POST: 2020-11-15T11:12:50+05:30

கலைமகள்
நவம்பர் மாத இதழ் – 2020
தீபாவளிச் சிறப்பிதழ்

மொழிபெயர்ப்பு முழுவெற்றி பெறட்டும் முனைவர் ந அருள்

பக்கம் எண் 58

அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல மொழிபெயர்ப்பின்றி உலகம் சுழலாது என்று நூற்றுக்கணக்கான அறிஞர்கள் மொழிபெயர்ப்பு, முயற்சிகள், விளைவுகள், பயன்கள் பற்றி சிறந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழிபெயர்ப்பாக்கங்களாக வெளிவருகின்றன. திசையெட்டும், காலச்சுவடு, கணையாழி, அம்ருதா ஆகிய இதழ்கள் மொழிபெயர்ப்புக்கு முதலிடம் தருகின்றன. ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் விரும்பி வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது .

மூலத்தை வென்ற மொழிபெயர்ப்பு, படிவத்தை தெளிவாக்கிய மொழி பெயர்ப்பு அரசறிக்கைகளை நூற்றுக்கு நூறு விழுக்காடு ஆக வழங்கிய வழங்கியதாக நமக்கு மன நிறைவு தரும் புள்ளி விவரங்கள் இல்லை . பொதுடைமைத் தந்தை காரல் மார்க்சின் மூலதனம், மலையாளத்தில் நாற்பது முறைகளும், தமிழில் எட்டு மொழிபெயர்ப்புக்களும், இந்தியில் ஒன்பது மொழி பெயர்ப்புக்களும் வந்து பிறகும் கூட வாகைசூடிய மொழி பெயர்ப்பு எதுவும் இல்லை. ஊசியின் காதில் ஓட்டகம் நுழைவது என்ற விவிலியத் தொடர் பிழையான மொழிபெயர்ப்பு. ஊசியின் காது சொர்க்கத்தின் கதவாம், இப்படி பிழையான மொழிபெயர்ப்புக்கள் பல நிலைத்து விட்டன.

கம்பநாடரும், கா.ஸ்ரீ.ஸ்ரீ யும் பெற்ற வெற்றி எவரும் பெற்றதில்லை, மராத்திய மொழியில் விற்பனையை விட தமிழின் மொழிபெயர்ப்பு நூல்கள் தான் மாபெரும் வெற்றி பெற்றன என்று காண்டேகர் மனமுருகி எழுதினார் .

மொழிபெயர்ப்பு என்பது சிக்கலுடையது என்ற கருத்திலேயே மூலநூலின் பொருண்மையை முழுவதுமாக எடுத்து மொழிவது பற்றிக் கம்பர்
“வையம் என்னை இகழவும்,
மாசு எனக்கு எய்தவும்,
இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே ”

என்று குறிப்பிட்டார் .

மாந்தோப்பில் மனம் என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் மாந்தோப்பின் நிழலில் நிகழ்ந்த காதல் மணத்தைக் குறிக்கும். இதை நறுமணம் என்று மொழி பெயர்த்துவிட்டார்கள். ஒரே புறநாநூற்றுப் பாடலை மூவர் எப்படி மொழி பெயர்த்துள்ளார் என்றே விளக்கி பேராசிரியர்கள் எழுதினர்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் “பெரியோரை வியத்தலும் இலமே – சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற தொடரை ஏன் முடித்திருந்தார் என்றே தெரியவில்லை. அதற்கு விளக்கமும் அவரால் சொல்ல முடியவில்லை.

எழுத்தின் பொருள், எண்ணத்தின் செழுமை எடுத்துரைக்கும் பாங்கு, புதைந்து கிடக்கும் பண்பாட்டுக் கூறு விளக்கத்துக்காக மொழிபெயர்ப்பாளன் மாற்றும் கலைத்திறன், மூலமொழியில் நாற்பது மதிப்பெண்ணும் ,படைப்புமொழியில் அறுபது மதிப்பெண்ணும் பெற்றால் மொழிபெயர்ப்பில் அறுபது விழுக்காடாவது வெற்றி பெற முடியும் என்பதும் ஐயப்பாடான கணக்காகவே உள்ளது .

மாமுனிவர் வறுத்த மீன்களை வாயில் மெல்ல இட்டுப் பொறித்துக் கொண்டார் என்பதை வறுத்த வாதுமை பருப்பை வாயில் மென்றார் என்று நான் மாற்றம் செய்தேன் என்று ஒருமுறை த.நா .சேனாபதி கூறினாராம் .

நூற்றுக்கு நூறு கல்வி வளமும், நூற்றுக்கு எண்பது பேர் இருமொழிப் புலமையும், நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்பு செல்வாக்குப் பெறலாம் .கதை, நெடுங்கதை, வாழ்க்கை ,வரலாறு, பயணக் குறிப்புக்கள் இந்தக் கணக்கில் சேரும்.கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழியாக்கம் செய்த ” ஏழை படும் பாடு ” மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது ,அந்த ஆண்டுகளில் ஜீன்வால்ஜியின் நாடகம் நடக்காத கல்லூரிகளே இல்லை, பின்னர் திரைப்படமாகவும் வந்தது .தேவதாஸ் முதலிய வங்கக் கதைகள் பெற்ற வெற்றிக்காக கதை தேடி கொல்கத்தா செல்லாத திரை இயக்குநர்கள் இல்லை .
மொழிபெயர்ப்பு வெற்றி பெற்று மொழிகள் என்ற வேலிகளைத்தாண்டி “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு” என்ற பாங்கு வளரவேண்டும். உலக மொழிபெயர்ப்பாளர்கள் கனவும் இது தான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *