தின செய்தி – 14.09.2020
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 52)“
மண்ணைத் தோண்டி தங்கத்தைப் புதைத்தோம்!”
முனைவர் ஔவை நடராசன்,மேனாள் துணைவேந்தர்தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
என் மகன் அருளிடம் பேராசிரியர் அறிஞர் தெ. ஞானசுந்தரம் தொலைபேசியில் கூறிய செய்தியைப் பகிர்கிறேன். “ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் 1981-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரமது. அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் செயலாளராக இருந்த முனைவர் ஔவை நடராசன் அவர்கள் என்னைச் சந்தித்து, உலகத்தமிழ் மாநாட்டு விழாவில் பட்டிமன்றத்தில் என்பெயரைச் சேர்த்திருப்பதாகக் கூறினார். நான் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். சில தினங்கள் கடந்த நிலையில் எனக்கு அரசிடமிருந்து கடிதம் வந்தது. அதில் பட்டிமன்றத்தில் ஓர் அணிக்குத் தலைவராக என்னை அமர்த்தியிருந்தார்கள். பட்டிமன்றத்தின் தலைப்பு “திருக்குறள் வற்புறுத்துவது அறத்தின் செழுமையே! பொருளின் வளமே! காதற் சிறப்பே!” என்பதாகும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை வகித்தார். முன்தினமே மதுரைக்குச் சென்றுவிட்டேன். அன்று மாலை விழா பொறுப்பாளரான வட்டாட்சியர் வண்டி ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார். ஆனால், மறுநாள் காலை வந்த அந்த வண்டியில் தமிழறிஞர் திரு.சோமலே அவர்கள் சென்றுவிட்டார். எனக்கு வேறு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். பட்டிமன்றம் தொடங்கியது. அமைச்சர்கள் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டியார், ஜேப்பியார், ஆகியோர் அமர்ந்திருந்தனர். புரட்சித்தைலைவர், ஜானகி அம்மாவுடன் வந்து அமர்ந்தார். அவர் வந்தவுடன் பட்டிமன்றம் தொடங்கியது.அறம் அணியில் பேராசிரியர் அறிவொளி பேசினார். பொருள் அணியில் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பேசினார். காதல் அணியில் நான் பேசத் தொடங்கினேன். “மாண்புமிகு முதலமைச்சர், அடிகளாருக்கு வணக்கம். எதிர் கட்சியினர் காதல் அணியை விமர்சித்தனர். இவர்களுக்குக் காதல் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அது உடல் உடலோடு சேர்வதன்று. அது கண் கண்ணோடு கலப்பது. வள்ளல் இராமச்சந்திரன் ஜானகியைப் பார்த்ததுதான் காதல்” என்று நான் கூறியவுடன் அரங்கத்தில் பெரும் கரவொலி. புரட்சித்தலைவர் துள்ளிக் குதித்தார். கரவொலி முடிந்தவுடன் “நான் இராமாயணத்தில் வரக்கூடிய இராமச்சந்திரன், ஜானகியைப் பார்த்ததுதான் காதல் என்று சொன்னேன்” என்றவுடன் மீண்டும் கரவொலி. பட்டிமன்றம் முடிந்தது. முனைவர் ஔவை நடராசன் என்னிடம் வந்து, “ஞானசுந்தரம்! சி.எம். முகம் குங்குமமாகச் சிவந்து போனது. நீங்கள் கவனித்தீர்களா?” என்று கூறினார். மறுநாள் தினத்தந்நி, இந்து நாளிதழ்களில் ‘புரட்சித் தலைவர் துள்ளிக் குதித்த நிகழ்ச்சி’ என்று செய்தி வந்திருந்தது. சென்னையில், நக்கீரர் கழகத்தில், ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். நச்சினார்க்கினியர் என்பவர் ஆண்டு முடிவில் ஒரு விழா எடுத்துப் பரிசு கொடுப்பார். அந்த ஆண்டு விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அந்த விழாவில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொகுத்த “சங்க இலக்கியத்தொகை” என்னும் நூலில், “அன்புக் காணிக்கை எம்.