POST: 2020-10-09T11:16:25+05:30

பண்பாட்டுத் திலகம் –
முனைவர் ஒளவை நடராசன் – மங்கலப்பெருவிழா மலர் –
ஒளவை 75…..
15.7.2012

பக்கம் எண் : 253….

மருத்துவர் தாராவின் மகத்துவம் அறிவோம்

” மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
பங்கயற் கைநலம் பார்த்தல்லவோ இந்தப்
பாரில் அறங்கள் வளருதம்மா ”

என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் பாடலுக்கேற்ப வாழ்ந்து காட்டி வருபவர் டாக்டர்.தாரா நடராசன் அவர்கள். மங்கையாகப் பிறந்து, மங்கையர்கள் பின் தங்கியிருந்த அந்தக்காலத்தில், பெண்களுக்கு அரிதான மருத்துவம் பயின்று, செய்யும் தொழிலையே தெய்வம் எனக் கொண்டு, சமூகத்திற்குத் தேவையான அறச்செயலைச் செய்து மகிழ்ச்சியும் நிறைவும் கொண்டவர்தான் இவர். சொல்வேந்தர் ஔவை நடராசன் அவர்களின் கரம்பற்றி,இணையராய் இல்லறத்தை நல்லறமாய் நடத்தி,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற குறளுக்கேற்ப, உயர்ந்த கொள்கையோடு , குறிக்கோளோடு மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டி வரும் உத்தமப் பெண்மணியோடு உரையாடிய நேர்முக உரையாடலில் கிடைத்த பல .உன்னதக் கருத்துகளை அறிந்து உவகை கொள்வோம்.

அம்மா, வணக்கம்

வணக்கம். வாங்க. நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் அனைவரும் நலமா ?

நலமாக இருக்கிறேன். வீட்டிலேயும் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். அம்மா நீங்க அந்தக்காலத்திலேயே மருத்துவம் படித்தவர்கள் உங்களிடம் நிறையச் செய்திகளைக் கேட்கணும், நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் வந்திருக்கிறேன்

மிக்க மகிழ்ச்சி. என்ன தெரிந்து கொள்ளவேண்டும். கேளுங்க மகிழ்ச்சியோடு சொல்கிறேன்..

அம்மா உங்களுடைய பிறந்த மண் ?

நான் சென்னை இராயப்பேட்டையில் தான் பிறந்து வளர்ந்தேன்.

உங்களுடைய பெற்றோர்..

அப்பா பெயர் என்.மாசிலாமணி, அம்மா பொன்னம்மாள்

உடன் பிறந்தவர்கள்.

ஒரே ஓர் அக்கா.. பெயர் பரமேஸ்வரி. என்மேல் அதிகப் பிரியமாக இருப்பார்கள்.

சிறுவயதில் எந்தப் பள்ளியில் படித்தீர்கள் ?

அந்தக் காலத்தில், சென்னையில் செயின்ட் வில்லியம் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தேன்.

அப்போதெல்லாம் பள்ளிக்கு அனுப்புவதே சிரமம்..அப்படி இருக்கும் பொழுது. நீங்க எப்படி
ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்தீர்கள் ?

எதிர்ப்புத் தான். ஆங்கிலத்தில் பேசினால் சிரிப்பாங்க.. சீருடை அதுக்குவேற தனிஏச்சு. 3 ஆவது வகுப்புவரை அந்தப்பள்ளியில் படித்தேன்..அந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப்போர் அழிவு அதிகமாக இருந்தது. படிக்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் குடும்பம் வேலூருக்குப் போக வேண்டி இருந்தது.. அதனால் Second form வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை வேலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன்.பின் வேலூரிலேயே , ஊரிஸ் கல்லூரியில் 2 ஆண்டுகள் இன்டர் மீடியட் படித்தேன்.

எப்படியோ எதிர்ப்புகளைத் தாண்டிப் படித்தீர்கள்.. சரி.. மருத்துவப்படிப்பிற்கு இன்னும் எதிர்ப்பு அதிகமாக இருந்திருக்குமே

அதை ஏன் கேட்கிறீகள். பள்ளியில் படிக்கும் போதும் எதிர்ப்புத்தான். இன்டர்மீடியட் படிக்குப் போதும் எதிர்ப்புத்தான். இப்படி இருக்கும் போது, டாக்டருக்குப் படிக்கிறேன் அப்படீன்னா விடுவார்களா ? எங்க சொந்தக்காரர்கள் அத்தனை பேரின் எதிர்ப்பும் இருந்தது உண்மைதான்… என் அப்பாவிடம் பலர் கல்லூரியில் சேர்க்க வேண்டாம் என்று சொன்னதும் உண்மைதான். எனக்குப் படிப்பதில் கொள்ளை ஆசை. நன்றாகவும் படித்தேன்.. அப்பாவினுடைய ஊக்கமும், இறையருளும் இருந்தது.. படிக்க முடிந்தது

மருத்துவப் படிப்பு எங்கு படித்தீர்கள் ?

எம்.பி.பி.எஸ் படிக்க சென்னைக்கு வந்து விட்டேன்.

சென்னையில் எந்தக் கல்லூரியில்..

எம்.எம்.சி தான்.. அப்பொழுதெல்லாம் சென்னையில்.. மெட்ராஸ் மெடிகல் காலேஜ் மட்டும் தான் இருந்தது.

அப்பொழுதெல்லாம் எம்பிபிஎஸ் படித்தாலே போதும்.. இப்பொழுதுபோல் மேலமேல மேற்படிப்பு படிக்கவேண்டும் என்பது இல்லாத காலம்.. நீங்க படிப்பதற்கே எதிர்ப்பு இருந்தது.. அப்படி இருக்கும் பொழுது. உங்களுக்கு எப்படி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது .

நல்லகேள்வி கேட்டீர்கள்.. எம்பிபிஎஸ் . படிப்பு முடிந்தபின், எம்எம்சி,எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை.திருவல்லிக்கேணி அரசு கோசா மருத்துவமனை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். கோசா மருத்துவமனையில் வேலை பார்க்கும் பொழுது, தலைசிறந்த தோல் மருத்துவ நிபுணரான மருத்துவர் தம்பையா அவர்களின் தங்கை டாக்டர் ஷீலா அவர்கள் குழந்தை மருத்துவராக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.அந்த மருத்துவமனைக்கு ஒருநாளைக்குக் குறைந்தது 500 குழந்தை நோயாளிகள் வருவார்கள்.எத்தனை வகையான வியாதிகள் ஏற்படுகின்றன என்பதையும், எத்தனைத் தாய்மார்கள் அலறி அடித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதையும் பார்க்கப் பார்க்க, என் மனம் பாரத நாட்டின் வருங்காலத் தூண்களான குழந்தைகளுக்கு வரக்கூடிய நோய்களைத் தீர்க்க வேண்டும், அதற்கான படிப்பைப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் கோசா மருத்துவமனையில் தான் உதித்தது டாக்டர் ஷீலா அவர்கள் கொடுத்த ஊக்கத்தால், எம்எம்சியில் சேர்ந்து , டிசிஎச் என்ற குழந்தை மருத்துவச் சான்றிதழ் படிப்பையும், தொடர்ந்து எம்.டி மேற்படிப்பையும் படித்து முடித்தேன்.

அப்பொழுதெல்லாம் மருத்துவத்துறையில் மேற்படிப்புப் படிக்க எளிமையாக வாய்ப்புக் கிடைத்ததாங்க ?

அதை.. ஏன் கேட்கிறீர்கள்..அப்பொழுதும் சிரமம் தான்.. எப்படியோ முன்வைத்த காலைப் பின்வைக்காமல் படித்து முடித்தேன்.

பாரதி பாடிய புதுமைப் பெண்ணாக, சாதனைப் பெண்ணாக இருந்திருக்கிறீர்கள் தங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சி, சாதனை நிகழ்ச்சி என்று எதைச் சொல்கிறீர்கள் ?

வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் அது எங்களுடைய திருமணம்தான். மதுரையில் வேலை செய்யும் பொழுது, அந்த நாட்களிலே ஒரு நாளைக்கு சுமார் 700 அல்லது 800 குழந்தை நோயாளிகள்
குறையாமல் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்கள் எல்லாரிடமும் பரிவோடு என்ன உடம்பிற்கு என்பதையெல்லாம் பொறுமையாகக் கேட்டு, நோய்க்குத் தகுந்தமாதிரி சிகிச்சை கொடுப்போம். இவையெல்லாம் முடித்தபின்பு வகுப்பு எடுக்க வேண்டும்..அதற்காக ,அதிகமாகப் படிக்க வைண்டும்.நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்ததைத்தான் சாதனையாகக் கருதுகிறேன்.

வேலையும் அதிகம்.. வகுப்பும் எடுக்கணும்.. வீட்டையும் பார்க்கணும் எந்த நேரம் படிப்பீர்கள்

சாயங்காலம், இரவு, அதிகாலை அப்படி என்று படிக்கறதுக்கு அதிகநேரம் வேண்டும். வீட்டில் வேலைகளும் இருக்கும்.. ஒருநாள் என்பது கடகட என்று ஓடிவிடும்.

அப்பொழுது உங்களுக்குச் சோர்வே வராதா ?..

மனத்தில் உற்சாகம் அதிகமாக இருந்ததால் சோர்வு நிலையை நான் அடைந்ததே இல்லை.

இப்பொழுது கூட சோர்வே இல்லாமல் தாங்கள் இருப்பதற்கான இரகசியம் என்னங்க ?

இதில் இரகசியம் என்னங்க இருக்கிறது.. எல்லாவற்றிற்கும் ‘மனசும், மனதில் நினைக்கும் உறுதியான எண்ணங்களும் தான்’ என்று சொல்லுவேன்…

எண்ணங்கள் அவ்வளவு வலிமை என்பதற்கு உங்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து நான் அறிய விரும்புவது. ..

நீங்கள் பணியில் இருந்த காலத்தில் சொல்லும் படியான முக்கியமான செய்திகளைக் கூறுங்கள்.

இன்றும் சொல்லும்படியான நிகழ்ச்சி ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால், பலவேலைகளுக்கிடையில், விமன் மெடிக்கல் அசோசியேசன் அதாவது பெண்மருத்துவக் கழகம் என்ற அமைப்பு ஒன்றினைத் தொடங்கினேன் . இந்த அமைப்பிற்கு நல்ல வரவேற்பும் பயனும் இருந்தது.

கழகம் ஆரம்பிக்கும் அளவிற்குப் பெண் டாக்டர்கள் இருந்தார்களா ?.

நிறையப்பெண் டாக்டர்கள் இருந்தார்கள்.. டாக்டர்.லலிதா காமேஸ்வரன், டாக்டர் கொடி மணி, டாக்டர் சாலினி, டாக்டர். மாதங்கி இராமகிருஷ்ணன் என்று இன்னும் பலர் இருந்தார்கள்.

இதுமட்டுமல்ல.. மதுரையில் இருக்கும் போது மற்றுமொரு செய்தியைக் குறிப்பிட வேண்டும்… மிகப்பெரிய கருத்தரங்கம் ஒன்று நடத்தினோம்.. தேசிய ஒருமைப்பாட்டு வாரம் இந்தக் கருத்தரங்கில், மதுரையைச் சுற்றியுள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களிலிருந்து, கல்வியாளர்களையும், பேராசிரியர்களையும் அழைத்து நடத்தினோம்.. மிகமிகச் சிறப்பாக நடந்தது என்றும், சென்னையில் கூட இவ்வளவு பேரை அழைத்து எங்களால் நடத்தியிருக்க முடியாது என்றும் டாக்டர். இலலிதா காமேஸ்வரன் அவர்கள் எங்களைப் பாராட்டிக் கூறியது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.

கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா.. இவ்வளவு நேரமாக உங்க படிப்பு, மருத்துவத்துறை, உங்களுடைய பணிச்சிறப்பு என்று பலவற்றைக் கூறினீர்கள். உங்கள் வாழ்க்கையின் மறுபக்கம் என்கின்ற முறையில் உங்களுடைய இல்லற வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.. நீங்க எந்த ஆண்டு பிறந்தீர்கள்..

1932 ஜூலை 15.

ஓகோ இந்த ஆண்டு உங்களுக்கு முத்துவிழா ஆண்டு.. உங்களைப் பார்க்கும் பொழுதே கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருக்கிறது.. இப்பொழுதும் சுறுசுறுப்பாக, குறிக்கோளுடன் இருப்பதே அழகுதான். பெரிதும் போற்றுதற்குரியது. மனித சமுதாயத்திற்கே தாங்கள் ஓர் எடுத்துக்காட்டு.எங்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம்.

ஆமாம்.. உண்மையில் இன்றைக்கும் என்னுடைய வேலைகளை, என்னுடைய கடமைகளை நானேதான் செய்வேன்..கணவராக இருந்தாலும். மகனாக இருந்தாலும் எதிர்பார்க்க மாட்டேன்..

பிறரை எதிர் பார்க்காமல் வாழ்கிறீர்கள் என்ற செய்தி மிகவும் குறிப்பிடத்தக்கது. அனைவரும் கடைப்பிடிக்கத்தக்கது. உங்களுடைய திருமணம் காதல் திருமணமா என்பதைத் தெரிந்து கொள்ளலாமா ?..

அத்தை மகனை அன்போடு திருமணம் செய்து கொள்வது முறை தானே….

அத்தை மகனை விட்டுவிட முடியுமா ? காதல் ஒருவனைக் கரம் பிடித்துக் காரியம் யாவினும் கைகொடுத்து என்றபடி இன்றும் வாழ்ந்து வருகிறீர்கள். இனிய உதாரண இணையர்கள்.

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை .. நாங்கள் சின்ன வயதிலிருந்தே ஓடி ஆடி விளையாடினவர்கள் தானே.. அவர் இலக்கியம், மேடை, தமிழ் என்று அவர் வேலையைப் பார்ப்பார்..நான் மருத்துவம், மருத்துவமனை, கிளினிக் அப்படி என்று அவரவர் வேலைகளை அவரவர் பார்ப்போம் ஒவ்வொரு நாளும் இரவு உணவு உண்ணும் போது தான் காலையில் இருந்து நடந்ததை எல்லாம் பேசிக் கொள்வோம்..

உங்களுடைய குழந்தைகள் படிப்பை எல்லாம் யார் கவனித்துக் கொண்டார்கள் ?

நான் கொஞ்சநாள்தான்..கிளினிக் வைத்துப் பார்த்தேன்.. பிறகு குழந்தைகள் படிப்பு முக்கியம் என்று அவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தேன்..

மாமா மகன் என்கிறீர்கள் படிக்கும் காலத்தில் நீங்க மருத்துவம்.. அவர் தமிழ் இலக்கியம், போட்டியே வந்ததில்லேங்களா ?

அப்பொழுதெல்லாம் அந்த மாதிரி சூழ்நிலைகள் எல்லாம் வரவில்லை ..அவர் படித்ததே எங்க வீட்டில் இருந்துதான்..அவர் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு உற்சாகம் கொடுத்ததே எங்க அப்பா தான்…

மிகத் தெளிவாகச் சொன்னீர்கள்.. ஆனால் ஒரு சிறிய சந்தேகம். கல்யாணம் என்று வரும் பொழுது அந்தக் காலத்திலேயும் சரி இந்தக் காலத்திலேயும் சரி..டாக்டருக்குப் பெண்ணைப் படிக்க வைத்தால் டாக்டர் மாப்பிளையைத் தானே எதிர்பார்ப்பார்கள் ?

என் அப்பா எதிர்பார்த்தது உண்மைதானுங்க.. எங்களைப் பொறுத்தவரை, என்னை அவர் விரும்பினார்.. நான் அவரை விரும்பினேன்.. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. எல்லாம் இறைவன் சித்தம் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்களே.. அப்படித்தான்..

அதுதான் உண்மை .

உங்களுடைய திருமணம் எங்கு நடந்தது ?

1961 இல் டிசம்பர் 10 ஆம் தேதி. திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

உங்களுக்குக் குழந்தைகள்

மூன்று ஆண் பிள்ளைகள்.

பெண் குழந்தைக்கு ஆசைப்படவில்லையா ?

முதல் குழந்தை பெண் குழந்தைதான்.. சிறுவயதிலேயே காலமாகி விட்டாள். இரண்டாவது மகன் பிறக்கும் போதும், மூன்றாவது மகன் பிறக்கும் போதும் பெண்குழந்தையை எதிர்பார்த்தோம்..

உங்களுடைய மகன் மருமகளைப் பற்றிச் சொல்லுங்களேன் ?

மகன்பரதனும், கண்ணனும் மருத்துவர்கள். மருமகள் இருவரும் மருத்துவர்கள். மகன் அருள் தமிழ் இலக்கியம் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். மருமகள் பி.இ, படித்தவர்..

அம்மாபோல பரதனும், கண்ணனும், அப்பாபோல அருள்.. மகிழ்ச்சியாக இருக்கிறது.. உங்கள் பணி ஓய்விற்குப் பின் உங்களுடைய சேவை…

என் கணவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த போது, பல்கலைக் கழக வளாகத்தில், ஒரு பிள்ளையார் கோவில் வருவதற்கு முழுக்க முழுக்க உழைத்தேன்.. தஞ்சையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஊரைவிட்டுத் தள்ளி இருந்தது அங்கு இருந்த மக்களெல்லாம் , இங்கு இருப்பவர்கள் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றால் ரெம்பத் தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று குறைபட்டுக் கொண்டார்கள்.. அப்பொழுது என் மனத்தில் ஒருகோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் உதித்தது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க ‘வேண்டாம் என்றும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும் நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எப்படியாவது கோவில் கட்ட வேண்டும் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று முழு முனைப்பில் இறங்கி, பொது மக்களிடம் நிதிதிரட்டி. பல்கலை விநாயகர் ஆலயம் ஒன்றினை உருவாக்கி, குடமுழுக்குச் செய்தோம்.. இன்றும் பல்கலை விநாயகர் பலவிதங்களில் வழிபடும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது..

கோவில் கட்டுவது என்பது சாதாரண செயல்பாடன்று. மிகப்பெரிய அறப்பணியைச் செய்துள்ளீர்கள்.

அறம் செய விரும்பு என்று ஔவை சொல்லிக்கொடுத்த மண்ணில் பிறந்தவர்கள் நாமல்லவா… மேலும் ஒன்று தஞ்சையில் அரிமா சங்கம் இருந்தது.. நான் அங்கு பெண் அரிமாவாக இருந்த போது குறுகிய காலத்தில் 100 உறுப்பினர்களைச் சேர்த்தேன் எல்லாரும் அப்படியே அசந்து போய்விட்டார்கள் மக்களுக்குத் தேவையான நல்ல பல பணிகளை எல்லாம் செய்து கொடுத்தேன் அந்த ஊரில் அப்படி ஒரு பணியா என்று வியந்தவர்களும், இந்த ஊரில் இவ்வளவு பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க முடிந்ததே என்ற வியப்பும் எய்தியவர்கள் பலர். இதன் மூலம் மக்களுக்கு நிறைந்த தொண்டுகள் செய்துள்ளேன்.

எல்லாருக்கும் பணி செய்யும் பொழுது ஒரு முத்திரை குத்துவார்கள்.. உங்களுக்கு எந்தமாதிரி ?

எந்தக் கடுமையான வேலை என்றாலும் ஆழ்ந்த சிந்தனையோடு, சரியாகக் குறித்த காலத்தில் மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியவர் என்று எல்லாரும் சொல்வார்கள்.எல்லாரிடமும் எளிமையாகப் பழகுவார்.. வேலையில் கண்டிப்பாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் காலத்தைக் கடைப் பிடிப்பதில் மிக மிகக் கண்டிப்பு.. தப்பு என்றால் தப்புதான்..எந்தக் கொம்பன் வந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார், தான் எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று என்னைப் பற்றிச் சொல்வார்கள்.. உண்மைதான்..ஒருமுறை என்னுடைய கார் ஓட்டுநர் காலம் தாழ்த்தி வந்தார் குறிப்பிட்ட நேரம் ஆனவுடன் காரை நானே ஓட்டிக் கொண்டு மருத்துவமனை சென்று விட்டேன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் என்மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.. என்னுடைய தொழில் அப்படி.. என்னுடைய குறிக்கோள் அப்படி ஒருநிமிடம் என்றாலும் காலம் உயிர் போன்றது எனவேதான் அப்படியே பழகிக் கொண்டேன் அப்படியே எதிர்பார்க்கிறேன்.. அவ்வளவுதான்.

அப்பொழுதெல்லாம் பெண்கள் கார் ஒட்டுவது மிக மிக குறைவு. அந்தக்காலத்திலேயே கார் ஓட்டி சாதனை பெண்ணாக வாழ்ந்துள்ளீர்கள். பாரதி கண்ட பெண் நீங்கள்தான்.

கார் ஓட்டத் தெரிந்தால் யாரையும், எப்போதும் எதிர்பார்க்க வேண்டாமே ! குறித்த நேரத்தில் பணிக்கு செல்லவும் பயனாக இருக்குமே என்று கார் ஓட்ட கற்றுக்கொண்டேன் பல விதத்தில் அன்று பயனுள்ளதாகவே இருந்தது. அண்ணாநகரில் இருந்து எங்கு போவதற்கும் அங்கு வசதியாக இருந்தது. நான் கார் ஓட்டிச் சென்றால் வழியெல்லாம் ஒரு பெண் கார் ஓட்டுகிறாள் என்று எல்லாரும் வேடிக்கை பார்ப்பார்கள். சில சமயங்களில் கேலிகூட செய்வார்கள். நான் எதையும் பொறுட்ப்படுத்தி கொள்ள மாட்டேன். அண்ணா நகரில் தாரகை இல்லம் என்றால் எல்லாருக்கும் தெரியும்.

இல்லத்தின் பெயர் தாரகை. பெரும்பாலா வீடுகளுக்கு குழந்தைகளின் பெயரை வைப்பார்கள். உங்கள் இல்லம் உங்களுக்கு முதன்மை கொடுத்து எல்லாமே தாராவின் கை என்பதுபோல் தாரகை என்று அமைந்துள்ள பெண்ணாகிய உங்களுக்குப் பெருமை சேர்ப்பது போல் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.

குழந்தைகள் விரும்பினார்கள். இயற்கையாகவே அமைந்துவிட்டது.

நிறையச் செய்திகளைச் சொல்லியுள்ளீர்கள் கடைசியாக உங்க கால மருத்துவம், இந்தக் கால மருத்துவம் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் ?

என்னைப்பொறுத்தவரைக்கும் இந்தக் காலத்தில் மருத்துவம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்தும் இருக்கிறது. நோய்வந்துவிட்டதே என்ற பயமும் மக்களிடம் இல்லை .. எல்லாவற்றையும் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. வரும்முன் காப்பதற்கும், வந்தபின் தீர்ப்பதற்கும் மருத்துவம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்துள்ளது என்றுதான் நான் சொல்வேன்.

மிக்க மகிழ்ச்சி.. இன்றைய இளைய தலைமுறையினருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒவ்வொருவரும் நினைத்துத் தொழில் செய்ய வேண்டும்.

காலம் தவறாமையை மிக முக்கியமாக, கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்..

நல்லவே எண்ண வேண்டும் .
நல்லவே பேச வேண்டும்..
நல்லவே செய்ய வேண்டும்..

பண்பும் பண்பாடும் கொண்டு வாழவேண்டும்.இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.

உங்களைச் சந்தித்து பயனுள்ள நிறைய செய்திகளைக் கேட்டறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி..
வணக்கம்..

எனக்கும் மகிழ்ச்சி. நன்றி.. வணக்கம்.

நேர்காணல் :
முனைவர்.விஜயலட்சுமி இராமசாமி.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *