடுவிடு வென்று உங்கள் அறைக்கு ஓடி வந்தேன்.
என்ன ஆச்சரியம்.. உங்கள் அறைக்கதவு உள் தாழ் போடப்படாமல் வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருக்க, சிறிதே திறந்திருந்த அந்தக் கதவின் இடைவெளியிலிருந்து உங்கள் குரல் சற்றே உரத்து ஒலித்துக்கொண்டிருந்தது. அது.. தமிழ்ப்பிரவாகம்! ஆனால் ஒன்றும் புரியவில்லை.. துணிவை வரவழைத்துக்கொண்டு மெலிதாக உங்கள் அறைக்கதவை தட்டினேன். பதிலில்லை. இன்னும் சற்று துணிவாக உங்கள் அறைக்கதவை மெதுவே உள்ளே தள்ளி ஓரடி எடுத்து வைத்து நான் உள்ளே வந்து நின்றேன். அதிர்ந்தேன்! அங்கு நான் கண்ட காட்சி..! நீங்கள் கட்டிலில் பின்பக்கம் திரும்பி உட்கார்ந்து சுவற்றைப் பார்த்தபடி உரத்த குரலில், தேவாரம், திருவாசகம், திருச்சிற்றம்பலம் என்று சிவ துதி பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தீர்கள். அறையில் யாரும் இல்லை. நான் வந்து நின்றது கூட உங்களுக்குத் தெரியவில்லை.
உங்கள் கணீர்க் குரலில் மெய்மறந்து நீங்கள் சிவ துதியில் ஈடுபட்டிருக்க, அந்தக் காலை வேளை எனக்கு எத்துணை தெய்வாதீனமாக அமைந்தது என்பதை இன்று நினைத்தாலும் இன்பப் பெரு ஊற்று வெள்ளம் வந்து என்னை அடித்துச் செல்கிறது. கண் குளிர, காது குளிர நானும் மெய்மறந்து அவற்றை ஒரு அரை மணிநேரம் நின்று கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பப்பா.. அந்த நாள் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு நன்னாள்! அதன் பின் எத்தனையோ விழாக்களில், நிகழ்வுகளில் நீங்களும் அம்மாவும் வந்து எங்களை வாழ்த்தி மகிழ்ந்துள்ளீர்கள்.
மஸ்கட்டிலிருந்து திரும்பியதும், சென்னையில் நான் என் தம்பி இரவியுடன் சில மாதங்கள் தங்கி இருந்த பின், தாம்பரம் கிழக்கில் உள்ள செம்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் குடி அமர்ந்தேன். சில வருடங்களுக்குப்பின்.. 2005 என்று நினைக்கிறேன்.. அதே செம்பக்காத்தில் உள்ள கௌரி நகரில் புது வீடு வாங்கி நான் குடிப் பெயர்ந்த போது புது மனை புகு விழாவிற்கு உங்களையும் அம்மாவையும், அருள் ஐயாவையும் குடும்பத்தோடு அழைத்திருந்தேன். அருள் ஐயா அலுவல் பொருட்டு அன்று வர முடியாமல் போனாலும், உங்கள் வயதையும் பொருட்படுத்தாது அம்மாவும் நீங்களும் எங்கள் இல்லம் தேடி வந்திருந்து என்னையும், சகுந்தலா, நிலா, தாரவையும் புது இல்லத்தையும் வாழ்த்தி, எங்களோடு மதியம் வரை இருந்து விருந்துண்டு போனது நான் பெற்ற பெரும்பேர். அவ்வாறே, அருள் அவர்களும் 2018 வருடம், சென்னையில் என் தம்பி இரவியின் புதல்வி இனியவள் நவீன் திருமணத்திற்கு வந்திருந்து தம்பதியரை வாழ்த்திச் சென்றது, என்னையும் என் தம்பி குடும்பத்தையும் பெருமைப்படுத்திய தருணங்கள்.
எப்பொழுதெல்லாம் எங்கள் இல்லங்களில் விசேஷம் என்றாலும் எங்களோடு வந்திருந்து நீங்கள் தவறாது எங்களை வாழ்த்திச் செல்வது என்பது எங்களுக்கு ஒரு பெரும்பேறு. அப்பா, உங்களோடும் அம்மா, அன்புச் சகோதரர் அருள் ஐயாவோடும் பழகத்தொடங்கி சற்றேறக்குறைய இதுவரை 20 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும், ஆரம்பத்தில் நீங்கள் எந்த உள்ளன்போடும் உரிமையோடும் எங்களுடன் பழக ஆரம்பித்தீர்களோ அந்தக் குணம் சிறிதும் மாறாமலும் குன்றாமலும் இது நாள் வரை இருந்து வந்திருக்கிறது.
நீங்கள்.. மனிதருள் மாணிக்கமாய் மற்றுமொரு தமிழ்த்தந்தையாய் மாறாத பாசம் கொண்ட குடும்பத் தலைவனாய் தமிழ் நெஞ்சங்களில் நீங்காத தென்றலாய்.. தேயாத நிலவாய் எளிமையில் ஏற்றம் கொண்ட கோமகனாய்.. நீங்களும் அம்மாவும், உங்கள் குடும்பமும் என்றென்றும் நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடனும் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்தி நிற்கும் உங்கள் மகன்களில் ஒருவன்.

Add a Comment