ஜி.ஆர்” என்று கையெழுத்திட்டுக் கொடுத்த நூல் இன்றும் என்னிடம் உள்ளது.”பேராசிரியர் அறிஞர் தெ. ஞானசுந்தரத்தின் ஆழ்ந்த புலமையும், செறிவார்ந்த கருத்து நயமும், தமிழுலகமே கண்டு வியப்படைகிறது. எப்பொருண்மை குறித்தும், ஆழ்ந்த அறிவுடன் பேசும், எழுதும் திறம் பேராசிரியர் ஞானசுந்தரத்திற்கே வாய்த்த தனிப்பேறாகும். பேராசிரியரின் இரங்கல் வரிகள் வரலாற்று வரிகளாகும். “திடீரென்று புரட்சித் தலைவர் மறைந்தபோது, முதல்நாள் திருப்பூரில் பேசிவிட்டு வந்ததிருந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அன்று காலை, எனக்கு அகில இந்திய வானொலியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இயக்குநர் கோ.செல்வம் அழைத்து புரட்சித் தலைவரின் இறுதி ஊர்வலத்தை நேர்முக உரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் சம்மதித்தேன். காலை 05.00 மணிக்கு வரச் சொன்னார்கள். இருசக்கர வண்டியில் கருப்புக் கொடியைக் கட்டிக்கொண்டு வானொலி நிலையத்திற்குச் சென்றேன். என்னையும், தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களையும் சவப்பெட்டியை வைக்கும்போது வர்ணணை செய்ய அழைத்துச் சென்றார்கள். எழிலகத்தின் மாடியில் இருந்து வர்ணனை செய்தோம். அமைச்சர்கள் ஆர்.எம்.வீ., கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆகியோர் புதை தோண்டுவதை மேற்பார்வை செய்துவிட்டுச் சென்றனர். இந்தக் காட்சியைக் கண்ட நான், “கண்டியில் பிறந்து, காவிரிக்கரையில் வளர்ந்த ஒரு கதாநாயகனின் இறுதி அத்தியாயம் கடற்கரையில் எழுதப்பட்டிக்கொண்டிருக்கிறது. அண்ணாவின் இதயக் கனிக்கு அண்ணா சமாதி அருகில், மீனவ நண்பனுக்குக் கடற்கரை அருகில், ஓடி ஓடி உழைத்த உத்தமருக்கு உழைப்பாளர்கள் சிலை அருகில் நினைவிடம் உருவாகிக்கொண்டுள்ளது” என்றேன். அதைத் தொடர்ந்து, “இங்கிருக்கக்கூடிய குழந்தைகளுக்கு சத்துணவு போட்டுவிட்டாய், இங்குப் பசியால் வாடக்கூடியவர்கள் எவருமில்லை என்பதால் வானுலகத்திற்குப் பசியைப் போக்கச் சென்றுவிட்டாயா?” என்றேன். “கடலில் பத்துப் பதினைந்து கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன” என்று தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்னார். நான், “இங்குக் கரையில் கப்பல் கவிழ்ந்தது போல் மக்கள் அழுகையில் உள்ளனர்” என்றேன். “மண்ணைத் தோண்டித் தங்கத்தை எடுப்பார்கள். ஆனால், இன்று மண்ணைத் தோண்டித் தங்கத்தைப் புதைக்கிறார்களே” என்று குரலுணர்ச்சி பொங்கக் கூறினேன். இதைக் கேட்டு வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம், “இறுதியில் நீங்களே நிகழ்ச்சியை நிறைவு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். “தங்கத்தமிழ் மகனே, வங்கக்கடல் ஓரத்தில் அலைகள், தங்கத் தமிழ்மகனே வாழ்க வாழ்க என்று வந்து தாலாட்டுகின்றன” என்று நிறைவு செய்தேன்.” புரட்சித் தலைவரின் மறைவுக்கு பேராசிரியர் தெ. முருகசாமியின் இரங்கற்கவிதை வருமாறு:- “நல்ல முதலமைச்சர் நாடுபுகழ் எம். ஜி. ஆர் மெல்ல உயிர் நீத்த காரணத்தால் – வல்லமைசேர் செந்தமிழ் நற்றாயும் சேர்ந்தே அழுகின்றாள் சொந்தமுறு சோகத்தில் ஆழ்ந்து. எங்கள் வருத்தத்தின் ஏக்கத்தை எம்மிதயப் பங்காக நாங்கள் பகரவோ – தங்கமன நல்ல முதலமைச்சர் நல்லுயிரை யீந்திட்டார் வல்ல அவர் நாமம் வாழ்க!தஞ்சைத் தமிழ்ப்பல் கலைக்கழகம் கண்டதுடன் நஞ்சைசூழ் மாமதுரை நன்னகரில் – கொஞ்சு தமிழ்ச் சங்கம் உருவாக்கிச் சாதனைகள் செய்திட்ட தங்கமகற் கிங்கில்லை சாவு. வங்கக் கடலோர வான்புகழ் அண்ணாவாம் சிங்கத் தமிழ்த்தலைவன் சீரிடத்தில் – தங்கு புகழ் தங்கத் தமிழ்ச்சிறுத்தை தானுறங்கப் போயிற்றோ எங்கினிமேல் காண்போம் எழில்.”‘கவிப்பேரரசு’ வைரமுத்துவை மாணவப் பருவத்திலிருந்தே அறிவேன். அணுவணுவாக அவரின் ஒவ்வொரு பருவத்தையும் பார்த்துப் பார்த்து எல்லையில்லாத விம்மிதம் அடைகிறேன். உள்ளங்கால் தொட்டு உச்சந்தலை வரை பாட்டுவெள்ளம் உணர்வின் உயிர்ப்பாக எப்போதுமே அவரிடம் ஊறித்ததும்பிக் கொண்டிருப்பதை நான் கண்டு வியந்திருக்கிறேன். புரட்சித் தலைவருடன் பல விழாக்களில் கலந்து கொண்ட வைரமுத்துவின் நெஞ்சத்திலிருந்து, புரட்சித் தலைவரின் மறைவுக்கு, அலைகடல் கரைகடந்து புரண்டு கொண்டிருப்பதைப் போல வெளிவந்த இரங்கற்கவிதை குறிப்பிடத்தக்கதாகும். “சந்தனப் பேழையே சந்தனப் பேழையேஎத்தனை தவங்கள் செய்தாயோசந்திரன் முகத்தைக் கண்ணால் பார்க்கஒருமுறை நீயும் திறவாயோஏழைகள் நெஞ்சில் நிறைந்தவனைஎளியவர் வீட்டின் ஒளிவிளக்கைமரணம் என்ற பெயரால் உந்தன் மடியில் வாங்கிக் கொள்வதற்குசந்தனப் பேழையே சந்தனப் பேழையேஎத்தனை தவங்கள் செய்தாயோமண்ணும் அழுதது விண்ணும் அழுததுமன்னவன் மறைகையிலே – நகக்கண்ணும் அழுதது கவிதையும் அழுததுகாவலன் பிரிகையிலேஇப்படி ஒருவன் பிறந்ததில்லைஇனியும் ஒருவன் பிறப்பதில்லை.எத்தனை மாலைகள் எத்தனை ஆடைகள்தோள்களில் வாங்கியவன் – இன்று அத்தனை மாலையும் அத்தனை மாலையும்கால்களில் விழுகிறதேஇப்படி ஒருவன் பிறந்ததில்லைஇனியும் ஒருவன் பிறப்பதில்லை.சந்திரர் சூரியர் வாழ்கிற வரையிலும்சந்திரன் புகழிருக்கும் – ராமச்சந்திரன் என்னும் பெயருக்குள்ளேசரித்திரம் ஒளிந்திருக்கும்இப்படி ஒருவன் பிறந்ததில்லைஇனியும் ஒருவன் பிறப்பதில்லை.” திரு சீனிவாசன் மற்றும் தலைமையாசிரியர் திருமதி வசந்தா சீனிவாசனின் கடைக்குட்டி சதீஷ் என் உள்ளம் கவர்ந்த இளைஞர். ஈடில்லா பாரதியின் பாடல்களை பாடிக் காட்டும் பாவலர். கவிதைகள் பல எழுதிய கவிஞர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மிளிரும் சதீஷ் தன்னுடைய 18-ஆவது வயதில், புரட்சித் தலைவர் மறைந்தபோது, உடனுக்குடன் நாட்டுப்புற மெட்டில் பாமரர்களுக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் புரட்சித் தலைவரை அமெரிக்க அதிபர் ரீகனுடன் ஒப்பிட்டு எழுதிய பாடலை என் மகன் அருள் இப்பொழுதுதான் காட்டினான். அதையும் தங்கள் பார்வைக்கு வெளியிடுகிறேன். வருசம் முடியும் நேரம்- வரலாறு முடிஞ்சி போச்சு – நம்மவாத்தியாரு வாழ்க்கையில வயசு முடிஞ்சு போச்சு.. – எங்ககாத்துபைல ஓடுதெல்லாம் அவுரு உசுரு மூச்சு..எங்க வூட்டு புள்ள.. அவரு மனசு ரொம்ப வெள்ள – அந்த தங்கராசா உடம்பு இப்போ சந்தனபொட்டிக்குள்ள – அவருதூங்கறார்னு நான் நினைச்சேன்மனசு தாங்கவில்ல..எழுத படிக்க நோட்டு – சோறு வயிறு நிறைய போட்டு – எங்கரத்தத்தோட ரத்தமுன்னுகூப்பிடும் குரல் கேட்டு -நாங்க போட்டோம் ராசா! ஓட்டு…எங்க உசிர தாரோம் – இல்லநாங்களும் கிளம்பி வாரோம்..ஆறு கோடி பேரு அழுத கண்ணீர் கடலா மாறும் -எங்க மனசு எப்புடி ஆறும்??அமெரிக்க நாட்டு தலைவர் யாரு ?அந்த ரீகனுக்கே குரு எம்ஜியாரு.. ஆன வயசு அறுபதிலும் ஆடிப்பாடினாரு.. அவரு போனதால நம்ம தமிழ்நாடு சுக்கு நூறு..தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…- ஔவை நடராசன்தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment