டாக்டர் தாரா நடராசன், எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்., எம்.டி.,
ஜே82, அண்ணாநகர் ( கிழக்கு ) ( குழந்தை நல மருத்துவர் )
சென்னை – 102.
மேனாள் முதல்வர்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.
மனையில் கிடைக்கும் மருந்து
” வீட்டு வைத்தியம் ” எனும் இந்த அரிய நூலை நான் முழுவதுமாகப் படித்தேன். நாம் பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கும் வீட்டு மருந்துகள் எல்லாவற்றையும் அவற்றின் மூலப் பொருள்களின் விகிதாசாரங்களுடன் ஆசிரியர் வழங்கியிருக்கிறார். மிக மிக விரிவாக எடுத்தாளப்பட்ட நூல். நான் வெகுவாக இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.
குறிப்பாக, அல்லோபதி மருந்துகள் பலவற்றின் அடிப்படை மூலப் பொருள்கள் யாவும் நமது பண்டைய கால சித்த மருத்துவத்தின் மூலப் பொருள்களையே கொண்டிருப்பது நமக்கு எல்லாம் ஏதோ ஒரு புதிய பாடத்தைச் சொல்லுகிறது. அதைப் பற்றி எழுத்தாளரின் முகவுரையில் காணலாம்.
அடுத்ததாக மொழிபெயர்ப்பாளர் மிக்க கருத்தோடு செய்திருக்கும் மொழிபெயர்ப்பைப் பாராட்டுகிறேன். மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் என்றோ வாக்கியத்திற்கு வாக்கியம் என்றோ செய்யப்படுவதில்லை. அப்படி இரு மொழிகளிலும் ஒரே பொருளை அதன் உரிய பொருளில் குறிக்கும் சொற்கள் அகப்படுவதில்லை. மொழிபெயர்ப்பை நான் பாராட்டுவதற்குக் காரணங்கள்.
எளிமையான சொற்கள் – மிக இயல்பாக படித்துச் செல்லும் வகையில் எளிய வாக்கியங்கள். ( ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் கிடையாது.
ஆங்கில மூலத்தின் பொருளும் உணர்வும் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட நூலில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதுவே மொழிபெயர்ப்பின் வெற்றிக்குக் காரணம்.
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால், மொழிபெயர்ப்பு, Friendly, Facile and Fluent ஆக இருக்கிறது.
இன்றைய காலங்களில் வீட்டு வைத்தியம் தெரிந்த பாட்டிகளும் இல்லை. அவர்கள் தயாரித்துக் கொடுத்த வழிமுறைகளும் ,கை மருந்துகளும் இல்லை. அந்தக் குறையை அறவே போக்கிட வீட்டு வைத்தியம் நூல் பெரிதும் தேவைப்படுகிறது. இதை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டிற்கும் வைத்து படித்துப் பேணலாம்
அன்புடன்
தாரா நடராசன்
23 6 2016

Add a Comment