POST: 2020-12-11T12:39:17+05:30

அந்த நாள் நினைவை அழிக்கவா முடியும் !
_______

ஒளவை நடராசன்

சூழ வளைத்த புயலில் சுற்றத்தார் எவருமின்றி, என் குடும்பத்தார் மட்டும் முணுமுணுத்தப்படியே எங்கள் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. என் தாய்மாமன் மட்டும்தான் தாங்கும் தோளாக எங்கள் இருவருக்கும் இருந்தார்.

நாம் இருவர் – நமக்கில்லை ஒருவர் என்ற நிலையில்தான் மதுரையிலிருந்து ஆறு மாதம் கழித்துச் சென்னை வந்தோம்.

என் மனைவிக்கும் விடுமுறை முடிந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

அடையாற்றில் காந்தி நகரில் என் நண்பருக்குத் தெரிந்த ஒரு மாடி வீட்டில் தங்குவதற்கு ஒரு சிற்றறையும், தாழ்வாரமும் கொண்ட ஒரு பகுதியில் வாடகை இல்லாமல் தங்கினோம். எங்கே அலைந்தாலும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

காலையில் எழுந்ததும் கன்னிமரா நூலகம் செல்வதும் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்ப்பதுமாக நாள்கள் கழிந்தன.

அடையாற்று வீட்டுக்காரர் அமெரிக்காவில் தங்கியிருப்பவர். தன்னந்தனியாகத் தன் மனைவியையும் மகனையும் – மருமகளையும் இழந்து அந்த வீட்டை விற்பதற்காகப் பேசி முடித்திருந்தார்.

எதிர்பாராத விதமாக அவர் மனைவியார், மகன், மருமகள் மூவருமே அரிசோனாவில் சாலை விபத்தில் மறைந்தார்கள். அவருக்கு எங்களைத் தெரியாது. அவர் வந்து சேர்ந்த ஒரு வாரம் கழித்துத் தீபாவளித் திருநாள் வந்தது. எங்களை யாரும் அழைப்பதாக இல்லை.

அது 1962-ஆம் ஆண்டு. ஊரெல்லாம் நாளை தீபாவளி – நாங்கள் சோர்ந்து அமர்ந்திருந்தோம். மாலை ஆறு மணியிருக்கும் – புது வேட்டி – பட்டுப்புடவை – வெள்ளித்தட்டில் அடுக்கி வைத்திருந்த இனிப்புப் பண்டங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்காரர் வந்தார்.

என் மகனுக்குச் சென்ற திசம்பர் 10-ஆம் நாளில் காதல் மணம் நடந்தது. அவர்களுக்குத் தலைத் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருந்தோம்.

அந்தப் பெண் வீட்டாரோ தங்கள் மகளைக் கைகழுவி விட்டோம் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் எனக்கு இப்படி நாங்கள் காண நினைத்து கனவு சுக்கு நூறாகிவிட்டது.

இப்போது தான் தெரிகிறது. உங்கள் இருவருக்கும் நாளை தலைத் தீபாவளியாம். நான் உங்களை எப்போது வீட்டைக் காலி செய்யப் போகிறீர்கள் என்று கேட்க வந்தேன் – இந்தப் பெண்ணுக்கு நான் தந்தைபோல இருக்கிறேன். நாளை நீங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடலாம் என்று கூறினார்.

அவ்வாறே நினைக்க நினைக்க – இனிக்க இனிக்க அவரை நினைத்து எங்கள் நெஞ்சம் கனக்கத் தலை தீபாவளி நிறைவேறியது.

அவர் விரும்பியது போலவே அடுத்த வாரம் வீட்டைக் காலி செய்துவிட்டு விடைபெற்றோம். போய் வாருங்கள் நீங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்வீர்கள் என்று வாழ்த்தி அனுப்பினார்.

மறுநாள் அவரிடத்தில் வாடகைத் தொகை என்ற நிலையில் எங்களால் முடிந்த இருநூறு ரூபாய் வழங்கச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. தொடர்ந்து ஒரு வாரம் சென்றோம். அவர் வீட்டை ஒரு வட நாட்டுக்காரருக்கு விற்றுவிட்டாராம். விற்றதற்குப் பிறகு அங்கு வரவேயில்லையாம் என்றார்கள்.

இப்படி நடந்த தலை தீபாவளியை இப்போது நினைக்க மனம் நெகிழ்கிறது – மகம் கனக்கிறது. அதை நினைவில் வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் என் தமக்கை – தங்கையருக்குப் புத்தாடை வாங்கித்தருவதை வழக்கமாக வைத்துக் கொண்டோம்.

தொடர்ந்து ஐம்பதாண்டுகளாக ஆண்டு தவறாமல் அருட்செல்வர் தீபாவளிக்கெனப் பட்டாசுக் கட்டும் – பட்டாடையும் வழங்கி வந்ததை எண்ணி நெகிழ்கிறேன்.

வாழ்க்கையில் இப்படிப்பட்ட நெஞ்சை நெருடும் நிலைத்த நினைவுகள் இனிப்பவை அல்லவா !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *