பண்பாட்டுத் திலகம் – முனைவர் ஒளவை நடராசன் – மங்கலப்பெருவிழா மலர் – 15.7.2012 ஒளவை 75…..
தண்ணிலாவே தாரகை !
முனைவர் ஒளவை நடராசன்
எதிர்பார்ப்புகளுடன், நான் எப்போதும் ஏங்கித் தவித்ததில்லை .
நான் படித்து முடித்தவுடன்,கல்லுாரி விரிவுரையாளராகச் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.
நான் முன்னரே சொன்னதுபோல், ஓர் இதழில் துணையாசிரியர் ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், அரசியலில் பங்கு கொண்டு, பொறுப்பேற்க வேண்டும் என்று நான் கருதவில்லை .
நான் கல்லூரியில் பணியாற்ற வேண்டும், என்று நினைத்தபோது, என்னுடைய வாழ்க்கை, தஞ்சை சரபோசி மன்னர் கல்லுாரியில் தொடங்கியது. என் மனைவி, மருத்துவக் கல்லுாரி மாணவி.ஒன்று நான் சொல்ல வேண்டும். சென்னையில் நான் படித்துக் கொண்டிருந்தபோதே, தாராவுடன் என் நட்பு தொடங்கியது, மாமன் மகள் என்ற உரிமையில்.
நிரம்பிய கல்வித் தகுதியும், திறமையும் வாய்ந்தவர் தாரா. தாராவின் குடும்பம் எங்கள் திருமணத்துக்கு இசையவில்லை . காரணம், என்னுடைய தாயார், பெரிதும் பிற்போக்கான மனம் உடையவர், அவருடைய மனத்தில், வீட்டிற்கு வரும் மருமகள், குடும்பப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதோடு, மாமன், மாமியின் மீது அன்பு காட்டுபவராகவும், எனக்குப் பின்னால் பிறந்த உடன் பிறந்தவருக்கு துணையாகவும் இருக்க வேண்டும் என்றும் நம்பினார்கள. பொதுவாக, அது தவறான கருத்து என்பது என் வாதம் இன்று வரை .
அதேபோல, தன்னுடைய மகள் மருத்துவராக இருப்பதாலும், எங்கள் மரபில் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரே கெட்டிக்காரப் பெண்ணாக அமைந்ததாலும், மேலை நாடுகளுக்குச் சென்று, அவர் மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்று கனவு கண்டார் என்னுடைய மாமனார்.
அவருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்ப் படித்தவனைப்போய் மணந்து கொள்ளப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாளே ! அவனுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது என்று தன் மகளைப் பற்றிக் கவலைப்பட்டார். ஆனால், என்னைவிட, என் மனைவியிடம் இருந்த பிடிவாதத்தால்தான், எங்கள் திருமணம் நடந்தது என்று சொல்ல வேண்டும்.
நான் ஏற்றிருந்த ஆசிரியப்பணியில் கூட, எனக்கு அதிக விருப்பம் இல்லாமல் போய் விட்டது. புதுதில்லி வானொலி நிலையைப் பணிக்கு, எப்போதோ நான் விண்ணப்பித்திருந்தேன். அந்த வாய்ப்பு திடுமென வந்தபோது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தில்லி வானொலி நிலையத்தில் பணியாற்றினேன். அங்கேயும், நான் ஆறு திங்கள் வரைதான் இருந்தேன். திருமணச் சிந்தையிலும் மயக்கத்திலும் இருந்ததால், அந்த வேளையிலும், எனக்குப் பிடிப்பில்லாமல் போய்விட்டது. அதையும் விட்டுவிட்டேன்.
மீண்டும், மதுரைத் தியாகராசர் கல்லுாரிக்கு வந்தேன். அதன் பின், அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களைக் கண்டேன்,அவரைப் போன்ற சான்றோரை, பண்பாளரை இன்றுவரை நான் கண்டதில்லை. இன்னொருவரை, என்னால் சுட்டிக் காட்டவும் முடியவேயில்லை .
அருட்செல்வவர் முகம் கோணி அல்லது சொன்ன வேலையைச் சரியாகச் செய்யவில்லையே என்று வருந்தி, எந்த நாளும், எதுவும் சொன்னதில்லை . அவர் பரிவு காட்டுவதுகூட, பலருக்குத் தெரியாது. என் மீது, அவர் காட்டிய கனிவு, அதுதான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்த, இன்றுவரை துணை செய்கிறது.
அவரிடத்தில் நான் பணியாற்றியதால்தான், எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தது. அதனால், இந்திய மாநிலங்கள் முழுவதும், நான் சென்று, சென்ற இடமெல்லாம் பெருமிதத்தோடு அரசு செயலாளராகி, துணைவேந்தராகி, பல பொறுப்புகளைப் பெற்றேன்.
அவ்வளவு பணிகளும் முடிந்த பிறகும், என்னுடைய பரிவு உங்களுக்கு எப்போதும் ஒரே நிலையில்தான் இருக்கும் என்று பரிவு காட்டினார் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள்.
அதனை நினைந்து நினைந்து, நான் நெஞ்சம் நெகிழ்கிறேன். எந்தக் கைமாறும், நான் அவருக்குச் செய்யவே முடியாது.
நான் ஓய்வு பெற்று, இப்போது பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் காலை பத்து மணிக்கு, அருட்செல்வரின் அலுவலகம் செல்வதும், நண்பகல் திரும்புவதும், என் வழக்கமாகிவிட்டது.|
என்னுடைய துணைவியார், அறிவியல் மாணவியாக இருந்தவர். தன்னைப் பற்றிய தெளிவான சிந்தனை உடையவர். முற்போக்கான எண்ணம் உடையவர். துணிவான கருத்துக்களைக் கொண்டவர். கண்டிப்பு, கறார், காலமறிதல், கடமை தவறாமை முதலியவற்றில் ஈடு சொல்ல முடியாதவர்.
இவை ஒன்றும் இல்லாத நிலையில் ஆட்டம் பாட்டம், கூட்டம் என்று இருந்தவன் நான். எங்களுடைய மூன்று பிள்ளைகளை, அவர் வளர்த்த திறத்திற்கு, ஒப்பீடு சொல்ல முடியாது.
என் மனைவி, அடிக்கடி சொல்வார்கள். எனக்கு மூன்று பிள்ளைகள் அல்ல. நான்கு பிள்ளைகள், அவர்களில் திருத்த முடியாத பிள்ளைதான் என் கணவர். மூன்று பிள்ளைகளையும் அடித்து, கண்டித்து, நான் முடிந்தவரை திருத்துவேன். அவரை, என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று, அவர் சோர்ந்துபோய், என்னைத் தெரிந்த ஒவ்வொருவரிடமும் ஓயாது சொல்வார்.
இந்தப் பிள்ளைகளுக்காக, அவர் பட்ட பாடும், துயரங்களும், அவலங்களும் எல்லையில்லாதவை. அவற்றினால், தன் வாழ்க்கையில், மிகப்பெரிய வாய்ப்புகளைக் கூட இழந்தவர், என் துணைவியார். ஒரு முறை, இலிபியா நாட்டுக்கு குழந்தை மருத்துவத்துறையில் மருத்துவராக, அவரை தமிழக அரசு அனுப்பியது.
ஆனால், ஆறு திங்களுக்குள், தன் தமக்கையார் உடல்நிலை சீர்குலைந்ததால், மீண்டும் திரும்பி வந்தார். அப்போது, தான் பெற்ற வருவாயைத் திருப்பித் தந்துவிட்டு, இலிபியா பதவி வேண்டாம் என்று ஒரு கணத்தில் முடிவெடுத்து, உறுதியாக மறுத்துவிட்டுத் திரும்பினார் தாரா, விடுமுறை பெறலாமே ! ஊதியத்தைத் திருப்பித் தருவதா என்று கூட, நான் கூறினேன். ஆனால், பாசத்திற்கு முன் பணம் பெரிதல்ல என்ற நிலையில் மாறாமல் இருந்தார் தாரா. தமக்கையார் மீதான பரிவை உறுதி செய்வது, பிள்ளைகளைக் காப்பதுதான், அவர் திரும்பி வந்ததற்கான காரணங்கள்.
துாய்மை, அழகு, வனப்பு, இவற்றை எல்லாவற்றிலும் எதிர்பார்ப்பவர். எதையும் முறையாகச் செய்வது, காத்திருக்கக் கூடாது ,நேரந்தவறாமை இவை தாராவிடம் கண்டிப்பாக உண்டு. அந்த வகையில்தான், இன்றுவரை, அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நான் விளையாட்டாக, ஒருமுறை சொன்னேன். விமானத்தை ஒரு முறை உற்றுப்பார்த்தால், தானே ஓட்டிச் செல்வார் என்று.
எந்த நேரத்திலும், என்னுடன் கருத்து ஒருமைப்பட மாட்டாரே தவிர, பாசப்பிணைப்பில், அவர்தான், எப்போதும் முதல் நிலையில் இருப்பார்.
இன்றும் கூட, அவர் எந்தத் தலைப்பை எடுத்தாலும், அதை முழுவதும் படித்து, நிறைவாகச் சிந்திக்க வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவர்.
திருமணம் முடித்த பிறகு, பெண் மக்கள் எங்களுக்குப் பிறக்கக்கூடாது என்றுதான், நாங்கள் நினைத்தோம். என்னுடைய மனைவியும், அப்படி நினைத்தார் என்று சொல்ல வேண்டும். காரணம், அப்போது இருவரும் அலுவலில் இருந்தோம். அதனால், பெண்மக்களை, ஆழ்ந்த சிந்தனை செலுத்தி ஆர்வத்தோடு வளர்க்க வேண்டியிருக்கும் என்று அவர் நம்பினார்.
எங்களுக்குப் பிறந்த முதல் குழந்தை பெண் மகவுதான். அந்த குழந்தை பிறந்த போது, எங்கள் குடும்பத்தில் , முரண்பாடுகள் அதிகம் இருந்தன . என் மனைவி சென்னையிலும், நான் மதுரையிலுமாக இருந்தேன். அந்த குழந்தையைக் பார்க்க, எங்கள் வீட்டில் இருந்தவர்கள் யாரும் வரவில்லை. என்ன செய்வது என்று நான் அவலத்தில் இருந்தேன்.
மாமனார் என்னிடம் விரும்பிப் பேசமாட்டார் என்பதால், நான் அங்கு போகாமல் இருந்தேன். அதன் பிறகு, மிகப்பெரிய துன்பம் நேர்ந்தது. இரண்டு மாதங்கள் கழித்து, வெப்பு நோயால் ஷகிலா இறந்துவிட்டாள் .
அதன்பின், எங்கள் வாழ்க்கையில், மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். மூன்று பேரும், ஆண் மக்கள், முதல் மகன் பிறந்த பிறகு, இரண்டாவதாக பெண் குழந்தை பிறக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ஆண் குழந்தை பிறந்தான் . மூன்றாவது மகனும் பிறந்தபோது, நமக்குப் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று நாங்கள் இருந்து விட்டோம்.
என்னுடைய பிள்ளைகள் வளர்ந்ததைப் பற்றி, நான் சொல்ல வேண்டும். நாம் பெற்ற என் குழந்தைகள் நம்மைவிட, எளிய நிலையில் இருந்து விடக் கூடாதே என்ற எண்ணம், எல்லாத் தாய், தந்தையர்களுக்கும் ஏற்படும் என்று தான், நான் நினைக்கிறேன். என்னுடைய குழந்தைகள் பேணி வளர்ப்பதில், என்னைவிடப் பேரார்வம் காட்டியவர் என் துணைவியார். மிகப்பெரிய மருத்துவராக இருந்ததனால் , பிள்ளைகளும், அவரைப்போல மருத்துவராக வேண்டும் என்று விருப்பம், அவரிடம் இயற்கையாகவே அமைந்தது.
என்னுடைய தந்தையார், நான் தமிழ்த்துறையில் படிக்க வேண்டும் என்று விரும்பவில்லை . அறிவியல் துறையில் சேர்ந்து,அறிவியலாளனாக, மருத்துவனாக, வரவேண்டும் என்று விரும்பினார். கணக்கோ , அறிவியலோ எனக்கு வராமல் போய்விட்டது.
ஆனால், நானோ நாளிதழ்களைப் படித்துக் கொண்டும், நாள்தோறும் பேசிக்கொண்டும், தொடர்கதைகள், சுவையான காவியங்கள் என்று நுால்களைப் புரட்டிக் கொண்டவாறு இருந்தேன். என்னைப் பார்த்து, அந்தக் கலையார்வம், குழந்தைகளுக்கும் வந்துவிடும் போலத் தெரிகிறதே என்று மனைவி அடிக்கடி சோர்வடைவதுண்டு.
அரசியல் தலைவர்களின் பிள்ளைகள், அரசியலுக்கு வர என்ன காரணம் ? அரசியல் வாழ்வு என்பது, பலர் பாராட்டுவதாகவும், பகட்டாகத் திரிவதற்கு வாய்ப்புத் தருவதாகவும், சுற்றியிருப்பவர்கள் எப்போதும் வாழ்க ! வாழ்க ! என்று ஒலி முழக்கம் செய்வதைக் கேட்டு, ஒருவகையான தினவு ஏற்பட்டுவிடுகின்றது. இதை, நான் குறையாகச் சொல்லவில்லை. ” நான் பெற்ற பிள்ளை ” இந்தப் பெருமிதம் அவனுடைய வாழ்க்கையை வளர்ப்பதற்கு தடையாகவும் கூடாது. அதுவே தகுதியாகி விடவும் கூடாது என்று நினைத்தேன்.
தாங்கள் பட்ட பாடுகளும் அலைகவுகளும், பிள்ளைகளுக்கு வந்து விடக்கூடாது என்றுதான், திரைப்பட நடிகர், நடிகையரும் நினைக்கிறார்கள். எவ்வளவோ முயன்று, திரைப்பட ஆர்வம், அவர்களின் குழந்தைகளுக்குத் தொற்றிவிடக்கூடாது என்று வளர்க்க விரும்புகிறார்கள். அதன் பின், அந்த பிள்ளைகள் வேறு துறைக்குப் பயன்படாமல், திரைப்படத்துறையில், பெரிதாகப் பணம் சம்பாதித்தாலும், பெற்றோர்களின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறதா என்று நாம் அறிய முடிவதில்லை .
ஒருமுறை , நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அவர் வேடிக்கையாகச் சொன்னார். என்னுடைய மகனைப் படப் பிடிப்பைப் பார்க்கக்கூட, அழைத்துப் போகக் கூடாது என்றிருந்தேன். சென்னையில் இருந்த பள்ளிகளை விட்டு பெங்களூரில் கொண்டு போய்ச் சேர்த்தேன். கடல் கடந்து வெளி நாடுகளுக்குப் போய், கல்வி கற்று, அறிஞனாகி வரவேண்டும் என்று நினைத்துத் தவித்தேன். என்ன செய்வது ஒளவை ?
மீன் பிடிப்பவன் மகன், கடலில் தான் விழுந்து சாவான் என்று என்னிடத்தில் யாரோ சொன்னார்கள். அதுபோலத்தான், என் நிலையும் ஆகிவிட்டது என்ற வருத்தமில்லாமல் சொன்னார்.ஆனால், தன் மகன் இளையதிலகம் பிரபு திரைப்படத் துறைக்கு வருவதை அவரால் தடுக்க முடியாது போயிற்று. தன்னுடைய முதுமைக் காலத்தில், குடும்பத்தைத் தாங்குகிற துாணாக இருக்கிறான் என்று மகிழ்ச்சியாகத்தான் சொன்னார். கலையுலகத்தில் பழகுகிறவர்களின் பிள்ளைகளுக்குக் கலைமனம் இருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், அறிவியல்,தொழில் நுணுக்கம் முதலிய ஆற்றல்களை நாம்தான் வலியுறுத்தி ஊட்ட வேண்டும்.

Add a Comment