தின செய்தி – 28.9.2020
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி – 54)
“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (II)”
முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
என் இனிய நண்பர், நாகை தருமனையும், புரட்சித் தலைவரின் நெருங்கிய தொண்டராகவும், புரட்சித் தலைவரின் திரைப்படக் கதை வசனத் துறையின் துணையாசிரிராகவும், ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு துணைக் கதையாசிரியராக கவிஞர் கண்ணதாசனுடன் இணைந்து பணியாற்றியவரும், புரட்சித் தலைவரின் ‘கலையரசி’, ‘பாக்தாத் திருடன்’ ஆகிய திரைப்படங்களின் கதையாசிரியராகவும் பணியாற்றியவருமான நாகூர் கே. இரவீந்திரனையும் கொண்டு, 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மண்டபத்தில் வாரந்தோறும் திருமலை நாயக்கர் மன்னரைப் பற்றிய ஒலிஒளிக் காட்சி சிறப்பாக நடைபெறுவதைப்போல, புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு சிறப்பான ஒலிஒளிக் காட்சி நடத்தத் திட்டமிட்டார். அதற்காக புரட்சித் தலைவரை முழுமையாக அறிந்த இவர்கள் இருவரையும், ஒலிஒளிக் காட்சியை எழுதித் தருமாறு ஆணையிட்டார். அவ்வாணைக்கிணங்க காட்சித் தொடரை எழுதிக் கொண்டிருந்த வேளையிலேயே கே. இரவீந்திரன் மறைந்து விட்டார். ஏனோ சில காரணங்களால், ஒலிஒளிக்காட்சி நடைபெறாமலேயே போய் விட்டது. நாகை தருமன் கைப்பட எழுதிய காட்சித் தொடர் தினசெய்தி வாசகர்களின் பார்வைக்கு.
காட்சி தொடக்கம்: உலகம் சுழன்று கொண்டுள்ளது. அதன் முன்னே தமிழ்த்தாய் நிற்கின்றாள்
தமிழ்த்தாய் வாழ்த்து: பாடல் ஒலிக்கிறது. “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்……” உலகம் சுழன்று, இந்தியாவின் முன்பு வந்து நிற்கின்றது. தமிழ்த்தாய் நிற்கிறாள். பாடல் தொடர்கின்றது. “தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் அத்திலக வாசனை போல் அனைத்துலகம் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே – உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!”
காட்சி மாற்றம்: முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் ராஜீவ் காந்தி அவர்களைக் கொண்டு புரட்சித்தலைவர் சிலையைத் திறந்து வைக்கும் காட்சி…..
ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், தொழிற்சாலைகள், திட்டங்களைத் தொடங்கி வைத்தல்…..
நேரு விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கப்பட்டு, பிரதமர் நரசிம்மராவுடன் அமர்ந்திருக்கும் காட்சிகள்….
‘சமூக நீதி காத்த வீராங்கனை’ பாராட்டு விழா… காட்சி… வீடியோ மூலம் காண்பித்தல்! ஒலி இல்லாமல்!
பாடல் கடைசி வரிகள் மீண்டும் ஒலிக்கின்றன “எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும்
தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்ததுமே! வாழ்த்ததுமே!”
காட்சி: முதலமைச்சர், டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் உருவம் வீடியோ மூலம் காண்பித்தல்….
டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் குரல் ஒலித்தல் ‘தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த, உத்தமர்களால்…. தனக்கென வாழாமல், உலகம் உயர்வடையத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட பெரியோர்களால்… பேரறிஞர்களால்… பெரும்புலவர்களால்… புரட்சித்தலைவர்களால்…. இந்த உலகம் வாழ்கின்றது! ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாட்டுக்கொரு புலவன் பாரதி….
‘கம்பனைப் போல், வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை…’ என்றார் உறுதியாக…. அதைப் போல- ‘தந்தை பெரியார்போல் பேரறிஞர் அண்ணாவைப்போல் புரட்சித்தலைவரைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை’ என்று பூரிப்புடன் கூறுகின்றோம்.
மலர் என்றால் தாமரை! மன்னன் என்றால் கரிகாலன்! அண்ணல் மகாத்மா என்றால் காந்தியடிகள்! ஆசியாவின் ஜோதி என்றால் நேரு! தந்தை பெரியார் என்றால்…. தன்மான இயக்கம் கண்டு தமிழர் மானம் காத்த ஈரோட்டு வேங்கை, வெண்தாடி வேந்தர்… ஈ.வே.ராமசாமிப் பெரியார்!
பேரறிஞர் (அண்ணா) என்றால்…. தந்தை பெரியாரின் வீரத்தளபதியாய்…. ‘சாமானியன்’ என்றுகூறி சரித்திரம் படைத்து, திராவிட இயக்கத்தின் முதன் முதலமைச்சராய்ச் சட்டப் பேரவைக்கு எழிலூட்டியவர்! ‘தமிழ்நாடு’ தன்னைத் தமிழ் நாடென்று அழைத்துக் கொள்ளக் காரணமானவர்! சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படி செல்லுபடியாக்கியச் சுடரொளி! இருமொழித் திட்டம் கொண்டு வந்து, தமிழுக்கு அரியாசனம் தந்த பெருமகன் அண்ணா! ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வேத வாக்கின்படி- அண்ணாவின் பெயரை அனைத்திலும் கண்டு, நம் அன்னையாக, அனைத்துமாக இதயத் தெய்வமாகத் திகழ்ந்தவர்…. நமது புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்கள்! தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், அன்னை இந்திராவும் போற்றிப் புகழ்ந்த அரும்பெரும் தலைவர்…. மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர்!
காட்சி தந்தை பெரியாருடன் புரட்சித் தலைவர் வீடியோ காட்சி அல்லது புகைப்படம்.
பெரியார் குரல் ‘எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர். எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பெரிய மனசு. என் மேலே ரொம்பப் பிரியம்.’
காட்சி பேரறிஞர் அண்ணாவுடன் புரட்சித் தலைவர் வீடியோ காட்சி, அல்லது புகைப்படங்கள்.
பேரறிஞர் அண்ணாவின் குரல் ‘கலைஞர்கள் எல்லோருமே கலையுலகை நான்கு பக்கங்களும் இரும்பு திரைகளிட்ட ஒரு வீடாகக் கருதி, அதற்குள் வசித்து வந்தனர். அவர்கள் அரசியல் உலகை மட்டுமல்ல, வெளியுலகைக்கூட எட்டிப் பார்த்தும் அறியார். இது தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கமாகும். அந்தக் கலைஞர்களுக்கெல்லாம் ஒரு ‘வழிகாட்டி’யாக இருந்து விட்டவர் புரட்சி நடிகர். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ‘கலை வீட்டிலிருந்து’ எட்டிப்பார்த்ததுடன் நில்லாது- அரசியல் உலகுக்கும் தாவிப்புகுந்தார். அந்த எண்ணம், வருங்காலத்தில் மற்ற கலைஞர்களுக்கும் மறுமலர்ச்சி தருவதாகும். அவருடைய அந்தச் செயல் புரட்சிகரமானது. இரத்தினச் சுருக்கமாக ஒன்றைக் கூறவேண்டுமானால், எண்ணமென்பது ‘அக’மென்றும், செயலென்பது ‘புற’மென்றும் கூறலாம். இதனை நம் நடிகர்கள் மேற்கொள்ள வேண்டும். அகம், புறம் இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும். நடிகரும் மக்கள் இனமே. வாழ்வின் வளத்துக்கே கலை உதவ வேண்டும் என்ற சீரிய நோக்கம் கொண்டவர் புரட்சி நடிகர். இந்த நோக்கம் தனக்கு மட்டும் இருந்தால் பயனில்லை ஏனைய கலைஞர்களுக்குள்ளும் புக வேண்டும், தான் பெற்ற இன்பத்தை அவர்களும் அடைய வேண்டும் – அதற்குத் தானே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று, தடுத்தவர் – பகைத்தவர் – வெறுத்தவர் மத்தியில் அரசியலில் தாவிப் புகுந்தார். மக்களுக்கு உதவுகிறார் – இன்னும் உதவ வேண்டுமென்று துடிக்கிறார் – செய்து கொண்டே இருக்கிறார். ஆக, அகத்திலும் (நடிப்பிலும்), புறத்திலும் (அரசியலிலும்) ஒருங்கே சிறப்பை எட்டிப் பிடிக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மைதானே! எம்.ஜி.ஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பது நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும்? இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன். வளமான கருத்தும், வாழ்க்கை நெறியும் உள்ள உணர்ச்சியும், எழுச்சியும் தரும் அழகான வடிவம் கவிதை என்று கவிதையைப் பற்றி எம்.ஜி.ஆர் கூறினார். எம்.ஜி.ஆரே வளமாகக் கருத்துகள் உள்ள அவர் கூறியதைப் போல் வாழும் அழகான கவிதைதான்!’
மூதறிஞர் இராஜாஜி குரல் இராஜாஜியுடன் புரட்சித்தலைவர் புகைப்படம் ‘எம்.ஜி.இராமசந்திரனைக் கட்சியிலிருந்து விலக்கியது, மறைந்த அண்ணாவையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர் அவரை அப்படி விட்டு விடாதீர்கள். அர்ச்சுனனைப் போல அவரை வெற்றிவீரர் ஆக்குங்கள்…’ முன்னாள் பிரதமர்… அன்னை இந்திரா காந்தியுடன் புரட்சித்தலைவர் நிகழ்ச்சியில் பங்குகொண்ட வீடியோ படம்… அல்லது புகைப்படங்கள்….
அன்னை இந்திரா குரல் ‘தேச ஒன்றுமைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் தங்களையே ஒப்படைத்துக்கொண்டு, பாடுபடுகின்ற நல்ல தலைவர்களில் எம்.ஜி.ஆர் முக்கியமானவர். ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் வாழுகின்ற அவர் தலைமையில் தமிழகம் முன்னேறுவது உறுதி’
(பிரதமர்) ராஜீவ் காந்தி குரல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் புரட்சித் தலைவர் வீடியோ படம். கடற்கரைக் கூட்டத்தில் புரட்சித் தலைவர் கையை உயர்த்திப் பிடிப்பது… மற்றவை… !
காட்சி மக்கள் குரல் எதிரொலிப்பது அண்ணாவின் இதயக்கனி வாழ்க! மக்கள் திலகம் வாழ்க! பொன்மனச் செம்மல் வாழ்க! தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் வாழ்க! முதல்வர் புரட்சித் தலைவர் வாழ்க!
காட்சி தமிழக ஆளுநர் மேதகு பட்வாரி அவர்கள் முதல்வர் புரட்சித் தலைவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தல்!
புரட்சித்தலைவர் (குரல்) எம்.ஜி.இராமசந்திரன் என்கிற நான் இந்திய அரசியல் சட்டத்தின் பால் பற்றுடனும், இந்திய ஒருமைப்பாட்டுக்காகவும்… ஆளுநருக்கு வணக்கம் தெரிவித்து, கைகுலுக்குதல். எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தல். (30.06.77)
காட்சி சென்னை, அண்ணா சாலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார், புரட்சித் தலைவர். அதன் பின்பு மக்களை நோக்கிக் கையசைத்தல்… வணக்கம் தெரிவித்தல் செய்திப் படப் பிரிவுப் படத்தை வீடியோ படமாக்கித் திரையிடலாம். அல்லது புகைப்படத்தைக் காண்பிக்கலாம்.
தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…
– ஔவை நடராசன்
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment