POST: 2020-08-22T10:35:23+05:30

தின செய்தி நாளிதழில் 17.08.2020 அன்று வெளியான முனைவர் ஒளவை நடராசனின் கட்டுரை

‘‘ஓங்கி வெல்லும் உலகப்புகழ்
அண்ணா புகழ் என்றும் வாழ்க!!’’

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி எண்ணும்போது புறப்பாடல் நினைவுக்கு வருகிறது. சேரமான் கோக்கோதை மார்பனைச் சங்கப்புலவரான பொய்கையார் பாடிய பாடலில், “நாடன் என்கோ ஊரன் என்கோ பாடிமிழ் பனிக் கடற்சேர்ப்பன் என்கோ! யாங்ஙனம் மொழிகோ ஓங்குவாட் கோதையை” என்று வியக்கிறார்.
அண்ணாவைப் பற்றியும் இப்படித்தான் சொல்ல வேண்டும். அவரை அரசியல்வாதி என்பதா, சீர்திருத்தவாதி என்பதா, பகுத்தறிவுவாதி என்பதா, சிறுகதையாசிரியர் என்பதா, நாவலாசிரியர் என்பதா, நாடகாசிரியர் என்பதா, நடிகர் என்பதா, இதழாசிரியர் என்பதா, இலக்கியவாணர் என்பதா கட்டுரையாளர் என்பதா, சிந்தனையாளர் என்பதா பேச்சாளர் என்பதா, கவிதைச் சுவைஞர் என்பதா, ஆங்கிலப் புலவர் என்பதா, வரலாற்றறிஞர் என்பதா, பொருளாதாரப் பேராசிரியர் என்பதா? எல்லாவற்றுக்கும் எல்லாமாகத் திகழ்கிறார். எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன் “அண்ணாத்துரை எண்ணாத்துறை இல்லை” எனக் குறித்தார்.

அண்ணாவின் நினைவு குறுந்தொகைப் பாடலையும் நினைவூட்டுகிறது. நாடறிந்த அந்த நல்ல பாடல்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.!

எனத் தலைவி, தலைவனிடம் தான் கொண்ட தொடர்பைப் போற்றியுரைக்கும் பொன்னார்ந்த பாடலாகும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘பேசா நாளெல்லாம் பிறவா நாளே’ எனக்கருதி, நாளெல்லாம் பேசிவந்தவர். நாடெல்லாம் பேசி வந்தவர், ஏறத்தாழ 1937 முதல் 1968 வரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்து மேடைகளில் வீசிய மெல்லிய பூங்காற்றாக, சீறியெழும் புயலாக வீசி, ஈடிணையற்ற பேச்சாளராக ஒளிர்ந்தார்கள்.
“சினமிகுதானை வானவன் குடகடல் பொலந்தறு நாவாய் ஓட்டிய அவ்வழி பிறர்கலம் செல்கலாது அனையேம்” என்ற புறப்பாடல் வரிகளைப் போல, அண்ணா பேசிய மேடையில் பிறர் பேச்சு எடுபடாமல் போகும் என்ற நிலையிலே அவர் ‘பேச்சுலகப் பெருமலை’யாகத் திகழ்ந்தார்.

“துணித்த நறுந்தேனென்று சொல்லும் சொல்லைத்
தொடங்குகுரல் முழங்குகடல்” என்ற பாவேந்தரின் பாட்டுவரிகளுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தது அவர் பேச்சு. திரு.வி.க. எழுதுவது போலப் பேசினார் என்றால், அண்ணா பேசுவது போல எழுதினார் என்று கூறலாம்.
‘வேலைக்காரி என்னும் வியப்பான நாடகத்தை
வேலை மறந்துவிட்டு விருப்பாகப் பார்த்திடலாம்!
மாலைச் சந்திரோதயத்தில் மங்காத நல்ஒளியில்
மலர்ச்சிபெறும் மனக்குமத மணமாகும் எழுத்துக்கள்
பால்போன்ற கைச்சுவைக்கு பர்னாட்ஷா என்பார்கள்
மேலான அறிவியலில் எம்.என்.ராய் என்பார்கள்
கோலக் குளிர்நடைக்கு கோல்ட்ஸ்மித்தே என்பார்கள்
அவரெல்லாம் உரைகல்தான்! அண்ணா ஓர் அசல் தங்கம்’

