POST: 2020-09-08T10:24:11+05:30

உரைவேந்தரை இன்று நினைத்துப் பார்ப்போம்

“காணும் இடமெல்லாம் தமிழர் அறியா மொழிகள் காட்சி தருகின்றன, காணப்படும் ஒரு சில தமிழ்ச் சொற்களிலும், பெயர்களிலும், பிழையும் வலுவும் பெருகி உள்ளன. அரசியல் ஆலயங்களிலும், தொழில் வணிக அலுவலகங்களிலும், கைவண்டி முதலிய போக்குவரவுகளிலும், கோயில் வழிபாடுகளிலும், பிற துறைகளிலும், தமிழர்களின் தமிழ் இல்லை. தமிழ்க்கருத்தும், ஒழுக்க நெறியும் தக்கவாறு இல்லை” என்று தமிழ் மொழியின் அவல நிலை பற்றியும் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே கவலையுடன் பதிவு செய்திருந்தார் ஒரு தமிழறிஞர்.

அவர்தான் அமரர் ஔவை துரைசாமி பிள்ளை.

தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள ஔவையார் குப்பம் என்னும் கிராமத்தில், சுந்தரம்பிள்ளை-சந்திரமதி அம்மையார் தம்பதிகளுக்கு ஐந்தாவது குழந்தையாக 1902 செப்டம்பர் ஐந்தாம் நாளில் பிறந்தார் ஔவை துரைசாமி.

உள்ளூரில் தொடக்கக் கல்வியும்,வால்டர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பையும் முடித்த பின்னர் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்தார். நகராட்சி அலுவலகத்தில் சில காலம் சுகாதார ஆய்வாளர் வேலை. இருப்பினும் தமிழை முழுவதுமாக கற்க வேண்டும். தமிழ் பேராசிரியராக வேண்டும் என்ற தனியாத தாகம் காரணமாக அங்கிருந்து விடுவித்துக் கொண்டு தமிழ் பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
அக்காலத்தில் தஞ்சையை அடுத்த ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ தனித்தமிழ் பயில்வதற்கு ஏற்ற இடமாக திகழ்ந்தது. அதன் தலைவராக இருந்த உமாமகேசுவரனார், தம்மை நாடிவந்த ஔவை துரைசாமிப்பிள்ளையைப் பார்த்தவுடன் அகமகிழ்ந்தார். தமிழ்ச்சங்கப் பள்ளியில் ஆசிரியர் பணியுடன், சங்க நூலக பணியையும் வழங்கினார். இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு களித்த தமிழ் வேள், தொல்காப்பியம் தெய்வச்சிலையார் ஓலைச் சுவடிகளைப் படித்து பார்த்து எழுதும் முக்கிய பணியை கொடுத்தார்.

ஒளவை துரைசாமி பிள்ளை இவ்விரு பணிகளையும் செம்மையாகச் செய்து ஏனையோரின் பாராட்டைப் பெற்றதுடன் குரு மெச்சும் சீடராகவும் திகழ்ந்தார்.பணிக்கு இடையே 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

இவருக்கு 11 குழந்தைகள், இவர்களுள் மூன்றாவதாகப் பிறந்தவர் ஔவை நடராசன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்த தமிழறிஞர்.

இவர் பல்வேறு பள்ளிகளில் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழைக் கற்பிப்பதுடன் நில்லாமல், வேற்றுமொழி தாக்குதல்களில் இருந்து தமிழை காப்பதிலும் ஔவை துரைசாமி தீவிர முனைவுகளை மேற்கொண்டார். 1938 இல் இந்தி கட்டாயமாக்கப்பட்ட போது அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கினார். இவரது பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அப்போதைய அரசு, அவரது 12 ஆண்டுகால தமிழாசிரியர் வேலையில் பல ஊர்களுக்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. ஆனாலும் பணி இடம் மாற்றினாலும் கொள்கை தடம் மாற மாட்டேன் என்னும் உறுதியுடன் தொடர்ந்து இயங்கினார்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்காக இவர் எழுதிய முதல் நூல் ‘சீவக சிந்தாமணிச் சுருக்கம்’ . இதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, பல நூல்களை அப்பதிப்பகத்துக்கு எழுதிக் கொடுத்தார். பின் சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் உரை எழுதினார்.

தொடர்ந்து ‘சைவ சமய வரலாறு’, ‘ஞானாமிர்தம்’,’புறநானூறு’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். காப்பியங்களுக்கும் தொகை நூல்களுக்கும் உரைகளை செம்மையாக எழுதி முடித்தார். அங்கு பணியாற்றிய காலத்தில் கல்வெட்டு அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், இலக்கண வரலாற்று அறிஞர் வெள்ளைவாரணர் ஆகியோரின் நட்பு கிடைத்தது.

1951 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளைக்கும் அழைப்பு வரவே மிகுந்த உவகையுடன் ஏற்றுக்கொண்டார். ஓலைச்சுவடி படித்தல், பெயர்த்து எழுதல் திறமைகளுடன் கல்வெட்டு அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரிடம் கல்வெட்டுகளை படிக்கவும், ‘படி’ எடுக்கவும் போதிய பயிற்சிகளை ஔவை துரைசாமிப்பிள்ளை எடுத்துக் கொண்டார். பின்னாளில் மாணவர்களுக்கு ‘தென்னிந்திய கல்வெட்டுகள்’ தொடர்பான பாடம் எடுக்கும்போது, மதுரை ஒற்றைக்கடை மலையடிவாரத்தில் உள்ள நரசிங்க பெருமாள் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று, நேரடி செயல்முறை பயிற்சியாக செய்து விளக்கினார்.

பழந்தமிழ் ஏடுகளைத் தேடுவதில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக தமிழில் முதுகலை,முனைவர் என்று பட்டங்களை பெற்று இருந்தால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கூட ஆகியிருக்க முடியும். ஆனால் ஏனோ ஓலைச்சுவடிகள் படிப்பதிலும், படி எடுப்பதிலும், பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதுவதுமே அன்னைத் தமிழுக்கு தொண்டு என்ற குறிக்கோளுடன் தனது வாழ்நாளை கழித்தார்.

16/01/64 அன்று நடைபெற்ற மணி விழாவின் போது இவரது தமிழ் சேவையைப் போற்றும் வகையில் அவருக்கு “உரைவேந்தர்” பட்டம் வழங்கப்பட்டது. பின் அதுவே அவரது அடைமொழியாகவும் மாறிவிட்டது. அதன்பிறகு ஏராளமான பட்டங்கள் பதக்கங்கள் பாராட்டுகள் குவிந்தன.

உரைவேந்தர் எழுதிய 34 நூல்களில் புறநானூறு, ஐங்குறுநூறு உரை, பதிற்றுப்பத்து உரை, நற்றிணை உரை, ஞானாமிர்தம் உரை, சிலப்பதிகாரம் உரை, மணிமேகலை உரை, சீவக சிந்தாமணி உரை, சூளாமணி உரை, யசோதர காவியம் உரை, திருவருட்பா உரை, சைவ இலக்கிய வரலாறு, ஔவைத் தமிழ், சேர மன்னர் வரலாறு, சிவஞானபோதம் செம்பொருள், தமிழ் தாமரை, பெருந்தகை பெண்டிர், பாணர், மதுரைக் குமரனார் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அன்னை தமிழுக்கும் ஆன்ற சைவத்துக்கும் இறுதி மூச்சுவரை உழைத்த உரைவேந்தர் துரைசாமிப்பிள்ளை 79 வயதில் 1981 ஏப்ரல் 3ஆம் தேதி இயற்கை எய்தினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *