அளப்பரிய இழப்பு
” அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே ”
எனது பேரன்பிற்கும் மரியாதைக்குமுரிய அண்ணன் ஒளவை அவர்கட்கு எளியேனின் பணிவார்ந்த வணக்கங்கள் .
தங்கட்குத் தேறுதலும் ஆறுதலும் சொல்லுகின்ற அளவிற்கு என்னிடம் வார்த்தைகள் கிடையா !
வார்த்தைகட்கு அப்பாற்பட்ட வருத்தமே என் என் நெஞ்சைப் பினித்துள்ளது என் செய்வது ?
இப்படி ஒரு கொள்ளைநோய் உலகம் முழுவதும் பரவி நம்மைக்கொண்டு செல்லும் என்பதை அறிவோமா ? இல்லையே !
எனது எண்பது வயது நிறைவை முன்னிட்டுத் தங்கள் இல்லத்திற்கு வந்துத் தங்களைக் கும்பிட்டு விழுந்து வணங்கி எழுந்த போது அண்ணியார் தமது திருக்கரத்தால் எளியேன் நெற்றியில் திருநீறிட்டு வாழ்த்தியது மறக்க ஒல்லுமோ ?
அந்த மாதரசி ,அந்தப் புண்ணியவாதி இன்று நம்மிடை இல்லை என்பது மாயமோ ? மருட்கையோ ? புரியவில்லை .
நம்மை மீறி நடைபெறும் காரியங்கட்கு காலமே பொறுப்பாகின்றது .நாம் அந்தக் காலத்தின் கைகளுக்குள் கட்டுப்படுகின்றோம் .அந்தக் கட்டை அறுக்க நம்மிடம் வலுவில்லை .அதனால்தான் நம் முன்னோர் காலத்தைக் ” காலன் ” என்றார் போலும் .
அண்ணியார் தம் வாழ்க்கையில் செய்ப எல்லாம் செய்து முடித்து நிறை வாழ்வு வாழ்ந்தவர்களாதலால் பூவோடும் ,பொட்டோடும் ,மஞ்சளோடும் மறைந்து தெய்வமாகியிருக்கிறார்.அந்தத் தெய்வத்தின் திருவடிகட்கு எனது பணிவோடு கூடிய வணக்கங்களை எப்போதும் செலுத்துகிறேன் .
வடமீன் ( தாரா ) அன்ன அவர்கள் வாழ்க்கையை நாம் பின்பற்றுவோம் .அதுபோதும்.
காலத்தின் கையில் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுத் தங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொள்ள வேண்டுகின்றேன் .
மற்றொன்று சூழினும் தாமமுந்துறும் ஊழை வெல்ல யாரால் முடியும் ?
ஓரிரு மாதங்களில் நேரில் சந்திப்பேன் .
தங்கள் அன்புள்ள
சாமி .தியாகராசன் .
8.9.2020

Add a Comment