என்பது அந்தக் கவிதை.
என்னுடைய அப்பாவாக நான் பாராட்டிப் பெருமைப்பட்ட திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம், திருவாசகத்தையும், திருக்குறளையும் தன்னுடைய செம்மாந்த ஆங்கிலத்தில் உரைவிளக்கம் தந்த பெருமகனாவார். 1930-களிலேயே South Indian Celebrities (Volume-I & II) என்ற ஆங்கில நூலில் அன்னாளைய நீதிக்கட்சித் தலைவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் மிக நுணுக்கமான ஆழ்ந்த கட்டுரைகளை எழுதியிருந்தார். தந்தை பெரியாரைப் பற்றிய அவருடைய ஆங்கில விளக்கம் மிகப் பிரம்மிப்பாகவும், மறுமலர்ச்சியாகவும் திகழ்ந்து ஆங்கிலேயர்களே வியந்து பாராட்டும் வண்ணம் இருந்தது. அவர் ஒருமுறை, புரட்சித்தலைவரிடம் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி ஓர் ஆங்கிலத் தொடரைத் தன் வெண்கலக் குரலில் சொல்ல, “The Dravidian Demosthenes has inaugurated a new era of Tamil eloquence which is original and wonderful but unorthodox. Tons of thousands of speakers on the modern political platform are found at 30 many echoes of C.N.A. reverberating throughout Tamil Nadu day and night. They also echo and recreate the same dragging, drugging, sing song periods with rhythmically interposed jerks the refreshing and alliterative epithets and double and triple negatives and dramatised questions etc., all of which are the hall mark of Annadurrayan pattern of oratory. The people throng to his meetings in thousands and get thrilled and feasted on the felicitous and rhythmic flow of the ambrosial spear of ornamental Tamil.” அந்த மேற்கோளைக் கேட்டு புரட்சித் தலைவர் பெருமகிழ்ச்சியடைந்து, ‘ஔவை… உங்களை ‘தமிழ்… தமிழ்…’ என்று நான் அழைப்பதுபோல, இனிமேல் திருவாசகமணியை ‘ஆங்கிலம் …. ஆங்கிலம்…’ என்று சொல்லித்தான் அழைத்து மகிழ்வேன்’ என்று பெருமைப்பட்டார்.
உலகத்தில் பல தலைவர்களான, பொதுவுடைமைத் தந்தை கார்ல் மார்க்சு, பொதுவுடைமை ஒளிவிளக்கு எங்கில்சு, அண்ணல் காந்தியடிகள், பண்டிதர் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றோர் பிறந்து வெற்றி பெற்றனர்.

ஒவ்வொரு தலைவரும் அடுத்த தலைவரையோ தலைவியையோ கொள்கை, கோட்பாடு அவைகளை விட்டுச் சென்று வழிநடத்த பாதை அமைத்துத் தந்தனர். குறிப்பாக, புரட்சித் தலைவர் மட்டும், தான் கண்ட, கொண்ட ஒரே தலைவரான பேரறிஞர் அண்ணாவை மட்டும் என்று சொன்னால் மிகையாகாது. அவரை வாழ்த்துவது, வணங்குவது, போற்றுவது, எந்த நேரத்திலும் அவர் பெயரையே உச்சரிப்பது என்பதைத் தன் வாழ்நாளின் தவமாகவே மேற்கொண்டார். புரட்சித் தலைவர் தன் திரைப்பாடல்களிலும், வசன உச்சரிப்புகளிலும், கதைப் பாத்திரங்களிலும், பேரறிஞர் அண்ணாவை என்றென்றும் நினைத்து நினைத்துப் படமெடுத்து மக்களுக்குப் பாடமாக்கினார்கள். அதனால்தான், அப்பொழுதே பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவரை என் இதயக்கனி என்று பாராட்டி அழகு பார்த்தார். அண்ணா எந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கம்போதும், பொன்மனச் செம்மல் கூட்டத்தின் நடுவில் நடந்து வரும்போதே மக்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியைக் கண்ணுற்று அரசியல் எழுச்சியாக மாறுவதை பேரறிஞர் அண்ணா அறுபதுகளிலேயே கண்டு பெருமைப்பட்டார்.

ஓராயிரம் மேடைப்பேச்சும், பலபக்கக் கட்சிக் கொள்கை விளக்கங்களையும்விட புரட்சித் தலைவர் நடித்த படக்காட்சிகளும், பாடல்வரிகளும் பேரறிஞர் அண்ணாவின் புகழை ஓங்கி விஞ்சி நிற்க வைத்தது.
அண்ணா அவர்கள் 1937 ஆம் ஆண்டு முதல் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுப் பேசியும் எழுதியும் வந்தார். அந்நாள் முதல் 1969ஆம் ஆண்டு, பிப்ரவரி 2ஆம் நாள் அவர் மறையும் வரை, 32 ஆண்டுகளை, “அண்ணாவின் யுகம்” என்றே அழைக்கலாம். இந்த நெடிய காலப்பகுதியில், வாரந்தோறும் அவர் ஏடுகளில் தொடர்ந்து எழுதி வந்தவை, நாள் தவறாமல் அவர் ஆற்றிய ஆற்றொழுக்கான பேச்சுகள் யாவற்றையும் தொகுத்தால், அவை ஒரு லட்சம் பக்கங்கள் கொண்ட கருத்துக் குவியல்களாகும். கலைக் களஞ்சியம் போல் அவற்றைத் தொகுத்து, ஒரு சீராக வெளியிடுவதானால் 60 தொகுதிகளைச் சிறப்பாக உருவாக்க முடியும்.

தந்தை பெரியாருடைய சிந்தனைகளை 3 தொகுதிகளாகவும், அரவிந்தருடைய சிந்தனைகளை ஆங்கிலத்தில் 30 தொகுதிகளாகவும், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளைத் தமிழில் 8 தொகுதிகளாகவும், ஆங்கிலத்தில் 13 தொகுதிகளாகவும், காந்தியடிகளின் சிந்தனைகளைத் தமிழில் 13 தொகுதிகளாகவும் ஆங்கிலத்தில் 70 தொகுதிகளாகவும் நேருவின் சிந்தனைகளை ஆங்கிலத்தில் 7 தொகுதிகளாகவும் வெளியிட்டுள்ளனர். இப்படி, பல்வேறு வெளிநாட்டுப் பேரறிஞர்களுடைய சிந்தனைகளையும் பல்வேறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். அந்த நிலை அண்ணாவின் கருத்துக்கும் ஏற்படும் பொன்னான சூழலை நமது அரசு உருவாக்க வேண்டும் என்று நான் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக இருந்தபோது, 1986-87-ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகக் கூட்டமொன்றில் கேட்டுக் கொண்டேன். இதைத்தான் புரட்சித் தலைவர் மிகவும் விரும்பி பேரறிஞர் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று நெடுநாள் நினைந்து நினைந்து இதே சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1979-ஆம் ஆண்டு விதை தூவினார். அதைச் செயலாக மாற்றிய பெருமை புரட்சித்தலைவி அம்மாவைச் சாரும். 1994-ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் நாளன்று (அரசாணை நிலை எண்.190, தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை) ரூ.75 லட்சம் அண்ணா குடும்பத்திற்கு வழங்கி நூல்களை நாட்டுடைமையாக்கினார்கள்.
என்னுடைய இனிய நண்பரும் பதிப்புத்துறையிலேயே ஆழங்கால்ப்பட்டவருமான பெரும்பதிப்பாசிரியர் ‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளர் திரு. இளவழகனாரின் அரிய முயற்சியில், பேரறிஞர் அண்ணாவின் 50,000 பக்க உரைகளை 64 தொகுதிகளாக அண்மையில் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீடு பெருமிதந் தந்தாலும் நான் குறிப்பிட்டவாறு பேரறிஞர் அண்ணாவின் இன்னும் காணக்கிடைக்காத ஆங்காங்கே சிதறிய முத்துக்களையும் பவளங்களையும் வைரங்களையும் தொகுத்து மாபெரும் அண்ணா நூல்மாலையாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.
கடந்த ஏழாண்டுகளாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேரறிஞர் அண்ணாவின் கனவுகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதைப் பார்க்கும்போது, நிறுவனத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆய்விருக்கை வாயிலாக வெளியிடுவதன் மூலம், பேரறிஞர் அண்ணாவின் அனைத்துச் சிந்தனைகளையும் அண்ணாவின் முழுமையான தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது குறித்து புரட்சித் தலைவர் அவர்கள், (15.09.1979 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்) ஆற்றிய உரை வருமாறு:-
“இங்கே எழுத்தாளர் ஜெகசிற்பியன் துணைவியாருக்குப் பரிசு அளிக்கப்பட்டது. அதனை பரிசு என்பதா?காணிக்கை என்பதா? இந்தக் காணிக்கையை ஜெகசிற்பியன் உயிரோடு இருந்து பெற்று இருந்தால் மகிழ்ச்சி அதிகமாக இருந்திருக்கும். தமிழகத்தின் துரதிருஷ்டம் பல நல்லவர்களை அவர்கள் மறைந்த பிறகுதான் மதிக்கிறோம். இந்த அம்மையாருக்குத் தந்த காணிக்கை, அவர் இழந்த இழப்புக்கு ஈடு ஆகாது.

பல எழுத்தாளார்கள் நூல்களை எழுதுகிறார்கள். அதை வெளியிட எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அச்சகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குகிறார்கள். இதனால் நல்ல எழுத்தாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். நிறைய பணம் பெற வேண்டியவர்கள் சில ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள். யாரோ இலட்சக்கணக்கில் பெறுகிறார்கள். இந்த நிலையைத் தடுக்க எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்புத் தர அரசால்தான் முடியும்.

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய நூல்களை அச்சடிக்க விரும்பி, அதனை அரசிடம் ஒப்படைத்து, அதன் பலனை அரசும் எடுத்துக் கொண்டு, எங்களுக்கும் கொடுங்கள் என்று கேட்கும் நிலை ஏற்படவேண்டும்.
இதனைச் செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்படும், இதைச் செய்ய அரசுக்கு ஆசை இருக்கிறது. இதற்கு அறிஞர்களும், ஆன்றோர்களும் ஆசியும் ஒத்துழைப்பும் தரவேண்டும்.

அண்ணா அவர்கள் எழுதிய நூல்களை அரசே உரிமைபெற்று வெளியிட ஆவல் கொண்டுள்ளது. இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். அது போல் பலருடைய நூல்களையும் வெளியிட முயல்வோம்.
அதேபோல் காஞ்சியில் அண்ணா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை அண்ணா நினைவாலயமாக ஆக்க ஆர்வம் கொண்டிருக்கிறோம்.

இதனைச் செயல்படுத்த நல்ல விவரம் தெரிந்தவர்-இதில் நம்பிக்கை உள்ளவர்களைக் கொண்ட சிறுகுழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா வாழ்ந்த இல்லத்தை விலைபேசி, விலைக்கு வாங்க இருக்கிறோம்.
தமிழகத்திலே ஒரு புது மலர்ச்சியை ஏற்படுத்த முயன்று வெற்றிபெறுவோம் என்ற என் ஆவலையும் நம்பிக்கையையும் தெரிவித்துக் கொண்டு நல்லுள்ளங்களுக்கு வணக்கம் கூறி, அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம்.”
தொடர்வோம் பொன்மனச்செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *